Sidebar

21
Sat, Dec
38 New Articles

கிரெடிட் கார்டு – கடன் அட்டை

கடன் - வட்டி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கிரெடிட் கார்டு கடன் அட்டை

தற்போது கிரடிட் கார்டு எனும் கடன் அட்டை பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டை வைத்திருப்பவர் 45 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியுடன் அதைச் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்தி விடும்போது வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது. வட்டி வாங்கிய குற்றம் சேராது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாம் குற்றவாளியாக ஆகும் நிலை ஏற்படலாம்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் வட்டி இல்லாமல் அசலைச் செலுத்தினால் குற்றம் வராது என்ற போதும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் கடனைச் செலுத்த இயலாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடனாகக் கிடைக்கிறது என்பதற்காக சக்திக்கு மீறி கடன் அட்டை மூலம் கடன் வாங்கி விட்டு அதைக் கட்ட முடியாமல் தினறக்கூடிய மக்களை நாம் அதிக அளவில் பார்க்கிறோம்.

அன்றாடம் உழைத்து வாழக் கூடியவர்களும், அதிகமான கையிருப்பு இல்லாதவர்களும் கடன் அட்டை வாங்கினால் அவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது.

பணம் கையிருப்பில் இருந்தும் பணத்தை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது என்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்தக் கூடியவர்கள் மட்டும்தான் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தி வட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஏழைகளும், நடுத்தர மக்களும் இதை உணர்ந்து நம்மைச் சிரமத்தில் தள்ளி சக்திக்கு மீறிய பொருட்களை வாங்கத் தூண்டும் கடன் அட்டையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதுதான் இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது.

குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியைச் செலுத்துவேன் என்று ஒப்புக்கொண்டு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டால் தான் கிரடிட் கார்டு தரப்படும். நாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தி விட்டாலும் வட்டி செலுத்துவோம் என்று ஒப்புக் கொண்டது தவறு தானே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தி வட்டி கொடுக்காமல் நடந்து கொள்வேன் என்று நம்பிக்கை வைத்து ஒரு வேளை அப்படி செலுத்த முடியாவிட்டால் வட்டி செலுத்துவேன் என்று கூறுவது வட்டி வாங்கியதாகவோ, கொடுத்ததாகவோ துணை நின்றதாகவோ ஆகாது.

மேலும் பேச்சுக்காக இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் குற்றமாக ஆகாது.

கிறித்தவர்களுடன் விவாதம் செய்யும் போது நீங்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபித்து விட்டால் அதை நாங்கள் வேதமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்கிறோம். அவர்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் வாயளவில் இதைக் கூறுகிறோம். பைபிளை ஏற்றுக் கொள்வதாக இதற்கு நாம் அர்த்தம் செய்ய மாட்டோம்.

தர்கா கட்ட ஆதாரத்தைக் காட்டினால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறுவதோ, எழுதுவதோ தர்காவை ஆதரித்ததாக ஆகாது. அவர்களால் ஆதாரத்தைக் காட்டவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே நாம் இப்படி கூறுகிறோம்.

ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) பிள்ளை இருக்குமானால் முதலில் வணங்குபவனாக நான் இருப்பேன் என்று கூறுவீராக

திருக்குர்ஆன் 43:81

என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லவே இல்லை என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்த நிலையில் தான் இப்படி நபியைக் கூறச்சொல்கிறான்.

இஸ்லாத்தில் வட்டி தடுக்கப்பட்டதை அறிந்து, வட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ள நாம் குறிப்பிட்ட நாளில் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி செலுத்துவேன் என்று கூறுகிறோம். வட்டி செலுத்தும் நிலைக்குப் போக மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் தான் இப்படி கூறுகிறோம். வட்டி செலுத்துவோம் என்பதற்காக கூறவில்லை.

எனவே இதைக் காரணமாகக் கொண்டு கடன் அட்டை கூடாது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல.

23.01.2017. 9:42 AM

Share this:

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account