புதிய தலைமுறை நிகழ்ச்சி தடை ஏன்?
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு படுத்தி சிலர் பேசுகின்றனர். இது உண்மையா?
மசூது, கடையநல்லூர்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எதை எதிர்ப்பதாக இருந்தாலும் அதை நேருக்கு நேராகத் தான் செய்யும். கொல்லைப்புறமாக எதையும் செய்யாது. தவ்ஹீத் ஜமாஅத் இதை எதிர்க்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் தனது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யும்.
விஸ்வரூபம் திரைப்படத்தை நாம் எதிர்த்தோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எதிர்த்தோம்.
மனுஷபுத்திரன் என்ற அறிவிலி ஆதாரமில்லாமல் உளறிய போதும் நேருக்கு நேராகத்தான் அவரை எதிர்த்தோம்.
கருணாநிதி அந்தப் பொய்யை வாந்தி எடுத்த போதும் அவரையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.
படித்தும் படிக்காத பதர் சயீத் உளறிய போதும் அதையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.
இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக உளறிக்கொட்டிய போது எங்களுடன் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்கத் தயாரா என்று நேரடியாக அவர்களுக்கே கடிதம் எழுதினோம்.
விளம்பரத்துக்காக எதையாவது எழுதும் அறிவுஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் ஓட்டம் பிடித்தார்களே தவிர தாங்கள் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இல்லை.
மனுசபுத்திரன், கருனாநிதி, நக்கீரன், பதர்சயீத் உள்ளிட்ட யாரும் இஸ்லாத்துக்கு எதிராக எடுத்து வைத்த வாதங்களை நிரூபிக்கத் திராணியற்றவர்களாகவும், கோழைகளாகவும், இஸ்லாம் பற்றி அறிவீனர்களாகவும் தான் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமானது.
தலாக் குறித்து இப்போதும் யாராவது தவறான வாதங்களை வைத்தால் அதைத் தவறு என்று நிரூபிக்கும் திராணியும், துணிவும், தெளிவும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு இருக்கும் போது கொல்லைப்புறமாக மிரட்டல் விடும் அவசியம் இல்லை.
தலாக் குறித்த ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பீஜே அவர்களின் கருத்தையும் நாங்கள் அறிய வேண்டும் என்று கேட்டனர்.
என்னிடம் பொதுச் செயலாளர் சொன்ன போது நானும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் நமக்கும் வசதியான புதன்கிழமை காலை பத்து மணிக்கு பேட்டி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.
குறித்த நாளில் நான் புதிய தலைமுறை படக்குழுவினரை எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. திடீரென்று இன்னொரு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் சென்று விட்டதாக நமக்குச் சொல்லப்பட்டது.
புதிய தலைமுறையில் செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பஞ்சம் இல்லை. நானறிந்த வரையில் குறித்த நேரத்தை அவர்கள் மீற மாட்டார்கள் என்பதால் வேறு ஏதோ காரணத்தால் நம்மைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இதன் பின்னர் ஏன் நிறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
முக்கிய இயக்கத்தின் சார்பில் மிரட்டினார்களா?
மொட்டை மிரட்டல் வந்ததா?
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதை ஒளிபரப்பினால் நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று கருதி இதை நிறுத்தினார்களா?
அல்லது அவர்களாகவே ஏதோ காரணத்துக்காக நிறுத்தினார்களா?
என்று தெரியவில்லை.
அதைப் புதிய தலைமுறை சொன்னால் தான் நமக்குத் தெரியும். அப்படியில்லாமல் ஊகமாக எதையும் நாம் சொல்ல முடியாது.
ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லாதபோது அதில் முகம் காட்டியவர்கள் தங்கள் முகம் தெரியாமல் போய்விட்டதே என்பதற்காக மக்களை உசுப்பி விடுகிறார்கள்.
பர்தா பற்றி விஜய் டிவியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்து நிறுத்தியது உண்மை தான். இது உலகத்துக்கே தெரிந்த உண்மை தான். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.
மறைமுகமாக விஜய் டிவிக்கு நாம் எந்த மிரட்டலும் விடவில்லை. நமது லட்டர் பேடில் விஜய் டிவிக்குக் கடிதம் எழுதி இந்த நிகழ்ச்சி கிறுக்குத்தனமானது. வாதங்கள் அடிப்படையில் அமையவில்லை. பர்தா அணிந்த பெண்ணை நடிக்க வைத்து முடிவில் பர்தாவைக் கழற்றி வீசிச் செல்வது போல் தயாரிக்கப்பட்டுள்ள நாடகமாக இது உள்ளது.
பர்தா? சரியா இல்லையா என்பதைப் பற்றி கோபிநாத்தோ வேறு யாருமோ முஸ்லிம் அறிஞர்களுடன் விவாதிக்கட்டும். அதை நாம் வரவேற்போம்.
ஒரு பெண்ணை நடிக்க வைத்து பர்தாவைக் கழற்றச் சொல்லி காட்டுவது என்றால் இது அறிவுப்பூர்வமானது அல்ல. கண்டிப்பாக அதைத் தயாரித்தவரின் விஷமத்தனம் தான் காரணம் என்பதைத் தகுந்த காரணங்களுடன் விஜய் டிவி நிர்வாகத்துக்கு விளக்கினோம்.
ஒளிந்து கொண்டு மிரட்டல் எதுவும் விடவில்லை.
உதாரணமாக நிர்வாணமாக மனிதன் நடமாடலாமா என்று ஒரு நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். (விஜய் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சி தயாரித்தாலும் ஆச்சர்யம் இல்லை.) அதில் நிர்வாணம் தான் சரி என்று காட்டி அதில் கலந்து கொண்டு ஆடை அணிந்த மனுஷ(?) புத்திரன் என்பவரை எல்லா ஆடையையும் அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடுவது போல் காட்டினால் அது விவாதம் என்ற வகையில் சேருமா?
பர்தா பற்றிய நிகழ்ச்சி அது போல் இருந்ததால் தான் விஜய் டிவியின் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டோம்.
விஜய் டிவி நிர்வாகமும் அதைப் பார்த்து விட்டு அது விஷமத்தனமாக தயாரிக்கப்பட்டதை அறிந்து தயாரித்தவரையும் கண்டித்து அதை நிறுத்தியது.
எனவே தவ்ஹீத் ஜமாஅத் எதைச் செய்தாலும் சொந்தப் பெயரில் நேருக்கு நேராகத் தான் செய்யும். முதுகெலும்பில்லாமல் செயல்படாது.
புதிய தலைமுறையில் தலாக் என்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் இல்லை.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சார்பில் பேசிய சிலர் வரும் ஆனால் வராது என்ற வகையில் பேசி இருமுகம் காட்டியுள்ளதாக ஊடக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டு நம்மிடம் சொன்னார்கள்.
தலாக் என்பது தவறானது என்று அவர்கள் கருதினால் தவறு என்று சொல்ல வேண்டும். சரி என்று கருதினால் அதற்கேற்ப வாதிட வேண்டும்.
அப்படி இல்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எதிரிகளையும் இரு சேர திருப்திப்படுத்தும் வகையில் பேசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊடக நண்பர்கள் சொன்னது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.
அது ஒளிபரப்பப்பட்டால் தான் இது உண்மையா என்று தெரியும்.
30.06.2013. 10:31 AM
புதிய தலைமுறை நிகழ்ச்சி தடை ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode