Sidebar

22
Sun, Dec
38 New Articles

பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா?

கேள்வி: சென்ற சட்டமன்றத் தேர்தலில் AIADMK விலைவாசி உயர்வை முக்கிய காரணம் காட்டி ஓட்டு கேட்டது. இப்போதைய அரசு பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இதன் பின்னணி என்ன?

- அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர்

தற்போது தமிழக அரசின் பஸ் கட்டணம் மற்றும் பால் விலை ஏற்றம் பற்றி தாங்கள் அறிந்ததே! இதைப் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன? மக்கள் நலனுக்காக போராடும் நீங்கள் ஏன் இதற்காகப் போராடக் கூடாது?

- நா.ரஹ்மத்துல்லாஹ், மணலி

விலைவாசி உயர்வை மக்கள் சுமக்க வேண்டும் என்று காரணம் கூறி ஜெயலலிதா அதிரடியான விலை உயர்வை அறிவித்துள்ளார். அதை அவர் நியாயப்படுத்தி இருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் மக்கள் மீது சுமத்தாமல் வேறு யார் மீது சுமத்த முடியும் என்று வாதமும் செய்துள்ளார்.

இப்படி வாதம் செய்வதற்கு ஒரு முதல்வர் தேவையா? நஷ்டம் வரும்போது விலையை உயர்த்தும் செயலை ஒரு டாட்டா, ஒரு அம்பானி செய்து விடுவாரே?

நஷ்டம் வருகிறது என்றால் மக்களைப் பாதிக்காத வகையில் எப்படி நிர்வாகம் நடத்துவது என்பதற்குத் தான் ஒரு முதல்வர் தேவைப்படுகிறார். எனவே ஜெயலலிதா விலையைக் கண்டமேனிக்கு உயர்த்திவிட்டு அதை நியாயப்படுத்துவது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

ஆவின் நிறுவனமும், போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்வதை விடுத்து மக்களைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, தானும் ஏமாந்து நாட்டு மக்களையும் ஜெயலலிதா ஏமாற்ற முயன்றுள்ளார்.

போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதால் பஸ் கட்டண உயர்வு என்கிறார். கட்டண உயர்வினால் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து விடுபடும் என்று ஜெயலலிதா நினைத்தால் அவரை விட ஏமாளி யாரும் இருக்க முடியாது.

இப்போது உயர்த்தப்பட்டதை விட இன்னும் ஒரு மடங்கு கட்டணத்தை அதிகரித்தால் கூட போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் நடத்த முடியாது.

கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும், திமிர் பிடித்த அரசு ஊழியர்களின் போக்கும், பராமரிப்பில்லாத சேவையும் தான் நஷ்டத்துக்குக் காரணம். ஓட்டை உடைசல்களாகவும், மழை பெய்தால் ஒழுகக் கூடியதாகவும், கிழிந்த சீட்டுகளைக் கொண்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் படுத்து(?) விடும் என்ற நிலையிலும் தான் அரசு பேருந்துகள் உள்ளன. இதனால் தான் 60 பயணிகள் ஏற வேண்டிய பேருந்துகளில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலை உள்ளது. இதுவே நஷ்டத்துக்கு முக்கிய காரணம்.

அரசு பேருந்தில் 200 ரூபாய் கட்டணம் இருந்தாலும், அதே தொலைவுக்கு தனியார் பேருந்துகள் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இருந்த போதிலும் பயணிகள் கூட்டம் தனியார் பேருந்துகளில் நிரம்பி வழிகின்றது. காசுக்கு கணக்கு பார்க்கும் மிகச் சிலர் தவிர மற்றவர்கள் தூய்மைக்காகவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணிக்கின்றனர்.

தனியாரை விட அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு டீசல் நான்கு ரூபாய் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் நஷ்டம் ஏற்பட இவர்கள் நிர்வாகம் செய்யும் லட்சனம்தான் காரணம்.

இப்போது கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். மூளையற்ற அதிகாரிகளின் கணக்குப்படி ஏட்டில்தான் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் ஏற்கனவே 20 பேர் பயணித்தது போய் இனி அது பத்து பேராகக் குறைந்து மேலும் நஷ்டத்தைத்தான் அதிகரிக்கும்.

பெருநகரங்களில் டவுன் பஸ்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தாலேயே அரசுப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இனிமேல் சென்னையில் குறைந்து விடும். அனைவரும் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தொலைதூரம் செல்பவர்களில் காசுக்கு கணக்கு பார்ப்பவர்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காசைப் பற்றி கவலைப்படாதவர்கள் வழக்கம்போல் தனியார் பஸ்களில் தான் பயணம் செய்வார்கள். இனி பயணிகளே இல்லாத வெறும் பஸ்களைத் தான் அரசாங்கம் இயக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த நஷ்டத்தை மேலும் அதிகமாக்குமே தவிர போக்குவரத்துக் கழகத்தை தூக்கி நிறுத்தாது.

அடுத்து பால் வளத்துறையும் இப்படித்தான். ஊழல் பெருச்சாளிகளாலேயே நஷ்டம் ஏற்படுகிறது. வாங்கிய விலையை விட அதிக விலைக்கே பால் விற்கப்பட்டு வருகின்றது. இதில் லாபம்தான் ஏற்பட வேண்டும். ஆனாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் சில திருட்டு அதிகாரிகளே!

மின்சாரம் மட்டுமே உற்பத்தி விலையை விடக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மட்டும் நஷ்டம் ஏற்படலாம். ஆனாலும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியம் என்பதால் அரசாங்கம் அந்த நஷ்டத்தைச் சுமந்து கொள்கிறது. மேலும் மின் கட்டணத்தை அதிகரித்தால் மற்ற பொருள்களின் விலை உயர்ந்து விடும் என்பதால் அரசாங்கம் அதைச் சுமக்கத்தான் வேண்டும். இது காலாகாலம் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும்.

ஆனாலும் இந்த நஷ்டம் கூட பாதியளவு தான் மக்களுக்கு வழங்கும் சலுகையால் ஏற்படுகிறது. இன்னொரு பாதி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படுவதாகும்.

சென்னையில் பகல் பன்னிரெண்டு மணிக்குப் பார்த்தால் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். ஏனெனில் குறித்த நேரத்தில் போட்டு குறித்த நேரத்தில் அணைப்பதில்லை. அதுபோல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் பத்தாயிரம் யூனிட்டைச் செலவிட்டு ஆயிரம் யூனிட்டுக்கு பணம் செலுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆளும் கட்சியினர் நடத்தும் விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் கொக்கி போட்டு பல்லாயிரம் யூனிட்டுகள் திருடப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தைக் குறைத்தால் விலை ஏற்றாமலே பாதி நஷ்டத்தைக் குறைக்க முடியும். மற்றொரு பாதி நஷ்டத்தை அரசாங்கம் சுமக்கத்தான் வேண்டும். வேறு வகையில் அதற்கான நிதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வர்த்தக நோக்கத்தில் நடப்பதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை வியாபாரிகள் போதும். அரசாங்கம் இலவச மருத்துவமனை நடத்துகிறது. இதை நடத்த கஷ்டமாக உள்ளதால் இனிமேல் கட்டணம் வசூலிப்போம் என்று சொல்லலாமா?

காவல் துறையினருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, இனி மேல் புகார் கொடுக்க இவ்வளவு கட்டணம், எப்.ஐ.ஆர் போட இவ்வளவு கட்டணம் என்று கேட்க முடியுமா?

மக்களாகிய நீங்கள்தான் சுமக்க வேண்டும் என்று திமிர் வாதம் பேசமுடியுமா? மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? மக்கள் தான் சுமக்க வேண்டும் என்றால் ஆட்சி எதற்காக?

உணர்வு 16:13

29.12.2011. 4:11 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account