Sidebar

16
Mon, Sep
1 New Articles

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு மற்ற எந்தத் தலைவரின் மரணமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம்.

மத்திய அரசும், இந்தியாவின் பல மாநில அரசுகளும் யாருக்கும் வழங்காத அளவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தன. எல்லா ஊடகங்களும், பொது மக்களும் அவரது எளிமை, மாணவர்களுடன் அவர் காட்டிய நெருக்கம், அவரது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை ஆகிவற்றைப் பேசி அவருக்கு புகழ்மாலை சூட்டின.

அவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் பெயரை வைத்திருந்து, முஸ்லிமாக அறியப்பட்டு இருந்தும் முஸ்லிமல்லாத மக்களும் அவரைப் பெரிதும் மதித்து வீதிகள் தோறும் அவரது படத்தை வைத்து மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள்.

இது எப்படிச் சாத்தியமானது? எந்த முஸ்லிமையும் அனைத்து மக்களும் அங்கீகரிக்க மாட்டார்களே! முஸ்லிம் என்றால் வெறுப்புடன்தானே பார்ப்பார்கள்? அப்படி இருக்கும் போது இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

முஸ்லிமுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கூடத்தில் இடம் தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம்களைப் பணியில் அமர்த்த மறுக்கும் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு எப்படி ராஜ மரியாதை அளிக்கப்பட்டது?

இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான துவேசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து சங்பரிவார இயக்கங்களும் அப்துல் கலாமைத் தூக்கிப் பிடித்தன. புகழ்மாலை சூட்டின. 90 விழுக்காடு ஊடகங்கள் சங்பரிவாரக் கொள்கையில் உள்ளதால் அவரைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் அதிகமான பொய்களைக் கலந்து கருத்துருவாக்கம் செய்தன. திரும்பத் திரும்ப இதையே ஒரே செய்தியாக முன்வைத்து மக்களை மூளைச் சலவை செய்தன.

அப்துல் கலாமுக்கு எங்காவது படம் வைத்து மாலை போட்டால் அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அனைவரும் இவ்வாறு செய்யத் தூண்டின. இதன் விளைவாகவே அப்துல் கலாமுக்கு யாருக்கும் கிடைக்காத கவுரவம் கிடைத்தது.

சங்பரிவாரமும், சங்பரிவார ஊடகங்களும் ஒரு முஸ்லிமை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றால் அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு சங்பரிவாரம் சில விதிகளை வைத்துள்ளது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் பெயர் வைத்துக் கொள்ளலாம்; தொழுகை நடத்தலாம். ஆனால் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் கடவுள்களையும் தங்களின் கடவுள்களாக முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்துக்கள் வேதமாக மதிக்கும் கீதை உள்ளிட்ட வேதங்களைத் தமது வேதங்களாக முஸ்லிம்கள் மதித்து ஓத வேண்டும்

இந்து தெய்வங்களை வழிபட்டு, இந்துச் சாமியார்களின் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். முஸ்லிம்களை இப்படி மாற்றுவதுதான் சங்பரிவாரின் முக்கியக் கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை அப்படியே அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து சங்பரிவாரத்தின் அடிமையாக அப்துல் கலாம் இருந்ததுதான் இந்த பில்டப்புக்குக் காரணம். இப்படி நடக்கும் முஸ்லிம்களைத்தான் மதிப்போம் என்ற செய்தியை உரத்துச் சொல்லவே இந்த பில்டப்புகள்..

மக்களின் கருத்து எப்படிச் செல்கிறதோ அதுபோல் நிலை மாறுவது மனிதனின் இயல்பு. முஸ்லிம்கள் இந்த நிலையில் இருக்கக் கூடாது. எது சரியானதோ அதில் உறுதியாக நிற்பதுதான் முஸ்லிம்களின் இயல்பாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள் குறித்த நமது கருத்தை அழுத்தமாகச் சொல்கிறோம்.

மலஜலத்தைச் சுமந்து கொண்டுள்ள சாமியார்கள் மேலே இருக்க, அப்துல் கலாம் கீழே அமர்ந்து குடியரசுத் தலைவர் என்ற மரியாதையைக் கெடுக்கும் வகையில் ஆசி வாங்கும் காட்சிகளையும் சங்பரிவாரத்தை மனம் குளிரச் செய்யும் வகையில் சாமி கும்பிடும் காட்சிகளையும் பாருங்கள்!

ஏவுகனையைக் கண்டுபிடித்தவருக்கு, அணுசக்தியை ஆராய்ச்சி செய்தவருக்கு மனிதன் மனிதன்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் பகுத்தறிவை அடகு வைத்து சரணாகதி அடையக் காரணம் என்ன? இப்படி நடப்பதுதான் சங்பரிவாரத்துக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

இவரது ஆராய்ச்சி குறித்து தினமலர் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்!

கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பதுதான். அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமிக்கு பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும்போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.

உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவத்தில் இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பதாகக் கூறினார்.

விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டு தான் அணுவையே கண்டறிந்தனர். அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார். மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான். அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர்.

சிவன்தான் உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையும், அல்லாஹ்தான் படைத்தான் என்ற நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்க முடியாது.

அல்லாஹ்வுக்கு அப்பட்டமாக இணை வைத்து, இல்லை இல்லை அல்லாஹ்வையே மறுத்து நடந்து கொண்ட அப்துல் கலாமை இஸ்லாம் அங்கீகரிக்காது.

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்ற கொள்கையை இவர் ஆதரித்தார். இதுதான் சங்பரிவாரத்தின் பிரதானக் கொள்கை.

குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். அந்தக் கொடூரமான முஸ்லிம் இன அழிப்பைப் பொறுக்க முடியாமல் பிரதமர் வாஜ்பாய் மோடியைக் கண்டித்தார். ராஜ தர்மத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.

ஆனால் அப்துல் கலாம் மவுனச் சாமியாராக இருந்தார். வாய் திறக்கவில்லை. குஜராத் முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. நேரிலும் போய்ப் பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இந்த நேரத்தில் பார்வையிடச் சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். கண்ணசைவின் படி நடந்து கொண்டதற்குத் தான் இந்த வெகுமதியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிகிறதா?

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பிராமணராக இருந்தும் இந்தக் கொடும் செயலைக் கண்டித்தார். அந்த உணர்வு கூட இல்லாமல் அப்துல் கலாம் நடந்து கொண்டார். மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எள் முனையளவு கூட இவருக்கு உறுத்தலை ஏற்படுத்தவில்லை.

இவரது இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொண்டாலும், யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பத்து சதம் கூட முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் இலவசப் பயண ஏற்பாடு செய்து கொடுத்தும் இந்த நிலை ஏன்?

மும்பை என்ற ஒரு பகுதியில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட அளவுக்குக் கூட முஸ்லிம்கள் இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதில் இருந்து அவரால் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு காயம் பட்டிருப்பார்கள் என அறியலாம்.

சில முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஜனாசா தொழுகையில் முகம் காட்டினார்கள் என்றால் அதற்குக் காரணம் உள்ளது. இவர்களும் அப்துல் கலாம் போல் திருவாடுதுறை ஆதீனத்திடம் ஆசி வாங்கியுள்ளனர். அப்துல் கலாமே செய்திருக்கும் போது நாங்கள் செய்தால் என்ன என்று நியாயப்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்.

அல்லாஹ்வை மறுத்து சிவ பெருமானை வழிபட்டவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸைக் கேட்குமளவுக்கு ஈமான் உறுதியைக் காட்டியுள்ளனர்.

இவர்களைப்போல் அப்துல் கலாமுக்காக இந்துக் கோவில்களில் மோட்சதீபம் ஏற்றியுள்ளனர். இது இந்துக்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் தீபமாகும்.

அப்துல் கலாம் ஆன்மா சந்தி அடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் இது ஏற்றப்பட்டது.

அப்துல் கலாம் உடல் அன்று நல்லடக்கம் செய்யப்பட்டபின் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர்.

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோயிலின் 4 வாசல்களில் மோட்ச தீபத்தை கோயில் குருக்கள் விஜய ஆனந்த், கணபதி ராமன் ஏற்றினார். அதை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜாங்கம், பேஷ்கார் அண்ணாதுரை, கமல நாதன், பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். அப்துல் கலாமுக்கு ஏராளமானோர் திரண்டு இதை ஏற்றினர்.

இவர்கள் மோட்ச தீபம் ஏற்றியதிலாவது நியாயம் உள்ளது. இவர்களைப் போன்ற நம்பிக்கையுடையவராக அப்துல் கலாம் திகழ்ந்தார். தொழுகை நடத்தியவர்களிடம் அந்த நியாயமும் இல்லை.

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 4 : 60

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

திருக்குர்ஆன் 9:113,114

ஊரெல்லாம் சேர்ந்து ஒன்றைச் செய்தால் அதைப் பார்த்து முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் கூறியதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்க வேண்டும்.

இனிமேல் முஸ்லிம் தலைவர்கள் அப்துல் கலாம் போல் நடக்கவும், அதை நியாயப்படுத்தவும் இதைக் காரணமாக ஆக்கக் கூடாது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.

இறந்தவர்களை ஏசாதீர்கள் என்ற ஹதீஸைச் சொல்லி சில மூடர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த அப்துல் கலாமின் செயலை நியாயப்படுத்தினார்கள். கேட்டால் கடைசி நேரத்தில் தவ்பா செய்து திருந்தி இருக்கலாம் அல்லவா என்ற வாதத்தை வைத்தனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமாவோ மரணிக்கும்போது கடைசி நேரத்தில் திருந்தி இருக்கலாம் என்று சொல்வார்களா?

முஸ்லிம்களாகிய நாம் வெளிப்படையானதைத் தான் பார்க்க வேண்டும். உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கக் கூடாது. அப்துல் கலாம் வெளிப்படையாக இணை கற்பித்தார். நான் நடந்து கொண்டது தவறு என்று அறிவிக்கவில்லை. இதை வைத்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும். அவர் தவ்பாச் செய்திருக்கலாம் என்பது இவர்களின் ஆதாரமற்ற ஊகம்.

இறந்தவரை குறை கூறாதீர்கள் என்பது அப்துல் கலாமுக்குப் பொருந்தாது. முஸ்லிமாக வாழ்ந்தவருக்கே பொருந்தும்.

அப்துல் கலாம் வாழும்போது அவர் முஸ்லிமாக வாழவில்லை என்று நாம் எழுதினோம். அதை வாசித்தால் அவர் ரொம்ப மகிழ்ச்சியடைவார். அவர் மகிழ்ச்சி அடையக் கூடியதைக் கூறுவது இறந்தவரை ஏசுவதில் சேராது.

முஸ்லிம்களே! உங்களுக்கு இந்த நாட்டில் மரியாதை வேண்டும் என்றால் அப்துல் கலாம்போல் முஸ்லிம் பெயரில் இந்துவாக மாறுங்கள் என்ற செய்தியை இந்திய அரசும், மாநில அரசுகளும் இந்துத்துவா சக்திகளும் இந்துத்துவாவில் ஊறிய ஊடகங்களும் தெளிவாகச் சொல்லியுள்ளன. ஆனால் உண்மை முஸ்லிம் உயிரே போனாலும் உலகே திரண்டாலும் ஏகத்துவக் கொள்கையில் இருந்து தடம் புரள மாட்டான்.

சுருங்கச் சொன்னால் அப்துல்கலாமினால் முஸ்லிம்களுக்கு கடுகளவும் நன்மை கிடைக்கவில்லை. இவரால் இஸ்லாத்துக்கு கடுகளவும் பெருமை இல்லை. இதைச் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

05.08.2015. 11:06 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account