Sidebar

22
Sun, Dec
38 New Articles

தரீக்காவின் திக்ருகள்

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தரீக்காவின் திக்ருகள்

சபையில் வட்டமாக அமர்ந்து

லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை

பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை

அஹ்  என்று 100 தடவை

கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து, வயிறு, தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத் தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா? இந்தக் கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணானவை. ஷாதுலியா தரீக்காவின் திக்ரு  என்று சில பகுதிகளில் நடத்தப்படும் இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன் 7:205)

பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், கைகால்களை உதறிக் கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில் கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.

மனதிற்குள்ளும், உரத்த சப்தமின்றியும் திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில் இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்த திக்ரோ பகிரங்கமாகவும், பயங்கர சப்தத்துடனும் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது இறைவனுக்கு ஆத்திரமூட்டுமா? அன்பை ஏற்படுத்துமா?  என்று சிந்தித்துப் பாருங்கள்!

இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து பாடுகின்றனர். மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. அந்தத் திருநாமங்களைக் கூறியே இறைவனை அழைக்க வேண்டும்; திக்ரு செய்ய வேண்டும்.

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன் 17:110)

அல்லாஹ்வுக்குரிய அழகிய திருநாமங்களில் அஹ்  என்றொரு நாமம் இருக்கிறதா?நிச்சயமாக இல்லை. அஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமம் இல்லை என்றால் இவர்கள் யாரை திக்ரு செய்கிறார்கள்? சம்மந்தப் பட்டவர்களிடம் இது பற்றிக் கேட்டால் அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா?

அல்லாஹ் என்ற திருநாமத்தில் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து சுருக்கமாக அஹ்  என்று கூறுகிறார்களாம். இப்படி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரிக்க அனுமதி இருக்கிறதா?

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 7:180)

அல்லாஹ்  என்பதை அஹ்  என்று திரித்துக் கூறும் இவர்களைத் தன்னிடம் விட்டு விடுமாறும் அவர்கள் தண்டனை வழங்கப்படுவார்கள் என்றும் இங்கே இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தக் கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் திருநாமத்தில் விளையாடுவது திக்ராகுமா? என்று சிந்தியுங்கள்!

அப்துல் காதிர் என்று பெயரிடப்பட்ட ஒருவர் அர்  என்று அழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்ராஹீம் என்று பெயரிட்டவர் இம்  என்று அழைக்கப்படும் போது ஆத்திரம் கொள்கிறார்.

சாதாரண மனிதர்களே இவ்வாறு இருக்கும் போது யாவற்றையும் படைத்த கண்ணியத்திற்குரிய அல்லாஹ் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்? இந்த திக்ரு கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மேலும் அந்த ஹல்காவில் (சபையில்) பாடப்படும் பாடல்கள் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும், இறைவனைக் கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ளன.

ஹா! ஹா! ஹா! என்று சினிமா வில்லன்கள் சிரிப்பது போன்று அர்த்தமில்லாத உளறல்களை திக்ரு என்று பாடுகின்றனர்.

 ஹாவா உலுவ்வன் வஹா ஹாஹா

ஹுபீஹி இலாஹ பாஹா பஹாஹுமன்

முதாஹுஸி ஹுதஹி ஹா ஹா ஹா.

எந்த அர்த்தமும் இல்லாது ஹாஹாஹீ ஹு ஹு என்று உளறுவது தான் இறைவனை திக்ரு செய்யும் முறையா?

என் தலைவா! இந்த ஹல்காவில் உள்ளவர்களின் பக்கம் உங்கள் பார்வையை வீசுங்கள்! அது கஷ்டத்தையும், சிரமத்தையும் அகற்றி விடும்.

என் தலைவா! உங்களுடன் எனக்குள்ள உறவு காரணமாக எனக்கு வாரி வழங்குங்கள்!

என்றெல்லாம் பாடப்படுகிறது.

மவ்லானா மவ்லானா என்ற பாடலிலும் பாஸி என்பவரைக் கடவுள் நிலையில் வைத்து அவரிடம் வேண்டுதல் செய்யப்படுகிறது.

அல்லாஹ்வை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் பாஸி என்பவரை அல்லாஹ்வாக்கும் யூதர்களின் சதித் திட்டம் இதிலிருந்து தெரிகின்றது.

இந்த பாஸி என்பவரின் உளறல்களும் பாடப்படுகின்றன.

அர்ஷ், குர்ஸீ மற்றும் ஸுரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே உள்ளவற்றையும் நான் கண்டேன். அவை எனது ஆணைக்கு அடிபணிகின்றன.

தாகத்துடன் வருபவனுக்கு நானே புகட்டுகிறேன். என்னை அழைப்பவை இரட்சிக்கிறேன். அனைத்து விஷயங்களிலும் பரிந்துரை செய்கிறேன்.

திக்கற்றவனே! நீ தாகத்துடனிருந்தால் என்னை பாஸி என்று அழை! விரைந்து வருகிறேன்.

இவை யாவும் பாஸி என்பவரின் உளறல்கள். இறைவனை திக்ரு செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இந்த உளறலைத் தான் பாடுகின்றனர்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கிண்டல் செய்யும் பாடல்களும் இந்த ஹல்காவில் பாடப்படுகின்றன.

உன்னை அனைவரும் நரகத்தை அஞ்சி வணங்குகிறார்கள். மறுமை வெற்றியைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். சொர்க்கத்தில் குடியிருக்கவும் ஸல்ஸபீல் எனும் பானத்தை அருந்தவும் விரும்புகின்றனர். எனக்கோ, சொர்க்கம், நரகம் பற்றி அக்கறையில்லை. என் நேசத்திற்கு எந்தப் பிரதிபலனையும் நான் வேண்ட மாட்டேன்.

சொர்க்கத்தை வேண்டுமாறும், நரகத்திற்கு அஞ்சுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதைக் கிண்டல் செய்யும் திமிர் பிடித்த இந்த வார்த்தைகளைத் தான் திக்ரு என்று பாடுகின்றனர்.

முஹம்மதை நேசிக்கும் எவரும் தூங்கக் கூடாது என்ற இந்த உளறலும் இந்தப் பாடல்களில் உள்ளது.

இந்தப் பாடல்களில் தமாஷுக்கும் பஞ்சமில்லை.

என் கையைப் பிடித்து என்னை விரும்பக் கூடியவர்களிடம் என்னை விற்று விடுங்கள்! என் கையைப் பிடித்து கடை வீதிக்குக் கொண்டு போய் காதலர்களிடம் என்னை விற்று விடுங்கள்

இந்த ஹல்காவில் இந்தப் பாடல் வரிகளைப் பாடும் போது அவர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்று கடை வீதியில் விற்று விடுங்கள்!

இப்போது சொல்லுங்கள்! இந்த தமாஷும், வில்லன் சிரிப்பும், உளறல்களும் மனிதனைத் தெய்வமாக்கும் போக்கும் அதையொட்டி நடக்கும் கூத்தும் இறைவனை திக்ரு செய்வதாகுமா? பார்த்தாலே பளிச்சென்று தெரியக் கூடிய இந்தக் கோமாளித் தனங்கள் பள்ளிவாயிலில் அரங்கேற்றப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை.

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account