Sidebar

17
Thu, Apr
7 New Articles

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

பிரபாகரன் - புலிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

இலங்கை அதிபர் ராஜபக்சே பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது படுகொலை செய்துள்ளார். இந்தச் சிறுவனைக் கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு ஆதாரவாக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கது தான். அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதை விட பன்மடங்கு படுகொலைகளைச் செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அறிவுஜீவிகளது கண்களுக்கு கொலைகாரர்களாக ஏன் தெரியவில்லை என்பதுதான் நமது கேள்வி.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி என்ற ஊரில் தொழுது கொண்டிருக்கும்போது பள்ளிவாசலுக்குள் புகுந்து படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல் பச்சைத்தமிழர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

இவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா?

யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களை 24 மணி நேர கெடு விதித்து, கையில் ஐநூறு ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டி அடித்தார்களே! இது இந்த அறிவிஜீவிகள் கண்களுக்குத் தெரியவில்லையா?

வாழ்நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த சொத்து பத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டு கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டை விட்டு, ஊரைவிட்டு வெளியேறி ஒரே நாளில் ஓட்டாண்டியாக மாறி நடுத்தெருவுக்கு வந்தார்களே! இத்தகைய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய விடுதலைப்புலிகளின் கோர முகம் இந்த மனிதநேயம் பேசும் மகான்(?)களுக்கு விளங்கவில்லையா?

காத்தான்குடியில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளின் மிருகவெறியாட்டம் யாருக்கும் தெரியவில்லையா?

திரிகோணமலை என்ற மாவட்டத்தில் மூதூர் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கொலை வெறித் தாக்குதல்களால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கின்னியா, முல்லிப்பட்டிணம், கந்தலாய் போன்ற அகதி முகாம்களில் தஞ்சமடைந்த வரலாறு விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாதா?

கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளின் தலையீட்டினால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடானது. அந்த சமாதனப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அதை அமைக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட இந்த விடுதலைப்புலிகள் நிராகரித்தார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாதா?

அதே 2003 ஆம் ஆண்டு இலங்கையில் புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியில் பிரபாகரன் மற்றும் ரவூஃப் ஹக்கீமுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்களே! அவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டு முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த விடுதலைப் புலிகளின் துரோக வரலாற்றை மறைக்க முடியுமா? (இது குறித்த தனி பெட்டிச் செய்தியை கீழே காண்க!)

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.

இது குறித்து கடந்த 17 : 27 உணர்வு இதழில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் களமிறங்காதது ஏன்? என்ற தலைப்பில் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த விளக்கத்தை வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்திக்கு பதில் சொல்ல திராணியில்லாத விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்களை அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளும் நம்மை விமர்சித்து பல அவதூறு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பும் அவதூறு பேர்வழிகளுக்கும், விடுதலைப்புலி ஆதாரவாளர்களுக்கும் நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். ராஜபக்சேவை விட மகாக்கொடிய அயோக்கியர்கள் தான் விடுதலைபுலிகள் என்பதையும், அவர்கள் செய்த அட்டூழியங்களும், படுகொலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம். இவர்களுக்கு உண்மையிலேயே துணிவும், திராணியும் இருக்குமேயானால் நம்மை விவாதக் களத்தில் நேருக்குநேர் சந்தித்து விடுதலைபுலிகள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்கட்டும்.

நம்முடன் அவர்கள் விவாதிக்க வருவார்களேயானால், அவர்களது முகத்திரையைக் கிழித்து இவர்கள் முஸ்லிம்களை எப்படியெல்லாம் கருவறுத்தார்கள் என்பதையும், இவர்களது மிருக வெறியாட்டங்களையும் ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக்காட்ட நாம் தயாராக உள்ளோம் என்று இவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அவர்கள் தாங்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.

இன்னும் சில பெயர்தாங்கி முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் லட்டர்பேடு இயக்கங்களும் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்ற ஆசையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்களையும் பகிரங்க விவாதத்திற்கு நாம் அழைக்கின்றோம்.

வாயடைத்துப்போன புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் :

இப்போது நாம் வைத்துள்ள இந்த வாதங்களை இதற்கு முன்பாக புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களிடம் நமது மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் புள்ளிவிபரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டினார்.

திரைப்பட இயக்குநர் அமீர் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களை அழைத்துக் கொண்டு பீஜே அவர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் போது, பீஜே அவர்கள் புலிகள் செய்த அட்டூழியங்களையும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளையும் புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு, இதற்கான அறிவிப்பை புலிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இது தான் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்'' என்று பீஜே சொல்ல, புலிகள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியாத சிவாஜிலிங்கம் பீஜே வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் அதை ஆமோதித்தார்.

இதனை ஆமோதித்த சிவாஜிலிங்கம், இதைப் பற்றி புலிகளின் தலைமையிடம் தான் வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தப் போவதாகவும் உறுதி தந்துவிட்டு சென்றார். 2008ஆம் ஆண்டு சென்றவர் தான் அத்துடன் நமது பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை எனும்போது இவர்கள் எத்தகையவர்கள் என்பதும், இவர்களது உண்மை முகமும் நமக்கு விளங்குகின்றதா இல்லையா?

14.03.2013. 2:55 AM]

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account