உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?
இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்றால் பட்டினிச்சாவுகள் ஏற்படுகிறதே? அப்படியானால் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்கவில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.
இறைவன் உணவுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் ஒருவரும் எப்போதும் சாகக் கூடாது என்று இவர்கள் கேட்பார்களா? உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் எவ்வளவு காலம் ஒருவன் வாழ வேண்டும் என்று இறைவன் முடிவு செய்துள்ளானோ அந்தக் காலம் வரை இறைவன் பொறுப்பு என்பது தான் இதன் பொருள்.
மேலும் இறைவனைத் தவிர யாரும் பொறுப்பேற்க முடியாது என்பதும் இதன் கருத்தாகும்.
உணவு மட்டுமின்றி எல்லா பாக்கியங்களுக்கும் இறைவன் தான் பொறுப்பு என்றாலும் அனைத்துமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் கொண்டதாகும். நிரந்தரமானதல்ல. எவ்வளவு காலத்துக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளானோ அந்தக் காலம் வரை அவன் உணவளிப்பான் என்பதுதான் இதன் பொருள்.
திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் மனிதனுக்கு வழங்கப்படும் அனைத்தும் காலக்கெடுவுடன் கூடியதாகும் என்று அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான்.
இதை 6:2, 7:34, 10:49, 11:3, 16:61, 71:4 ஆகிய வசனங்களில் காணலாம்.
ஒருவனுக்கு எப்போது மரணம் என்று இறைவன் நிர்ணயம் செய்துள்ளானோ அதுவரை தான் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளான். தவணை வந்து விட்டால் பொறுப்பேற்றல் என்பது கிடையாது.
இது உணவுக்கு மட்டும் அல்ல. அனைத்துக்கும் உள்ள பொதுவான விதியாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு இறைவன் தான் பொறுப்பு. ஒருவனின் பாதுகாப்புக்கும் இறைவன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டால் எந்த மனிதனுக்கும் நோய் வராது என்றும், எந்த மனிதனும் சாக மாட்டான் என்றும் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode