Sidebar

03
Tue, Dec
21 New Articles

எது காட்டுமிராண்டிச் சட்டம் - கலைஞருக்கு விவாத அறைகூவல்

நாத்திகம் பகுத்தறிவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana
எது காட்டுமிராண்டிச் சட்டம் - கலைஞருக்கு விவாத அறைகூவல்
 
இலங்கைப் பெண் ரிசானாவிற்கு சவூதி அரசு மரண தண்டனை அளித்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.13 அன்று வெளியிட்டுள்ளார்.
 
மரண தண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
மனுஷ்ய புத்திரன் இது குறித்து அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைக்கு தனியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது
 
 
மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:
 
ஒருவர் ஒரு செய்தியைச் சொல்கின்றார் என்றால் அது குறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பி விடுவீர்களா?
 
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா?
 
அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
 
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் ஜெயலலிதா விட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டினால் அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
 
மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
 
மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
 
ரிசானாவிற்கு அநியாயமாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது தான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
 
மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத் தான் முன் வைத்துள்ளார்.
 
வண்ணாரப்பேட்டை சம்பவம் :
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் 3 மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத் தினறி அது இறந்து விட்டது. இந்தச் சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித் தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இது போல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத் தினறி 4 மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பது தான் கலைஞரின் வாதம்.
 
இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?.
 
ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும் போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?
 
சம்பந்தப்பட்டவர் அந்தக் குற்றத்தைச் செய்தாரா? இல்லையா?
 
அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?
 
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
 
இதைத் தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
 
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்குத் தெரியாததா?
 
ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பது தான் அறிவுடையோர் செயல்.
 
அதைவிட்டுவிட்டு இந்தக் கொலைச் சம்பவம் உண்மையா? இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித் தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்ய மாட்டார்.
 
இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்து விட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அது போல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அது போலத் தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.
 
இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை தான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதைத் தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வர வேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது.

Kalainjer Vivatham Kaditham

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account