அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை
5445حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி 5445
அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்கள் விஷத்தை முறிக்கின்ற அளவுக்கு ஆற்றல் கொண்டது. மனித உயிரைக் கொல்லும் எப்படிப்பட்ட விஷமாக இருந்தாலும் இந்தப் பழத்தை உண்டவருக்கு அந்த விஷம் ஒன்றும் செய்யாது என இந்தச் செய்தி கூறுகின்றது.
நிரூபித்துக் காட்ட வேண்டும்
இந்தச் செய்தி சொர்க்கம், நரகம் போன்ற மறைவான விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.
மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதி பயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. உண்மையில் அஜ்வா பழத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும்.
இந்தச் செய்தியை நம்பக்கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
இதை நிரூபித்துக் காட்ட இவர்களுக்கு அஜ்வா பழம், விஷம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. இவை இரண்டையும் எளிதில் வாங்கிவிட முடியும். எனவே அஜ்வா பழத்தை உண்டுவிட்டு விஷம் குடிக்க வேண்டும். இதன் பிறகு விஷம் இவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டால் இந்தச் செய்தி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி உண்மையானது என்பதை நிரூபிக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. அசத்தியத்தை தோலுரித்துக் காட்ட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான்.
உனக்கு இறைத் தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய்! மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்! என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போனான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 2:258
இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் அஜ்வா பழம் தொடர்பான செய்தி அசத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்.
இது சரியான செய்தி என்று அவர்களின் வாய் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதின் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூற மாட்டார்கள்.
அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
திருக்குர்ஆன் 4:87
தன் பெயரில் இது போன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
مسند أحمد بن حنبل
16102 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عامر قال ثنا سليمان بن بلال عن ربيعة بن أبي عبد الرحمن عن عبد الملك بن سعيد بن سويد عن أبي حميد وعن أبي أسيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا سمعتم الحديث عني تعرفه قلوبكم وتلين له أشعاركم وأبشاركم وترون أنه منكم قريب فأنا أولاكم به وإذا سمعتم الحديث عني تنكره قلوبكم وتنفر أشعاركم وأبشاركم وترون أنه منكم بعيد فأنا أبعدكم منه قال
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.
அறிவிப்பவர் : அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478
مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يُرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1
எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இது போன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருப்பதாகும்.
நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்: தத்ரீபுர்ராவீ
இந்தச் செய்தியைச் சரி காணக்கூடியவர்கள் நமது வாதங்களுக்குப் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு உளறி வருகிறார்கள். இவர்களின் இந்த உளறல்களே இந்தச் செய்தி பொய்யானது என்பதை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
விஷத்தை வேண்டுமென்றே குடித்தால் அஜ்வா விஷத்தை முறிக்காது. பாம்பு போன்ற விஷப் பிராணிகளால் நாம் விரும்பாமல் விஷம் உடம்பில் ஏறிவிட்டால் அப்போது தான் அஜ்வா வேலை செய்யும் என்று இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் கூறுகின்றனர்.
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து முள் தானாக நமக்குக் குத்தினால், அதற்காக அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுப்போமா? ஒருவன் ஒரு முள்ளை எடுத்து வேண்டுமென்றே தனது காலில் குத்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுக்க முடியுமா? அதுபோல் தான் விஷப்பாம்பு தானாக நம்மைத் தீண்டினால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அஜ்வா நம்மைக் காக்கும். நாமாக திமிர் எடுத்துப்போய் விஷப்பாம்பை கடிக்க விட்டால் அல்ல.
இப்படி வாதிடுகின்றனர்.
இதில் முள் குத்தினால் வலிக்காது என்று கூறப்படவில்லை. அப்படி கூறப்பட்டால் அதையும் நிரூபிக்குமாறு நாம் கேட்போம். அதுவும் பொய்யானது என்று நாம் மறுப்போம். இந்த ஹதீஸில் மறுமையில் கிடைக்கும் நன்மை பற்றி பேசப்படுகிறது. அதை நிரூபிக்குமாறு கேட்க முடியாது. அது உலகில் நிரூபித்துக் காட்டும் விஷயமே அல்ல.
உதாரணம் காட்டுவது என்றால் இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும்.
துன்பத்தை நாமாக வரவழைத்துக் கொண்டால் நன்மை கிடைக்காது என்பது சரிதான். ஏனென்றால் தன்னைத் தானே நோவினைப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்த காரியத்தைச் செய்து நன்மையை அடைய முடியாது.
ஆனால் அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கின்றது என நம்பக்கூடியவர்களுக்கு விஷம் சாப்பிடுவது நோவினையான ஒன்றல்ல. ஏனென்றால் அஜ்வா விஷத்தினால் வரும் நோவினைகளைத் தடுத்துவிடும் வல்லமையுடையது என்று நம்புகிறார்கள். அதாவது அஜ்வா சாப்பிட்ட பின்னர் விஷம் சாதாரண உணவு என்ற நிலைமைக்கு வந்து விடுகிறது. எனவே இதைச் சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவர்கள் நம்பினால் இதை உதாரணமாகக் காட்ட முடியாது. அஜ்வாவுக்குப் பின்னர் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பினால் இவர்களும் இந்த ஹதிஸை நம்ப மறுக்கிறார்கள் என்றே பொருள்.
விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டிருந்தால் அஜ்வா வேலை செய்யாதாம். இல்லாவிட்டால் வேலை செய்யுமாம். என்ன அறிவிப்பூர்வமான விளக்கம்?
ஒருவன் விஷத்தை குடிபானம் என்று நினைத்து தவறுதலாக குடித்துவிட்டால் அப்போது அஜ்வா இவனைக் காக்கும். விஷம் என்று தெரிந்தே குடித்தால் அஜ்வா காக்காது என்று கூறுகிறார்கள். இப்போது அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மையுடன் விஷம் குடிப்பவனின் எண்ணத்தை அறிந்துகொள்ளும் சக்தியும் வந்துவிட்டது?
இப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் தான் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அஜ்வா ஹதீஸ் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய நாட்டத்தைப் பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க அஜ்வாவைப் பற்றியே பேசுகின்றது. அஜ்வா செய்தி ஆன்மிக அடிப்படையில் சொல்லப்படவில்லை. மருத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நாம் அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை. அஜ்வாவின் ஆற்றலைப் பற்றியே சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றோம்.
அல்லாஹ் நாடினால் நெருப்பு குளிராகும். கடல் பிளக்கும். மலை தூள்தூளாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்பது உண்மை. இதனால் நெருப்பு எப்போதும் குளிராக இருக்கும் என்றோ கடலை எப்போதும் யார் வேண்டுமானாலும் பிளக்கச் செய்யலாம் என்று கூறுவது அறிவீனம்.
ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறினாலும் அவர் வேண்டுமென்றே விஷத்தைக் குடித்தாலும் விஷ முறிவு மருந்தை அவருக்குக் கொடுத்தால் அந்த மருத்து விஷத்தை முறித்துவிடும்.
அஜ்வா விஷத்தை முறிக்கும் என்றால் மற்ற விஷ முறிவு மருந்துகள் வேலை செய்வது போல் அஜ்வாவும் வேலை செய்ய வேண்டும். மற்ற மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பது போல் அஜ்வாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
இவர்கள் ஆசைப்படக் கூடிய வகையில் கேட்கிறோம். இவர்கள் அஜ்வாவை மட்டும் சாப்பிடட்டும். விஷத்தைச் சாப்பிட வேண்டாம். இவர்கள் அஜ்வாவைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் மீது நாம் விஷ ஊசியை ஏற்றுகிறோம். இவர்கள் தமாக விரும்பி விஷத்தை ஏற்றிக் கொள்ளாததால் இந்த சவாலுக்கு இவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. இதையாவது ஏற்பார்களா?
நாம் மனதாலும், வாயாலும் அது பொய் என்கிறோம். ஆனால் இவர்களோ வாயால் நம்பி மனதாலும் நடவடிக்கையாலும் பொய்யாக்கிக் கொண்டு உள்ளனர். இது தான் வித்தியாசம்.
25.03.2012. 13:15 PM
அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode