அத்தியாயம் : 72 அல் ஜின்
மொத்த வசனங்கள் : 28
அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!
2. அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்.
3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.
4. எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான்.
5. "மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்'' என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.
6. மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்குக் கர்வத்தை அவர்கள் (மனிதர்கள்) அதிகமாக்கி விட்டனர்.
7. "அல்லாஹ் யாரையும் திரும்ப உயிர்ப்பிக்க மாட்டான்'' என்று நீங்கள் நினைத்தது போலவே அவர்களும் நினைத்தனர்.
8. வானத்தைத்507 தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
9. (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.307
10. பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
11. நம்மில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு இல்லாதோரும் உள்ளனர். பல வழிகளில் சிதறிக் கிடந்தோம்.
12. பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம்.
13. நேர்வழியைச் செவியுற்றபோது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நட்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்ச மாட்டார்.
14. நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
15. அநீதி இழைத்தோர் நரகத்திற்கு விறகுகளாக ஆனார்கள். (என்று ஜின்கள் கூறின)
16, 17. அவர்கள் இவ்வழியில் உறுதியாக இருந்திருந்தால் அதில் அவர்களைச் சோதிப்பதற்காக484 அவர்களுக்கு அதிகமான தண்ணீரைப் பருகக் கொடுத்திருப்போம். தமது இறைவனின் நினைவைப் புறக்கணிப்போரைக் கடினமான வேதனையில் அவன் நுழையச் செய்வான்.26
18. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
19. அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும்போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.
20. "நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
21. "நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை" என்றும் கூறுவீராக!
22. "அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!
23. "அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதுச் செய்திகளிலிருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை)" (என்றும் கூறுவீராக!) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
24. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் காணும்போது உதவி செய்வோரில் யார் பலவீனர் என்பதையும், எண்ணிக்கையில் குறைந்தவர் யார் என்பதையும் அறிந்து கொள்வர்.
25. "நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்றும் கூறுவீராக!
26, 27, 28. அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.104 அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.26
அத்தியாயம் 72 அல் ஜின்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode