Sidebar

22
Sun, Dec
26 New Articles

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?

அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது, மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ, காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்தக் கருத்து வேறுபாட்டிற்குக் காரணம்.

ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4:119

அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

காதுகளிலும், மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது, மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது கூடாது என்ற முடிவுக்கு வரலாம்.

அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

5931 - حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا  جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ عَبْدُ اللَّهِ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى» مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி 5931

இறைவன் வழங்கியுள்ள உருவத்தை மாற்றுவதால் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்தல் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

காது, மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.

மேலும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதனின் வடிவம் தான் அழகிய வடிவமாகும்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

திருக்குர்ஆன் 95:4

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?

திருக்குர்ஆன் 37:125

அழகிய படைப்பாளன் என்று அல்லாஹ் தனக்குப் பெயர் சூட்டியுள்ளான். அவன் எதை எப்படி படைத்துள்ளானோ அது தான் அழகு.

ஆண்களுக்கு எவை அழகோ அவற்றை ஆண்களுக்கு வழங்கியுள்ளான். பெண்களுக்கு எவை அழகோ அவற்றைப் பெண்களுக்கு வழங்கியுள்ளான்.

காது மூக்கு குத்தினால் அல்லாஹ் அழகாகப் படைக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறோம்.

காது மூக்கு குத்தலாம் என்ற கருத்துடையவர்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு காது மூக்கு குத்தலாம் என வதிடுகின்றனர்.

صحيح البخاري

98 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ: إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، وَقَالَ: عَنْ ابْنِ عَبَّاسٍ، أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (98)

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் முன்னிலையில் காது மூக்கு குத்தும் போது அவர்கள் அதைத் தடுக்காமல் இருந்தால் காது மூக்கு குத்தலாம் என்று நாம் முடிவு செய்யலாம்.  ஆனால் இந்த ஹதீஸில் அப்படி எதுவும் இல்லை. முன்னரே காது குத்தியவர்கள் நபிகள் நாயகம் முன்னால் இருந்துள்ளனர் என்பது தான் இந்த ஹதீஸில் உள்ளது.

சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது, மூக்கு குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்தக் காதில் ஆபரணங்களைப் போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற கருத்தைத் தான் இதில் இருந்து எடுக்க முடியும்.

மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தவறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.

ஆபரணங்களைக் காதில் தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இறைவன் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்ற காரணத்துக்காகத் தான் காது, மூக்கு  குத்தக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஒருவர் சட்டம் தெரியாமல் குத்திவிட்டால் துளையிட்ட காதில் ஆபரணங்களை அணிவது தவறல்ல.

எனவே காது மூக்கு குத்தக்கூடாது என்ற மார்க்கச் சட்டம் தெரிந்த பிறகு அதை குத்துவது கூடாது. சட்டம் தெரியாத நேரத்தில் குத்தியிருந்தால் அதில் ஆபரணங்களை தொங்க விடுவதற்குத் தடையில்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account