Sidebar

22
Fri, Nov
13 New Articles

இலங்கை உமர் அலி விவாதத்தின் விளைவு

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இலங்கை உமர் அலி விவாதத்தின் விளைவு

இலங்கை உமர் அலி என்பவருடன் பீஜே நடத்திய விவாதத்தின் போது இருந்த சூழ்நிலைகளை நினைவுபடுத்தும் வகையில் இலங்கை அல்தாஃப் எனும் சகோதரர் சில விபரங்களை தெரிவித்துள்ளார். அது பதிவு செய்யப்பட வேண்டிய கருத்து என்பதால் வெளியிடுகிறோம்.

இலங்கை ஜமாத்துல் முஸ்லிமீனின் வளர்ச்சிக்கு முடிவு கட்டப்பட்டு வைக்கப்பட்ட முத்திரை , 1993.ஆண்டு என்று நினைக்கிறேன்.

புத்தளத்தை நோக்கி தவ்ஹீத்வாதிகள் படையடுத்தனர். அதில் நானும் ஒருவன். உமரளிக்கும், பி.ஜெக்கும் இடையில் பகிரங்க விவாதம். விவாதத்தின் தலைப்பு பி.ஜெ மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் காஃபிர்கள்; ஏன் என்றால் அவர்கள் ஜமாத்துல் முஸ்லிமீன் அமீராகிய உமரளியிடம் பைய்யத் செய்யவில்லை.

இந்த விவாதத்திற்கு முன் இலங்கை தவ்கீத்வாதிகள் யார் சொல்வது சரி என்ற தடுமாற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

பல தடவைகள் உமர் அலி எல்லோரையும் விவாதத்துக்கு அழைத்து விட்டார். யாரும் போகத் தயார் இல்லை. போனவர்கள் மூக்கை உடைத்துக் கொண்டு அவரின் ஜமாத்தை வளர்ச்ச்சியின் பாதைக்கு தள்ளி விட்டனர் .

அந்த இக்கட்டான கட்டத்தில் தௌஹீத்வாதிகள் சாரைசாரையாக ஜமாத்துல் முஸ்லிமீனில் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது இலங்கைக்கு வந்த பி.ஜெ முஸ்லிமை காஃபிர் என்று சொல்லலாமா என்ற உரை நிகழ்த்தினார்.

அப்போது கலந்துரையாட அழைத்த உமரளியை மேடையில் சந்திப்போம் என்று ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டுச் சென்றார் . விவாதத்திற்காக இலங்கை வந்தார் பி.ஜெ. அப்போது அவருக்கு வயது நாற்பத்தி மூன்று .

விவாதத்திற்கு முந்திய இரவு நான் புத்தளத்திற்கு நான் வந்து விட்டேன். புத்தளம் காசிமியாவில் அனைவரும் அன்று வந்து சேர்ந்தனர். பி.ஜெ அவர்களும் அங்கு தான் வந்தார். அன்று இலங்கை தௌஹீத் ஜமாஅத் எந்த பிரிவுமில்லாமல் ஒரே ஜமாத்தாகத் தான் இருந்தது.

அனைவரினதும் கவனம் நாளை நடக்கவிருக்கும் விவாதம் பற்றியது தான். ஏன் மக்களை விட தௌஹீத் உலமாக்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நாளை விவாதத்தில் தான் தௌஹீத் ஜமாத்துடைய எதிர்காலமே தங்கி இருக்கிறது. நாளை விவாதத்தின் முடிவில் தான் தெரியும் தௌஹீத் சரியா? இல்லை ஜமாத்துல் முஸ்லிமீன் சரியா? என்ற குழப்பத்தில் இருந்தனர்.

அன்று காசிமியாவில் தங்கி இருந்தவர்கள் நாளை விவாதத்தில் பி.ஜெ தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? எங்கள் குடும்பங்களில் உள்ளவர்களைக் காஃபிர் என்று சொல்ல வேண்டி வருமே? அனைவரையும் விட்டு பிரியும் இக்கட்டான நிலை நமக்கு ஏற்பட்டு விடுமே என்ற மாதிரியான புலம்பல். நிம்மதி இன்மை நிலவியது.

இன்று நினைப்பது போல் இல்லை அன்று. பைய்யத் பற்றிய தெளிவு அறவே இல்லாத காலம். ஏன் உமரளிக்கும் கூட இன்று உள்ள தெளிவு அன்று கிடையாது.

அப்பேற்பட்ட அந்தச் சூழ்நிலை அன்று இருந்தவர்களுக்கு நன்றாகப் புரியும். யாரைப் பார்த்தாலும் எது சத்தியம் என்பதை விவாதத்தின் பின் தான் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் காணப்பட்டனர்.

நாளை விவாதம்! இன்று இரவு தூங்குவதற்கு ஆயத்தமாகிறோம். அப்போது மௌலவி அன்சார் இவர் காசிமியாவின் உஸ்தாத் ஆக இருந்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் அன்று இரவு தூங்கவிருந்த அனைவரையும் பார்த்துச் சொல்கிறார். அன்புச் சகோதரர்களே நாளை ஓர் முக்கியமான நாள். எல்லோரும் தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்புங்கள். அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்யுங்கள். நாளைக்கு நடக்கவிருப்பது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள போராட்டம். சத்தியம் நம்ம பக்கம் இருந்தாலும் நாளை விவாதத்தில் பி.ஜெ தோல்வி அடைந்து விட்டால் ஒட்டு மொத்த தௌஹீத்வாதிகளும், மௌலவிகளும் ஜமாத்துல் முஸ்லிமீன் பக்கம் போய் விடுவார்கள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை அதனால் நாளை விவாதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் என்று கூறி கண்ணீர் விட்டார்.

எப்படிப்பட்ட கொடுமையான காலம் அது? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருக்கு. அந்த நேரம் நெருங்கியது. புத்தளம் நகர மண்டபத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் வெள்ளம் ஜன்னல்களும், கதவுகளும் திறந்த நிலையில் அந்த விவாதம் நடந்தது.

ஜமாத்துல் முஸ்லிமீன் சார்பாக உமர் அலியும், நதீர் மதனியும், தௌஹீத் ஜமாஅத் சார்பாக பி.ஜ மற்றும் m.i. சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர். விவாதம் ஆரம்பிக்கும் வரை தவ்ஹீத் ஜமாத்தினர் குழப்பத்தில் மூழ்கி இருந்தனர். நம்முடைய எதிர்கால கொள்கை எது என்ற கேள்விக்குறியுடன் மேடையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம்.

விவாதம் ஆரம்பமானது. முதல் நாற்பத்தைந்து நிமிடம் உமரலிக்கு தன்னுடைய கொள்கையை விளக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவரும் விளக்கினார். அடுத்து பி.ஜெ.

இப்படி விவாதம் காரசாரமாக நடந்து கொண்டு போனது.

பி.ஜெ கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் உமரலி மேடையில் தடுமாறத் தொடங்கினார். மக்களுக்கு உமரலியின் அறியாமை புரிந்தது. உமர் அலியின் நிலையைப் பார்த்த பார்வையாளர்கள் சிரிக்குமளவுக்கு மாறியது.

விவாதத்தின் நடுவில் பி,ஜெ கேட்ட கேள்விக்கு உமர் அலி, இதற்குப் பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேன் என்று தன் வாயால் தான் பிழையான கொள்கையில் இருப்பதை ஒப்புக் கொண்டு பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேனென்று மேடையிலேயே வாக்குமூலம் கொடுத்தார்.

விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போதே பி.ஜெயின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனவுடன் முபாஹலாவுக்குத் தயாரா முபஹலா செய்வோம் என்று உமரலி திருப்பி திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது பி.ஜெ முதலாவது முனாலராவை முடிப்போம். பிறகு முபாஹலா செய்வோம். எல்லாத்திற்கும் தயாராகத் தான் வந்திருக்கிறோம் என்றார்.

இல்லை முனாலரா (விவாதம்) வேண்டாம். முபாஹளா தான் என்ற பிடிவாதத்தில் நின்றார் உமர் அலி.

பி.ஜெ சொன்னார் சரி வாங்க இந்தியாவுக்கு. விவாதத்திற்கு நான் இங்கு வந்திருக்கிறேன். முபாஹலாவுக்கு நீங்கள் இந்தியாவுக்கு வாங்கள் என்று பீஜே அதையும் ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கு உமரலியும், நதீரும் போவதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் இது வரைக்கும் பதினாறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அசத்தியவாதிகள் இன்னும் முபாஹலாவுக்கு இந்தியாவுக்குப் போனதாக இல்லை.

அதில் நதீர் மதனி தன்னைத் திருத்திக் கொண்டார் அந்தக் காலத்திலேயே ஜமாத்துல் முஸ்லிமீனிலிருந்து விலகிக் கொண்டார். அந்த விவாதத்தில் ஜமாத்துல் முஸ்லிமீனுக்கு பி.ஜெ முடிவு கட்டினார்.

ஜமாத்துல் முஸ்லிமீனிலிருந்து அப்போது இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாகக் களன்றனர். உமர் அலி இடம் அவர்களின் சகாக்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஜமாத்தின் நிலைபாடுகள் அடிக்கடி மாறத் தொடங்கியது. நிலை இல்லாமல் தடுமாறத் தொடங்கினார்.

எங்கு பார்த்தாலும் விவாத கேசட்டுக்கள். தனிநபர் விவாதங்கள். அன்றே என்னுடன் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் எத்தனையோ பேர் பையத்தை முறித்துக் கொண்டனர்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் அவர்களின் பிரச்சாரகர்களில் ஒருவரான கொழும்பு சென்றல் ரோடைச் சேர்ந்த சகோதரர் ஹலீமைக் குறிப்பிடலாம். இவரின் சகோதரர் ஜமாத்துல் முஸ்லிமீனின் ஒரு ஆலிமாவார் .

இன்று இவர்களின் கொள்கையை உடைத்து பிரச்சாரம் சரியாகச் செய்யப்படவில்லை அப்படிச் செய்திருப்போமானால் அவர்களுக்கு இன்றிருக்கும் கூடாரம் கூட தற்போது இருந்திருக்காது .

ஏதோ அன்று நடந்த விவாதத்தின் தாக்கம் இன்று வரை அவர்களின் ஜமாத்துக்கு முத்திரையாக இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் பி.ஜெ அவர்கள் மீண்டும் ஓர் முயற்சி இது குறித்து எடுத்தால் இவர்களின் பிழையான கொள்கை இன்னமும் தெளிவாக்கப்படும். இவர்களின் ஜமாத்தில் ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக அமீரைக் கண் மூடிப் பின்பற்றுகிற கூட்டம் மாத்திரமே எஞ்சியுள்ளதைக் காண முடிகிறது.

தெளிவுள்ளவர்கள் தெளிவான பாதைக்கு வந்து சேருகிறார்கள். இன்னும் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் அந்த விவாதத்தின் வீடியோ கேசட்டுக்கள் என்ன ஆனதென்றே தெரியாமல் போனது. அதுவும் இருந்திருந்தால் அந்த ஜாமத்துக்கு ஆதரவாகப் பேச சகோதரர் முஹம்மது போன்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் .எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் தக்லீத் எனும் கண்மூடி பின்பற்றுவதிலிருந்து காப்பாற்றுவானாக என்று பிரார்த்தனையோடு முடிக்கின்றேன் .

அல்தாப் எழுதிய இரண்டாவது கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோதரர் முஹம்மது அவர்கள் ஜமாத்துல் முஸ்லிமீன் கூடாரங்கள் காலியாகின்றன என்ற பி.ஜெயின் கருத்து தவறானதாகக் குறிப்பிட்டுள்ளார். மாற்றமாக இலங்கையில் வேகமாக ஜமாத்துல் முஸ்லிமீன் கொள்கை பரவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் முஹம்மத் குறிப்பிடுகிற மாதிரிப் பார்த்தால் உலகத்தில் நாம் அறியாத இன்னுமொரு இலங்கை இருக்கின்றது போலும் தெரிகிறது,

ஏனென்றால் நாம் வாழும் இந்த இலங்கைத் தீவில் இப்படி ஜமாத்துல் முஸ்லிமீன் கொள்கை வளர்வதாகத் தெரியவில்லை.

மாற்றமாக இதைப் பதிவு செய்யும் இன்றைய தினத்திற்கு சில நாள் முன்னாள் ஒரு நண்பன் ஜமாத்துல் முஸ்லிமீனைச் சார்ந்தவர் அவரின் பெயர் அஸ்ரஃப். இவர் புத்தளத்தைச் சேர்ந்தவர். இவருடன் உரையாடும் போது நான் அவரிடம் குறிப்பிட்டேன். என்ன உங்களுடைய ஜமாத்தில் இப்போதெல்லாம் அமீரை மிகவும் முன்பை விட அதிகமாக கண்மூடிப் பின்பற்றுகிறீர் போலும். துறைமுகத்தில் வேலை பார்க்கும் உங்கள் ஜமாத்தைச் சேர்ந்த சகோதரன் உங்கள் கொள்கையில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து தெளிவு பெற்றிருக்கிறார். எங்களைப் பார்த்து சலாம் சொல்கிறார் என்று அவரிடம் கூறினேன்.

அப்போது அந்த நண்பன் கூறினார்; இல்லை அவர் ஜமாத்திலிருந்து முற்றாக வெளியேறி விட்டார் என்று பதிலளித்தார் . ஏன் உறுதி இல்லாத கொள்கையில் நீங்கள் இருக்கின்றீர் என்று அவரிடமே நான் கேட்டேன் . இது போன்று பலர் தடுமாற்றத்தில் மூழ்கி இருக்கின்றனர் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் கூடாரத்துக்கே வேலை இல்லாமல்; போய்விடும் அளவுக்கு அவர்களின் ஜமாத்தைச் சேர்ந்த எஞ்சி இருக்கும் சகோதரர்கள் கூட தெளிவு பெற்று வெளியே வந்து விடுவார்கள் என்ற சாயல் தெரிகிறது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account