Sidebar

26
Thu, Dec
34 New Articles

இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி?

தவ்ஹீதுக்கு எதிரானவை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை.

அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.

மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விண்ணுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும்.

நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர அவரையே நாம் சந்திக்கவில்லை.

மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்!

நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري

3241 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி 3241

صحيح البخاري

349 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، قَالَ جِبْرِيلُ: لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ، قَالَ: مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ، قَالَ: هَلْ مَعَكَ أَحَدٌ؟ قَالَ: نَعَمْ مَعِي مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ لِجِبْرِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا آدَمُ، وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، فَقَالَ لَهُ خَازِنِهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ: فَفَتَحَ، – قَالَ أَنَسٌ: فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ، وَإِدْرِيسَ، وَمُوسَى، وَعِيسَى، وَإِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ، وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ، قَالَ أَنَسٌ – فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِدْرِيسَ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، فَقُلْتُ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا مُوسَى، ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا عِيسَى، ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "، قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ، كَانَا يَقُولاَنِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوَى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ، حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ: مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، قُلْتُ: وَضَعَ شَطْرَهَا، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ، فَقَالَ: هِيَ خَمْسٌ، وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ بِي، حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ المُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ؟ ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا المِسْكُ "

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும், இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர், வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : புகாரி 349

இந்த இரு ஹதீஸ்களும் சொல்வது என்ன? மனிதர்கள் சொர்க்கத்துக்குச் செல்வதும், நரகத்துக்குச் செல்வதும் இனிமேல் நடக்கக் கூடியவை. மரணித்தவர்கள் இதுவரை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்லவில்லை. நியாயத் தீர்ப்பு நாளுக்குப் பிறகு தான் இது நடக்கும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் சிலரையும், நரகத்தில் சிலரையும் பார்த்ததாக முதல் ஹதீஸ் கூறுகிறது.

யாருமே சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இன்னும் செல்லாத போது எப்படி அவர்களை சொர்க்கத்திலோ, நரகத்திலோ பார்த்திருக்க முடியும்?

இனிமேல் நடக்க உள்ளதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.

நேரடியாகவே பார்த்தார்கள் என்று பொருள் வைத்தால் நியாயத் தீர்ப்பு நாளில்தான் இதற்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களையும், நபிமொழிகளையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாம் ஹதீஸில் சொர்க்கத்தில் உள்ளவர்களைத் தமது வலப்பக்கமும், நரகத்தில் உள்ளவர்களைத் தமது இடப்பக்கமும் ஆதம் நபி பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே? பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்? என்று சிந்தித்தால் இதன் மிஃராஜில் எப்படி சந்தித்தார்கள் என்பது விளங்கும்.

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இனிமேல் படைக்கவுள்ளதை எடுத்துக் காட்டுவது இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா? (என்று கேட்டான்.) ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம் என்றோ, இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா? என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

திருக்குர்ஆன் 7:172

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.

இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல காட்சிகளை அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.

எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் எடுத்துக் காட்டினான். கடந்த காலத்தில் மரணித்தவர்களையும் எடுத்துக் காட்டினான். எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை அல்லாஹ் எடுத்துக் காட்டியதால் அவர்கள் பிறந்து உயிருடன் உள்ளார்கள் என்று கருதுவது எந்த அளவு அபத்தமோ, மரணித்தவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று கருதுவதும் அதே அளவு அபத்தமாகும்.

மிஃராஜில் காட்டப்பட்டவை அனைத்தும் எடுத்துக் காட்டுதல் தான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

صحيح البخاري 1149 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன் என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1149

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் பிலாலைப் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பிலால் பூமியில் தான் அந்த நேரத்தில் இருந்தார். அவர் சொர்க்கத்தில் நடந்து சென்றது மெய்யான காட்சி என்றால் அது பிலால் அவர்களுக்குத் தான் முதலில் தெரிந்திருக்கும். அல்லாஹ்வின் தூதர் சொன்ன பிறகுதான் அவருக்கே தெரிந்தது என்றால் அவர் சொர்க்கத்தில் நடந்து செல்லவில்லை. இனிமேல் அவர் சொர்க்கம் செல்வார் என்பதைச் சொல்வதற்காக அவர் நடந்து செல்வது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கிடையாது.

صحيح البخاري 3679 – حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المَاجِشُونِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " رَأَيْتُنِي دَخَلْتُ الجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ، امْرَأَةِ أَبِي طَلْحَةَ، وَسَمِعْتُ خَشَفَةً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: هَذَا بِلاَلٌ، وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقَالَ: لِعُمَرَ، فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ، فَذَكَرْتُ غَيْرَتَكَ " فَقَالَ عُمَرُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ

நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, யார் அவர்? என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), இவர் பிலால் என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், இது யாருக்குரியது? என்று கேட்டேன். அவர், (வானவர்), இது உமருடையது என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்) என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன் என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 3679

பிலால் (ரலி) அவர்களும், ருமைஸா அவர்களும் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருப்பதாகக் காட்டினான்.

நடக்காத ஒன்றை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது போல், மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களைப் போல் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள்.

(பார்க்க: புகாரி 349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.

(முஸ்லிம் 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.

உலகம் அழிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத்திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. ஆன்மாக்களின் உலகில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக மிஃராஜ் பற்றிய ஹதீஸ்களில் வருகிறது.

سنن أبي داود

4878/ حدَّثنا محمَّد بنُ المصفى، حدَّثنا بقيةُ وأبو المغيرة، قالا: حدَّثنا صفوانُ، حدَّثني راشدُ بنُ سعدٍ وعبدُ الرحمن بنُ جبيرعن أنسِ بنِ مالك، قال: قال رسولُ الله -صلى الله عليه وسلم-: "لما عُرج بي مررتُ بقوم لهم أظفارٌ من نُحاسٍ يخمُشونَ بها وجُوهَهُم وصدُورَهُم، فقلت: مَن هؤلاء يا جبريلُ؟ قال: هؤلاء الذين يأكلُون لحومَ الناس، ويقعونَ في أعراضِهِم"

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ஜிப்ரயீலே! இவர்கள் யார்? என்று நான் கேட்டேன். இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : அபூதாவூத் 4255

உலகம் இனிமேல் தான் அழிக்கப்படும். அதன் பின்னர் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? நரகத்தின் தண்டனை எவ்வாறு இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதுதான் இதன் கருத்தாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح مسلم

6306 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِىِّ وَسُلَيْمَانَ التَّيْمِىِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « أَتَيْتُ – وَفِى رِوَايَةِ هَدَّابٍ مَرَرْتُ – عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِىَ بِى عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّى فِى قَبْرِهِ ».

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 

மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், விண்ணுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இவ்வாறு எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account