Sidebar

22
Sun, Dec
26 New Articles

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

அல்லாஹ்வையன்றி இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதனையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்பட்டவர்கள். (அவர்கள்) இறந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்லர். தாம் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20, 21

ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்று வாதிடக் கூடியவர்கள் இவ்வசனங்களையும் தங்களின் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அல்லாஹ்வையன்றி யாரெல்லாம் கடவுள் நிலையில் வைத்துப் பிரார்த்தனை செய்யப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் மரணித்தவர்கள் என்றும், உயிருடன் உள்ளவர்கள் அல்லர் எனவும் இவ்வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஈஸா நபியவர்கள் இறைவனின் நிலையில் வைத்து பிரார்த்திக்கப்படுகின்றார். வணங்கப்படுகின்றார். வணங்கப்படுவோர் யாவரும் மரணித்தவர்கள் என்று கூறப்படுவதால் ஈஸா நபியும் மரணித்து விட்டார்கள் என்பது இவர்களின் வாதம்.

தங்களின் தவறான முடிவை நியாயப்படுத்துவதற்காக திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்யாக்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பது இந்த வாதத்திலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

இன்று நமது நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் உயிருடன் வாழ்கின்ற மனிதர்களை வணங்கக்கூடியவர்கள் உள்ளனர். அவர்களை கடவுளின் அவதாரங்களாக நினைப்பவர்களும் உள்ளனர்.

சாய்பாபா, கல்கி, பங்காரு அடிகளார் போன்றவர்கள் நம் கண் முன்னே வாழ்கிறார்கள். இவர்களைக் கடவுளின் அவதாரங்ளாக எண்ணி வழிபடும் கோடிக்கணக்கான மக்களும் உள்ளனர்.

அல்லாஹ்வையன்றி யாரை நீங்கள் வணங்குகிறீர்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்ற வசனம் இவர்கள் கருத்தில் கொண்ட பொருளின்படி இப்போது பொய்யாகி விடுகின்றது. (நவூது பில்லாஹ்)

யாரையெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் கூறியவாறு இல்லாமல் வணங்கப்படும் பலர் உயிருடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர். உயிருடன் நம் கண் முன்னே வாழ்பவர்களை மரணித்தவர்கள் என்று கூறினால் தான் குர்ஆன் வசனம் மெய்யாக முடியும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்காக இவ்வாறு வாதம் செய்தவர்கள் சாய்பாபா போன்றவர்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?

சாய்பாபாக்களை விட்டு விடுவோம். இவ்வசனங்கள் அருளப்பட்ட காலத்தில் வணங்கப்பட்ட பலர் உயிருடன் இருந்துள்ளனர். திருமறைக் குர்ஆனிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ள இயலும்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியைக் கடவுளின் மகன் என்றனர். இது போலவே மக்காவில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் மலக்குகள் என்னும் வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்றனர். மலக்குகளை வணங்கியும் வந்தனர்.

உங்களுக்கு ஆண் குழந்தைகளைத் தேர்வு செய்து விட்டு வானவர்களைத் (தனது) பெண் மக்களாக (அல்லாஹ்) ஏற்படுத்திக் கொண்டானா? நிச்சயம் நீங்கள் பயங்கரமான வார்த்தையையே கூறுகிறீர்கள்.

திருக்குர்ஆன்: 17:40

ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறினார்கள். அவன் தூயவன். மாறாக அவர்கள் மரியாதைக்குரிய அடியார்களாவர்.

திருக்குர்ஆன்: 21:26

ரஹ்மானின் அடியார்களாக உள்ள வானவர்களை பெண்களாக ஆக்கிவிட்டனர். அவர்களைப் படைத்த போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களின் கூற்று பதிவு செய்யப்படும். மேலும், இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். ரஹ்மான் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை (வானவர்களை) வணங்கியிருக்க மாட்டோம் எனவும் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் வீண் கற்பனையே செய்கிறார்கள்.

திருக்குர்ஆன்: 43:19, 20

இவ்வசனங்கள் கூறுவது என்ன? வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்று மக்கத்து காபிர்கள் கூறியுள்ளனர். அவர்களை வணங்கியும் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வணங்கப்பட்டவர்கள் யாவரும் மரணித்தவர்கள் என்றால் இந்த வாதப்படி வானவர்களும் மரணித்தவர்கள் என வாதிட வேண்டும். வானவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்று இவர்கள் கூற வேண்டும்.

ஈஸா நபியைப் பற்றி எந்தத் தவறை கிறிஸ்தவர்கள் செய்தார்களோ அதே தவறைத் தான் வானவர்கள் விஷயத்தில் மக்கத்துக் காபிர்களும் செய்தனர். இறைவனுக்கு மகன் இருக்கலாம் என்ற வாதமும், மகள்கள் இருக்கலாம் என்ற வாதமும் அடிப்படையில் சமமானவை தான்.

ஈஸா நபியை வணங்கியதால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வாதிட்டால் மலக்குகளை வணங்கியதால் மலக்குகளும் மரணித்து விட்டார்கள் என்று வாதிட வேண்டும்.

மலக்குகளை மட்டுமின்றி ஜின்களையும் மனிதர்கள் வணங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில் "இவர்கள் தாம் உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?'' என்று வானவர்களிடம் அவன் கேட்பான். அதற்கவர்கள் "நீ தூயவன் - நீ தான் எங்கள் பாதுகாவலன் அவர்களல்ல. மாறாக அவர்கள் ஜின்களையே வணங்கினார்கள். அவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பிக்கை கொண்டார்கள்.

திருக்குர்ஆன்: 34:40, 41

அன்றைய மனிதர்கள் ஜின்களை வணங்கினார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. ஒருவர் வணங்கப்படுவது அவர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரமாக இருந்தால் ஜின்களும் மரணித்து விட்டார்கள் என்று வாதிடவேண்டும். ஈஸா நபி விஷயத்தில் செய்த வாதத்தை ஜின்கள் விஷயத்தில் இவர்கள் செய்வதில்லை.

மலக்குகள் - ஜின்கள் ஆகியோர் வேற்று இனத்தவர்கள். மனித இனத்தில் வணங்கப் படுபவர்களைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன என்று சமாளிப்பார்களானால் அதுவும் தவறு தான். ஏனெனில், உயிருடன் உள்ள மனிதர்களும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வணங்கப்பட்டுள்ளனர்.

தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும், மர்யமின் மகன் மஸீஹையும் (ஈஸாவையும்) அல்லாஹ்வையன்றி கடவுளர்களாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே ஒரு கடவுளை வணங்குமாறு தவிர இவர்கள் கட்டளையிடப்படவில்லை. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன்: 9:31

ஈஸா நபியை எவ்வாறு கடவுளாகக் கருதினார்களோ அது போலவே பாதிரிகளையும், மத குருக்களையும் கடவுளாக கருதினார்கள் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஒருவர் வணங்கப்படுவது தான் அவரது மரணத்திற்குரிய ஆதாரம் என்ற இவர்களின் வாதப்படி உலகில் எந்தப் பாதிரியாரும், மதக் குருக்களும் உயிருடன் இல்லை என்று இவர்கள் அறிவிக்க வேண்டும். ஈஸா நபியைத் தவிர மற்றவர்கள் குறித்து இவர்கள் அவ்வாறு அறிவிக்க மாட்டார்கள்.

யாரை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள், இறந்தவர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! இவர்கள் விளங்குவது போன்ற கருத்தை அது தருகிறதே என்ற அடிப்படையான கேள்விக்கு வருவோம்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய முறைப்படி அணுகினால் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

திருக்குர்ஆனில் பொதுப்படையாக ஒரு இடத்தில் ஒரு செய்தி கூறப்பட்டால் அதற்கு வேறு இடங்களில் ஏதேனும் விதிவிலக்கு கூறப்பட்டுள்ளதா என்று ஆராய வேண்டும். விதிவிலக்குகள் இருக்குமானால் அவற்றைப் பொதுவாகக் கூறப்பட்டதிலிருந்து நீக்கி விட வேண்டும். மனிதன் அநியாயக்காரன், மனிதன் நன்றி கெட்டவன் என்றெல்லாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதே குர்ஆன் சில நல்லடியார்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொண்டார்கள் எனவும் குறிப்பிடுகிறது. மனிதன் நன்றி கெட்டவன் என்ற பொதுவான வார்த்தைப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு நபிமார்கள் உட்பட அனைவருமே நன்றி கெட்டவர்கள் என்று முடிவு செய்வது அறியாமையாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் நரகத்தின் எரி பொருட்களாவர் என்று குர்ஆன் 21:98 வசனம் கூறுகிறது.

இதனடிப்படையில் மனிதர்களால் வணங்கப்பட்ட ஈஸா நபி உள்ளிட்ட நபிமார்கள், நல்லடியார்கள் அனைவரும் நரகில் போட்டு எரிக்கப்படுவார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.

இந்த வாசக அமைப்பு இதற்கு இடமளித்தாலும் 21:101 வசனத்திலும், வேறு பல இடங்களிலும் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களை யாரேனும் வணங்கினால் வணங்கியவர்கள் தான் நரகில் போடப்படுவார்களே தவிர வணங்கப்பட்டவர்கள் நரகில் போடப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கையும் சேர்த்துத்தான் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது போல் தான் நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் இறந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள், பாதிரிகள், ஜின்கள், ஷைத்தான் ஆகியோர் வணங்கப்பட்டாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதே போல் ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கும் சான்றுகளை முன்னரே காட்டியுள்ளோம்.

அவர் கியாமத் நாளின் அடையாளமாவார், வேதமுடையோர் அவர் மரணிப்பதற்கு முன்னால் அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள் என்று 43:61, 4:159 ஆகிய வசனங்களில் ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்ற விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது.

ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் (5:75) என்ற வசனம் அவர் மரணிக்கவில்லை என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது.

இது போன்ற விதிவிலக்குகள் இருக்கும் போது அதைக் கண்டு கொள்ளாமல் அதற்கு உரிய எந்த விளக்கமும் தராமல் 16:20, 21 வசனங்களின் அடிப்படையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என வாதிடுவது அறியாமையும், மோசடியுமாகும்.

9:31 வசனத்தில் பாதிரிகளையும், மதக் குருக்களையும் ஈஸாவையும் கடவுளர்களாக ஆக்கினார்கள் என்று இறைவன் கூறுகிறான். உயிருடன் உள்ள முதலிருவருடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறுகிறான். இறைவன். ஏற்கனவே மரணித்து விட்ட அவரது தாயார் மர்யமை இங்கே கூறாமல் தவிர்க்கிறான்.

உயிருடன் வாழக் கூடியவர்களுடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறியிருப்பது அவர்கள் மரணிக்கவில்லை எனக் கூறும் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

எனவே ஈஸா நபி இறந்துவிட்டார் என்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account