பூமியைப் பிளக்க முடியாதா? பூமிக்குள் மலையளவு செல்ல முடியாதா?
17.37 வசனத்தின் படி பூமிக்குள் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் செல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை எடுத்துக் காட்டுகிறார் இஸ்மாயில் சலபி.
இவ்வசனத்துக்கு இக்பால் மதனி செய்துள்ள தமிழாக்கம் இது தான்.
மேலும் பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம். அவ்வாறு நீ நடப்பதால் நிச்சயமாக நீர் பூமியை(ஆழத்தால்) பிளந்து விடவே மாட்டீர். இன்னும் உயரத்தால் மலைகளை அடைந்து விடவே மாட்டீர்.
அதாவது கர்வமாக நடந்தால் பூமியைப் பிளக்க மாட்டீர் என்ற சாதாரண செய்தி தான் இதில் உள்ளது. எந்த அறிவியல் உண்மையும் இதில் இல்லை.
மேலும் உண்மைக்கு மாறான செய்தியாகவும் இது அமைந்துள்ளது. கர்வமாக இருந்தாலும் கர்வமாக இல்லாவிட்டாலும் மனிதனால் பூமியைப்யைப் பிளக்க முடியும். இந்த உண்மைக்கு மாற்றமாக இக்பால் மதனியின் தமிழாக்கம் அமைந்துள்ளது.
17.37 வசனத்துக்கு பீஜேயின் தமிழாக்கத்தின் படி
பூமியைப் பிளந்து மலையின் உயரம் அளவுக்குக் கீழே செல்ல முடியாது
என்ற அறிவியல் உண்மை அடங்கி மாபெரும் அற்புதமாக அமைந்துள்ளது.
இதைத் தான் பீஜே பின்வருமாறு தனது தமிழாக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாதுவிண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது.
இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.
"நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை'' என்ற கருத்துப் படவே பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்ப காலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான்.
"நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை''
மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படியெல்லாம் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.
இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.
மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.
இந்தப் பேருண்மைகளை 14 நூற் றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.
இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தில் உள்ளது என்று இஸ்மாயீல் சலபி உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் இந்த அறிவியல் உண்மை இருக்கிறதா?
இவ்விரு தமிழாக்கத்தில் இக்பால் மதனி கூறுவது தான் சரி என்றால் பீஜேயின் தவறான மொழிபெயர்ப்பை போட்டு அதன் படி எவ்வாறு வாதிட்டுள்ளீர்கள்?
இக்பால் மதனி தமிழாக்கம் தவறு என்றால் அதை அறிவிக்க உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
பூமியைப் பிளக்க முடியாதா? பூமிக்குள் மலையளவு செல்ல முடியாதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode