Sidebar

16
Mon, Sep
1 New Articles

உபரியான வணக்கம் என்பது என்ன?

உபரியான வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

உபரியான வணக்கம் என்பது என்ன?

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படலாம்.

மார்க்கத்தில் நாமாக விரும்பிச் செய்கின்ற நபில்கள் எனும் உபரியான வணக்கம் இல்லையா? எட்டு ரக்அத்கள் போக எஞ்சியதை உபரி வணக்கம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்பது தான் அந்தச் சந்தேகம்.

கடமையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போக ஒருவர் தனக்கு விருப்பம் ஏற்படும் போது உபரியான நோன்பை நோற்கலாம்.

அது போல் கடமையான, சுன்னத்தான தொழுகை போக நாம் விரும்பும் போது உபரியாகத் தொழலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் உபரியான தொழுகைக்கும், கடமையான, சுன்னத்தான தொழுகைக்கும் வேறுபாடுகள் உள்ளன.

கடமையான தொழுகை அல்லது நோன்பு, சுன்னத்தான தொழுகை அல்லது நோன்பு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே அளவு கொண்டதாக அமையும்.

உபரியான தொழுகை அல்லது உபரியான நோன்பு என்பது தனிப்பட்ட மனிதன் விரும்பித் தேர்வு செய்வதால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நேரம் கிடைத்தால் ஒரு புதன் கிழமை நோன்பு வைப்பார். அந்த நேரத்தில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள். இன்னொருவர் ஒரு செவ்வாய்க் கிழமை நோன்பு நோற்பார். அந்த நாளில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள்.

முஹர்ரம் 9, 10ல் நோன்பு நோற்பது சுன்னத் என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்.

ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப்படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.

சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு ரக்அத்கள் தொழலாம். அதற்கு மறுநாள் அதை விட்டு விடலாம். நபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.

இப்போது தராவீஹ் என்ற பெயரில் தொழும் தொழுகையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், நபிவழி ஆதாரமின்றி 20 ரக்அத்கள் என்று தீர்மானித்துக் கொண்டு அதை அனைவர் மீதும் திணிக்கின்றனர். இதுதான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, மார்க்கத்தின் கட்டளை எனவும் தவறாக நம்புகின்றனர்.

இவர்கள் தொழும் தராவீஹ் என்பதற்கு உபரியான வணக்கம் என்ற வாதம் பொருந்தாது.

உபரியான வணக்கத்துக்கு இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்கத்தைத் தான் மேலதிகமாக ஒருவர் செய்ய அனுமதி உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்துவது நபில் எனும் உபரியான வணக்கத்தில் சேராது.

உதாரணமாக தராவீஹ் தொழுகையின் நான்கு ரக்அத்களுக்கிடையில் சில திக்ருகளை ஓதுகின்றனர். இந்த திக்ருகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் கற்றுத் தரவில்லை. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு நாங்களாக விருப்பப்பட்டு ஓதுகிறோம் என்று வாதிட்டால் அது ஏற்கப்படாது.

மார்க்கம் வரையறுத்துள்ள எல்லையைக் கடந்து விடாத அளவுக்கு உபரி வணக்கங்கள் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.

صحيح البخاري

1978 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ»، قَالَ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَمَا زَالَ حَتَّى قَالَ: «صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا» فَقَالَ: «اقْرَإِ القُرْآنَ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ فَمَا زَالَ، حَتَّى قَالَ: «فِي ثَلاَثٍ»

தினமும் முழுக் குர்ஆனை ஓதி முடிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தனர். உபரி என்ற பெயரில் இந்த எல்லையை மீறக் கூடாது.

நூல் : புகாரி 1978

உடலுக்கும், மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பாதிக்கும் வகையில் உபரியான வணக்கம் இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லை வகுத்தனர். இந்த எல்லையை மீறி உபரி வணக்கம் கூடாது.

பார்க்க : புகாரி 1968, 1975, 5199, 6134, 6139

எனவே உபரியான வணக்கத்தின் இலக்கணத்தை அறியாமல் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்து 20 ரக்அத்களை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account