குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா?
ஹஜ் பெருநாள் மற்றும் அடுத்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் வரும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை தனிக் கட்டுரையில் நாம் விளக்கியுள்ளோம்.
ஆனால் 22:28 வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்று பன்மையாகச் சொல்லப்பட்டுள்ளதால் ஒரு நாள் மட்டும் குர்பானி கொடுக்கும் நாள் அல்ல என்று TNTJ எனும் அமைப்பினர் வாதிடுகின்றனர்,
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 22:28)
இந்த வசனத்தை எடுத்துக் காட்டி அவர்கள் செய்யும் வாதம் இதுதான்:
இவ்வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்) என்று சொல்லப்பட்டுள்ளது.
பிராணிகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்று இவ்வசனம் சொல்வதுடன் குறிப்பிட்ட நாட்களில் இதைச் செய்யலாம் எனவும் கூறுகிறது.
ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று இருந்தால் குறிப்பிட்ட நாளில் என்று அல்லாஹ் ஒருமையாகச் சொல்லி இருப்பான். ஆனால் நாட்களில் என்று அல்லாஹ் பன்மையாகச் சொல்கிறான்.
இரண்டுக்கும் மேற்பட்ட நாட்கள் இருந்தால் தான் பன்மையாகக் கூற முடியும். குறிப்பிட்ட நாட்கள் என்று பன்மையாகச் சொல்லி இருப்பது பெருநாளையும், அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களையும் குறிக்கும்.
இதுதான் இவர்களின் வாதத்தின் சுருக்கம்.
இந்த வசனத்தில் அடைப்புக் குறிக்குள் இவர்களாகச் சேர்த்துக் கொண்ட வாசகம் தான் இவர்களுக்கான ஆதாரமாக உள்ளது.
(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்);
அதாவது குர்பான் கொடுப்பவர்களாகவும் என்ற சொல் மூலத்தில் இல்லை. இவர்களாகத் தான் இச்சொற்றொடரைச் சேர்த்துள்ளனர். மூலத்தில் இல்லாத குர்பான் கொடுப்பவர்களாக என்று இவர்கள் சேர்த்ததை நீக்கி விட்டால் இது குர்பானியைக் குறிக்காது என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
இவர்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதையும், குர்பானியை இவ்வசனம் குறிக்காது என்பதையும் மிக எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வசனம் ஹஜ்ஜுக்கு அழைப்பு விட்டு ஹாஜிகள் செய்யும் காரியங்கள் யாவை என்பது குறித்து பேசும் வசனமாகும்.
இதை யாரும் மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது.
ஹஜ்ஜுடைய காரியங்களைப் பேசும் வனங்களில் குர்பானியைக் குறித்துப் பேசுவதாக இருந்தால் ஹஜ்ஜின் கடமைகளில் குர்பானியும் அடங்கி இருக்க வேண்டும்.
ஆனால் ஹஜ், உம்ராவைச் சேர்த்து செய்யும் தமத்துவு முறைக்குத் தான் குர்பானி கடமை.
ஹஜ் மட்டும் ஒருவர் செய்தால் குர்பானி கடமை இல்லை.
இது அனைத்து பிரிவினரும் ஒருமனதாக ஒப்புக் கொண்ட ஹஜ்ஜின் சட்டமாகும்.
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (196) 2:196
196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:196
ஹஜ் உம்ரா செய்வதற்கு தடுக்கப்பட்டவர்கள் பலிப்பிராணி கொடுக்க வேண்டும் என்று இவ்வசனம் சொல்கிறது. அடுத்து இன்னொரு பலிப்பிராணி பற்றியும் சொல்கிறது.
ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்குத் தான் பலியிடுதல் எனும் பரிகாரம் உண்டு. அது இயலாவிட்டால் பரிகாரமாக மூன்று நாட்கள் ஹஜ்ஜிலும், ஏழு நாட்கள் ஊர் சென்ற பின்பும் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு பத்து நோன்புகள் இதற்கான பரிகாரமாகும்.
ஹஜ் மட்டும் செய்பவருக்கு குர்பானி என்பது கிடையாது என்பது இவ்வசனத்தில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
குர்பானியைப் பற்றித் தான் இவ்வசனம் பேசுகிறது என்று வாதம் செய்பவர்கள் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் என்று சொல்ல வேண்டும். அப்படி அவர்களால் சொல்ல முடியாது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்தல் என்பது தான் இதன் பொருளாகும். ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் தவாஃப், தல்பியா, திக்ரு, தக்பீர் என அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறோம்.
வேறு விதமாகச் சொல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதற்கு இரு வகையாக பொருள் கொள்ள வாசகம் இடம் தருகிறது.
குறிப்பிட்ட நாட்களில் பிராணிகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றும் வாசக அமைப்பின்படி பொருள் கொள்ளலாம்.
பிராணிகளை நமக்கு உணவாக ஆக்கியதற்கு நன்றியாக அல்லாஹ்வின் பெயர் கூறி அவனைப் போற்றிப்புழுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இதற்கும் வாசக அமைப்பு இடம் தருகிறது.
முதல் வகையான கருத்தை நாம் ஏற்றால் ஹஜ்ஜின் கடமைகளில் அல்லது அதன் சுன்னத்களில் குர்பானியும் அடங்கும் என்ற முடிவு கிடைக்கும்.
ஆனால் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஹஜ்ஜுக்கும், குர்பானிக்கும் சம்மந்தம் இல்லை என்பதில் ஒட்டு மொத்த உம்மத்தும் ஒரே கருத்தில் உள்ளார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய நபிவழியில் நம் ஹஜ் என்ற நூலிலும் இதை எழுதியுள்ளோம்.
3. இஃப்ராத்
இஃப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.
இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.
நூல் : நபிவழியின் நம் ஹஜ்
ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்கு மட்டும் தான் குர்பனி உண்டு; அது கூட இயன்றால் தான் கொடுக்க வேண்டும். இயலாவிட்டால் பத்து நோன்பு நோற்கலாம். எனவே இது கூட குர்பானியில் வராது. குர்பானி கொடுக்க முடியாதவர் அதற்குப் பதிலாக நோன்பு நோற்கலாம் என்று சட்டமில்லை.
இந்தப் பலியிடுதல் தமத்துவு முறையில் ஹஜ் செய்வதற்குச் செய்ய வேண்டிய பரிகாரமாகும்.
எனவே ஹஜ்ஜுக்கு மக்களை அழைக்கும் வசனத்தில் கூறப்பட்ட குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதற்கு குர்பானி கொடுத்தல் என்ற அர்த்தம் கொள்ள முடியாது. அப்படி அர்த்தம் கொள்வார்களானால் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் எனக் கூற வேண்டும். அப்படி அவர்களே கூறுவதில்லை.
இந்தப் பொருள் மேலே நாம் எடுத்துக் காட்டிய 2:136 வசனத்துக்கு முரணாக உள்ளதால் இந்த வசனத்திற்கு குர்பானி எனப் பொருள் கொள்ள முடியாது.
அப்படியானால் நாம் இரண்டாவதாகச் சொன்ன பொருள் தான் கொடுக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ் வேண்டும்.
குறிப்பிட்ட நாளில் என நாம் ஒருமையாகச் சொல்லவில்லை, குறிப்பிட்ட நாட்களில் என்று நாமும் பன்மையாகத் தான் சொல்கிறோம்.
குறிப்பிட்ட நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் பிரச்சனை.
குர்பானி கொடுக்க பல நாட்கள் என்று குர்ஆன் கூறுகிறதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode