கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா?
கூட்டாகக் குர்பானி கொடுப்பவர்கள் சமமாக முதல் இட வேண்டுமா? அல்லது அவரவர் வசதி அடிப்படையில் இடலாமா?
பதில்
ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட வேண்டும் என்றோ அவரவர் வசதிக்கேற்ப பங்கெடுக்க வேண்டும் என்றோ நேரடியாக ஹதீஸில் கூறப்படாவிட்டாலும் அதன் பொருள் அனைவரும் சமமாகப் பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.
ஏழாயிரம் ரூபாய் மதிப்புடைய மாட்டில் ஒருவர் 500 ரூபாய் மட்டும் கொடுத்தால் அவர் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக மாட்டார். பதினான்கில் ஒரு பங்கு கொடுத்தவராகத் தான் ஆவார். எனவே இவர் குர்பானி கொடுத்தவராக மாட்டார்.
ஒவ்வொருவரும் சமமாகக் கொடுத்தால் தான் ஒவ்வொருவரும் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக முடியும்.
அதே சமயம் ஆறு பேர் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி அதில் ஒரு பங்கை மனமுவந்து இன்னொருவருக்காக விட்டுக் கொடுத்தால் அப்போது பணம் கொடுக்காதவருக்கும் குர்பானி நன்மை கிடைத்து விடும். ஏனெனில் இவருக்காக மற்றவர்கள் அன்பளிப்புச் செய்ததால் இவரே கொடுத்ததாகத் தான் பொருள்.
அது போல் ஏழாயிரம் ரூபாய் மதிப்புடைய மாட்டை வாங்கும் போது நீங்கள் 500 ரூபாய் தந்தால் போதும் இன்னொரு 500 ரூபாயை உங்களுக்காக நாங்கள் போட்டுக் கொள்கிறோம் என்று மற்ற ஆறு பேரும் மனமுவந்து கூறினால் அப்போது அவர் நேரடியாகக் கொடுத்தது 500, அவருக்காக ஆறு பேரும் சேர்ந்து அன்பளிப்பாகக் கொடுத்தது 500 ஆக மொத்தம் அவர் 1000 ரூபாய் கொடுத்தவராகி விடுவார்.
கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode