Sidebar

26
Thu, Dec
34 New Articles

விண்ணில் பறந்து பிறை பார்க்கலாமா?

பிறை பார்த்தல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விண்ணில் பறந்து…

மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?

வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது. சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த் திசையில் பிரதிபலிக்கிறது.

பூமியின் பக்கம் உள்ள சந்திரன் இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது. ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்துக்கு ராக்கெட்டில் போனால் அமாவாசை தினத்திலே பௌர்ணமியைக் காணலாம். குறிப்பிட்ட கோணத்தை அடைந்தால் ஏழு அல்லது எட்டாம் பிறை அளவைக் காணலாம்.

அதை வைத்து ஏழாம் நாள் என்று அமாவாசை தினத்தில் முடிவு செய்ய மாட்டோம். பூமிக்கு சந்திரனிலிருந்து ஒளி வருகிறதா என்பதும் அது நம் கண்களுக்குத் தெரிகிறதா என்பதும் நமக்கு தேவை.

ஆகாயத்தில் ஏறிச் சென்றால் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நாம் விரும்புகிற எந்த அளவிலும் பிறையைக் காண முடியும். எனவே இதை அளவுகோலாக வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாகக் கூறுவார்கள். மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

ஓர் ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அந்த நேரத்தில் எந்த நாடுகளெல்லாம் சுப்ஹு நேரத்தைக் கடக்கவில்லையோ அந்த நாடுகளில் அது தலைப்பிறையாகவும் சுபுஹு நேரத்தைக் கடந்துவிட்ட நாடுகளில் மறுநாள் தலைப்பிறையாகவும் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்தும் இருந்து வருகின்றது. இந்தக் கருத்தும் மார்க்க அடிப்படையில் எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தாகும்.

இந்தக் கருத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஷாஃபான் மாத இறுதியில் இரவு முழுவதும் கண்விழித்து பிறையை எதிர்பார்க்க வேண்டும். ஏனென்றால் சுபுஹ் வரை எங்கிருந்தாவது பிறை பார்த்த தகவல் வந்து விடலாம். அப்படி தகவல் வந்து விட்டால் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு அல்லது எதையும் சாப்பிடாமல் நோன்பு வைக்க வேண்டும் என்ற நிலை உருவாகின்றது.

இது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் தகவல் கிடைத்தது தெரியாமல் யாரெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் இறைவனிடம் குற்றவாளிகளா?

சரி! அப்படியாவது உலகம் முழுவதும் ஒரே நாளில் அவர்களால் கொண்டு வர முடியுமா என்றால் அதுவும் சரியில்லை. உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்க்கப்படும் போது திருச்சியில் சுபுஹ் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். திருச்சியில் சுபுஹ் நேர இறுதியில் இருக்கும் போது மணப்பாறையிலோ அல்லது அருகிலுள்ள பகுதியிலோ சுபுஹ் நேரம் அதாவது ஸஹர் இறுதி நேரம் கடந்திருக்கும். இப்போது பக்கத்து பக்கத்து ஊரிலேயே இரண்டு நாட்களில் நோன்பையும் பெருநாளையும் அடைகிறார்களே?

இந்தக் கேள்விகளையும் இதற்கு முன்னர் நாம் எழுப்பியுள்ள கேள்விகளையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவரவர் பகுதிகளில் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும் எனக்கூறும் ஹதீஸ்களையும் சிந்தித்துப் பாருங்கள். சுப்ஹானல்லாஹ் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

முப்பதாம் நாள் இரவில் நாம் பிறை பார்க்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது முப்பதாம் நாளாக இருப்பதற்குச் சாத்தியம் உள்ளது போல் அடுத்த மாதத்தின் முதல் நாளாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

நமக்குப் பிறை தென்பட்டால் இந்த மாதம் 29 உடன் முடிந்து விட்டது என்றும், மறு மாதம் துவங்கி வட்டது என்றும் கருதிக் கொள்ள வேண்டும்.

நமக்குப் பிறை தெரியாமல் வேறு ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் நமக்குக் கிடைக்கிறது. எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும். அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடும் அளவுக்குக் குறைந்த நேரம் இரண்டு ஊர்களுக்கும் வித்தியாசம் இருந்தால் அத்தகவலை ஏற்றுக் கொண்டு, அதுவும் நமது பகுதியைச் சேர்ந்தது தான் என்று முடிவு செய்ய வேண்டும்.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ் நூல்: அபூதாவூத்

அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமான நிமிடங்கள் அல்லது மணிகள் இரண்டு ஊர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்தத் தகவலை அலட்சியம் செய்து விட்டு, அதை முப்பதாம் நாளாக முடிவு செய்ய வேண்டும். மறு நாள் அடுத்த மாதம் பிறந்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும்.

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர் நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்

எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்? என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை. அந்த அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது.

இந்த தாலுகா, இந்த மாவட்டம், இத்தனை மைல், அல்லது இத்தனை நிமிடம் என்று அந்தந்த பகுதியினர் முடிவு செய்து, அந்த தூரத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

இதற்கான அதிகாரம் அந்தந்த பகுதி மக்களுக்கு அல்லது அந்தந்த ஊர் மக்களுக்கு உள்ளது தானே தவிர எங்கோ இருந்து கொண்டு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது.

இது தான் பிறை பற்றிய தெளிவான முடிவு! மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களைச் சிந்தித்தால் இந்த முடிவுக்குத் தான் யாரும் வர முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account