Sidebar

19
Wed, Feb
67 New Articles

தவறான வாதமும் தக்க பதிலும்

பிறை பார்த்தல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தவறான வாதம்

இவ்வளவு தொலைவிலிருந்து பிறை பார்த்த செய்தி கிடைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்காமல் அவர்களது கூற்றை ஏற்று நோன்பை விடுமாறும், மறுநாள் பெருநாள் தொழுமாறும் ஆணையிடுகிறார்கள். நோன்பு திறக்க சில மணி நேரங்களே இருக்கும் போது கூட நோன்பை விடச் சொல்லியுள்ளனர்.

எனவே எவ்வளவு தொலைவான ஊர்களில் பிறை பார்க்கப்பட்டாலும் அந்தத் தகவல் நமக்குக் கிடைக்குமானால் அந்தத் தகவலை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

இது தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து எடுத்து வைக்கப்படும் தவறான வாதமாகும்.

தக்க பதில்

இந்தத் தவறான வாதத்துக்குக் காரணம் மேற்கண்ட ஹதீஸுக்குத் தவறாக பொருள் கொண்டதேயாகும். இந்த ஹதீஸுக்கு எவ்வாறு தவறான பொருள் கொண்டுள்ளனர் என்பதைக் காண்போம். எங்களுக்குப் பிறை தெரியாததால் நாங்கள் நோன்பு நோற்றோம் என்று தன்னிலையாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதிக் கட்டத்தில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று கூறுகிறார்கள். இவர்களது கூற்றை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளை எவ்வாறு அமைந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய, பலரும் கவனிக்கத் தவறிய அம்சமாகும்.

அதைப் புரிந்து கொள்வதற்காக மூன்று விதமான வாசக அமைப்பைக் கீழே தந்துள்ளோம்.

*மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறு நாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

*மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைகிறோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

*மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் அவர்களது தொழும் திடலுக்கு அவர்கள் மறுநாள் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இங்கே நாம் சுட்டிக்காட்டிய மூன்று வாக்கிய அமைப்புகளில் முதலிரண்டு அமைப்புகளில் இந்த ஹதீஸ் அமைந்திருந்தால் இவர்களின் வாதம் ஏற்கக் கூடியது தான். ஆனால் நாம் மூன்றாவதாகக் குறிப்பிட்ட அமைப்பில் தான் ஹதீஸ் அமைந்துள்ளது.

நாங்கள் நோன்பு நோற்றோம். எங்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்றால் வெளியூர் சாட்சியத்தை ஏற்று உள்ளூர் மக்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

அல்லது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தால் வெளியூர் கூட்டம் வந்து அளித்த சாட்சியத்தை ஏற்று எல்லா மக்களையும் நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

யார் சாட்சியம் அளித்தார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக இவர்கள் வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்களது தொழும் திடலுக்கு மறு நாள் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகிறது. பிறை பார்த்தவர்களுக்குத் தான் அந்தக் கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த உள்ளூர் மக்களுக்கு அல்ல!

அவர்களுக்கும், எங்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூட ஹதீஸில் கூறப்படவில்லை. நாங்கள் என்று இவ்வாசகம் ஆரம்பமாகிறது. நாங்கள் என்று யார் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும். கூறப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு சாராருக்கும் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்கும், அவர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

நாங்கள் அவர்கள் என்று இரு சாரார் பற்றிக் கூறும் போது அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறினால் நாங்கள் எனக் கூறியவர்களை அது கட்டுப்படுத்தாது என்பது யாருக்கும் தெரிந்த உண்மை!

நான் பத்து ரூபாய் கேட்டேன். அவர் பத்து ரூபாய் கேட்டார். அவருக்குப் பத்து ரூபாய் கொடுத்தார்கள் என்று கூறினால் பத்து ரூபாய் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. எனக்கல்ல என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பில் தான் ஹதீஸ் வாசகமும் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு கட்டளையிட்டது வாகனக் கூட்டத்தினரை மட்டும் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, மதீனாவாசிகளோ அத்தகவலை ஏற்று நோன்பை விடவில்லை என்பது தான் சரியான பொருள் என்பதற்கு நாம் மேலே கூறியுள்ள விளக்கமே போதுமானதாகும்.

இந்த ஹதீஸைக் கவனமாக ஆராயும் போது வெளியூரில் பிறை பார்த்த பின்பும் நோன்பை விடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்ட வாகனக் கூட்டத்தார்களுக்குத் தான் நோன்பை விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்களே தவிர உள்ளுர் மக்களுக்குக் கட்டளையிடவில்லை. உள்ளுர் மக்களோ, நபியவர்களோ நோன்பை விட்டதாக எந்த அறிவிப்பும் இல்லை.

எந்தப் பகுதியில் பிறை தென்பட்டதோ அப்பிறை அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தான் கட்டுப்படுத்தும். அப்பகுதியைச் சேராதவர்களை அறவே கட்டுப்படுத்தாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

வாகனக் கூட்டம் தொலைவிலிருந்து வந்தது என்பது உண்மை தான் என்றாலும் இன்றைய பயண வேகத்துடன் ஒப்பிடும் போது அது அரை மணி நேரத்தில் சென்றடையக் கூடிய தூரம் தான். அந்தக் குறைவான தூரத்தில் இருந்து வந்த தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்காத போது சவூதியில் காணப்பட்ட பிறையை இந்தியாவில் உள்ளவர்களை ஏற்றுக் கொள்ளச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

சவூதியில் ஒரு பகுதியினர் பார்த்த பிறையை சவூதியின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களே ஏற்கக் கூடாது என்பது தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெறப்படும் கருத்தாகும்.

அருகில் உள்ள ஊரிலிருந்து கிடைத்த தகவல் என்றாலும் அதை ஏற்கக் கூடாது. எப்பகுதியில் பார்க்கப்பட்டதோ அப்பகுதியினரை மட்டுமே அத்தகவல் கட்டுப்படுத்தும் என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் அறிவிக்கிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனமும் அதைத் தொடர்ந்து எடுத்துக் காட்டிய நபிமொழியும் கூறும் கருத்தைத் தான் இந்த ஹதீஸ் வேறு வார்த்தையில் கூறுகின்றது.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். வாகனக் கூட்டம் வந்து பிறைச் செய்தியை அறிவித்த ஹதீஸில் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் சில அறிவிப்புகளில் அமரஹும் (அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்) என்று கூறாமல் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அமரன் னாஸ) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்புகளை எடுத்துக் காட்டி யாரேனும் தவறான வாதங்களை முன்வைத்து விடக்கூடும். எனவே அந்த அறிவிப்புகளின் நிலையையும், தரத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

மேற்கண்ட அறிவிப்பை ஷுஃபா அவர்களிடமிருந்து அவரது ஒன்பது மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் பெயர் இடம் பெற்றுள்ள நூல்

1.யஹ்யா - நஸாயீ

2.ஹப்ஸ் பின் உமர் - அபூதாவூத்

3.நள்ர் பின் ஷமீல் - தாரகுத்னீ

4.வஹ்ப் பின் ஜரீர் - தாரகுத்னீ

5.ரூஹ் பின் உபாதா - தாரகுத்னீ

6.அபுந் நள்ர்  - தாரகுத்னீ

7.முஹம்மது பின் ஜஃபர் - அஹ்மத்

8.அய்யூப்  - முஸ்னத் அல்ஜஃத்

9.சுஃப்யான் - தாரகுத்னீ

ஷுஅபாவின் ஒன்பது மாணவர்களில் எட்டு மாணவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவித்திருக்க தாரகுத்னீயில் சுஃப்யான் மட்டும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒரே ஒரு மாணவர் மட்டும் பலர் அறிவிப்பதற்கு மாற்றமாக அறிவித்தால் அந்த அறிவிப்பு பலவீனமானதாகும். இந்த வகை ஹதீஸ்கள் ஷாத் எனப்படும். அவர் எவ்வளவு நம்பகமானவராக இருந்தாலும் சரியே.

இது ஹதீஸ் துறை அறிஞர்களிடையே கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியாகும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்க்கும் போதும் எட்டு பேரிடம் மறதி, தவறு ஏற்படுவதை விட ஒருவரிடம் மறதியும் தவறும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

எனவே எல்லா மாணவர்களும் இந்தச் செய்தியை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறியிருக்கும் போது ஒருவர் மட்டும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறுவது நிச்சயம் பலவீனமானது தான்.

இந்தப் பலவீனமான அறிவிப்பு தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பலவீனம் மட்டுமின்றி மற்றொரு பலவீனமும் இந்த அறிவிப்பில் உள்ளது.

தாரகுத்னீயில் மட்டும் இந்த ஹதீஸ் நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளது. நான்கு ஹதீஸ்களுமே அபூபக்கர் நைஸாபூரி என்பவர் வழியாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் இவர் ஒவ்வொரு அறிவிப்பையும் வெவ்வேறு ஆசிரியர்கள் வழியாக அறிவிக்கிறார்.

1.அஹ்மத் பின் சயீத் பின் சக்ர்

2.இப்றாஹீம் பின் மர்சூக்

3.முஹம்மத் பின் இஸ்ஹாக்

4.முஹம்மத் பின் இஸ்மாயீல் அஸ்ஸானீ

இந்நால்வரில் முதலில் உள்ள மூவர் வழியாக அறிவிக்கும் போது (வெளியூரிலிருந்து வந்த) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அபூபக்கர் நைஸாபூரி கூறுகிறார். ஆனால் நான்காவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் இஸ்மாயீல் அஸ்ஸானீ) வழியாக அறிவிக்கும் போது மட்டுமே மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

ஒரு செய்தியைப் பல ஆசிரியர்கள் வழியாக ஒருவர் அறிவிக்கும் போது ஒரே ஒரு ஆசிரியர் வழியாக மட்டும் அதற்கு மாற்றமாக அறிவிக்கப்பட்டால் அந்தச் செய்தி மேலும் பலவீனமடையும்.

இந்த இரண்டு பலவீனங்கள் மட்டுமின்றி மற்றொரு முக்கியமான பலவீனமும் இதில் இருக்கிறது.

இவரது நான்காவது ஆசிரியரான முஹம்மத் பின் இஸ்மாயீல் அஸ்ஸானீ என்பார் யாரென்று அறியப்படாதவர்.

ஹதீஸ் கலையில் சிலரைப் பற்றி யாரென அறியப்படதாவர் என்று கூறுவது வழக்கம். அவர்களைப் பற்றி சில குறிப்புகளாவது நமக்குக் கிடைக்கும்.

அவர்களது நம்பகத் தன்மை பற்றித் தான் தெரியாமல் இருக்கும். ஆனால் ஹதீஸ் தப்ஸீர், அஸ்மாவுர் ரிஜால் உட்பட (தாரகுத்னீயின் இந்த ஹதீஸைத் தவிர) எந்த நூல்களிலும் இவரது பெயர் கூட இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு எவராலும் அறியப்படாதவராக இவர் இருக்கிறார்.

ஹதீஸ் துறை அறிஞர்கள் எவரும் இவரது பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை. எனவே ஆதாரமாகக் கொள்ள முடியாத இவர் வழியாக மட்டும் தான் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே இது மிகவும் பலவீனமான அறிவிப்பு என்பதில் எவராலும் இரண்டாவது கருத்து கொள்ள முடியாது.

அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற இடத்தில் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறும் மற்றொரு அறிவிப்பு முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதவும் பலவீனமான அறிவிப்பு தான்.

முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் நூலில் ஹுஷைம் என்ற ஆசிரியர் வழியாகவே அப்துர் ரஸ்ஸாக் இதை அறிவிக்கிறார்.

இவரையும் சேர்த்து இந்தச் செய்தியை இதே ஹுஷைம் என்ற ஆசிரியரிடமிருந்து ஐந்து பேர் அறிவித்துள்ளனர்.

அபூபக்கர் பின் அபீ ஷைபா

யஹ்யா பின் யஹ்யா

ஸியாத் பின் அய்யூப்

அஹ்மத் பின் ஹம்பல்

அப்துர் ரஸ்ஸாக்

ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் முதல் நான்கு பேரும் (வெளியூரிலிருந்து வந்த) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறும் போது அப்துர் ரஸ்ஸாக் மட்டுமே மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் எனக் கூறுகிறார். எனவே இதுவும் ஷாத் எனும் ஹதீஸாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதைத் தவிர உள்ள ஏராளமான அறிவிப்புகளில் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பலவீனமான அறிவிப்பை வைத்துக் கொண்டு மக்களுக்குக் கட்டளையிட்டதாக வாதிட முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மதீனாவாசிகளும் நோன்பு நோற்றிருந்தார்கள் மாலை நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் வந்து தாங்கள் பிறை பார்த்ததாகத் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள். இது தான் அந்த ஹதீஸின் விளக்கம் என்று கற்பனை செய்து சிலர் கூறுகிறார்கள்.

இவ்வாறு விளக்கம் கூறுபவர்கள் இதில் உண்மையாளர்களாக இருந்தால் இக்கருத்துக்கு முரணாக கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் அவர்களே இதற்கு முரணாக கருத்து சொல்வதிலிருந்து .இவர்கள் மனமறிந்தே தவறு செய்கிறார்கள் என்பது உறுதியாகின்றது.

இவர்கள் கற்பனை செய்த இந்தக் கருத்தின் அடிப்படையில் தகவல் எப்போது கிடைக்கிறதோ அப்போதே நோன்பை முறித்து விட வேண்டும்.

சவூதியில் பிறை பார்க்கும் போது அமெரிக்காவில் காலை 7 மணியாக இருக்கும். ஷவ்வால் பிறை சவூதியில் பார்க்கப்பட்ட தகவல் அமெரிக்காவில் காலை 7 மணிக்குக் கிடைக்கிறது.

இப்போது இந்த ஹதீஸுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் படி அமெரிக்காவாசிகள் காலை 7 மணிக்கு நோன்பை முறிக்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தகவல் கிடைத்தவுடன் நோன்பை விட்டு விட்டார்கள். ஆனால் அவர்கள் இவ்வாறு கூறுவதில்லை.

மாலை 7 மணிக்கு சவூதியில் உள்ளவர்களுக்கு ஷவ்வால் பிறை பிறந்து விட்டது என்றால் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கும் அன்றே ஷவ்வால் பிறை பிறப்பது உறுதியாகி விட்டது தான். ஆனால் மாலையில் சவூதியில் பிறை உதிக்கும் போது காலை 7 மணியில் இருக்கின்ற அமெரிக்காவாசிகள் சில மணி நேரம் கழித்து (தாமதமாக) ஷவ்வால் பிறையை அடைகிறார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

வாகனக் கூட்டம் தொடர்பான ஹதீஸிற்கு இவர்கள் கூறும் விளக்கத்தின்படி அமெரிக்காவாசிகள் உடனே நோன்பை முறிக்க வேண்டும்.

யார் ரமளானை அடைகிறாரோ என்ற வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் படி அமெரிக்காவாசிகள் நோன்பை முறிக்கக் கூடாது.

இப்போது அமெரிக்காவாசிகளுக்கு இவர்கள் கூறும் தீர்வு என்ன?

வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸிற்கு இவர்கள் விளக்கம் கூறும் போது பிறை பார்த்த தகவலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டவுடன் நோன்பை விடுமாறு மக்கள் அனைவருக்கும் கட்டளையிட்டதாகக் கூறுகின்றார்கள்.

மக்கள் அனைவருக்கும் கட்டளை என்று பொருள் கொடுத்தால் பிறை பார்த்த தகவலை காலை 7 மணிக்கு அடையும் அமெரிக்காவாசிகளும் நோன்பை வைக்கத் துவங்கி இன்னும் மக்ரிபை அடையாத எல்லாப் பகுதி மக்களும் நோன்பை விட்டே ஆக வேண்டும்.

ஆனால் நோன்பை விட வேண்டும் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.

அப்படியானால் வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸில் ஒட்டு மொத்த மக்களுக்கும் நோன்பை விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று இவர்கள் கூறுவது நமக்கு மறுப்புச் சொல்வதற்காக மட்டும் தான். உண்மையில் வாகனக் கூட்டத்திற்கு மட்டும் தான் கட்டளை என்பதை இவர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டே மறுக்கின்றார்கள்.

இந்த முரண்பாடுகளைக் கவனத்தில் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது வாகனக் கூட்டத்திற்கு மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடியும்.

பொதுவாக சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவதற்குப் பல அளவுகோல்கள் உள்ளன. ஒருவர் தமது வாதத்தைத் தாமே மறுப்பது அதில் முக்கியமானதாகும். அந்த வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள்.

வாகனக் கூட்டம் வந்து அஸர் நேரத்தில் தகவலைக் கூறியிருந்தும் உடனேயே மதீனாவாசிகளை நோன்பை விடச் சொன்னார்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களானால் அந்தப் பொருளுக்கு எதிராக எந்த வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது.

அமெரிக்காவில் காலை ஏழு மணியாக இருக்கும் போது சவூதியில் பிறை பார்த்த தகவல் கிடைத்தால் அவர்கள் நோன்பை விடக் கூடாது என்று இவர்கள் வாதிடுவது அந்த வகையில் தான் சேரும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account