பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?
விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.
நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.
இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.
இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.
நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.
எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஃபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. அவற்றை முன்னரே நாம் எடுத்து எழுதியுள்ளோம்.
அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?
லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.
எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.
அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.
அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்
அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு. அல்குர்ஆன் 6:96ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். அல்குர்ஆன் 10:5தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான். அல்குர்ஆன் 14:33அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன. அல்குர்ஆன் 21:33இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன. அல்குர்ஆன் 36:36, 37, 38, 39, 40சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன. அல்குர்ஆன் 55:5பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! அல்குர்ஆன் 2:189வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! அல்குர்ஆன் 9.36இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம். அல்குர்ஆன் 17:12வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன். அல்குர்ஆன் 25:61என்பன போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ் சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் படித்தரங்கள் நாட்களை அறிந்து கொள்வதற்குத் தானே? வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால் தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்? சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.
2007 முதல் தான் சந்திரன் காலத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே இந்த வாதத்தின் பலவீனத்தை உணர முடியும்.
அல்லாஹ் சந்திரனை எப்போது படைத்தானோ அப்போது முதல் அது காலம் காட்டியாகத் தான் இருக்கிறது. அந்த காலம் முதல் அதைப் பார்த்துத் தான் மக்கள் நாட்களைத் தீர்மானித்துக் கொண்டனர். ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டதோ அப்போது முதல் ஹஜ்ஜின் காலத்தைக் காட்டக் கூடியதாகவும் பிறை அமைந்துள்ளது.
என்னவோ இவ்வளவு நூற்றாண்டுகளாக பிறை காலம் காட்டாமல் இருந்தது போலவும் 2007ல் வானியல் அறிவு வளர்ந்த பின் தான் அது காலத்தைக் காட்டக் கூடியதாக ஆகி விட்டது போலவும் இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
வருங்காலத்தில் காலம் காட்டியாக இருந்தால் மட்டும் போதாது எந்தக் காலத்தில் இது கூறப்பட்டதோ அந்தக் காலத்தில் நிச்சயம் காலம் காட்டியாக அமைந்திருப்பது அவசியம். இல்லையென்றால் அன்றைக்கு இந்த வசனம் அருளப்பட்ட போது உண்மையில்லாத செய்தியை அது கூறியதாக ஆகி விடும்.
பிறை எவ்வாறு காலம் காட்டியாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டனர். (இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்) அவர்கள் காலத்தில் அது எப்படி காலம் காட்டியாக இருந்ததோ அப்படியே இன்றளவும் இனி சந்திரன் உள்ளளவும் அது காலம் காட்டியாக இருக்கும்.
இன்னும் சொல்வதானால் அன்றைக்கு எப்படி சந்திரன் சிறிதாகத் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து பின்னர் தேய ஆரம்பித்ததைக் கண்ணால் பார்த்து காலத்தைக் கணித்துக் கொண்டார்களோ அதே போல் இன்றைக்கும் கண்களால் பார்த்துத் தான் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள்அனைத்தும் இதைத் தான் கூறுகின்றன.
சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?
பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.
மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது. (பார்க்க: புகாரி 1013, 1014)ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.
மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.
சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுபுஹ் வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியது தானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்குப் பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா?
தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?
….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) நூல்: முஸ்லிம்நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.
மேலும் சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது சந்திரனைப் பார்த்து மாதம் மற்றும் நாட்களைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே கணிப்புகள் அடிப்படையில் முடிவு செய்வது தான். நவீன யுகத்திற்கு ஏற்றதாகும் என்ற அடிப்படையில் பிறையை நாம் கணித்துக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
இவர்கள் குறிப்பிடுவது போல சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான். தினந்தோறும் சூரியன் உதித்து மறையக் கூடிய பகுதிகளில் வாழக் கூடிய நமக்கு இந்தச் சலுகை உண்டா? என்று கேட்கக் கூடாது.
முடவர், நொண்டி, குருடர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கை, கால்கள் சுகமாக உள்ளவர், நல்ல கண் பார்வையுள்ளவர் கேட்பது போல் தான் இது ஆகும். சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து கொண்டு கஃபாவை நோக்கித் தொழும் வாய்ப்பில்லை. அதனால் அங்கே வசிப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம் என்று தான் கூறியாக வேண்டும். நானும் அது போல் தொழுவேன் என்று பூமியில் இருந்து கொண்டு கஃபாவை நோக்கும் வாய்ப்புள்ளவர் கூறக் கூடாது. நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சாதாரண நிலையில் உள்ளவர் சட்டமாக எடுத்துக் கொள்வது அறிவீனமாகும்.
துருவப் பிரதேசத்தில் வாழ்பவன் ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். அவன் கை, கால் ஊனமுற்ற முடவனைப் போன்றவன். பிறை பார்க்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு அறவே கிடையாது என்பதால் அவனுக்கு இந்த ஹதீஸ் கணித்தல் என்ற சலுகையை வழங்கியிருக்கின்றது. பிறை பார்க்கும் வசதியுள்ள நமக்கு இந்த கணிப்பு என்ற சலுகை ஒரு போதும் பொருந்தாது.
வானியல் கணிப்பு பொய்யா?
வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.
பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாக கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.
அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்கு கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.
வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் வானியல் வளர்ச்சியடையாத காலத்துக்குத் தான் அவ்வாறு கூறினார்கள் என்று ஹதீஸுக்கு விளக்கம் கூறித் தான் இவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்த விளக்கம் சரியில்லை எனும் போது நிலையை மாற்றிக் கொள்வது தான் இறையச்சமுடையோரின் செயலாக இருக்கும்.
வானியல் கணிப்பின் படி முடிவு செய்யலாம் என்ற கருத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.
பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபிமொழிகளுக்கு எதிரானதாகும்.
அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும். மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத் தான் செய்வார். செய்ய வேண்டும்.
எனவே பிறை பார்த்து நோன்பு நோற்று நபி (ஸல்) அவர்களின் போதனையை உலகம் உள்ளளவும் கடைப்பிடித்தவர்களாவோம்.
பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode