ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

பிறை பார்த்தல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

(வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்)

விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் என்ற கணக்கில் 12 மாதங்களுக்கு 360 அல்லது 355 நாட்கள் மட்டுமே வருகின்றது. இந்தக் கணக்கீடுகளில் எது சரியானது? இதற்கு விஞ்ஞான மற்றும் மார்க்க அடிப்படையில் பதில் அளிக்கவும்!

முஹம்மது நூஹு, எலந்தங்குடி, மயிலாடுதுறை.

பதில்:

சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் ஒரு மாதம் என்பது 29 ½ நாட்கள் ஆகும். அரை நாள் என்பதைக் கணக்கில் எடுக்க முடியாததால் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று மாறி மாறி வருகின்றது. இந்தச் சந்திரக் கணக்கின் படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு 355 நாட்கள் எடுக்கின்றன. இது ஒரு வகை.

சூரியக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் பூமி, சூரியனைச் சுற்றி வருவதற்கு 365 ¼ நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. இந்த 365 நாட்களுடன் ஒரு நாளின் கால்பகுதியைச் சேர்க்க முடியாது என்பதால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்திற்கு வழமையான 28 நாட்களுடன், ஒரு நாள் கூடுதலாகச் சேர்த்து 29 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, சூரியக் கணக்கின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 365 நாட்கள் என்று கணக்கிடுகின்றோம்.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரக் கணக்கை ஒப்பிடும்போது வருடத்திற்கு 10 நாட்கள் வித்தியாசப்படுகின்றது. இது பலருக்கும் குழப்பமாகத் தோன்றலாம். ஆனால் இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

ஏனென்றால் மாதத்தைக் கணக்கிடுவதற்கு அல்லாஹ் நமக்கு பிறையைக் காலம் காட்டியாக ஆக்கியுள்ளான். பிறையில் தான் நாட்களைக் கணக்கிடக்கூடிய அம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் பிறையின் அளவு பார்வைக்கு வித்தியாசப்படும். முதல் பிறையைப் போன்று இரண்டாம் பிறை இருக்காது. இரண்டாம் பிறையைப் போன்று ஐந்தாம் பிறை இருக்காது. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே இருக்கும். இதனைத் தான் 'வளர்பிறை' என்று சொல்கின்றோம். 14 ஆம் நாளில் பிறை முழு தோற்றத்துடன் காணப்படும்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அப்படியே அளவில் குறைந்து கொண்டே வரும். இதனை 'தேய்பிறை' என்று சொல்கின்றோம்.

ஆனால் சூரியனில் இந்த நிலை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியன் ஒரே மாதிரியாகத் தான் காணப்படும். அது நாளுக்கு நாள் வித்தியாசப்படாது.

பிறையில் இந்த மாறுதல் வருவதால் தான் அது நாட்களை எண்ணுவதற்கு ஏதுவாக இருக்கின்றது. எனவே தான், பிறையின் தோற்றத்தை வைத்து அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடிகின்றது. ஆனால் சூரியனை அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடியாது.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரனைப் பற்றி இறைவன் கூறுகின்றான் :

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَ‌ٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

 

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
திருக்குர்ஆன் 10:5

وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا

 

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து, பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.
திருக்குர்ஆன் 17:12

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
திருக்குர்ஆன் 9:36

இந்த வசனங்களின் அடிப்படையில், இறைவனின் படைப்புகளான சூரியன், சந்திரன் இரண்டுமே கணக்கிடத் தகுந்தவை தாம். எனவே சூரியனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்; சந்திரனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்.

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சூரிய ஆண்டு, சந்திர ஆண்டு என்று வேறுபடுத்தி நாம் சொல்லிக் கொள்ளலாம்.

வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை, அன்றாடத் தொழுகை நேரங்கள், நோன்புக் காலங்களில் ஸஹ்ருடைய நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சூரியனையும், நோன்புக்கான மாதத்தைக் கணக்கிடுவது, இத்தா, போர் செய்ய தடைசெய்யப்பட்ட காலங்கள் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு சந்திரனையும் கணக்கீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், உலக நடைமுறையைப் பார்க்கும் போது உலகம் முழுவதும் ஏன் அரபு நாடுகளில் கூட சூரியக் கணக்கை அடிப்படையாக வைத்தே நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அரசு விடுமுறை நாட்களை அறிவிப்பது, கல்வி நிறுவனங்களில் பாட நாட்களை நிர்ணயிப்பது போன்றவற்றை முடிவு செய்கின்றனர்.

பெரும்பாலும், சூரியனின் அடிப்படையில் கணக்கீடு செய்வதை முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்துக் கொண்டதால் அது 'கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பு' என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால், சூரியன், சந்திரன் இரண்டுமே இறைவனால் காலம் காட்டுவதற்காக படைக்கப்பட்டவை தாம். அவை இரண்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவதும் இஸ்லாமிய ஆண்டுகள் தாம். நம் வசதிக்குத் தகுந்தவாறு இரண்டையுமே காலக்கணக்கீட்டிற்கு நாம் பயன்படுத்தலாம்.

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

 

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
திருக்குர்ஆன் 55:5

"சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும்" என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
புகாரி : 3202

எனவே சூரிய ஆண்டிற்கும், சந்திர ஆண்டிற்கும் இடையே வருடத்திற்கு பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தாலும் எதைப் பயன்படுத்தினாலும் அது அல்லாஹ்வின் பார்வையில் குற்றம் ஆகாது.

சிலர் ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும் என்று தவறாக விளங்கி, அதன் அடிப்படையில் செயல்பட்டும் வருகின்றனர். ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையிலான கணக்கீடு என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் 'யானை ஆண்டு' என்பது தான் மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு, முதல் ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே, ஹிஜ்ரி ஆண்டு என்பதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சூரிய ஆண்டையும், சந்திர ஆண்டையும் வித்தியாசப்படுத்தி அறிந்து கொண்டால் அதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. உதாரணமாக, ஒருவருடைய வயதைக் குறிப்பிடும் போது 60 என்று சொன்னால், உலக நடைமுறைப்படி எல்லோருமே சூரியக் கணக்கின் அடிப்படையில் தான் அதனை எடுத்துக் கொள்வார்கள். நாம் அதனைச் சந்திரக்கணக்கின் அடிப்படையில் சொல்லும்போது வருடத்திற்கு 10 நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account