இருப்புக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
அப்துல்
பதில் :
முதல் கேள்விக்கான பதில் :
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது வருடத்திற்கு ஒருமுறை தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கிடையாது.
எனவே ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்துவிட்டால் போதுமானதாகும். அது பரிசுத்தமாகிவிடும். மீண்டும், மீண்டும் அல்லது வருடத்திற்கொருமுறை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இரண்டாவது கேள்விக்கான பதில் :
ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை இருந்தால் அவர் அதற்கு ஒரு முறை ஜகாத்தை நிறைவேற்றிவிட்டால் அது பரிசுத்தமாகிவிடும்.
பிறகு ஒவ்வொரு மாதமும் அந்தக் கடையின் மூலம் வரும் வருமானம் வந்தால் அதற்கும் இரண்டரை சதவிகிதம் ஜகாத்தை அவர் நிறைவேற்ற வேண்டும்.
ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.
இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. சுமார் 11 பவுன் தங்கம் அல்லது அதன் மதிப்புடைய ரொக்கம் ஒருவரிடம் எப்போதும் மிச்சமிருந்தால் அவர் செல்வந்தர் ஆவார். ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையறை செய்துள்ளது.
(தங்கத்தை அளவுகோலாக கொள்வதா வெள்ளியை அளவுகோலாகக் கொள்வதா என்பது ஆய்வில் உள்ளது. அது குறித்த இறுதி முடிவு எடுக்கும் வரை தங்கத்தையே அளவுகோலகக் கொண்டுள்ளோம்.)
தங்கத்தை அளவு கோலாகக் கூறும் ஹதீஸ் பலவீனமாக உள்ளது. யாரும் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது எனக் கூற்வில்லை. எவ்வளவு தொகை இருந்தால் ஜகாத் கடமையாகும் என்பதற்கு வெள்ளியைத் தான் அளௌகோலாக கொள்ள வேண்டும். வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் படி இன்றைய மதிப்பில் முப்பதாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.
صحيح البخاري
1405 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الحَسَنِ: أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ»1405 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாவு) தானியத்தில் ஜகாத் இல்லை.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் படி இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.
முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, பணம் இல்லாதவர் மிகச்சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.
ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளி அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 720 கிராம் வெள்ளிக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
எப்போது 720 கிராம் வெள்ளியை விட குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.
ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 720 கிராம் வெள்ளி உள்ளது என்றால் இவர் அந்த 720 கிராம் வெள்ளிக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்
இருப்புக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode