Sidebar

22
Sun, Dec
26 New Articles

நோன்பை முறிக்காதவை

நோன்பின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நறுமணம் பயன்படுத்துதல்

நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது.

நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்

நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்வுக்கு கஸ்தூரியை விட விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதைத் தவிர இவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை.

இந்த வாதம் ஏற்க முடியாத வாதமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை வாயில் உற்பத்தியாவதில்லை. காலியான வயிற்றிலிருந்து தான் அந்த வாடை உற்பத்தியாகின்றது. பல் துலக்குவதால் நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை நீங்கிவிடப் போவதில்லை. எனவே இவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை வலியுறுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நோன்பாளி பல் துலக்கலாம்.

நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் கை விரலாலோ, பல் துலக்கும் குச்சியாலோ தான் பல் துலக்க வேண்டும் என்றும் பல்பொடி, பற்பசை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கு சுவை இருக்கிறது என்று காரணம் கூறுகின்றனர். பற்பசைக்குரிய சுவை பற்பசையில் உள்ளது போலவே சாதாரண குச்சியிலும் அதற்குரிய சுவை இருக்கத் தான் செய்கிறது. எனவே சுவையைக் காரணம் காட்டி இதைத் தடுக்க முகாந்திரம் இல்லை.

தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் போது கூட தண்ணீரின் சுவையை நாக்கு உணரத் தான் செய்யும். இவ்வாறு உணர்வதற்குத் தடையேதும் இல்லை. உண்பதும், பருகுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியவர் பல் துலக்கிவிட்டு விழுங்க மாட்டார். எனவே இதைத் தடை செய்ய சரியான காரணம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

உணவுகளை ருசி பார்த்தல்

உணவுகளை ருசி பார்த்தல் உணவு சமைக்கும் போது, போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பது பெண்களின் வழக்கமாக உள்ளது. நோன்பு நோற்றவர் இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். மேலே நாம் சொன்ன அதே காரணங்களால் இதையும் தடுக்க முடியாது.

எச்சிலை விழுங்குதல்

நோன்பு நோற்றவர்கள் வாயிலிருந்து ஊறும் எச்சிலை அடிக்கடி உமிழ்ந்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோன்பினால் ஏற்பட்ட வறட்சியை இதன் மூலம் இவர்கள் மேலும் அதிகமாக்கிக் கொள்கின்றனர். எச்சிலை விழுங்கக் கூடாது என்றோ, அடிக்கடி காரி உமிழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கட்டளையிடவில்லை.

நோன்பாளி உணவை ருசி பார்த்தல், குளித்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல் போன்றவை நபித் தோழர்கள் காலத்தில் நோன்புக்கு எதிரானதாகக் கருதப்பட்டதில்லை. பிற்காலத்தில் வந்த அறிவீனர்கள் தான் இதை நோன்புடன் சம்பந்தப்படுத்தி விட்டனர்.

புகாரியில் நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

صحيح البخاري 
وَبَلَّ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثَوْبًا، فَأَلْقَاهُ عَلَيْهِ وَهُوَ صَائِمٌ  وَدَخَلَ الشَّعْبِيُّ الحَمَّامَ وَهُوَ صَائِمٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: " لاَ بَأْسَ أَنْ يَتَطَعَّمَ القِدْرَ أَوِ الشَّيْءَ وَقَالَ الحَسَنُ: " لاَ بَأْسَ بِالْمَضْمَضَةِ، وَالتَّبَرُّدِ لِلصَّائِمِ وَقَالَ ابْنُ مَسْعُودٍ: " إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلْيُصْبِحْ دَهِينًا مُتَرَجِّلًا وَقَالَ أَنَسٌ: إِنَّ لِي أَبْزَنَ أَتَقَحَّمُ فِيهِ، وَأَنَا صَائِمٌ وَيُذْكَرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ اسْتَاكَ وَهُوَ صَائِمٌ وَقَالَ ابْنُ عُمَرَ: يَسْتَاكُ أَوَّلَ النَّهَارِ، وَآخِرَهُ، وَلاَ يَبْلَعُ رِيقَهُ وَقَالَ عَطَاءٌ: «إِنِ ازْدَرَدَ رِيقَهُ لاَ أَقُولُ يُفْطِرُ» وَقَالَ ابْنُ سِيرِينَ: «لاَ بَأْسَ بِالسِّوَاكِ الرَّطْبِ» قِيلَ: لَهُ طَعْمٌ؟ قَالَ: «وَالمَاءُ لَهُ طَعْمٌ وَأَنْتَ تُمَضْمِضُ بِهِ» وَلَمْ يَرَ أَنَسٌ، وَالحَسَنُ، وَإِبْرَاهِيمُ بِالكُحْلِ لِلصَّائِمِ بَأْسًا

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்து, தன் மீது போட்டுக் கொள்வார்கள்.

 

சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

 

வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி கூறினார்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள்.

என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

பச்சையான குச்சியால் பல் துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார். அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள் தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது. ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள்.

இது புகாரி 1930வது ஹதீஸுக்கு முன்னால் உள்ள பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தக் காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு, புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.

இரத்தத்தை வெளியேற்றுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டத்திலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். இந்த வழக்கம் இன்றைக்கு ஒழிந்து விட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

سنن الترمذي

774 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ النَّيْسَابُورِيُّ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالُوا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَفْطَرَ الحَاجِمُ وَالمَحْجُومُ»

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி)

நூல்: திர்மிதீ

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

سنن الدارقطنى

2283 – حدثنا أبو القاسم عبد الله بن محمد بن عبد العزيز حدثنا عثمان بن أبى شيبة حدثنا خالد بن مخلد حدثنا عبد الله بن المثنى عن ثابت البنانى عن أنس بن مالك قال أول ما كرهت الحجامة للصائم أن جعفر بن أبى طالب احتجم وهو صائم فمر به النبى -صلى الله عليه وسلم- فقال « أفطر هذان » ثم رخص النبى -صلى الله عليه وسلم- بعد فى الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم كلهم ثقات ولا أعلم له علة.

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது, இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: தாரகுத்னீ

صحيح البخاري

1940 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ ثَابِتًا البُنَانِيَّ، قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَكُنْتُمْ تَكْرَهُونَ الحِجَامَةَ لِلصَّائِمِ؟ قَالَ: «لاَ، إِلَّا مِنْ أَجْلِ الضَّعْفِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ

நூல் : புகாரி 1940

நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுகோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவதற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது.

மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து மற்றொரு நாளில் முறித்த நோன்பை களாச் செய்யலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றினால் அது கூடாது என்று கூறலாம். ஏனெனில் குளுகோஸ் என்பது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே இது அமையும்.

இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல! உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலைமையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொறுத்த வரை கடமையாகவும் ஆகிவிடும். ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான்.

நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account