Sidebar

15
Sat, Mar
13 New Articles

ஜும்ஆ உரையை மிம்பரில் தான் நிகழ்த்த வேண்டுமா?

ஜும்ஆ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜும்மா உரையை மிம்பரில் தான் நிகழ்த்த வேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடைமீது உரை நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள் மூன்று வகைகளில் அமைந்துள்ளன.

முற்றிலும் வணக்கமாக அமைந்த காரியங்கள் முதல் வகையாகும். தொழுகை, நோன்பு, தஸ்பீஹ் போன்ற காரியங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இது போன்ற காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு வழிகாட்டினார்களோ அவ்வாறு நாமும் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

வணக்கத்துடன் தொடர்பில்லாத முற்றிலும் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்தவை இரண்டாம் வகை. கோதுமை, பேரீச்சை உணவாக உட்கொண்டது, ஒட்டகத்தில் பயணித்தது போன்றவைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இவற்றை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபி என்ற அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்தவில்லை. நபியாக ஆவதற்கு முன்பும் பயன்படுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளும் இவ்வாறே பயன்படுத்தினார்கள். இது அனுமதிக்கப்பட்ட்து என்ற பொருள் தான் தரும்.

வணக்கத்துடன் இணைந்துள்ள உலகக் காரியங்கள் மூன்றாவது வகையாகும்.

உதாரணமாக ஜும்மாவில் உரை நிகழ்த்துதல் என்ற மார்க்க விஷயத்தை மிம்பர் எனும் உலக வசதியுடன் இணைத்து செய்தல்.

இந்த மூன்றாம் வகைக் காரியங்களை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இதை வணக்கத்தின் ஒரு பகுதி என்பதற்காகவோ, வணக்கத்தின் நிபந்தனை என்பதற்காகவோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா? அல்லது தமது சவுகரியத்துக்காக செய்தார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

வணக்கத்தின் நிபந்தனை என்பதற்காக இதைச் ச்செய்தால் அது சுன்னத் ஆகிவிடும்.

தமது வசதிக்காக செய்த ஏற்பாடு என்றால் அது சுன்னத் என்பதில் சேராது.

இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு மிம்பர் குறித்து நாம் ஆய்வு செய்வோம்.

3584 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ ، قَالَ : سَمِعْتُ أَبِي ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَجَرَةٍ - أَوْ نَخْلَةٍ - فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ - أَوْ رَجُلٌ - : يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَجْعَلُ لَكَ مِنْبَرًا ؟ قَالَ : " إِنْ شِئْتُمْ ". فَجَعَلُوا لَهُ مِنْبَرًا، فَلَمَّا كَانَ يَوْمَ الْجُمُعَةِ دُفِعَ إِلَى الْمِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ، ثُمَّ نَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُ إِلَيْهِ، تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّنُ. قَالَ : كَانَتْ تَبْكِي عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ عِنْدَهَا.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்... அல்லது பேரீச்ச மரத்தின்.... (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி... அல்லது ஓர் அன்சாரித் தோழர்.., 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)' என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரை மேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் தேம்பிய (படி அமைதியாகிவிட்ட)து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'தன் மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து ('இப்போது நம் மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த்தப்படுவதில்லையே' என்று ஏங்கி) இது அழுது கொண்டிருந்தது' என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

நூல் புகாரி : 3584

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தின் ஒரு அம்சம் என்பதற்காக மிம்பரைப் பயன்படுத்தவில்லை. தமது வசதிக்காகத் தான் பயன்படுத்தினார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த அன்சாரிப் பெண் நான் மேடை செய்து தரட்டுமா என்று கேட்டதால் சரி என்று சொன்னார்கள். அப்போது கூட நீ விரும்பினால் செய்து தா என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மிம்பர் கட்டாயம் என்று இருந்தால் விரும்பினால் செய்து தா என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். ஆம் உடனே செய்து தான் கட்டாயம் செய்து தா என்று கூறியிருப்பார்கள்.

917 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الْإِسْكَنْدَرَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ ؟ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ، فَقَالَ : وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةَ – امْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ قَدْ سَمَّاهَا سَهْلٌ - : " مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ ". فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ، ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَاهُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ، ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ : " أَيُّهَا النَّاسُ، إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلَاتِي ".

அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் -- அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி 'நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் 'தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!' எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது. 

அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை - அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் - நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்' என்று குறிப்பிட்டார்கள். 

புகாரி : 917. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்துக்காக மிம்பர் செய்யச் சொன்னார்கள் என்று இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜும்மா உரை நிகழ்த்துவது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் செய்யுமாறு கோரவில்லை. மாறாக மக்களிடம் பேசும் போது அமர்வதற்காக என்று தான் காரணம் கூறுகிறார்கள்.

ஜும்மா மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் பேசுவதற்கு அனைவரும் பார்க்கும் வகையில் உயரமாக ஒரு மேடை வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் மிம்பர் செய்யச் சொன்னார்கள். இது தொழுகையின் ஷரத்து என்பதற்காக அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

அது மட்டுமில்லாமல் மிம்பர் அமைப்பு தற்போது உள்ள அமைப்பில் இருக்கவில்லை. அதன் மீது நின்று தொழுதார்கள்; ருகூவு செய்தார்கள் என்பதையும் இதில் இருந்து அறிகிறோம். பொதுக்கூட்டம் போடும் போது அமைக்கப்படும் சிறிய ஸ்டேஜ் போல் தான் அந்த மிம்பர் இருந்துள்ளது என்பதை அறியலாம். தற்போது வழக்கத்தில் உள்ள மிம்பரில் ருகூவு செய்ய முடியாது.

எனவே உயரமான இடத்தில் இருந்து உரையாற்றினால் மக்கள் அதைப் பார்க்க முடியும்; உயரமான இடத்தில் இருந்து தொழுது காட்டினால் அதைப் பார்த்து மக்கள் பின்பற்ற முடியும் என்ற நோக்கத்துக்காகவே மிம்பரைப் ப்யன்படுத்தியுள்ளார்கள் என்பது இவ்விரு ஹதீஸ்களில் இருந்தும்  தெரிகிறது.

எனவே நாமும் ஜும்மா உரை நிகழ்த்தும் போது மேடை போன்ற அமைப்பு இல்லாமல் இருந்தால் சிறிய ஒரு பலகை அல்லது நாற்காலி போன்றவை மீது நின்று உரையாற்றலாம்.

அதிகக் கூட்டம் இல்லாமல் இருந்தால் தரையில் நின்றால் கூட மக்களால் பார்க்க முடியும் என்றால் தரையில் நின்று உரை நிகழ்த்தலாம்.

 பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது. ஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம்.  உயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றால் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா  உரை நிகழ்த்தலாம் !!

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account