ஜும்ஆவில் குத்பா எனும் உரை நிகழ்த்தும் போது இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?
ஃபர்சான்
பதில்:
ஜும்ஆவில் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் இமாம் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர்.
924 حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا شِهَابُ بْنُ خِرَاشٍ حَدَّثَنِي شُعَيْبُ بْنُ زُرَيْقٍ الطَّائِفِيُّ قَالَ جَلَسْتُ إِلَى رَجُلٍ لَهُ صُحْبَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهُ الْحَكَمُ بْنُ حَزْنٍ الْكُلَفِيُّ فَأَنْشَأَ يُحَدِّثُنَا قَالَ وَفَدْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابِعَ سَبْعَةٍ أَوْ تَاسِعَ تِسْعَةٍ فَدَخَلْنَا عَلَيْهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ زُرْنَاكَ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَأَمَرَ بِنَا أَوْ أَمَرَ لَنَا بِشَيْءٍ مِنْ التَّمْرِ وَالشَّأْنُ إِذْ ذَاكَ دُونٌ فَأَقَمْنَا بِهَا أَيَّامًا شَهِدْنَا فِيهَا الْجُمُعَةَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ كَلِمَاتٍ خَفِيفَاتٍ طَيِّبَاتٍ مُبَارَكَاتٍ ثُمَّ قَالَ أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ لَنْ تُطِيقُوا أَوْ لَنْ تَفْعَلُوا كُلَّ مَا أُمِرْتُمْ بِهِ وَلَكِنْ سَدِّدُوا وَأَبْشِرُوا رواه أبو داود
ஹகம் பின் ஹஸ்ன் அல் குலஃபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் நாங்கள் பங்கு கொண்டோம். அப்போது அவர்கள் கைத்தடி அல்லது வில்லை ஊன்றியவர்களாக நின்றார்கள். அல்லாஹ்வை அவர்கள் புகழ்ந்து வளமான, மணமான, எளிமையான வார்த்தைகளால் அவனைப் பாராட்டினார்கள். பிறகு "மக்களே! ஏவப்பட்ட அனைத்தையுமே நீங்கள் செய்ய முடியாது; அல்லது செய்ய மாட்டீர்கள் எனினும் நீங்கள் நடுநிலையைக் கடைபிடித்து நன்மாராயம் பெறுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத்
கைத்தடியை வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இந்த ஹதீஸில் இல்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியை ஊன்றுகோலாகக் கொண்டு உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்றுகோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாகப் பயன்படுத்துவதாகும்.
வணக்க வழிபாடுகளில் நபியவர்கள் செய்த அனைத்தும் மார்க்கச் சட்டமாக ஆகும். வணக்க வழிபாடுகள் அல்லாத மற்ற செயல்களில் அது குறித்து அவர்கள் கட்டளை பிறப்பித்தால் தான் அது மார்க்கச் சட்டத்தில் சேரும். இல்லாவிட்டால் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்ததாகக் கருதப்படும்.
(இது குறித்து தொப்பி ஓர் ஆய்வு என்ற நூலில் சுன்னத் என்பதன் இலக்கணம் என்ற உட்தலைப்பில் விளக்கியுள்ளோம். பார்க்க தொப்பி ஓர் ஆய்வு.)
கைத்தடிகைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் என்பது ஜும்ஆவின் ஒழுங்கு முறைகளில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை.
கைத்தடியை ஊன்றி உரையாற்றுவது மார்க்க ஒழுங்குமுறை என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்யவில்லை. நிற்கும் போது ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
நபியவர்கள் ஜும்ஆ அல்லாத வேறு இடங்களிலும் கைத்தடியை ஊன்றி சொற்பொழிவாற்றியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில் தமக்குப் பிடிமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்றியுள்ளார்கள்.
41 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ يَوْمَ الْجُمُعَةِ فَيُسْنِدُ ظَهْرَهُ إِلَى جِذْعٍ مَنْصُوبٍ فِي الْمَسْجِدِ فَيَخْطُبُ النَّاسَ فَجَاءَهُ رُومِيٌّ فَقَالَ أَلَا أَصْنَعُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ وَكَأَنَّكَ قَائِمٌ فَصَنَعَ لَهُ مِنْبَرًا لَهُ دَرَجَتَانِ وَيَقْعُدُ عَلَى الثَّالِثَةِ فَلَمَّا قَعَدَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ذَلِكَ الْمِنْبَرِ خَارَ الْجِذْعُ كَخُوَارِ الثَّوْرِ حَتَّى ارْتَجَّ الْمَسْجِدُ حُزْنًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْمِنْبَرِ فَالْتَزَمَهُ وَهُوَ يَخُورُ فَلَمَّا الْتَزَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَكَنَ ثُمَّ قَالَ أَمَا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ لَمْ أَلْتَزِمْهُ لَمَا زَالَ هَكَذَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ حُزْنًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدُفِنَ رواه الدارمي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் பள்ளிவாசலில் நட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்கள். ரோம் நாட்டைச் சார்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு (சொற்பொழிவு மேடை) ஒன்றை செய்து தரட்டுமா? நீங்கள் நிற்பதைப் போன்ற (தோற்றத்தை அது ஏற்படுத்தும்) என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை ஒன்றை அவர் தயாரித்துக் கொடுத்தார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : தாரமீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் இல்லாத போது தரையில் நின்று உரையாற்றியுள்ளார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்களுக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. மிம்பர் வந்தவுடன் அவர்களுக்குப் பிடிமானம் தேவையற்றதாகி விட்டது. இதை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றியுள்ளதால் இன்று ஜும்ஆவில் இமாம் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வணக்கம் என்ற அடிப்படையில் செய்யவில்லை. தேவை என்ற அடிப்படையில் செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும்போதெல்லாம் கைத்தடியைப் பிடித்து வந்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இந்தச் செய்திகள் இப்னு ஸஅத் தொகுத்த தபகாத் எனும் நூலிலும், பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.
இந்தச் செய்திகளில் யஹ்யா பின் அபீ ஹய்யா, இப்னு லஹீஆ, ஹசன் பின் உமாரா, அப்துர் ரஹ்மான் பின் ஸஅத், லைஸ், மற்றும் இப்ராஹீம் பின் அபீ யஹ்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நம்பகமானவர்கள் அல்லர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே மிம்பரில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை ஊன்றி நிற்க வேண்டும் என்பது மார்க்கம் கூறாத சட்டமாகும்.
நல்ல இளைஞராகவும், நடுத்தர வயதுடையவராகவும் இருப்பவருக்கு கைத்தடியைப் பிடித்துக் கொள்வது சிரமமாகவும், இயற்கைக்கு மாற்றமாகவும் இருக்கும். அப்படி இருந்தும் பிடிக்க முடியாமல் பிடித்து தோளில் கைத்தடியை சாய்த்துக் கொண்டு சில இமாம்கள் படும் அவஸ்தைக்கும், இந்த ஹதீஸுக்கும் சம்மந்தம் உள்ளதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கைத்தடியின் மீது தனது பாரத்தைச் சாய்த்து ஊன்றிக் கொள்ளாமல் கைத்தடியின் பாரத்தையும் சேர்த்து சுமக்கிறார்கள். கைத்தடி தான் இவர்களை ஊன்றுகோலாகப் பயன்படுத்துகிறது. அதுவும் சொந்தமாக உரை நிகழ்த்தாமல் எழுதி வைத்ததைப் படிக்கும் இமாம்களாக இருந்தால் அந்தப் புத்தகத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒரு தோளில் கைத்தடியைச் சாய்த்துக் கொண்டு சேஷ்டைகள் செய்கின்றனர். அதற்கு இதில் ஆதாரம் உள்ளதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
மேலும் சில ஊர்களில் மோதினார் அந்தக் கைத்தடியை எடுத்து சில வாசகங்களை ஓதி இமாமிடம் கொடுக்க அதை இமாம் பயபக்தியோடு வாங்கி படியில் ஏறும் போது சீன் காட்டுகின்றனர். இதற்கும், இந்த ஹதீஸுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜும்ஆ உரைக்கு கைத்தடி அவசியமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode