Sidebar

26
Thu, Dec
34 New Articles

தராவீஹில் முழுக் குர்ஆனையும் ஓத வேண்டுமா

சுன்னத்தான தொழுகைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முழுக் குர்ஆனையும் ஓதுதல்

ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.

குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.

இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.

அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.

இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.

மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.

இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.

'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 73:20

எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account