Sidebar

26
Thu, Dec
34 New Articles

தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ ஆதாரம் உண்டா?

சுன்னத்தான தொழுகைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ ஆதாரம் உண்டா?

கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.

சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

صحيح البخاري

117 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا [ص:35] الحَكَمُ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: «نَامَ الغُلَيِّمُ» أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.

நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح البخاري

729 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، فَأَصْبَحُوا فَتَحَدَّثُوا [ص:147] بِذَلِكَ، فَقَامَ اللَّيْلَةَ الثَّانِيَةَ، فَقَامَ مَعَهُ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، صَنَعُوا ذَلِكَ لَيْلَتَيْنِ – أَوْ ثَلاَثًا – حَتَّى إِذَا كَانَ بَعْدَ ذَلِكَ، جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَخْرُجْ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ النَّاسُ فَقَالَ: «إِنِّي خَشِيتُ أَنْ تُكْتَبَ عَلَيْكُمْ صَلاَةُ اللَّيْلِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 729, 924, 1129

صحيح البخاري

2012 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّى فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا»، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالأَمْرُ عَلَى ذَلِكَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2012

இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஒரு செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

صحيح البخاري

3316 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، رَفَعَهُ، قَالَ «خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ العِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا المَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»، قَالَ: ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ، عَنْ عَطَاءٍ «فَإِنَّ لِلشَّيَاطِينِ»

இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3316, 6295

விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.

ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.

எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.

இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.

இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.

எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகப் போவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

வீடுகளில் தொழுவதே சிறந்தது

பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.

صحيح البخاري

731 – حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً – قَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ – فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ» قَالَ عَفَّانُ: حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مُوسَى، سَمِعْتُ أَبَا النَّضْرِ، عَنْ بُسْرٍ، عَنْ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 731, 6113, 7290

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account