20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு
இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லோ, செயலோ, அங்கீகாரமோ ஆதாரமாக உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில் தொழுபவர்களாக இருந்தனர் என்ற கருத்தில் கீழ்க்காணும் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
المعجم الكبير للطبراني
12102 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الرَّازِيُّ، ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، ثنا أَبُو شَيْبَةَ إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»
நூல்கள்: தப்ரானியின் கபீர், அவ்ஸத், பைஹகீ, முஸன்னப் இப்னு அபீஷைபா, முஸ்னத் அப்து பின் ஹமீத்
மேற்கண்ட ஆறு அறிவிப்புகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் மிக்ஸம் என்பார்.
மிக்ஸம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் ஹகம் என்பார்.
ஹகம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் உஸ்மானின் மகன் இப்றாஹீம் ஆவார். இவர் அபூஷைபா என்றும் கூறப்படுவார்.
மேற்கண்ட அனைத்து நூல்களிலும் ஹகம் என்பார் கூறியதாக இவர் (அபூஷைபா) தான் அறிவிக்கிறார்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஹாபிழ் ஸைலயீ, இப்னு அதீ, பைஹகீ, அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத் புகாரி, திர்மிதி, நஸாயீ, தவ்லாபி, அபூஹாத்தம், ஜவ்ஸஜானி, ஸாலிஹ் ஜஸ்ரா, அபூ அலீ நைஸாபூரி, அல்அஹ்வஸ் ஆகிய அறிஞர்கள் இவரைப் பலவீனர் பொய்யர் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்
இவரைப் பற்றி ஒரு அறிஞர் கூட நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை.
20 ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
தராவீஹ் 20 ரக்அத்களா? என்ற நூலில் ஜமாஅத்துல் உலமாவின் மூத்த தலைவரான நிஜாமுத்தீன் மன்பயீ பின்வருமாறு எழுதுகிறார்.
நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?
عن ابن عباس رضي الله عنه مرفوعا ان النبي صلي الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر اخرجه عبد بن حميد في مسنده والبغوي في معجمه والطبراني في الكبير والبيهقي في سننه كلهم من طريق ابي شيبة ابراهيم ابن عثمان جد ابي بكر بن ابي شيبة ضعيف
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் இருபது ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அப்துப்னு ஹுமைத் (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஸ்னதிலும், பஙவி (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஃஜமிலும், தப்ரானீ (ரஹ்) அவர்கள் கபீரிலும், பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய சுனனிலும் அறிவித்துள்ளார்கள். அனைவரும் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களின் வழியாகவே இதனை அறிவித்துள்ளனர். ஆனால் இதனுடைய அறிவிப்பாளர்களில் இப்றாஹீம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமான அறிவிப்புத் தொடருள்ளதாக இருப்பதால், முஹத்திஸீன்களுடைய அளவுகோள்படியுள்ள ஆதாரப்பூர்வமான முறையில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லையானாலும் உமர் (ரலி) அவர்களின் நடைமுறையைக் கொண்டு அது தரிபடுத்தப்பட்டு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
(நன்றி : நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய ‘தராவீஹ் 20 ரக்அத்களா?’ என்ற நூல், பக்கம் 69, 70)
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதை இதன் மூலம் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளலாம்.
உமர் (ரலி) 20 ரக்அத்கள் தொழுதார்களா?
நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.
உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டது என்ன?
مصنف ابن أبي شيبة
7682 – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، «أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً»
மக்களுக்கு இருபது ரக்அத்கள் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா
உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!
உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.
உமர் (ரலி) 20 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
سنن البيهقي الكبرى
4392 – أنبأ أبو أحمد المهرجاني أنبأ أبو بكر بن جعفر المزكي ثنا محمد بن إبراهيم العبدي ثنا بن بكير ثنا مالك عن محمد بن يوسف بن أخت السائب عن السائب بن يزيد أنه قال : أمر عمر بن الخطاب رضي الله عنه أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدي عشرة ركعة وكان القارىء يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام وما كنا ننصرف إلا في بزوغ الفجر هكذا في هذه الرواية
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்
உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.
உமர் (ரலி) காலத்தில் நடந்தது ஆதாரமாகுமா?
السنن الصغرى
833- وأخبرنا أبو طاهر الفقيه ، أَخْبَرَنَا أَبُو عثمان عَمْرو بن عَبد الله البصري ، حَدَّثَنَا محمد بن عَبد الوهاب ، أَخْبَرَنَا خالد بن مخلد ، حَدَّثَنَا محمد بن جعفر ، حدثني يزيد بن خصيفة ، عن السائب بن يزيد ، قال : كنا نقوم في زمان عُمَر بن الخطاب رضي الله عنه بعشرين ركعة والوتر
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.
நூல்: பைஹகீ ஸகீர்
இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.
மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார்.
ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்மந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்மந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.
மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாகவும் அறிவிக்கிறார்.
موطأ مالك
4 – وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّهُ قَالَ: أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَى عَشْرَةَ رَكْعَةً قَالَ: وَقَدْ «كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ، حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعِصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ، وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ»
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா
ரக்அத்களின் எண்ணிக்கைகள் குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத்கள் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது. மேலும் 11 ரக்அத்கள் தொழுவிக்க உமர் (ரலி) கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமாகவும் உள்ளது.
மற்றொரு செய்தி
سنن البيهقي الكبرى
4394 – أنبأ أبو أحمد العدل أنبأ محمد بن جعفر المزكي ثنا محمد بن إبراهيم ثنا بن بكير ثنا مالك عن يزيد بن رومان قال : كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه في رمضان بثلاث وعشرين ركعة ويمكن الجمع بين الروايتين فإنهم كانوا يقومون بإحدى عشرة ثم كانوا يقومون بعشرين ويوترون بثلاث والله أعلم
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.
நூல்கள்: பைஹகீ, முஅத்தா
இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத்கள் தான் தொழ வேண்டும். ஏனெனில் 11 ரக்அத்கள் தொழுவிக்குமாறு தான் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் பெயரால்…
سنن البيهقي الكبرى
4397 – وأما التراويح ففيما أنبأ أبو عبد الله بن فنجويه الدينوري ثنا أحمد بن محمد بن إسحاق بن عيسى السني أنبأ أحمد بن عبد الله البزاز ثنا سعدان بن يزيد ثنا الحكم بن مروان السلمي أنبأ أبو الحسن بن علي بن صالح عن أبي سعد البقال عن أبي الحسناء : أن علي بن أبي طالب أمر رجلا أن يصلي بالناس خمس ترويحات عشرين ركعة وفي هذا الإسناد ضعف والله أعلم
ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்கள்: பைஹகீ, முஸன்னப் இப்னு அபீஷைபா
அலி அவர்கள் கட்டளையிட்டதாக அபுல் ஹஸனா என்பர் அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
سنن البيهقي الكبرى
4396 – وفي ذلك قوة لما أخبرنا أبو الحسن بن الفضل القطان ببغداد أنبأ محمد بن أحمد بن عيسى بن عبدك الرازي ثنا أبو عامر عمرو بن تميم ثنا أحمد بن عبد الله بن يونس ثنا حماد بن شعيب عن عطاء بن السائب عن أبي عبد الرحمن السلمي عن على رضي الله عنه قال : دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس عشرين ركعة قال وكان علي رضي الله عنه يوتر بهم
ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி
நூல்: பைஹகீ
இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.
அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.
தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதமும் அடிபட்டுப் போகிறது.
அதிகப்படுத்துவது தவறா?
20 ரக்அத்கள் தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் ஏதாவது காரணம் கூறி அதைச் சிலர் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.
20 ரக்அத்துகளுக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் நன்மைகளை அதிகம் செய்வது தவறா? என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாகும்.
அதிகமாகச் செய்கிறோமா? குறைவாகச் செய்கிறோமா? என்பது பிரச்சனையில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த படி செய்கிறோமா? என்பது தான் இஸ்லாத்தில் கவனிக்கப்படும்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இத்தகைய வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
இதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை முதலில் எடுத்துக் காட்டுகிறோம்.
ஸுபுஹ் தொழுகைக்கு இரண்டு ரக்அத்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
இது குறைந்த அளவாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ஒருவர் ஸுபுஹ் தொழுகைக்கு நான்கு ரக்அத்கள் தொழலாமா? என்று கேட்டால் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இவ்வாறு செய்யக் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள்.
இரண்டு ரக்அத்களை விட நான்கு ரக்அத்கள் அதிகம் தானே! அதனால் ஸுப்ஹுக்கு நான்கு ரக்அத்கள் தொழலாம் என்று யாரும் வாதிடுவதில்லை.
இதற்கு என்ன காரணம்?
ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் பல விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்’ என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.
நாம் இரண்டை நான்காக ஆக்கினால் அடுத்து வருபவர் அதை ஆறாக ஆக்குவார். அடுத்த ஒரு காலத்தில் அது எட்டாக ஆகும். வணக்கத்தை நாங்கள் குறைக்கவில்லையே? அதிகப்படுத்துவது நல்லது தானே என்று அனைவரும் வாதிடுவார்கள். இதனால் இஸ்லாம் என்ற பெயரால் உலகெங்கும் முரண்பட்ட பல வணக்கங்கள் உருவாகி விடும்.
எனவே தான் இரண்டு ரக்அத்களை நான்காக ஆக்கக் கூடாது என்கிறோம்.
வணக்கம் செய்வதில் நம் அனைவரையும் விஞ்சி நிற்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்களைத் தொழுது வழிகாட்டவில்லை எனும் போது நாம் அதிகப்படுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிந்தித்தாலே இந்த வாதத்தை யாரும் எடுத்து வைக்க மாட்டார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றிப் பல விதங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர்.
صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ
எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்
صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ
‘இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»
‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ
மார்க்கத்தின் பெயரால் வணக்கத்தை உண்டாக்குவதும் அதிகப்படுத்துவதும் குற்றம் என்பதையும், அதனால் சொர்க்கம் கிடைப்பதற்குப் பதிலாக நரகம் தான் கிடைக்கும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode