ஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா?
தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக” என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூவில் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளதே, விளக்கவும்.
ஈ. இஸ்மாயில் ஷெரீப், சென்னை.
سنن أبي داود 869 – حدثنا الربيعُ بن نافع أبو تَوْبةَ وموسى بنُ إسماعيلَ- المعنى- قالا: حدثنا ابنُ المبارَك، عن موسى- قال أبو سلمة: موسى بن أيوب- عن عمّه عن عُقْبة بن عامرٍ، قال: لما نزلت {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74]،قال رسولُ الله – صلى الله عليه وسلم -: “اجعَلُوها في رُكوعِكم” فلما نزلت {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} [الأعلى: 1] قال: "اجعَلُوها في سُجودِكم" (3).
மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய ஸுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அபூதாவூத் 836
ருகூவில் அந்த வசனத்தை ஓதுங்கள் என்று இங்கு கூறப்படவில்லை. மாறாக இதை உங்கள் ருகூவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த வசனத்தை ருகூவில் செயல்படுத்துங்கள் என்பது தான் இதன் பொருள்.
ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம் என்று ருகூவில் ஓதினால் குர்ஆனை ஓதுவதாக ஆகும். அப்படி ஓதாமல் இவ்வசனத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என்று தான் நாம் கூறுகிறோம். அவ்வசனத்தில் கூறப்படும் கட்டளையைச் செயல்படுத்துகிறோம்.
ஸஜ்தாவில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்று ஓதினால் அவ்வசனத்தை ஓதியதாக ஆகும். அவ்வாறு இல்லாமல் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று கூறினால் அவ்வசனத்தை ஓதியதாக ஆகாது, அவ்வசனத்தைச் செயல்படுத்தியதாகவே ஆகும்.
இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்,
குல் ரப்பி ஸித்னீ இல்மா என்று ஒரு வசனம் உள்ளது. இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா என்று கூறுவீராக என்பது இதன் பொருள்.
இப்போது ஒருவர் குல் ரப்பி ஸித்னீ இல்மா என்று சொன்னால் அவர் இவ்வசனத்தை ஓதியவராக ஆவார்.
இதில் குல் (சொல்வீராக) என்பதைத் தவிர்த்து விட்டு ரப்பி ஸித்னீ இல்மா என்று கூறினால் இவர் அவ்வசனத்தை ஓதவில்லை. அவ்வசனத்தை செயல்படுத்துகிறார் என்று ஆகும். இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா என்று துஆ செய்துள்ளார் என்று தான் இதை எடுத்துக் கொள்வோம்.
இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தான் என்று சொல்வீராக
என்பதற்கும்
இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா
என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
அதனால் தான் ருகூவில், குர்ஆன் வசனத்தை அப்படியே ஓதாமல், சுப்ஹான ரப்பியல் அளீம் என்று ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். எனவே ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று இடம் பெறும் அறிவிப்புக்கு இது முரண்பாடானதல்ல.
ஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode