Sidebar

22
Sun, Dec
38 New Articles

நாற்காலியில் அமர்ந்து தொழுவது குறித்து தவறான ஃபத்வா

தொழுகை சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா?

நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

சில வாதங்களுக்கு நாம் பதில் கூறவில்லை என்று தவறாக விமர்சனம் செய்ய இடளிக்கக் கூடாது என்பதற்காக ஜமாஅதுல் உலமா ஃபத்வாவை ஒரு வரி விடாமல் முழுமையாக வெளியிட்டு அதன் பின்னர் ஒவ்வொரு வாதத்துக்கும் பதில் அளித்துள்ளோம். இது ஆதாரமற்ற அறிவீனமான ஃபத்வா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இது தான் ஜமாஅதுல் உலமாவின் ஃபத்வா

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.-    தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு வெளியீடு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

முஹியுஸ் ஸுன்னா ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபீக்கான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்

ஸ்தாபகர்,   மழாஹிருல் உலூம் அரபிக்கல்லூரி,   சேலம்.

& ஹஜ்ரத் மௌலானா அல்லாமா அப்துர்ரஹ்மான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது   

1, குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6,  25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

    ஆதாரங்கள்   :    

ஆதாரம் 1      

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 2      

முஸ்லிம்களே! ஐந்து நேரத்தொழுகைகளையும் (குறிப்பாக)நடுத்தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 3      

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

ஆதாரம் 4      

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

ஆதாரம் 5 

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது.ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு    

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்...

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

2, நாற்காலிகளை தேவையின்றி பயன் படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார் களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப் பட்டுள்ளது.

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

      தமிழ் நாடு உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு     

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.

கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.

ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.

சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள்      

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.

மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4,ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.

பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

தொலைபேசி 9443391412

வெளியீடு:

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

இது தான் முழுமையான ஃபத்வா. இதில் ஒவ்வொரு வாதத்தையும்  எடுத்துக் காட்டி தனித்தனியாக பதில் அளித்துள்ளோம்.

ஜமாஅதுல் உலமா ஃபத்வாவுக்கு நமது மறுப்பு

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது   

1,குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6, 25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆறு காரணங்களை ஜமாஅதுல் உலமா கூறியுள்ளது.

குர்ஆனுக்கு மாற்றமானது; ஹதீஸுக்கு மாற்றமானது என்று கூறிய ஜமாஅதுல் உலமா குர்ஆனுக்கு முரணானது என்பதையும் ஹதீஸுக்கு முரணானது என்பதையும் இந்த ஃபத்வாவில் நிரூபிக்கவில்லை என்பதை இவர்கள் காட்டிய ஆதாரங்களை வைத்தே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நாற்காலியில் தொழலாம் என்பது உலமாக்களின் ஃபத்வாவுக்கு மாற்றமானது என்று இவர்கள் கூறும் காரணம் மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாத காரணமாகும். மத்ஹபு தரீகா உள்ளிட்டவைகளையே நியாயப்படுத்தும் உலமாக்கள் நாற்காலி விஷயத்தில் மட்டும் சரியான தீர்ப்பை அளித்திருப்பார்களா?

மார்க்கத்தில் இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும் அந்த உலமாக்களின் கூற்றையும் நாம் அலசி ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்துள்ளோம்.

நான்காவதாக தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானதாகும் என்று கூறியுள்ளனர். இது மதிகெட்ட வாதமாகும்.

தொழுகைக்கு அசலான தன்மை உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அசலான முறையில் தொழ முடியாதவர்கள் அவர்களால் இயன்ற முறையில் தான் தொழுவார்கள். இயலாதவர்களுக்குச் சொல்லப்படும் எல்லா சட்டமும் சலுகையும் அசலான முறைக்கு மாற்றமாகத் தான் இருக்கும்.

இதே ஃபத்வாவில் தரையில் அமர்ந்து தொழலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் அசலான தன்மைக்கு மாற்றமானது தான். ஆனாலும் இதைச் சரிகாணும் இவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்து தொழுவது மட்டும் அசலான தன்மைக்கு மாற்றமாகத் தெரிகிறது.

ஐந்தாவது ஆறாவது காரணங்கள் பிதற்றலின் உச்சகட்டமாகும்.

உலமாக்களின் அறியாமைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை முறியடிக்க இவர்கள் கூறும் காரணம் யூதர்களின் சூழ்ச்சி என்பது தான்.

உடற்கூறு சார்ந்த ஒரு பிரச்சனைக்கு அதற்கேற்ப தீர்ப்பு அளிப்பது இவர்களுக்கு யூத கலாச்சாரமாக தெரிகிறது.

யூத கிறித்தவர்களின் சூழ்ச்சி என்று சொல்லும் உலமா சபை இந்த ஃபத்வாவில் எந்த இடத்திலும் இதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

தொழுகையில் பணிவு அவசியம் என்று கூறும் குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

பணிவு அவசியம் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

இப்படி வாதிடும் ஜமாஅதுல் உலமா சபை தரையில் உட்கார்ந்து தொழலாம் என்று இதே ஃபத்வாவில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லோரும் நிற்கும் போது சிலர் மட்டும் தரையில் உட்கார்ந்து தொழுவது பணிவுக்கு அப்பாற்பட்டது என்பதால் தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று இவர்கள் சொல்ல வேண்டும்.

இதற்கு என்ன காரணம் சொல்வார்கள்? நிற்க இயலாதவன் தானே உட்கார்ந்து தொழுகிறான். இயலாத போது பணிவுக்கு மாற்றமாகத் தெரியும் செயல்களைச் செய்வது பணிவுக்கு எதிராக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் இவர்களின் பதிலாக இருக்க முடியும்.

நான் நின்று வணங்க முடிந்தாலும் நின்று வணங்க மாட்டேன் நாற்காலியில் உட்கார்ந்து தான் வணங்குவேன் என்று ஆணவம் பிடித்து யாரும் நாற்காலியில் உட்காருவதில்லை. நிற்க முடியவில்லை என்பதற்காகத் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள்.

நாற்காலியில் யார் உட்காருகிறார்கள்? முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டு தரையில் உட்கார்ந்தால் வலி ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள். தரையில் உட்கார கால்களை மடித்துப் போட வேண்டும். முட்டுக்கால் வலி பிரச்சனை உள்ளவர்களால் தரையில் உட்கார முடியாது. கால்களைத் தொங்க விட்டுத்தான் அமர முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை தரையில் உட்காரச் சொல்வது அறிவீனம் அல்லவா? தரையில் உட்கார முடியாத நிலையும் உள்ளது என்ற பொது அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

صحيح البخاري

1117 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ: حَدَّثَنِي الحُسَيْنُ المُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»

1117 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே நான் தொழுவது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக! என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 1117

இயலாவிட்டால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதற்கான சலுகையை அளித்துள்ளார்கள். சலுகை என்பது இயலாமைக்குத் தான்.

ஒருவருக்கு நிற்கவும் இயலவில்லை. தரையில் அமரவும் இயலவில்லை. அவர் எப்படி தொழ வேண்டும் என்று கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் என்ன? தரையில் அமர்ந்து தொழ வேண்டும் என்பது தான். தரையில் அமர முடியாதவர்கள் பற்றித் தான் கேள்வி கேட்கப்படுகிறது. அவரை தரையில் அமரச் சொல்வது தான் ஃபத்வாவா?

இந்த ஃபத்வாவில்

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து

என்று போகிற போக்கில் ஒரு நச்சுக் கருத்தைத் தூவியுள்ளனர். முற்றிலும் தன்னை மறந்து விடுதல் இஸ்லாத்தில் இல்லை. பைத்தியக்காரனுக்கு மட்டுமே உள்ள தன்மையாகும்.

தொழுகையில் தன்னை மறத்தல் என்பது யாராலும் முடியாத காரியமாகும். இப்படி ஒரு நிலை இஸ்லாத்தில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக்அத்களின் எண்ணிக்கையை மறந்துள்ளார்கள். தமது பேத்தி உமாமாவை தொழுகையில் தோளில் சுமந்துள்ளார்கள். மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு என்பதைக் கற்றுத் தந்துள்ளனர். எனவே தன்னிலை மறத்தல் என்பது போலி தத்துவமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

முஸ்லிம்களே! ஐந்து நேரத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

இதுவும் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆதாரமாக இல்லை.

தரையில் உட்கார்ந்து தொழும் போது ஏற்படும் அதே பணிவு நாற்காலியில் அமரும் போது ஏற்படாது என்பது இவர்களின் கற்பனை தானே தவிர உண்மை அல்ல.

இயலாத நிலயில் நாற்காலியில் அமர்ந்தாவது தொழுதாக வேண்டும் என்று தொழ வருபவருக்கு இறையச்சம் உள்ளதால் தான் அந்த நிலையிலும் தொழ வருகிறார்.

நாற்காலியில் அம்ர்ந்தால் பணிவு இல்லை; நாற்காலியில் அமர்ந்தால் இறையச்சம் இல்லை என்று வாதிடுவதற்கு முன்னால் அதை ஜமாஅதுல் உலமா நிரூபிக்க வேண்டும்.

நின்றாலும், நிற்க முடியாத போது தரையில் அம்ர்ந்தாலும், அதற்கும் முடியாத போது நாற்காலியில் அமர்ந்தாலும், அதற்கும் இயலாத போது படுத்து தொழுதாலும் அவை அனைத்திலும் பணிவும் உள்ளது. இறையச்சமும் உள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃபர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

நமது மறுப்பு

சிந்திக்கும் வழிமுறை ஜமாஅதுல் உலமாவுக்கு இல்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் வந்தால் அப்படி உட்கார்ந்து தொழலாம் என்று தான் சட்டம் எடுக்க முடியும். நாற்காலியில் உட்காரக் கூடாது என்று சட்டம் எடுக்க முடியது.

நாற்காலியில் உட்காருதல் என்பது தரையில் உட்கார்ந்து தொழ முடியாதவர்களுக்கான சலுகையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார முடியாமல் நாற்காலியில் உட்காரும் நிலையில் இருந்தும் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் இருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று யாராவது வாதிட்டால் அவர்களுக்கு மறுப்பாக இதை எடுத்துக் காட்டலாம்.

தரையில் உட்கார முடியாவிட்டாலும் தரையில் உட்கார வேண்டும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக ஆகும்?

ஒரு முடிவை முன்னரே எடுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப ஹதீஸ்களை வளைப்பது தான் மத்ஹபுகளில் உள்ள பிரதான நோய்,. அந்த நோய் தான் இங்கே வெளிப்பட்டுள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

நமது மறுப்பு

ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுத்துக்காட்டி வாதம் செய்தால் அந்த ஹதீஸ் சரியானதா என்பதை உறுதி செய்து விட்டு வாதம் செய்ய வேண்டும். இவர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் பலவீனமானது. இந்தக் கருத்தில் உள்ள எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.

ஹதீஸ் ஒன்று

السنن الكبرى للبيهقي (2/ 434)

3669 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بِشْرَانَ بِبَغْدَادَ أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ الرَّزَّازُ ثنا يَحْيَى بْنُ جَعْفَرٍ ح وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ بْنِ إِبْرَاهِيمَ الْهَاشِمِيُّ بِبَغْدَادَ أنبأ أَبُو عَمْرِو بْنُ السَّمَّاكِ، ثنا أَبُو بَكْرٍ [ص:435] يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ مَرِيضًا فَرَآهُ يُصَلِّي عَلَى وِسَادَةٍ فَأَخَذَهَا فَرَمَى بِهَا، فَأَخَذَ عُودًا لِيُصَلِّيَ عَلَيْهِ فَأَخَذَهُ فَرَمَى بِهِ وَقَالَ: " صَلِّ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَعْتَ وَإِلَّا فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكَ وَكَذَلِكَ رَوَاهُ مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَحْرَانِيُّ، عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ وَهَذَا الْحَدِيثُ يُعَدُّ فِي إِفْرَادِ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ، عَنِ الثَّوْرِيِّ

இந்த ஹதீஸை ஜாபிர் கூறியதாக அபுஸ்ஸுபைர் அறிவிக்கிறார். இவர் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த ஹதீஸிலும் ஜாபிர் வழியாக என்று தான் கூறப்பட்டுள்ளது. ஜாபிரிடம் நான் கேட்டேன் என்று கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாக ஆகாது.

தத்லீஸ் பற்றி அறிய தத்லீஸ் என்றால் என்ன என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

ஹதீஸ் இரண்டு

المعجم الكبير للطبراني

12906 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن أَحْمَدَ بن حَنْبَلٍ , حَدَّثَنِي شَبَابٌ الْعُصْفُرِيُّ , حَدَّثَنَا سَهْلٌ أَبُو عَتَّابٍ , حَدَّثَنَا حَفْصُ بن سُلَيْمَانَ , عَنْ قَيْسِ بن مُسْلِمٍ , عَنْ طَارِقِ بن شِهَابٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا مِنْ أَصْحَابِهِ مَرِيضًا , وَأَنَا مَعَهُ , فَدَخَلَ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي عَلَى عُودٍ , فَوَضَعَ جَبْهَتَهُ عَلَى الْعُودِ , فَأَوْمَأَ إِلَيْهِ فَطَرَحَ الْعُودَ وَأَخَذَ وِسَادَةً , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:دَعْهَا عَنْكَ إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الأَرْضِ , وَإِلا فَأَوْمِئْ إِيمَاءً , وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكِ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் சுலைமான் இட்டுக்கட்டுபவர் என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். இதுவும் ஆதாரமாக ஆகாது.

ஹதீஸ் மூன்று

مسند أبي يعلى الموصلي (3/ 345)

1811 - حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَطَاءِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرِيضًا وَأَنَا مَعَهُ فَرَآهُ يُصَلِّي وَيَسْجُدُ عَلَى وِسَادَةٍ فَنَهَاهُ، وَقَالَ: «إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الْأَرْضِ فَاسْجُدْ، وَإِلَّا فَأَوْمِئْ إِيمَاءً، وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ»

[حكم حسين سليم أسد] : إسناده ضعيف جدا

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் அபீ தாவூத் இட்டுக்கட்டுபவரென சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

அவரது ஆசிரியரான மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர் ஆவார்.

இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

ஒரு வாதத்துக்கு இது ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இது நாற்காலியில் தொழக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. தரையில் ஸஜ்தா செய்ய முடியாவிட்டால் சைகை மூலம் ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற கருத்து தான் இதில் உள்ளது. தரையில் அமர்ந்து சைகை மூலம் ஸஜ்தா செய்வது போலவே நாற்காலியில் அமர்ந்தும் சைகை மூலம் ஸஜ்தா செய்யலாம்.

சம்மந்தமில்லாத ஹதீஸ்களை அதுவும் பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி தவறான ஃபத்வா கொடுத்துள்ளனர்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

நமது மறுப்பு

மேற்கண்ட ஹதீஸுக்கும் ஐந்தாவது மறுப்பில் பதில் அளித்துள்ளோம். இதில் அபுஸ்ஸுபைர் இடம் பெறுகிறார். அவர் தத்லீஸ் செய்பவர். மேலும் இது ஸஜ்தாவின் போது சைகையால் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது. நாற்காலியில் தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாகாது

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

நமது மறுப்பு

மார்க்கத்தில் ஒன்று கூடுமா கூடாதா என்பதை முடிவு செய்ய அல்லாஹ்வின் வேதத்தை ஆதாரமாகக் காட்ட வேண்டும்; அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதலை ஆதாரமாகக் காட்ட வேண்டும். அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பது முன்னர் நிரூபணமாகி விட்டது.

எனவே தான் உலமாக்கள் இது பற்றி பேசவில்லை என்பதை ஆதாரமாக காட்டுகிறார்கள். இது ஒரு ஆதாரமாக ஆகுமா?

இந்த வாதத்தில் ஜமாஅதுல் உலமா பொய்யர்களாக உள்ளனர்.

நாற்காலி ஆரம்பம் முதலே உலகில் இருந்து வருகின்றது. அப்படி இருந்தும் அது பற்றி உலமக்கள் எதுவும் பேசவில்லை என்று இங்கே எழுதியவ்ர்கள் அடுத்தடுத்து எழுதும் போது இதற்கு மாற்றமாக எழுதியுள்ளனர்.

கிபாயதுல் முஃப்தி, தேவ்பந்த் ஆகிய பத்வாக்களை இவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதில் நாற்காலியில் அமர்ந்து தொழுவது பற்றி பேசப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் அப்படி தொழலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தாம் எழுதும் ஃபத்வாவில் நாற்காலியில் தொழுவது பற்றி பேசப்பட்டிருந்தும், அதுவும் சில வரிகளுக்குப் பின்னாலே பேசப்படிருந்தும் நாற்காலியில் தொழுவது பற்றி உலமாக்கள் எதுவும் பேசவில்லை என்று இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இது எதைக் காட்டுகிறது?

இவர்கள் எந்தக் கவனமும் இல்லாமல் ஆய்வும் செய்யாமல் எதையாவது எழுதி முன்னர் எடுத்த முடிவை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள் என்பது இதில் தெரிகிறது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நமது மறுப்பு

இது கூடும் என்று தீர்ப்பளிப்பதே சரி என்று இவர்களின் உள் மனது சொல்கிறது. ஆனால் அப்படி அனுமதி அளித்தால் நாளடைவில் சதாரணமாக ஆக்கிவிடுவார்கள் என்று அறிவீனமான காரணத்தைச் சொல்கிறார்கள்.

இது நாற்காலியில் அமர்வதற்கு மட்டும் தானா? இயலாதவர்கள் தரையில் அமர்ந்து தொழலாம் என்று பத்வா கொடுக்கிறீர்களே இயன்றவர்களும் தரையில் தொழ ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் அதைக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை?

உலக விஷயங்களில் தான் இவர்கள் சொல்வது போல் சில நேரங்களில் ஏற்படலாம். மார்க்க விஷயத்தில் அப்படி நடக்கவே நடக்காது.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம் என்றால் தண்ணீர் கிடைக்கும் போதும் மக்கள் தயம்மம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா?

இது அறிவுடயோரிடம் எடுபடாத வாதமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது. ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

நமது மறுப்பு

இந்த பத்வாக்கள் எல்லாம் மார்க்க ஆதாரமாக ஆகாது. இன்றைய உலமாக்கள் தமது ஃபத்வாவுக்கு ஆதாரம் காட்ட கடமைப்பட்டுள்ளது போல் முந்தைய உலமாக்களும் தமது ஃபத்வாக்களுக்கு ஆதாரம் காட்டக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களின் பத்வாவையே ஆதாரமாகக் காட்டுவது அறிவீனமாகும்.

அப்படி காட்டும் பத்வா இவர்களின் வாதத்தை ஆதரிக்கிறதா? இல்லவே இல்லை.

இது இவர்களுக்கே எதிரானதாகும். இயலாவிட்டால் நாற்காலியில் தொழலாம் என்று தான் இதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் மதஹபுகளிலேயே இரு கருத்துக்கும் இடம் உள்ள போது எதற்கு ஆதாரம் உள்ளதோ அதைத் தான் ஃபத்வாவாக கொடுக்க வேண்டும். ஆனால் ஆதாரமில்லாத கருத்தை ஃபத்வாவாக அளித்துள்ளனர்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு 

நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற உலமா சபையின் வாதத்துக்கு எதிராகவே இந்த பத்வாவும் அமைந்துள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்...

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

நமது மறுப்பு

சமீப காலங்களில் தான் முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உடலுழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் எல்லா வேலைகளையும் நாற்காலியில் அமர்ந்தே செய்து பழகியதால் முட்டுக்காலை மடக்க முடியாத நிலை தற்காலத்தில் தான் அதிகம். மேலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிகமாக இருப்பதால் முட்டுக்காலில் ஏற்படும் இறுக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்படுகிறது.

 மலம் கழிக்கக் கூட கால்களைத் தொங்கவிடும் வகையிலான கழிப்பறைகளை உருவாக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது.

இவ்வளவு காலமாக இப்பிரச்சனை இல்லை என்பதைக் காரணம் காட்டி இயலாதவனுக்கு சட்டம் கூறி மார்க்கத்தைக் கடுமையாக்குவது தான் ஆய்வா?

சர்க்கரை நோய் முற்றிப்போனவர்கள் நோன்பை விட்டு விடலாம் என்று சொன்னால் இது வரை யாருக்காவது சர்க்கரை நோய் முற்றி நோன்பை விட்டுள்ளார்களா? இல்லையே? எனவே சர்க்கரை இருந்தாலும் நோன்பு வைத்து செத்துப் போ என்று சொல்வதற்கும் இந்தக் காரணத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

 2, நாற்காலிகளை தேவையின்றி பயன்படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமது மறுப்பு

 நாற்காலியில் அமராமல் தரையில் சம்மனமிட்டு அமர்ந்தாலும் இதே இடையூறு ஏற்படுகிறதே?

இருவர் நிற்கும் இடம் ஒருவருக்கு தேவைப்படுகிறதே?

சேர்ந்து நிற்க முடியாத நிலை ஏற்படுகிறதே?

அப்படியானால் தரையில் அமர்ந்தும் தொழக் கூடாது என்று இவர்கள் சொல்வார்களா?

ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார்களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப்பட்டுள்ளது.

நமது மறுப்பு 

மாற்றாருக்கு ஒப்பாகுதல் கூடாது என்பதன் அர்த்தம் கூட இவர்களுக்குப் புரியவில்லை,

நாற்காலி என்பது வசதிக்காக செய்து கொண்ட ஏற்பாடாகும். வணக்கத்துடன் இதற்கு தொடர்பு இல்லை. மாற்றார்கள் சோறு சாப்பிடுவதால் நாம் சோறு சாப்பிடக் கூடாது என்பது போல் இந்த வாதம் அமைந்துள்ளது.

மேலும் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலங்களில் வழிபடும் போது முழந்தாளிட்டுத்தான்  வணங்குவார்கள். உரை கேட்கும் போது நாற்காலியில் அமர்வார்கள்.

இந்துக் கோவில்களில் நின்று தாம் கும்பிடுவார்கள்.

இதுவும் பொய்யான காரணமாக உள்ளது.

இவர்கள் வாதப்படி பொதுக்கூட்டம் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமரக் கூடாது என்று ஆகும். அப்படித்தான் ஃப்த்வா கொடுக்கப் போகிறார்களா?

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

நமது மறுப்பு  

இயலாதவர்கள் தமக்கு இயன்ற முறையில் தொழுவது பணிவுக்கு எதிரானதல்ல என்பதை முன்னரே விளக்கி விட்டோம்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்   

5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

நமது மறுப்பு

இது சக்தியுள்ளவருக்கான சட்டம். நாம் பேசிக் கொண்டு இருப்பது இயலாதவர்கள் பற்றி.

இதைக் கூட உணராமல் வாயில் வந்ததை விட்டு அடித்துள்ளார்கள்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.

கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.

ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.

சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள்      

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.

மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4,ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.

பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

தொலைபேசி 9443391412

வெளியீடு:

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

நமது மறுப்பு

இந்த ஃபத்வா போகிற போக்கில் கொடுக்கப்படவில்லை.  350 உலமாக்கள் கூடி அளித்த ஃபத்வா என்று இந்த ஃப்த்வாவில் குறிப்பிட்டுள்ளனர். 

எத்தனை  அறிஞர்கள் ஃப்த்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்து சட்டங்கள் முடிவு செய்யப்படாது. எந்த ஆதாரங்கள் அடிப்படையில் பத்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்தே சட்டங்கள் எடுக்கப்படும்.

இந்தஃபத்வாவில் அறியாமையும் மனோ இச்சையும் தான் உள்ளதே தவிர ஆதாரம் எதுவும் இல்லை, ஆய்வும் இல்லை.

உண்மைக்கு முரணான ஊகமும், கற்பனையும் தான் இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

நிற்கவும், தரைய்ல் உட்காரவும் முடியாதவர்கள் நாற்காலியில் அமரக் கூடாது என்பதைச் சொல்லும் ஒரு குர்ஆன் வசனம் கூட இந்த ஃபத்வாவில் இல்லை. இந்தக் கருத்தைச் சொல்லும் ஒரு ஹதீஸ் கூட இந்த ஃபத்வாவில் இல்லை.

இது ஃபத்வாவாக எடுத்துக் கொள்ள தகுதியில்லாத உளறல் என்பதில் சந்தேகம் இல்லை.

நாற்கலியில் அமர்ந்து தொழுவது குறித்து முன்னரும் நாம் பதிலளித்துள்ளோம். அதைக் காண நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account