இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
முஹம்மது ரம்ஸி
பதில் :
இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
இமாமுடைய தொழுகை கடமையானதாகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை நஃபிலாகவும் இருக்கலாம். அது போன்று இமாமுடைய தொழுகை அஸராகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை லுஹராகவும் இருக்கலாம். இவ்வாறு இருவருடைய தொழுகையும் வேறுபடுவதை அனுமதிக்கும் ஆதாரங்கள் நபிவழியில் உள்ளன.
صحيح البخاري
701 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ [ص:142]، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى العِشَاءَ، فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَتَّانٌ، فَتَّانٌ، فَتَّانٌ» ثَلاَثَ مِرَارٍ – أَوْ قَالَ: «فَاتِنًا، فَاتِنًا، فَاتِنًا» – وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ المُفَصَّلِ، قَالَ عَمْرٌو: لاَ أَحْفَظُهُمَا
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தொழுவிப்பார்கள். (ஒருமுறை) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்தபோது அல்பகரா அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கடுமையாக ஏசினார் போலும். (இந்தச் செய்தி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (முஆத் (ரலி) அவர்களிடம்) "(நீரென்ன) குழப்பவாதியா? குழப்பவாதியா? குழப்பவாதியா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி 701
முஆத் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாகத் தொழுத போதே அவர்களின் கடமை நிறைவேறிவிட்டது. பிறகு அதே தொழுகையை தம் கூட்டத்தாருக்கு இமாமாக நின்று தொழுவிக்கிறார் என்றால் இரண்டாவதாகத் தொழுவிக்கும் தொழுகை அவருக்கு உபரியாக ஆகும்.
நஃபிலாக தொழுபவரைப் பின்பற்றி அவர்களது கூட்டாத்தார்கள் கடமையான தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இது நபியவர்களின் கவனத்திற்கு வந்த போது முஆத் (ரலி) நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழுவித்ததைக் கண்டித்தார்களே தவிர இவ்வாறு இமாமத் செய்வது கூடாது என்று கண்டிக்கவில்லை.
எனவே இமாமுடைய தொழுகையும், பின்பற்றுபவர்களின் தொழுகையும் வேறுபடுவதற்கு நபிகளாரின் அங்கீகாரம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் இது போன்ற நிகழ்வு நபிகளாரின் முன்னிலையில் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.
سنن الترمذي
220 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا؟»، فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
நூல் : திர்மிதி 204
நபியவர்களுடன் ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கும் ஒருவரை தாமதமாக வந்த ஒருவருடன் தொழுமாறு நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.
இங்கும் இருவருடைய தொழுகையும் வேறுபடுகிறது. ஒருவருக்கு கடமையாகவும், மற்றவருக்கு உபரியாகவும் அமைகிறது.
எனவே இருவரின் தொழுகைகள் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு நபியவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் அனுமதி உள்ளதால் இரவுத் தொழுகையைத் தொழும் இமாமைப் பின்பற்றி ஒருவர் இஷாத் தொழுகையைத் தொழலாம். அது அனுமதிக்கப்பட்டதாகும்.
இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode