Sidebar

05
Wed, Feb
76 New Articles

விடுபட்டதைத் தொழுபவரைப் பின்பற்றி தொழலாமா

ஜமாஅத் தொழுகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விடுபட்டதைத் தொழுபவரைப் பின்பற்றி தொழலாமா

மஃமூம் இமாமாக ஆகலாமா?

ஒருவர் தாமதமாக  ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகவும், இமாமாகவும் ஆக முடியுமா?

பதில் :

இமாமைப் பின்பற்றித் தொழுகின்ற வரைதான் ஒருவர்  பின்பற்றித் தொழுபவராகக் கருதப்படுவார். இமாம் ஸலாம் கொடுத்துவிட்டால் தவறிய ரக்அத்துகளைத் தொழுபவர் தனியாகத் தொழுபவராகத்தான் கருதப்படுவார்.

தனியாகத் தொழுபவரை இமாமாக ஆக்கிக் கொள்வதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

697 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ " فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، فَجِئْتُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ – أَوْ قَالَ: خَطِيطَهُ – ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ "

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை தொழுதுவிட்டு வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது (மிதமான) குறட்டைச் சப்தத்தை அல்லது லேசான குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவிற்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

நூல் : புகாரி 697

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இணைந்து ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுடன் ஸஹாபாக்கள் ஒவ்வொருவராக இணைந்து ஒரு கூட்டமாகவே தொழுதுள்ளார்கள்.

صحيح مسلم

2625 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ – رضى الله عنه – قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّى فِى رَمَضَانَ فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا رَهْطًا .…..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்று கொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம்……….. (நீண்ட ஹதீசின் சுருக்கம்)

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2014

தாமதமாக வருபவர்கள் தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

எனவே முந்தைய ஜமாஅத்துடன் இணைந்து தொழுது எஞ்சிய ரக்அத்துகளை எழுந்து தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை கிடையாது.

மேலும் இமாமாக நின்று தொழுபவர் மஃமூமாக ஆவதும், மஃமூமாக நின்று தொழுபவர் இமாமாக ஆவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே.

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

684 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ  بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ المُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلاَةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ التَفَتَ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ امْكُثْ مَكَانَكَ»، فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ» فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிட்டது. தொழுகை அறிவிப்பாளர் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார். ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் கை தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க  மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப் பார்த்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்ததற்காக தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  உங்களை அதிகமாகக் கைதட்டக் கண்டேன்? ஒருவருக்கு தொழுகையில் ஏதேனும் ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)

நூல் : புகாரி 684

இமாமாக நின்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் வந்ததும் மஃமூமாக நின்று தொழுதுள்ளார்கள்.

ஒரே தொழுகைக்குள் இமாமாக நின்றவர் மஃமூமாக ஆக முடியும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

எனவே ஒரு இமாமைத் பின்பற்றித் தொழுதவர் அந்த இமாம் ஸலாம் கொடுத்த பிறகு தனியாகத் தொழும் நேரத்தில் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழுவிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது.

மேலும் முதல் ஜமாஅத் முடிந்தவுடன் தாமதமாக வருபவர்கள் தனியாக ஜமாஅத்தாகத் தொழுது கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account