Sidebar

18
Fri, Oct
11 New Articles

பணமாக ஃபித்ரா கொடுக்கலாமா?

பெருநாள் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பணமாக ஃபித்ரா கொடுக்கலாமா?

ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர். இதற்குத் தகுந்த விளக்கம் தரவும்.

ஜாகிர், லண்டன்

இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு முன் இப்படி கேட்பவர்கள் இரண்டு வகையினராக உள்ளதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

உணவுப் பொருளாகத் தான் ஃபித்ராவைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதார ஏற்றுக் கொண்டு அப்படி தமது வாழ்க்கையில் செயல்படுத்துபவர்கள் முதல் வகையினராவர்.

இவர்களுக்கு மார்க்க அடிப்படையில் விளக்கம் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

நம்மைப் போலவே தாங்களும் பணமாக ஃபித்ரா கொடுத்துக் கொண்டு மற்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்பவர்கள் இரண்டாவது வகை.

நபிவழியைப் புறக்கணித்து பித்அத்களை தமது வாழ்க்கையில் அரங்கேற்றும் இவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறு குதர்க்கம் செய்கிறார்கள். நபிவழிப்படி யாரும் நடக்க முடியாது என்பதை நிலைநாட்டி நபிவழியில் இருந்து மக்களைத் திசை திருப்புவது இவர்களின் நோக்கம். நபிவழியை நாங்கள் மட்டும் தானா புறக்கணிக்கிறோம்; நீங்களும் தான் புறக்கணிக்கிறீர்கள் என்று நிலைநாட்டலாம் என்று கணவு காண்கிறார்கள்.

இவர்களுக்கு நாம் கூறும் பதில் இது தான்:

நபிவழியில் பணமாகக் கொடுக்கக் கூடாது என்றால் அதை முதலில் நாம் கடைப்பிடிப்போம். அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை.

அல்லாஹ்வின் தூதரை யாராலும் பின்பற்ற முடியாது எனக் கூறி அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் செய்யும் இவர்களுக்கு எந்தப் பதிலும் பயன் தராது. இவர்களை அல்லாஹ்விடம் நாம் விட்டு விடுவோம். ஷைத்தானின் வலையில் இவர்கள் வசமாகச் சிக்கிக் கொண்டவர்கள்.

முதல் வகையினருக்கு நாம் அளிக்கும் பதில் இது தான்:

சில விஷயங்களைப் பதில்கள் புரிய வைப்பது போல் சில எதிர்க் கேள்விகளும் சரியாகப் புரிய வைக்கும்.

அது போன்ற கேள்விகளை நாம் எழுப்பி விட்டு தக்க பதிலையும் தருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கத்திற்கும், வெள்ளிக்கும், கால்நடைகளுக்கும், விளைபொருட்களுக்கும் தான் ஜகாத் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது நாம் பயன்படுத்தும் ரூபாய்கள், டாலர்கள், பவுண்டுகள் அப்போது கிடையாது.

ஒருவரிடம் பத்து லட்சம் ரூபாய்கள் உள்ளன. இதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ஃபித்ரா தொடர்பாக இவர்கள் எழுப்பிய வாதப்படி எத்தனை கோடி ரூபாய்கள் இருந்தாலும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரூபாய்களே இல்லை எனும் போது அதில் ஜகாத் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஒருவர் தன்னிடம் உள்ள தங்கத்தைப் பணமாக ஆக்கிவிட்டால் அதற்கு ஜகாத் இல்லை என்று கூறுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் ஃபித்ரா விஷயமாக இவர்கள் கூறுவதை நாம் ஏற்கலாம்.

இதற்கு எதிராக இவர்களின் நிலைபாடு இருந்தால் அதற்குப் பொருந்துகின்ற காரணம் ஃபித்ராவுக்கு ஏன் பொருந்தாமல் போய்விட்டது?

இது குறித்து நோன்பு என்ற நூலில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.

அதைக் கீழே தருகிறோம்

எதைக் கொடுக்கலாம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன.

நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீச்சம் பழம்,  தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இப்படித் தான் கட்டளையிட்டிருந்தனர்.

صحيح البخاري

1506 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ العَامِرِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: «كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்களான தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு,  உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல் : புகாரி 1506

صحيح البخاري

1510 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : புகாரி 1510

இவ்விரு ஹதீஸ்களையும் ஆராயும் போது பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவது தான் முக்கியம்; அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் கோதுமை மட்டும் தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம்பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) உணவாக ஆகாது.

எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதைத் தான் பெருநாள் தர்மமாகவும் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நமது உணவுப் பழக்கமாக அரிசியே அமைந்துள்ளதால் அதைத் தான் கொடுக்க வேண்டும்.

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா?

சிலர் அவ்வாறு கொடுக்கக் கூடாது எனக் கூறினாலும் கொடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்கமும், வெள்ளிக் காசுகளும் புழக்கத்திலிருந்தது. அதைக் கொடுக்காமல் தானியத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி ரூபாய்களுக்கு ஸகாத் இல்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் தங்கம், வெள்ளி, கால்நடைகள், மற்றும் நகைகளுக்குத் தான் ஜகாத் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரூபாய்களுக்கு ஜகாத் என்று கூறப்படவில்லை. அப்படி ரூபாய்களை தங்கத்துடன் மதிப்பிட்டு ஜகாத் வழங்குவதை இக்கேள்வி கேட்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்கின்றனர். அது போல் ஃபித்ராவின் போதும் மதிப்பிடலாம்.

இன்று எந்த உணவுப் பொருளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் (காசு இருந்தால்) வாங்கிக் கொள்ள இயலும்.

அனைத்துமாக மாறும் பணம்:

2000 ரூபாய் நோட்டை ஒருவர் பயன்படுத்துகிறார் என்றால், குறிப்பிட்ட அந்தக் காகிதத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. அது அரசாங்கம் தரும் ஒரு உத்தரவாதம் தான். அரசாங்கம் தரும் உத்தரவாதத்தின் பேரில், நீங்கள் வைத்திருக்கும் இந்த ரூபாய் நோட்டிற்கு 2000 ரூபாய்க்கு உண்டான, அதற்குப் பெறுமதியான பொருளை வழங்கலாம், வாங்கிக் கொள்ளலாம் என்று அர்த்தமாகும்.

இந்த அடிப்படையில் ரூபாய் நோட்டு என்பது அனைத்து பொருட்களையும் குறிக்கும். நாம் அதை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பேரீட்சம் பழம் என்று நினைத்தால் பேரீட்சம் பழம் வாங்கலாம். உலர்ந்த திராட்சையோ, பாலாடைக்கட்டியோ வாங்கலாம் என்று நினைத்தால் அதையும் வாங்கலாம். இந்த அடிப்படையில் சிந்திக்கும்போது பணமாக வசூலிப்பதில் மார்க்க அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அன்றைய நபித்தோழர்கள் பேரீச்சம் பழத்தையே உணவாக உட்கொண்டார்கள். நாம் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அரிசி உணவாக ஆவதற்கு குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. பணமாகக் கொடுத்தால் தான் தேவையான அளவுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள இயலும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக் கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழைகள் அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிப்பதைக் காரணமாகக் கூறியுள்ளார்கள்.

ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியை விடப் பணமே சிறந்ததாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணமாகக் கொடுக்கும் போது நாம் எதை உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியை அதன் விலையை அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account