Sidebar

08
Sun, Sep
0 New Articles

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா?

பெருநாள் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா?

கேள்வி:

ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் இங்குள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் சரியா? ஃபித்ரா குறித்த முழு விபரத்தையும் கூற முடியுமா?

அப்துல் காதிர், அல்ஜுபைல்

பதில் :

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள் மீதும் அடிமைகளுக்காக அவர்களின் எஜமானர்கள் மீதும், சிறுவர்களுக்காக அவர்களின் பொறுப்பாளர்கள் மீதும் இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா  எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களில் இருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்குச் சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம் என்ற கருத்தே சரியானது என்பது தெரிகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன் என்று நான் கூறினேன். அதற்கு அவன் எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான் என்று கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன் என்று கூறினேன். எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன் என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, உன் கைதி என்ன ஆனான்? என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வக்காலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

(இங்கே ஷைத்தான் என்பது திருட்டுத் தொழில் செய்யும் கெட்ட மனிதனைக் குறிக்கிறது)

பெருநாள் தினத்தில் தான் பித்ராவைக் கொடுக்க வேண்டும் என்ற வாதம் தவறு என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

பித்ராவைத் திரட்டுவதற்காக அபூஹுரைரா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) நியமித்து இருந்தார்கள்.

ஷைத்தான் அதைத் திருட முன்று நாட்களாக வந்துள்ளான்.

முதல் நாள திருட வரும் போதே பித்ராவாக திரட்டப்பட்ட நிதி அள்ளிச் செல்லும் அளவுக்கு குவிந்துள்ளது என்றும் தெரிகிறது.

ஷைத்தான் மூன்றாவதாக வந்தது பெருநாள் தினம் என்று கருத முடியாது. அதற்குச் சில நாட்கள் கழித்தே பெரு நாள் வந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவற்றைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது பெருநாளைக்குப் பல நாட்களுக்கு முன்பே பித்ராவைத் திரட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது..

ஜகாத் வேறு ஃபித்ரா வேறு

இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ரமளான் ஜகாத் என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம், அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூல்:நஸயீ 2453, 2455

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள் என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.

திரட்டும் பணியை பெருநாளைக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் சில நாட்கள் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர்.

நூல் : புகாரி 1551

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்

ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 1395, 1496, 4347

அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

மக்களில் உள்ள செல்வந்தர்கள், மக்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?

இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது என்று அவர் கூறினார்...சுருக்கம்

நூல் : புகாரி 6979

பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

மேலும் ஏழைகளுக்கு உணவாகப் பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறும்.

 

27.02.2012. 12:57 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account