பாங்கு சொல்லும் போது வலது, இடது புறம் திரும்ப வேண்டுமா?
பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா?*
பதில்:
இரு புறமும் பிலால் (ரலி) திரும்பியதாக ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸையும், அதன் விளக்கத்தையும் காண்போம். صحيح مسلم - (503) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ وَكِيعٍ، قَالَ: زُهَيْرٌ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَهُوَ بِالْأَبْطَحِ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، قَالَ: فَخَرَجَ بِلَالٌ بِوَضُوئِهِ، فَمِنْ نَائِلٍ وَنَاضِحٍ، قَالَ: «فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ»، قَالَ: «فَتَوَضَّأَ» وَأَذَّنَ بِلَالٌ، قَالَ: فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا - يَقُولُ: يَمِينًا وَشِمَالًا - يَقُولُ: حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ: «ثُمَّ رُكِزَتْ لَهُ عَنَزَةٌ، فَتَقَدَّمَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ، يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ، لَا يُمْنَعُ ثُمَّ صَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ إِلَى الْمَدِينَةِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 777
பிலால் (ரலி) அவர்கள் வலப்புறமும், இடப்புறமும் திரும்பியதால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று புரிந்து கொள்வதா? அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்வதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினார்கள் என்று ஹதீஸ் இருந்தால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஹதீஸில் பிலால் (ரலி) அவர்கள் அவ்வாறு திரும்பியதாகத் தான் கூறப்பட்டுள்ளது. அப்படி திரும்புமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அதனடிப்படையில் பிலால் (ரலி) இரு புறமும் திரும்பியதாக கூறப்படவில்லை. அப்படி இருந்தால் அது சுன்னத் என்று ஆகிவிடும்.
பிலால் (ரலி) இப்படி இரு புறமும் திரும்பும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என்று கூட இதில் கூறப்படவில்லை.
அவர்கள் இதைப் பார்த்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் மார்க்கத்தில் அதன் நிலை என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாங்கின் வாசகங்களைச் சொல்லி மக்களை அழைக்க வேண்டும் என்பது தான் நபிகளின் கட்டளை. அவ்வாறு அழைக்கும் போது பிலால் ரலி தனது கைகளையும். முகத்தையும் எப்படி வைத்துக் கொண்டார் என்பது மார்க்கம் சார்ந்த விஷயம் அல்ல.
நபிகள் கட்டளையிடாமல் பிலால் (ரலி) அவர்கள் சுயமாகத் தான் வலது புறம் இடது புறமாகத் திரும்பியுள்ளார்கள். ஒருவர் சுயமாக ஒன்றைச் செய்யும் போது அதை நபிகள் பார்த்து மறுப்பு சொல்லாமல் இருந்தால் அவ்வாறு செய்ய அனுமதி உண்டு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக பின் வரும் செய்தியைப் பாருங்கள்!
صحيح البخاري 5391 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيُّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الوَلِيدِ، الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيْمُونَةَ، وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ، فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا، قَدْ قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الحَارِثِ مِنْ نَجْدٍ، فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَلَّمَا يُقَدِّمُ يَدَهُ لِطَعَامٍ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ، فَأَهْوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ إِلَى الضَّبِّ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الحُضُورِ: أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدَّمْتُنَّ لَهُ، هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَنِ الضَّبِّ، فَقَالَ خَالِدُ بْنُ الوَلِيدِ: أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيَّ
5391 காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயார் ஆவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களுடைய சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அவர்கள் அந்த உடும்பு இறைச்சியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தமது கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பை விட்டுத் தமது கையை எடுத்துக் கொண்டார்கள். அப்போது நான் உடும்பு தடை செய்யப்பட்டதா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆகவே, என் மனம் அதை விரும்பவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நூல் : புகாரி 5391
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் காலித் பின் வலீத் அவர்கள் உடும்பு இறைச்சியைச் சாப்பிட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்காத காரணத்தால் உடும்புக் கறி சாப்பிடுவது சுன்னத் என்று கூறமாட்டோம். அது அனுமதிக்கப்பட்டது என்றே புரிந்து கொள்வோம். விரும்பினால் சாப்பிடலாம்; விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம்.
அது போல் தான் பாங்கு சொல்லும் போது இரு புறமும் பிலால் திரும்பியது நபியின் கட்டளைப்படி அல்ல. அவரது சுய விருப்பத்தின் படிதான் அவ்வாறு செய்துள்ளார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து ஆட்சேபிக்காமல் இருந்தாலும் அது சுன்னத் என்று ஆகாது.
மேலும் பிலால் (ரலி) அவர்கள் எப்போது பாங்கு சொன்னாலும் இவ்வாறு திரும்புவார்கள் என்றும் ஹதீஸில் கூறப்படவில்லை. ஒரு திறந்த வெளியில் பிலால் பாங்கு சொல்லும் போது ஒரு தடவை அவர் இரு புறமும் திரும்பியதைப் பார்த்ததாக அபூஜுஹைஃபா என்ற நபித்தோழர் அறிவிப்பதை மட்டுமே இதற்கு அறிஞர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
எனவே ஒருவர் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினால் அது தவறல்ல என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவதால் மக்களுக்குக் கேட்காது என்றால் திரும்பாமல் இருப்பது தான் மக்கள் தெளிவாகக் கேட்க உதவும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.
பாங்கு சொல்லும் போது வலது, இடது புறம் திரும்ப வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode