இமாம் இணைவைப்பவர் என்று சந்தேகம் வந்தால்..?
இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் அவரைப் பின்பற்றித் தொழலாமா?
அஷ்ரஃப் அலி
பதில் :
ஒருவர் தன்னை முஸ்லிம் சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான நிலையைக் கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் வெளிப்படையாக இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடுவதை அறிந்தால் அப்போது அவர் இணைவைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம்.
அவர் இணைவைக்கும் காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்த்தால் அல்லது அதைப் பார்த்த நம்பகமானவர்கள் நமக்குத் தெரிவித்தால் அப்போது அவர் இணைவைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம். அவரைப் பின்பற்றி தொழாமல் இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் எதுவுமின்றி நமது யூகத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிமை இணைவைப்பவர் என்று சந்தேகப்படுவது கூடாது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதும் கூடாது. இவ்வாறு யூகம் கொள்வதை மார்க்கம் தடை செய்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்!
திருக்குர்ஆன் 49:12
5144 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ الْأَعْرَجِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَسَّسُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا إِخْوَانًا وَلَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5144
எனவே துருவி ஆராயாமல் நல்லெண்ணம் வைத்து இமாமைப் பின்பற்றலாம். ஆனால் அவரது வெளிப்படையான பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகள் இணைவத்தலாக உள்ளது என்று தெரிய வந்தால் அப்போது அவரைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.
இமாம் இணைவைப்பவர் என்று சந்தேகம் வந்தால்..?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode