Sidebar

19
Fri, Apr
4 New Articles

நபிமார்கள் அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா

அல்லாஹ்வை நம்புதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். எனவே அவர்களுக்கு நாம் தர்கா கட்டலாம் என்றும் ஆதாரம் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் சின்னங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும், அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும்.

ஸஃபா, மர்வா ஆகிய இரு குன்றுகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று அல்லாஹ் கூறி அதைக் கண்ணியப்படுத்தும் முறையையும் கற்றுத் தந்துள்ளான்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:158

ஸஃபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறிய இறைவன், ஸயீ செய்வதே அதைக் கண்ணியம் செய்யும் முறை எனவும் கற்றுத் தந்துள்ளான்.

ஸஃபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதால் அதை வழிபாடு செய்யலாம், அதனிடத்தில் தேவைகளை முறையிடலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது.

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என அல்லாஹ் கூறுகிறான். பலிப்பிராணிகளைக் கும்பிடுவதும், அல்லது அதற்கு தர்கா கட்டுவதும் கண்ணியப்படுத்துவதாக ஆகாது. எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானோ அதைச் செய்வதுதான் கண்ணியப்படுத்துதலாகும்.

 (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

திருக்குர்ஆன் 22:36

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்று கூறிய இறைவன் அதை அறுத்து உண்ணச் சொல்கிறான். அறுத்து உண்பதுதான் அதைக் கண்ணியப்படுத்துதல் என்கிறான். அப்படியானால் உயிரோடு வாழும் உலமாக்களையும், ஷைகுமார்களையும் நிற்க வைத்து அறுத்து கொல்வது தான் அவர்களைக் கண்ணியப்படுத்துதல் என்று ஒப்புக் கொள்வார்களா?

மேலும் எதையேனும் அல்லாஹ்வின் சின்னம் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த சான்று இருக்க வேண்டும்.

நபிமார்களோ, இறைநேசர்களோ அல்லாஹ்வின் சின்னங்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அல்லாஹ்வோ, நபிகள் நாயகமோ அவ்வாறு நமக்குச் சொல்லவுமில்லை. அவ்வாறிருக்க இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் விதமாக நாமாக முடிவு செய்வது அல்லாஹ்விற்கே அவனது மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 49:16

ஒரு வாதத்திற்கு நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இருந்தால் கூட அத்தகைய தூதர்களில் ஒருவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கப்ருகள் கட்டுவது கூடாது என்று வன்மையாகத் தடை செய்துள்ளார்கள். கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று நம்பினால் அவர்கள் சொன்னதைப் பின்பற்றுவதுதான் உண்மையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் முறையாகும். இதனடிப்படையில் கப்ர்கள் இடிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நடைமுறைப்படுத்துவது தான் அல்லாஹ்வின் சின்னமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகும்.

இறைத்தூதர்களுக்கும், நல்லடியார்களுக்கும் கப்ர் கட்டுவது, அலங்கரிப்பது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். நபிமார்களின் கப்ர்களுக்கு கட்டடம் எழுப்பி, அல்லாஹ்வின் சின்னத்தைக் கண்ணியப்படுத்திய யூதக் கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்திருக்க மாட்டார்கள்.

நபிமார்களின் கப்ரில் கட்டடம் எழுப்பி, அதை அழகுபடுத்துவது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாக இருந்திருந்தால், நபிமார்களுக்குச் சிலை வடிப்பது கப்ர் கட்டுவதையும் விட மேலான கண்ணியம் இல்லையா?

صحيح البخاري

1601 - حدثنا أبو معمر، حدثنا عبد الوارث، حدثنا أيوب، حدثنا عكرمة، عن ابن عباس رضي الله عنهما قال: إن رسول الله صلى الله عليه وسلم لما قدم أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها فأخرجت، فأخرجوا صورة إبراهيم، وإسماعيل في أيديهما الأزلام، فقال رسول الله صلى الله عليه وسلم: «قاتلهم الله، أما والله لقد علموا أنهما لم يستقسما بها قط». فدخل البيت، فكبر في نواحيه، ولم يصل فيه

1601 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

நூல் : புகாரி1601

இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு சிலைகளை வடித்து கண்ணியம் செய்த மக்கத்து இணைவைப்பாளர்களை நபிகள் நாயகம் ஏன் கண்டிக்க வேண்டும்? அந்தச் சிலைகளை ஏன் தகர்க்க வேண்டும்?

இதிலிருந்தே கப்ர் கட்டி வழிபாடு செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய யூதக்கிறித்தவ கலாச்சாரம் தான். அது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரியலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account