சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்
சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம். அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று நாம் வாதிட்டு அதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்து வருகிறோம். அந்த வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் சலஃபி என்பவர் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு உள்ளார். அதில் சூனியத்துக்கு தாக்கம் உண்டு என்று நிறுவிட சில ஆதாரங்களை முன்வைத்து நமது வாதங்களுக்கு மறுப்பும் எழுதியுள்ளார். ஆய்வாளர்களுக்கு உதவும் என்பதால் அவரது வாதங்கள் முற்றிலும் தவறானது என்பதையும் நமது வாதங்கள் தான் சரியானவை என்பதையும் இக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
சூனியம் தொடர்பாக நாம் கூறுவதை ஒருவர் மறுத்து கட்டுரை எழுதுவதாக இருந்தால் அது குறித்து நாம் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. நமது பல வாதங்களை அவர் கண்டு கொள்ளாமல் நழுவியுள்ளார்.
ஒருவருக்கு மறுப்பு எழுதினால் அவர் கூறுவதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு எழுத வேண்டும். இதையும் அவர் செய்யவில்லை. மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி விமர்சிப்பாரோ, மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி கேள்வி கேட்பாரோ அந்தத் தரத்தில் தான் அவர் தனது மறுப்புக் கட்டுரையை அமைத்துள்ளார்.
வாதம் என்று சொல்ல முடியாத பல தமாஷ்களையும் இடையிடையே வாதம் என்ற பெயரில் எடுத்து வைக்கிறார். அனைத்தையும் இக்கட்டுரையில் நாம் நாம் விரிவாக எடுத்துக் காட்டுவோம்.
சூனியம் என்பது நிஜமா? பொய்யா?
சூனியம் என்பது நிஜமல்ல, கற்பனையே என்று சொல்பவர்கள் முஃதஸிலாக்களா?
அறிவுக்குப் பொருந்தவில்லை என்பதற்காகத் தான் சூனியம் என்பதை நாம் மறுக்கிறோமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன?
ஆகிய விஷயங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
இத்தலைப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பற்றிய நமது பார்வை என்ன? அதற்கு இஸ்மாயில் சலஃபி அளிக்கும் பதில் என்ன என்பதை முதலாவதாக நாம் ஆய்வு செய்வோம்.
அதன் பிறகு சூனியம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன?
நாம் கூறியது என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் குறித்து நாம் நமது தமிழாக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளோம்.
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருக்குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.
தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ - இறை வேதம் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் இறைவனிடமிலிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.
எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்காதுஎன்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.
இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் பண்டிதர்களும் பிரமிப்புடன் பார்க்கும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள்.
அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு எழுத்தறிவை வழங்கவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
எழுத்தறிவு என்பது பெரும் பாக்கியமாக இலிருந்தும், (திருக்குர்ஆன் 68:1, 96:4) அந்தப் பாக்கியத்தை வேண்டுமென்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று இறைவன் கூறுகிறான்.
திருக்குர்ஆன் இறை வேதம் என்பதில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம் என்று மேற்கண்ட வசனத்தில் அறிவிக்கிறான்.
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக குர்ஆனை வழங்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தான் தவிர்த்ததாக இறைவன் அறிவிக்கிறான்.
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.
திருக்குர்ஆன் 17:106
இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
திருக்குர்ஆன் 25:32
சிறிது சிறிதாக அருளினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு சிறிது சிறிதாக அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.
இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் எனவும் இறைவன் பிரகடனம் செய்கிறான்.
(பார்க்க திருக்குர்ஆன் 15:9)
இந்தக் குர்ஆனில் கோனலோ, குறைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்றெல்லாம் கூறி திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையை அல்லாஹ் நிலைநாட்டுகிறான்.
(பார்க்க திருக்குர்ஆன் 18:1, 39:28, 41:42, 4:82)
திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ, அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறை வேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.
ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.
எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
இவ்வாறு நமது தமிழாக்கத்தில் நாம் குறிப்பிட்டோம். இன்னும் பல காரணங்களையும் குறிப்பிட்டுள்ளோ. இதில் இஸ்மாயில் சலஃபி கண்டு பிடித்துள்ள தவறுகளைக் காண்போம்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பும் நமது விளக்கமும்
இஸ்மாயீல் சலஃபியின் முதலாம் வாதம்
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததனால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க பீஜே முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர் இது நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.
பீஜேயின் பதில்
இஸ்மாயீல் சலஃபி என்ன சொல்ல வருகிறார்?
தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு போலித் தோற்றம் ஏற்பட்டது என்பதை ஒரு பக்கம் ஒப்புக் கொண்டு மறுபக்கம் இது மனநிலை பாதிப்பு என்று கூற முடியாது என்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியத்தினால் மனநல பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்ல வந்து மனநல பாதிப்புதான் ஏற்பட்டது என்பதை வேறு சொற்களால் ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனியுங்கள்!
மனிதன் இயல்பாகவே மறந்து விடுவது வேறு! மனிதன் எளிதில் மறந்து விட முடியாத, குளிப்பது கடமை என்ற மார்க்கச் சட்டத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் ஏற்பட்டால் அது சாதாரண மறதியில் அடங்குமா? மனநிலை பாதிப்பில் அடங்குமா?
இருப்பதை இல்லை என்று எண்ணுவதும், இல்லாததை இருப்பதாக எண்ணுவதும் தானே மனநிலை பாதிப்பின் அடிப்படை.
நமக்கு மறுப்பு சொல்வதாக எண்ணிக் கொண்டு வார்த்தையைத் தான் மாற்றிப் போட்டுள்ளாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று தான் இவரும் கூறுகிறார்.
ஒரு மனிதரை நாம் முட்டாள் என்று கூறுகிறோம். இதை அவர் மறுக்க முற்படும் போது அவருக்கு அறிவு இல்லை; அவ்வளவு தான். முட்டாள் என்று சொல்ல முடியாது என்று கூறினால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அப்படித்தான் இஸ்மாயீல் சலஃபி கூறுகிறார்.
மறுக்கப் புகுந்த நேரத்தில் கூட நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதை வேறு வார்த்தையில் கூறும் அளவுக்குத் தான் இவரது நிலைமை இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற கருத்து இவர்களின் எழுத்துக்களைக் கொண்டே உறுதியாகி விட்டதால் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டும் என்பது மேலும் உறுதியாகின்றது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் ஏற்பட்டது என்று நாம் கூறி அவர்களை இழிவுபடுத்துவதாக நெஞ்சழுத்தத்துடன் கூறுகிறார்.
மத்ஹபு நூல்களில் கொஞ்சமாக கஞ்சா அடிக்கலாம் என்று உள்ளதை நாம் எடுத்துக் காட்டி இத்தகைய மத்ஹப் தேவையா என்று கடந்த காலங்களில் கேட்டோம். இதற்கு மத்ஹப்வாதிகள் என்ன சொன்னார்கள்? நாம் கஞ்சா அடிக்கச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றனர். அந்த வழிமுறையை இஸ்மாயீல் சலஃபி கற்று கைதேர்ந்துள்ளார்.
இது சரியான செய்தி தான் என்று கூறி வேறு வார்த்தையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மனநோயாளி என்று உறுதிப்படுத்துவது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் செயலா?
செய்யாததைச் செய்ததாக எண்ணும் பொய்த் தோற்றம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, ஏற்பட்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை என்று கூறுவது இட்டுக்கட்டும் இழிசெயலா?
சுயநினைவுடன் தான் இவர் இதை எழுதினாரா என்று கேட்க விரும்புகிறோம்.
மனநிலை பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்க பயங்கரமான காரணத்தையும் கூறுகிறார்.
அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார் என்பது தான் அந்தக் காரணம்.
தமக்கு ஏற்பட்டுள்ள நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போது அது எப்படி மனநிலை பாதிப்பாக இருக்க முடியும் என்பது இதன் உள் அர்த்தம்.
மனநிலை பாதிப்பு என்பது ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டது. தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே சில பேருக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் அவரது நிலையைப் பார்த்து முடிவு செய்வார்கள். இது ஒரு வகை மனநோய்.
இன்னொரு வகையினர் தங்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதைச் சில நேரங்களில் தாங்களே உணர்வார்கள். தாங்களே தக்க மருத்துவர்களையும், ஆலோசகர்களையும் தேடிச் சென்று சிகிச்சை பெறுவார்கள்.
நீர் தான் மஹ்தி என்று யாரோ என்னை நோக்கி கூறுவதாக உணர்கிறேன். நான் திட்டமிடாவிட்டாலும் இப்படி எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது என்பது போன்று கூறும் பலரை நானே சந்தித்திருக்கிறேன்.
மனநல ஆலோசகர்களும் இத்தகைய மனநோயாளிகளும் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒருவருக்கு 24 மணி நேர மனநிலை பாதிப்பு என்றால் அவரால் தனக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை அறிய முடியாது. சில நேரங்களில் சில விஷயங்களில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டவர்கள் தமக்கு இப்படி ஒரு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதை உணர்வார்கள். இதுவும் மன நோய்தான். சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வகை மனநோய் ஏற்பட்ட்தால் அதனால் அவர்களுக்கு மனநிலை பாதிப்பு இல்லை என்று கூற முடியாது.
மனநோய் குறித்த ஞானம் இவருக்கு இல்லாததால் இப்படி அர்த்தமற்ற வாதத்தை முன் வைக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்பது தான் இந்த ஹதீஸின் மையக் கருத்து எனும் போது அதை மறுத்தே ஆக வேண்டும். இந்த வாதத்துக்கு இஸ்மாயில் சலஃபி பதில் சொல்லவில்லை.
இஸ்மாயீல் சலஃபியின் இரண்டாம் மறுப்பு
தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பந்தியில் பீஜே கூறி விட்டு அடுத்த பந்தியிலேயே தமக்கு சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் ..என்று கூறி ஹதீஸின் கருத்தை பீஜே மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்
தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பந்தியில் கருதினார்கள் என்றும் இரண்டாம் பந்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும். ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்?
பீஜேயின் பதில்
முதல் மறுப்பில் வார்த்தை விளையாட்டு ஆடியது போல் தான் இரண்டாவது மறுப்பிலும் அதே வார்த்தை விளையாட்டைத் தான் செய்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) கருதினார்கள் என்று முதலில் எழுதிய பிஜே பின்னர் கூறினார்கள் என்று மிகைப்படுத்தி திரிபு வேலை செய்து விட்டாராம்.
கருதினார்கள் என்று ஹதீஸில் இருக்கும் போது, கூறினார்கள் என்று பீஜே எழுதியதால் நபிகள் நாயகம் (ஸல்) மீது இட்டுக்கட்டிக் கூறி விட்டாராம்.
பீஜேயாகிய நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை விளக்குவதற்கு முன் முக்கியமான கேள்வியை அவரிடம் நான் கேட்க வேண்டியுள்ளது.
தான் செய்யாததைச் செய்ததாக ஒருவர் நினைக்கிறார் என்றாலும், கூறினார் என்றாலும் இவரது வாதத்துக்கு எந்த வகையிலும் அது உதவப் போவதில்லை. இரண்டுமே மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற ஒரே கருத்தைத் தந்து அந்த ஹதீஸ் கட்டுக்கதை என்பதைத் தான் உறுதிப்படுத்தும்.
உருப்படியான வாதம் இல்லாததால் வார்த்தைக்கு வார்த்தை பிழை கண்டுபிடிப்பதில் எட்டுத் தொடரையும் வீணடித்திருக்கிறார்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்டவாறு கருதினாலும், அது மனநிலை பாதிப்பு தான்; அப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும் அதுவும் மனநிலை பாதிப்புத் தான்.
அடுத்து கருதினார்கள் என்றும், கூறினார்கள் என்றும் சொல்வது முரண்பாடா என்பதைப் பார்ப்போம்.
கருதுதல் என்பது ஒருவரின் உள்ளத்தில் உள்ளதாகும். மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை அவர் மற்றவருக்குக் கூறாமல் அறிந்து கொள்ள முடியாது. ஒருவரது மனதில் தோன்றியதை இன்னொருவர் சொல்லி விட்டார் என்றால் அவருக்கு இறைத்தன்மை இருப்பதாகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடாமலே ஈடுபட்டதாக போலித் தோற்றம் ஏற்பட்டது என்றால் எனக்கு இப்படியெல்லாம் ஏற்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொல்லாமல் ஆயிஷா (ரலி) இதை அறிய முடியாது.
ஒரு மனிதர் கற்பனை செய்வதை இன்னொருவர் கூறுகிறார் என்றால் கற்பனை செய்தவர், அந்த மனிதரிடம் அதைத் தெரிவித்து விட்டார் என்பது தான் பொருள்.
கருதினார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக ஹதீஸில் கூறப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி விட்டார்கள் என்பது தான் பொருள். இதில் இட்டுக்கட்டுதல் ஏதும் இல்லை.
அவர் மேலும் எப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார் என்று பாருங்கள்.
இஸ்மாயீல் சலஃபியின் மூன்றாம் மறுப்பு
தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் செய்ததைச் செய்யவில்லை என்கின்றார் செய்யாததைச் செய்தேன் என்கின்றார் பக் (1298)
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார் நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக்காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். எவ்வித அறிவு நாணயமும் இல்லாமல் எப்படி சித்து வேலை சூனியம் வேலை செய்கிறார் என்று பாருங்கள்.
பீஜேயின் பதில்
நான் எழுதியதை இஸ்மாயீல் சலஃபி இருட்டடிப்புச் செய்து தில்லுமுல்லு செய்துள்ளதைக் காணுங்கள்.
நான் எழுதியது என்ன?
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
நான் எழுதியது இது தான். இதில் அடிக்கோடிட்ட முக்கியமான பகுதியை வெட்டி எடுத்து விட்டு மூஸா நபி காலத்து சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் கண்கட்டி வித்தை காட்டுகிறார்.
இப்படி காஃபிர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தான் நான் குறிப்பிட்டுள்ளேன். எனது கருத்தாக நான் கூறியதாக இவர் சித்தரிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனம் அல்லவா?
இஸ்மாயில் சலஃபி பின் வருமாறு தனது பத்திரிகையில் ஒரு வாசகம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நானே கடவுள் என்று பிர்அவ்ன் கூறினான்.
அவரை விமர்சிக்கப் புகுந்த நான் இஸ்மாயில் சலஃபி நானே கடவுள் என்று எழுதிவிட்டார் என்று கூறினால் இஸ்மாயில் சலஃபி ஆமாம் என்று ஒப்புக் கொள்வாரா?
மேற்கண்டவாறு காஃபிர்கள் விமர்சிப்பார்கள் என்று தான் நான் குறிப்பிட்டேன். காஃபிர்கள் விமர்சிப்பார்கள் என்பதைக் கட் பன்னி விட்டு அதை நானே கூறுவதாகச் சித்து விளையட்டு காட்டுகிறார்.
இந்த லட்சணத்தில் நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரை வேறு!
நாம் எழுதிய வாசகங்களை எடுத்துக் காட்டி அவர் செய்யும் மூன்றாவது மறுப்பு இதுதான்:
இஸ்மாயீல் சலஃபியின் நான்காம் மறுப்பு
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
உள்ளதை வைத்து விமர்சனம் செய்வது தான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்:1298)
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது! 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது! ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.
அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!
காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற-நியாயமற்ற- நபி(ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!
அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)
அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது. (53:23)
வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்:1298)
ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும்-செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி(ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?
இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்:1298)
இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.
5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத்தான் முன்வைக்கின்றார்.
6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.
எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானதுதான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து திட்டவட்டமான உண்மை என்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!
நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:
எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி(ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே எதிரிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.
பீஜேயின் பதில்
இந்தப் பதிலில் இஸ்மாயீல் சலஃபி என்ன கூறுகிறார்?
நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குடும்பப் பிரச்சனை தான். மனைவியுடன் கூடாமலே கூடியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்தது அவர்களின் மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். எனவே எதிரிகளுக்கு இது தெரிய வழியில்லை எனும் போது அவர்கள் எப்படி அவர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள்?
இதில் இஸ்மாயீல் சலஃபி இரு செய்திகளை முன்வைக்கிறார்.
மக்களுக்குத் தெரியாது என்பது ஒரு செய்தி.
நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மனநிலை சம்மந்தப்பட்டது அல்ல; அது குடும்பப் பிரச்சனை சம்மந்தப்பட்டது என்பது மற்றொரு செய்தி.
உண்மையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்பு உடலுறவில் ஈடுபடாமலே உடலுறவில் ஈடுபட்டதாக மட்டும் போலித் தோற்றம் ஏற்பட்டதா? பல விஷயங்களில் போலித் தோற்றம் ஏற்பட்டதா என்பதையும், இது மக்களுக்குத் தெரிந்திருந்ததா? என்பதையும் முடிவு செய்து விட்டால் இதில் தெளிவு கிடைத்து விடும்.
இது குறித்து வரும் அறிவிப்புகள் அனைத்தையும் திரட்டி ஆய்வு செய்யும் போது உடலுறவில் ஏற்பட்டதாக போலித் தோற்றம் ஏற்பட்டது மட்டுமின்றி பொதுவான மனநிலை பாதிப்புகளும் ஏற்பட்டன என்று அறியலாம்.
5763 ـ حدّثنا إبراهيمُ بن موسى أخبرَنا عيسى بن يونسَ عن هشام عن أبيه عن عائشةَ رضي الله عنها قالت: سَحرَ رسولَ الله صلى الله عليه وسلّم رجُلٌ من بني زُرَيق يقال له لَبِيدُ بن الأعصم، حتى كان رسولُ الله صلى الله عليه وسلّم يُخيَّلُ إليه أنهُ كانَ يفعلُ الشيء وما فَعله. حتى إذا كان ذاتَ يوم ـ أو ذاتَ ليلةٍ ـ وهوَ عندي، لكنَّهُ دعا ودعا ثمَّ قال: ياعائشة، أشَعَرتِ أنَّ الله أفتاني فيما استَفتيتهُ فيه؟ أتاني رجُلان، فقعَدَ أحدهما عند رأسي، والآخرُ عند رجليَّ، فقال أحدهما لصاحبهِ: ما وجَعُ الرَّجل؟ فقال: مطبوب. قال: من طَبَّه؟ قال: لَبيدُ بن الأعصم. قال: في أيِّ شيء؟ قال: في مُشطٍ ومُشاطة، وجُفِّ طَلْع نخلةٍ ذكر. قال: وأينَ هو؟ قال: في بئرِ ذَرْوانَ . فأتاها رسولُ الله صلى الله عليه وسلّم في ناس من أصحابهِ. فجاءَ فقال: ياعائشة، كأنَّ ماءَها نُقاعة الحناء، وكأن رؤوس نخلها رؤوس الشياطين . قلتُ: يارسولَ الله أفلا استخرجتَه؟ قال: قد عافاني الله، فكرهتُ أن أُثيرَ على الناس فيه شَراً . فأمرَ بها فدُفِنَت تابعه أبو أُسامةَ وأبو ضَمرةَ وابن أبي الزناد عن هشام. وقال الليثُ وابن عُيَينة عن هشام: في مُشط ومشاطة. ويقال: المشاطة ما يخرُج منَ الشعرِ إذا مُشط، والمشاطة من مُشاطة الكتّان.
5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
நூல் : புகாரி 5763
(ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம்)
(பிரமையூட்டப்பட்டார்கள் என்பதை விட பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். அரபு மூலத்தில் மேற்கண்ட ஹதீஸில் கான என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்ததைக் குறிக்கும். எனவே செய்து கொண்டிருந்ததாக என்ற இடத்தில் மட்டும் சரியாக தமிழாக்கம் செய்துள்ளனர். அதுபோல் பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்று தாம் தமிழ்ப்படுத்த வேண்டும்.)
மேற்கண்ட ஹதீஸில் உடலுறவு கொள்ளாமல் உடலுறவு கொண்டதாக நபியவர்கள் நினைத்ததாகக் கூறப்படவில்லை. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகத் தெளிவாகக் கூறுகிறது. உடலுறவு அல்லாத மற்ற விஷயங்களிலும் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று இந்த அறிவிப்பு கூறுகிறது.
செய்யாததைச் செய்ததாக அடிக்கடி அவர்களுக்குத் தோன்றினால் அது குடும்பத்துப் பிரச்சனை அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அல்ல. எப்போதும் மக்களுடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பவர்கள் என்பதால் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்பதில் சந்தேகம் இல்லை..
மற்றும் சில அறிவிப்புகளைப் பாருங்கள்!
5766 ـ حدّثنا عُبَيدُ بن إسماعيلَ حدَّثنا أبو أسامة عن هِشام عن أبيه عن عائشة قالت: سُحِرَ النبيُّ صلى الله عليه وسلّم حتى أنه لَيُخَيَّلُ إليه أن يَفعلُ الشيء وما لعلهُ، حتى إذا كان ذاتَ يوم وهوَ عندي دَعا الله ودَعاه ثمَّ قال: أشَعَرْتِ ياعائشةُ أنَّ الله قد أفتاني فيما استفتيته فيه ؟ قلت: وما ذاكَ يارسول الله؟ قال: جاءني رجلان، فجلسَ أحدُهما عند رأسي، والآخرُ عند رجليَّ، ثم قال أحدهما لصاحبه: ماوَجَعُ الرجل؟ قال: مَطبوب. قال: ومن طبَّه؟ قال: لَبيدُ بن الأعصم اليهوديُّ من بني زُرَيق. قال: فيماذا، قال: في مُشطٍ ومشاطة وجُف طلْعةٍ ذكر. قال: فأين هو؟ قال: في بئرَ ذي أروان. قال: فذهبَ النبيُّ صلى الله عليه وسلّم في أناسٍ من أصحابه إلى البئر فنظرَ إليها وعليها نخل ثمَّ رَجعَ إلى عائشة فقال: والله لكأنَّ ماءَها نُقاعة الحِنّاء، ولكأنَّ نخلها رؤوس الشياطين . قلتُ: يارسولَ الله، أفأخرَجتهَ؟ قال: لا، أما أنا فقد عافاني الله وشفاني، وخشِيتُ أن أثوِّرَ على الناس منه شراً . وأمر بها فدُفنت.
صحيح البخاري
5766 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும் படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 5766
3175ـ حدذثني محمدُ بن المُثنّى حدَّثنا يحيى حدَّثنا هشامٌ قال: حدَّثني أبي عن عائشة أنَّ النبيَّ صلى الله عليه وسلّم سُحرَ حتّى كان يُخيَّلُ إليه أنهُ صَنعَ شيئاً ولم يَصنعْه.
صحيح البخاري
3175 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
நூல் : புகாரி 3175
3268ـ حدّثنا إبراهيمُ بن موسى أخبرَنا عيسى عن هشامٍ عن أبيهِ عن عائشةَ رضيَ اللهُ عنها قالت: سُحِرَ النبيُّ صلى الله عليه وسلّم. وقال اللّيثُ: كتبَ إليَّ هشام أنهُ سمِعَهُ ووعاهُ عن عائشةَ قالت: سُحِرَ النبيُّ صلى الله عليه وسلّم حتّى كان يُخيَّلُ إليهِ أنهُ يَفعَلُ الشيءَ وما يَفعلهُ، حتّى كان ذاتَ يومٍ دَعا ودعا ثم قال: أشَعَرتِ أنَّ اللهَ أفتاني فيما فيه شفائي ؟ أتاني رجُلانِ فقَعدَ أحدُهما عندَ رأسي والآخرُ عندَ رجليَّ، فقال أحدهما للآخر: ما وَجَعُ الرجُلِ ؟ فقال: مَطبوب. قال: ومَن طَبَّهُ ؟ قال: لَبيدُ بنُ الأعصَمِ. قال: فيما ذا ؟ قال: في مُشطٍ ومُشاقةٍ وجُفِّ طَلْعةٍ ذَكَر. قال: فأينَ هوَ ؟ قال: في بئرِ ذَرْوانَ. فخرجَ إليها النبيُّ صلى الله عليه وسلّم، ثم رجعَ فقال لعائشةَ حينَ رجَعَ: نخلُها كأنهُ رؤوسُ الشياطين. فقلتُ: استخرجتَهُ ؟ فقال: لا. أمّا أنا فقد شفاني الله، وخَشَيتُ أن يُثِيرَ ذلكَ على الناسِ شَرّاً. ثم دُفِنَتِ البئر
صحيح البخاري
3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்:
நூல் : புகாரி 3268
இவை அனைத்தும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள்.
மனைவிமாருடன் உடலுறவு கொள்வது போல் பிரமை ஏற்பட்டது போல் பொதுவாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக பிரமைக்கு உள்ளானார்கள் என்று மேற்கண்ட ஹதீஸ்களில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்புகள் எதையும் பார்க்காமல் நாம் இட்டுக்கட்டி மிகைப்படுத்தி கூறுவதாக இஸ்மாயீல் சலஃபி கூறி இருப்பதைக் கவனியுங்கள்!
இப்போது அவர் மேலே பயன்படுத்தியுள்ள கடும் சொற்களைத் திரும்பிப் பாருங்கள்!
ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும்-செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி(ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?
நாம் சித்தரிக்க முனைகிறோமா ஹதீஸ்களில் உள்ளதன் அடிப்படையில் விமர்சனம் செய்திருக்கிறோமா? இதைக் கூட இவர் விளங்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பேசும்போது அச்சமோ கண்ணிய உணர்வோ இல்லாமல் பேசுகிறோம் என்று கூறுகிறாரே இது யாருக்குப் பொருந்தும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் அல்லது கருதினார்கள் என்ற செய்தியை உண்மை என்று வாதிடும் இஸ்மாயீல் சலஃபிக்கு இது பொருந்துமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாக வரும் செய்தி பொய்யானது என்று நிராகரிக்கும் நமக்குப் பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்மாயீல் சலஃபிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்துப் பேசுகிறோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ இல்லாததால் தானே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தரம் தாழ்த்தும் கட்டுக்கதைக்கு வக்காலத்து வாங்குகிறார்.
நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மட்டும் தான் இது தெரியும்; மக்களுக்குத் தெரியாது என்று இஸ்மாயீல் சலஃபி வாதிடுவது தவறு என்பதற்கு மற்றொரு ஆதாரமும் உள்ளது.
மனிதர்களால் சூனியம் செய்யப்படாமல் இது போன்ற பாதிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் யாருக்கும் தெரியாது என்று கூறுவதை ஏற்கலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் லபீத் என்ற யூதன் சூனியம் செய்ததாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக அவன் சூனியம் செய்து அது பாதிப்பயும் ஏற்படுத்தி இருக்கும் போது அதைப் பற்றி எதிரிகளிடம் அவன் சொல்லாமல் இருப்பானா?
இவ்வாறு சூனியம் செய்வதற்கு அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லாமல் இருக்க முடியாது. நபிகள் நாயகத்தையே வீழ்த்தி வெற்றி கண்டு விட்டேன் என்று காட்டுவது போன்ற நோக்கத்துக்காகத் தான் இதை அவன் செய்திருக்க முடியும். வேறு எந்த நோக்கத்துக்காக அவன் செய்திருந்தாலும் அவன் மூலம் எதிரிகளுக்குப் பரவாமல் இருக்க முடியாது.
மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்பதற்கு இது மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது.
புஹாரி 5763 வது ஹதீஸில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் சொல்வது என்ன?
சூனியம் எங்கே வைக்கப்பட்டது என்பது தெரிந்தவுடன் தம் தோழர்கள் சிலருடன் நபிகள் நாயகம் அவர்கள் புறப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்துள்ளது என்பதை இதில் இருந்தும் அறியலாம்
மக்களுக்கு இது தெரியாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சனை என்பதால் தான் எதிரிகள் விமர்சனம் செய்யவில்லை என்று இஸ்மாயீல் சலஃபி கூறுகிறார். மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்று தான் ஹதீஸ்களில் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சனை மட்டுமின்றி பொதுவாகவும் இந்த நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது என்றும் ஹதீஸிலேயே கூறப்படுகிறது.
அப்படியானால் எதிரிகள் இதை விமர்சனம் செய்யாமல் இருந்திருப்பார்களா? என்ற நம்முடைய் கேள்வி அதே ஜீவனுடன் நிற்கிறது. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டு செய்யாததைச் செய்ததாக அடிக்கடி மனக்குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் இதை எவ்வளவு அருமையாகப் பயன்படுத்தி இருப்பார்கள். ஒருவர் கூட இது பற்றி விமர்சிக்கவில்லை என்றால் சூனியம் வைக்கப்படவில்லை என்பது தான் காரணம். சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்பது தான் காரணம்.
அடுத்து இன்னொரு ஆதாரத்தையும் இஸ்மாயீல் சலஃபி மேலே எடுத்து வைக்கிறார்.
6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில் தான் இந்த வாதத்தையே பீஜே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதம் பாதிப்பு ஏற்பட்டது என்பது ஆதாரபூர்வமானது அல்ல என்பதால் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் பாதிப்பு நீங்கி இருக்கலாம் என்கிறார். ஒருவரது வாதத்தை மறுத்து ஆய்வு செய்யும் இலட்சணத்தைப் பாருங்கள்.
விவாதத்தின் முக்கியமான அம்சத்தை உள்ளடக்கிய ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று போகிற போக்கில் ஒரு காரணத்தையும் கூறாமல் எழுதி விட்டுச் செல்கிறார். ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் உள்ள ஒரு ஹதீஸை மறுக்கக் கூடாது என்ற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதும் போது அறிவிப்பாளர்கள் பற்றி விரிவாக விளக்கி இந்தக் காரணத்தால் இது பலவீனமானது என்று நிரூபிக்க வேண்டுமல்லவா?
அவர் இதைத் தக்க காரணத்துடன் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவர் காரணத்துடன் நிரூபித்த பின்பு தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு ஐந்து
இதைத் தொடர்ந்து இஸ்மாயீல் சலஃபி பின் வருமாறு கேள்விகளை எழுப்புகிறார்.
இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர் - பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.
நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா?
அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.
சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.
இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன் - ஸுன்னாவைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்து கொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா?
அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா?
எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
பீஜேயின் பதில்
ஆய்வு செய்யும் எந்தத் தெளிவும் இவரிடம் இல்லை என்பதற்கு இவரது இந்த வாதம் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் இவர் குர்ஆன் ஸுன்னாவை விட்டு வெகு தொலைவு சென்று விட்டார் என்பதையும் இந்த வாதம் தெளிவுபடுத்துகிறது.
இந்த இடத்தில் இவர் குறிப்பிட்டுள்ள பின்வரும் வாதத்தை முதலில் கவனிப்போம்.
காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா? அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்?
என்று கேள்வி எழுப்புகிறார்.
அதாவது முஸ்லிம் அறிஞர்களை நம்பாமல் காஃபிர்களை நாம் ஆதாரமாகக் கொள்வது போன்ற தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார். காஃபிர்கள் வாதத்தை ஏற்பதா முஸ்லிம்களின் வாதத்தை ஏற்பதா என்பது இங்கு பிரச்சனையே இல்லை. காஃபிர்கள் எடுத்து வைத்த வாதத்தை ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு இங்கே இடம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக அது குறித்து காஃபிர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது காஃபிர்களின் வாதம் அல்ல. மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளவர்களின் வாதம் தான்.
ஒரு காரியம் நடந்ததா? இல்லையா என்பதை அறிவதற்கான வழிமுறைகளில் விளைவுகளை வைத்துச் சிந்திப்பதும் ஒன்றாகும்.
ஒரு ஊரில் அணு குண்டு போடப்பட்டதாக ஒரு செய்தி கிடைக்கிறது. ஆனால் அந்த ஊரில் எந்த மனிதனுக்கோ அல்லது வேறு உயிரனங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கே அணுகுண்டு போடப்படவில்லை. அது பொய்யான செய்தி என்று நாம் முடிவு செய்வோம். அந்தச் செய்தியைச் சொல்பவர் எத்தகைய நம்பகமானவர் என்றாலும் அவ்வூரில் அணுகுண்டு போடப்பட்டது என்பதை நாம் நம்ப மாட்டோம்.
ஏனெனில் அணுகுண்டு போடப்பட்டால் அதனால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதே இதற்குக் காரணம். நல்ல அறிஞர்கள் ஒன்று கூடி அங்கே அணுகுண்டு போடப்பட்டது என்று கூறினாலும் நாம் ஏற்க முடியாது.
அந்த அடிப்படையில் தான் நாம் நமது பல கேள்விகளில் இக்கேள்வியையும் எடுத்து வைத்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் ஒழித்திட இணை வைப்பவர்களும், யூதர்களும் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். எப்படியாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தனர். சின்னச் சின்ன தோல்விகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதெல்லாம் இவரால் தான் இது ஏற்பட்டது என்று கூறி வந்தனர். ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தப்பட்ட போது அதை எப்படியெல்லாம் முனாஃபிக் கூட்டம் பரப்பியது என்பதை நாம் அறிவோம்.
இப்படியெல்லாம் தக்க சந்தர்ப்பத்துக்காக எதிரிகள் காத்துக் கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான வாய்ப்பு? ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறை விட இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இது குறித்து யூதர்களோ, முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்த நயவஞ்சகர்களோ எவ்வித விமர்சனமும் செய்யவில்லை. அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்றால் அப்படி ஒரு மந்திர வேலை நடக்கவில்லை என்பது உறுதி என்பதையும் ஒரு வாதமாக முன் வைத்தோம்.
இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பட்ட செய்தியையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.
ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இறைத் தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.
எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.
திருக்குர்ஆன் 17:94
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர்.
திருக்குர்ஆன் 36:15
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
திருக்குர்ஆன் 26:186
நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக! (என்றும் கூறினர்.)
திருக்குர்ஆன் 26:154
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:7
இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 23:33
இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர்.
திருக்குர்ஆன் 23:47
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
திருக்குர்ஆன் 21:3
மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.
மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.
மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடையவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.
இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறது.
உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
திருக்குர்ஆன் 3:184
இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
திருக்குர்ஆன் 7:101
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
திருக்குர்ஆன் 35:25
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம்.
திருக்குர்ஆன் 10:74
உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.
திருக்குர்ஆன் 10:13
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 40:22
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
திருக்குர்ஆன் 9:70
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 64:6
உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர் கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
திருக்குர்ஆன் 40:50
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம்.
திருக்குர்ஆன் 57:25
இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.
தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
(இதற்கும் இஸ்மாயீல் சலஃபி பதில் கூறியுள்ளார். அது இதே தொடரின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்ற தலைப்பில் கூறிய செய்தியுடன் மேற்கண்ட காரணங்களையும் கூறி விட்டுத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்று நாம் வாதிட்டோம்.
முஸ்லிம் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், அவர்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரிந்து விட்டதா என்பதும் இவ்வாதங்களுக்கு உரிய பதிலாகுமா? அதிகமான அறிஞர்கள் (அனைவரும் அல்லர்) இந்த ஹதீஸை அங்கீகரித்துள்ளார்கள் என்றால் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறும் ஹதீஸ்கள் சரியானவை என்று கூறும் அவர்கள் அந்த ஹதீஸ்களில் இல்லாத விளக்கத்தைக் கொடுத்தனர்.
அதாவது சூனியம் வைக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுக்கு மனைவிமார்களுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை. அல்லது உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்களுக்கு உணர்வு ஏற்பட்டது என்று விளக்கம் கூறிக் கொண்டதால் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்று அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இஸ்மாயில் சலஃபி இது குறித்து எழுதிய அனைத்தும் அவர்கள் அரபு மொழியில் அவர்கள் எழுதியதன் தமிழாக்கம் தான்.
அந்த அறிஞர்கள் கூறும் இந்த விளக்கத்தை நாமும் பார்க்கத் தான் செய்தோம். அதைக் கண்னை மூடிக் கொண்டு இஸ்மாயீல் சலஃபி எடுத்து எழுதியது போல் நாமும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இவர்கள் விளங்கியது போல் விளங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என்று சிந்தித்தோம். ஹதீஸ்களின் வாசகத்தில் இருந்து பெற முடியாத தங்களின் விருப்பத்தைத் தான் அந்த அறிஞர்கள் விளக்கமாகக் கொடுத்துள்ளனர் என்று நாங்கள் அறிந்தோம்.
எந்த விளக்கத்தை யார் கொடுத்தாலும் அந்த விளக்கம் அந்த ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் தான் நாம் ஏற்க முடியும். இது தான் தவ்ஹீதின் அடிப்படை.
மத்ஹபுவாதிகள் மத்ஹபுக்கு ஆதாரமாகச் சில வசனங்களையும், சில ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுவார்கள். ஆனால் அந்த வசனங்களில் இல்லாத கருத்தை அதில் தினித்திருப்பார்கள் என்பதை நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். அது போல் தர்காவாதிகளும் கூட குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் கூறும் கருத்து அந்த வசனங்களில் இல்லை என்று அப்போது நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
அதே போல் தான் இந்த விஷயத்தில் அறிஞர்கள் கூறிய கருத்தையும் அணுக வேண்டும். அதிகமான அறிஞர்களின் கருத்து என்று அணுகக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக சில அறிவிப்புக்கள் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்தார்கள் என்று பல அறிவிப்புக்கள் கூறுகின்றன. இதை அரபு மூலத்துடன் முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். இன்னும் சில அறிவிப்புக்களில் சூனியத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் வேதனை ஏற்பட்டதாகவும் கூறுகின்றன.
(صحيح البخاري) فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ
எந்த ஹதீஸை இவர்கள் சரி என்று கூறுகிறார்களோ அந்த ஹதீஸ் இவர்கள் கூறும் கருத்தில் இருக்கவில்லை எனும் போது எப்படி இவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்க முடியும் என்பது தான் இங்குள்ள கேள்வி.
அதிகமான அறிஞர்கள் ஆதரித்துள்ளார்களா என்பது இங்கே கேள்வி அல்ல. அதிகமான அறிஞர்கள் ஆதரிக்கும் இந்த ஹதீஸ்கள் நபிகள் நாயகம் சூனியம் மூலம் மனநோய்க்கு ஆளானார்கள் என்று தெளிவாகக் கூறும் போது அதில் இல்லாத கருத்தை அறிஞர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்க முடியுமா?
அன்னியப் பெண்ணிடம் இளைஞர் ஒருவருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸையும் பொய் என்று நாம் கூறினோம். அந்த ஹதீஸையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை இஸ்மாயீல் சலஃபியால் பதில் சொல்ல முடியவில்லை.
எல்லா அறிஞர்களும் இதைச் சரி கண்டு விட்டதால் அனைவருக்கும் மாற்றமாக பீஜே கூறுவதை ஏற்க முடியுமா என்று இவரால் கேட்க முடியவில்லை. அந்த அறிஞர்கள் எல்லாம் பால்குடி விஷயத்தில் எங்கே போனார்கள்?
இன்னும் நாம் பட்டியல் போட்ட பல ஹதீஸ்களையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறியுள்ளனர். ஆனால் நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. அது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸிலும் அவர்கள் தவறாகக் கூறி விட்டார்கள் என்று கூறுகிறோம்.
ஒருவரும் சொல்லாவிட்டாலும் அந்தக் கருத்து சரியாக இருக்கிறதா என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். ஆனால் ஒருவருமே சொல்லாத கருத்தை நாம் கூறுவதாக இவர் சொல்வது கூட உண்மை இல்லை.
ஏனெனில் காரிஜிய்யாக்களாகவும், முஃதஸிலாக்களாகவும் இல்லாத பல அறிஞர்கள் நாம் கூறிய கருத்தை முன்னரே கூறியும் இருக்கிறார்கள்
فتح الباري - ابن حجر - (10 / 222)
واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى
சூனியம் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. இது வெறும் கற்பனை மட்டுமே. இதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ ஜஃபர் அல் இஸ்திராபாதீ, ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூபக்ர் ராஸீ, இப்னு ஹஸ்ம் அள்ளாஹிரி, மற்றும் சிலர் இவ்வாறு கூறுகின்றனர். ஸிஹ்ருக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதே சரியான கருத்து என்று நவவீ கூறுகிறார். பெரும்பாலோர் இதை உறுதிப்படுத்துகின்றனர். அதிக உலமாக்களும் இக்கருத்திலேயே உள்ளனர். குர்ஆனும் சரியான ஹதீஸ்களும் இதையே அறிவிக்கின்றன.
இவ்வாறு ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். பெரும்பாலானவர்களின் கருத்துக்கு மாற்றமான கருத்துடையவர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.
الإعلام بتوضيح نواقض الإسلام - (1 / 39)
(أجمعوا على أن السحر له حقيقة إلا أبا حنيفة فانه قال: لاحقيقة له عنده) انتهى.
சூனியம் என்பதற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அபூஹனீபா அவர்களைத் தவிர அனைவரும் கூறுகின்றனர் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எடுத்துக் காட்டுகிறார்.
الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان - (1 / 15)
9 - اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي أَنَّ السِّحْرَ هَل لَهُ حَقِيقَةٌ وَوُجُودٌ وَتَأْثِيرٌ حَقِيقِيٌّ فِي قَلْبِ الأَْعْيَانِ ، أَمْ هُوَ مُجَرَّدُ تَخْيِيلٍ ؟.فَذَهَبَ الْمُعْتَزِلَةُ وَأَبُو بَكْرٍ الرَّازِيُّ الْحَنَفِيُّ الْمَعْرُوفُ بِالْجَصَّاصِ ، وَأَبُو جَعْفَرٍ الإِْسْتِرَابَاذِيُّ وَالْبَغَوِيُّ مِنَ الشَّافِعِيَّةِ ، إِلَى إِنْكَارِ جَمِيعِ أَنْوَاعِ السِّحْرِ وَأَنَّهُ فِي الْحَقِيقَةِ تَخْيِيلٌ مِنَ السَّاحِرِ عَلَى مَنْ يَرَاهُ ، وَإِيهَامٌ لَهُ بِمَا هُوَ خِلاَفُ الْوَاقِعِ ، وَأَنَّ السِّحْرَ لاَ يَضُرُّ إِلاَّ أَنْ يَسْتَعْمِل السَّاحِرُ سُمًّا أَوْ دُخَانًا يَصِل إِلَى بَدَنِ الْمَسْحُورِ فَيُؤْذِيهِ ، وَنُقِل مِثْل هَذَا عَنِ الْحَنَفِيَّةِ ، وَأَنَّ السَّاحِرَ لاَ يَسْتَطِيعُ بِسِحْرِهِ قَلْبَ حَقَائِقِ الأَْشْيَاءِ ، فَلاَ يُمْكِنُهُ قَلْبُ الْعَصَا حَيَّةً ، وَلاَ قَلْبُ الإِْنْسَانِ حِمَارًا .
சூனியம் என்பதற்கு உண்மைத் தன்மை உள்ளதா? ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது வெறும் மாயையா என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. முஃதஸிலாக்களும், அபூ பக்ர் அல்ஜஸ்ஸாஸ்,. அபூஜஃபர், பகவீ ஆகியோர் பொய்த் தோற்றம் ஏற்படுத்துவதே சூனியம் என்கின்றனர். சூனியம் செய்பவன் விஷத்தையோ, புகையையோ ஒருவன் மீது பயன்படுத்தினால் அன்றி எந்தக் கேடும் ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனஃபி மத்ஹபினரின் கூற்றும் இது தான் என்று அறிவிக்கப்படுகிறது என்று இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்து எழுதுகிறார்கள்.
சூனியம் தொடர்பாக முன்னுள்ள அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை இஸ்மாயீல் ஸலபீ கூறுகிறார்.
சில விஷயங்களில் அதிகமான அறிஞர்களை விட குறைவான அறிஞர்களின் முடிவு சரியாக அமைந்திருப்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனவே அதிகமான அறிஞர்கள் மடையர்களா என்று கேள்வி எழுப்பி வந்த வழியே இஸ்மாயீல் சலஃபி செல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்ட சில விஷயங்களையும் இஸ்மாயீல் சலஃபி மறுக்கிறார்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு ஆறு
17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் பீஜே வைக்கும் வாதம் என்னவென்றால்,
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.
இப்படி இருக்க, நபி(ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர்; எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?
பீஜேயின் பதில்
சூனியம் செய்யப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடக்கப்படவே இல்லை என்று இஸ்மாயீல் சலஃபி கூறுகிறார். இது மக்களுக்குத் தெரியாது; நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும் என்ற இவரது பதில் சரியில்லை என்பதை முன்னர் நிரூபித்து இருக்கிறோம்.
மனைவி சம்மந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இன்றி பொதுவாகவும் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அந்த ஹதீஸ்கள் கூறுவதையும் நிரூபித்து இருக்கிறோம். சூனியம் வைத்த யூதனுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவன் மூலம் முழு யூதர்களுக்கும் தெரிந்திருக்காமல் இருக்காது என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். கிணற்றில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று வானவர்கள் சொன்னவுடன் மக்களை அழைத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள் என்றால் இது அனைவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்க முடியாது. பல நாட்கள் சூனியத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டார்கள் என்று நஸாயியில் ஹதீஸ் உள்ளது
(: سحر النبي صلى الله عليه و سلم رجل من اليهود فاشتكى لذلك أيام)
சிந்தித்து விளங்கக் கூடிய எந்த ஒரு விஷயம் பற்றியும் யூகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை கட்டுரை முழுவதும் இவர் கையாள்கிறார்.
ஒரு வாசகத்துக்குள் அடங்கியுள்ள கருத்துக்களை நாம் வெளிப்படுத்திக் காட்டும் போதெல்லாம் இவர் சொல்லும் ஒரே பதில் யூகம் என்பது தான்.
சீ என்று பெற்றோரைக் கூறக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. பெற்றோரை அடிக்கலாமா என்று ஒருவர் கேட்டால் நாம் கூடாது என்று இந்த வசனத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கலாம். சீ என்று கூறக் கூடாது என்றால் அடிக்கக் கூடாது என்பது அதற்குள் அடக்கம் என்று கூறினால் இது யூகமா? சிந்தனையின் தெளிவா?
இஸ்மாயீல் சலஃபி அவர்கள் எதையும் சரியாகச் சிந்திக்காமல் எழுதுவதற்குக் காரணமே அவருக்கு சிந்திப்பது என்றாலே என்ன வென்று தெரியாதது தான்.
ஒருவன் செத்து விட்டான் என்று கூறப்படுகிறது. அவனுக்குக் காது கேட்காது; கண் தெரியாது என்று நாம் கூறினால் இல்லாததை ஊகமாகக் கூறுகிறார் என்று இஸ்மாயீல் சலஃபி கூறுவார் என்று தெரிகிறது.
ஒரு மாபெரும் தலைவருக்கு மனநிலையும், உடல் நிலையும் சேர்ந்து ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அது நாட்டு மக்களில் ஒருவருக்கும் தெரியாது என்பது வெற்று யூகமா? இது அனைவருக்கும் தெரியாமல் இருக்க முடியாது என்பது வெற்று யூகமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்பது ஹதீஸில் உள்ளது தான். மனைவியுடன் சேர்ந்ததைக் கூட அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது ஆறு மாதம் நீடித்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இவ்வளவு பெரிய பாதிப்பை உதிர்ந்த முடிக்குள் மந்திரத்தின் மூலம் ஒரு யூதன் செய்திருக்கிறான் என்பதும் ஹதீஸில் உள்ளது தான்.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நபிகள் நாயகத்தின் மனநிலையைப் பாதிக்கச் செய்து விட்டார்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? வெற்று யூகமா? செய்ததைச் செய்யவில்லை என்று ஆறு மாத காலம் ஒருவர் கூறிக் கொண்டிருந்தால் அவர் முடக்கப்பட்டு விட்டார் என்று கருத்து அதில் இருக்கிறதா? அல்லது வெற்று யூகமா?
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு ஏழு
அடுத்ததாக அவர் எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்!
அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித் தான் ஹதீஸ் கூறுகின்றது.
பீஜேயின் பதில்
அவருக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்பது இந்த வாதத்தின் மூலமும் உறுதியாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் ஆரம்பம் முதலே அறிந்திருந்தார்கள். தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் கூறுவதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை இஸ்மாயீல் சலஃபி ஒப்புக் கொண்டுள்ளதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தான் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அது தான் கடைசியில் தெரிந்தது. காரணம் தெரியவில்லை என்பதால் மனநிலை பாதிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு எட்டு
அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.
சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.
பீஜே குறிப்பிட்டுள்ள வசனங்களில்,
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)
என்பதும் ஒன்றாகும்.
சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம் - ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர பீஜே முயற்சிக்கின்றார்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.
அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில் தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!
முதலில் சூனியத்தை ஆன்மீகம் - அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள் - வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
பீஜேயின் பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறுகின்றன. இதை முன் தொடர்களில் நிரூபித்து விட்டோம். மேலும் எதற்கெடுத்தாலும் ஊகம், யூகம் என்று அவர் தடுமாறுவதையும் சென்ற தொடரில் தெளிவுபடுத்தி விட்டோம். எனவே இந்த வாதங்கள் அனைத்துக்குமான பதிலை இதற்கு முந்தைய பதிலில் விளக்கி விட்டோம்.
சிந்திக்கும் வழிவகை இவருக்கு அறவே தெரியாததால் ஏறுக்கு மாறாகப் புரிந்து கொள்கிறார். பதில் சொல்ல முடியாத கேள்வியைச் சந்தித்தால் இது யூகம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார். மக்களும் அவரைப் போலவே சிந்தனையற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.
(தனது கட்டுரையில் 22 இடங்களில் யூகம் யூகம் என்று குறிப்பிட்டு அறிவுப்பூர்வமான வாதங்களை அலட்சியம் செய்கிறார்.)
சூனியத்தை ஆன்மீகம் என்றோ அற்புதம் என்றோ நாம் வாதிடவில்லை. அந்தக் கருத்துக்கு மக்களையும் கொண்டு வரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்பதை நம்பினால் இந்த நிலை ஏற்படும் என்று தான் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
ஒரு காரியத்தினால் ஒரு விளைவு கட்டாயம் ஏற்படும் என்றால் அந்த விளைவு ஏற்படாவிட்டால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்று புரிந்து கொள்வது தான் அறிவு. இதுவும் அல்லாஹ் நமக்குக் கற்றுத்தரும் லாஜிக் ஆகும். எதற்கெடுத்தாலும் யூகம் யூகம் என்று கூறி சிந்தனையை அவர் மழுங்கச் செய்திருப்பதால் இதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:159
நபிகள் நாயகத்தை விட்டு மக்கள் வெருண்டு ஓடவில்லை என்பதை வைத்து அவர்கள் நளினமாக நடந்தார்கள் என்று கூறினால் அதை ஊகம் என்று கூறுவாரா?
நபிகள் நாயகம் கடின சித்தம் உடையவராக நடந்து கொண்டார்கள் என்று இவர் புரிந்து கொள்வாரா?
நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும்.
திருக்குர்ஆன் 6:58
மக்கள் உடனடியாக அழிக்கப்படாததால் அந்த அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு இல்லை என்று புரிந்து கொள்வது யூகமா? அறிவின் தெளிவா?
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது.
திருக்குர்ஆன்7:188
இதில் இருந்து நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்று விளங்குவதா? நபிகள் நாய்கத்துக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளங்குவதா? இல்லை என்று விளங்கினால் அது யூகமா?
அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன்17:42
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
திருக்குர்ஆன் 37:143,144
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.
திருக்குர்ஆன் 21:22
அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 43:81
இந்த வசனங்கள் அனைத்தும் இது நடந்திருந்தால் அது ஏற்பட்டிருக்கும். அது ஏற்படாததால் இது நடக்கவில்லை என்ற லாஜிக்கின் படி அமைந்துள்ளன.
அது போல் தான் நபிகள் நாயகத்துக்கு சூனியத்தின் மூலம் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் யூதர்கள் தங்கள் ஆன்மிகத்தை உயர்ந்தது என்று சொல்லி இருப்பார்கள் என்று நாம் கூறினால் சூனியத்தை ஆன்மிகம் என்று நாம் கூறியதாக விளங்குகிறார்.
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பல மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இஸ்லாத்தை விட யூத மதம் ஆற்றல் மிக்கது என்று தான் யூதர்கள் நம்பியிருப்பார்கள். அவ்வாறு பிரச்சாரமும் செய்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு பிரச்சரம் செய்திருந்தால் அதற்கு குர்ஆனும் மறுமொழி கொடுத்திருக்கும்.
இப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்பதால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செட்ய்யப்படவில்லை என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
அல்லாஹ் கற்றுத் தரும் லாஜிக் அடிப்படையில் நாம் வாதிட்டால் வழக்கம் போல் யூகம் என்று கூறி நழுவப் பார்க்கிறார்.
அடுத்ததாக அவர் எழுப்பும் வாதம் அவருக்கே எதிரானது என்பதைக் கூட அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு ஒன்பது
சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.
பீஜே குறிப்பிட்டுள்ள வசனங்களில்,
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)
என்பதும் ஒன்றாகும்.
சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர பிஜே முயற்சிக்கின்றார்.
பீஜேயின் பதில்
சூனியத்தை ஏமாற்றும் தந்திர வித்தை என்று தான் யூதர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது உண்மை. சூனியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்களே இப்படி புரிந்து வைத்திருந்தால் சூனியம் ஏமாற்றும் தந்திர வித்தை என்பது முற்றிலும் உண்மையே. சூனியம் என்பது மாபெரும் அற்புதம் என்றோ, ஆன்மிகத்தின் உயர் நிலை என்றோ அவர்கள் கருதவில்லை என்பதும் உண்மை தான்.
இந்த நிலையில் யூதர்கள் செய்த சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநோயாளியாகி விட்டார்கள் என்பது உண்மை என்றால் யூதர்களின் அபிப்பிராயம் நிச்சயம் மாறி இருக்கும்.
சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அதன் மூலம் மாபெரும் மதத் தலைவரையே மனநோயாளியாக்க முடிவதால் சூனியம் செய்யும் நம்முடைய மத குருமார்களின் ஆன்மிக நிலை மிக உயர்ந்தது என்று கருதி சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இதையே ஒரு பிரச்சார ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்திருப்பார்கள் என்பது தான் நமது வாதம்
சூனியக் கலையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களைப் போல் நடந்து கொண்ட யூதர்கள் சூனியத்தால் ஒன்றும் பண்ண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் சூனியம் பற்றி எதுவும் அறியாத இஸ்மாயீல் சலஃபி கூட்டம் சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத கலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று கூறுகிறார்.
எனவே நமது வாதம் இன்னும் உறுதியாகிறது. மேற்கண்ட வசனத்துக்கு எதிராக சூனியம் பற்றிய ஹதீஸ் அமைந்திருப்பது நிரூபணமாகிறது.
கட்டுக் கதையை ஆதரிக்கத் தயாராகி விட்டதால் குர்ஆன் கூட இவருக்கு அலட்சியமாகப் போய் விட்டதைப் பின்வரும் இவரது வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பீஜே பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் பீஜே வைக்கும் வாதம் என்னவென்றால்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)
சூனியத்தின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸை நம்பினால் அது இத்தனை வசனங்களின் கருத்துக்கும் எதிராக ஆகிவிடும் என்று விரிவாக நாம் விளக்கி இருக்கும் போது அதற்கு இவர் அளிக்கும் பதில் நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார் என்பது தான்.
இந்த வசனங்கள் கூறுவதும், அதன் அடிப்படையில் நாம் எழுப்பிய வாதமும் தவறு என்றால் அதை விரிவாக எடுத்துக் காட்டி மறுக்க வேண்டும். நம்பர்களை மட்டும் சுட்டிக் காட்டி மேற்கண்ட பதிலைக் கூறுவது தான் ஆய்வா?
இதன் மூலம் குர்ஆனை வெறும் நம்பராகத் தான் பார்க்கிறார். அல்லாஹ்வின் வசனங்களுக்கு இவரிடம் மரியாதை இல்லாத காரணத்தால் தான் குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களையும் தூக்கிப் பிடிக்கிறார்
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பத்து
அடுத்ததாகப் பின் வரும் ஆதாரத்தை முன்வைத்து பயங்கரமான வாதத்தை எடுத்து வைக்கிறார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரா, மிஹ்ராஜ் என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?
பீஜேயின் பதில்
நாம் என்ன கூறுகிறோம் என்பதை விளங்கித் தான் இந்த வாதத்தை இஸ்மாயீல் சலஃபி எடுத்து வைக்கிறாரா? அல்லது விளங்காதது போல் நடிக்கிறரா என்று தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிக்க சில அற்புதங்களைச் செய்து காட்டினர்கள். அவரையே தூக்கி அடிக்கும் வகையில் அவரை மனநோயாளியாக யூதர்கள் ஆக்கி விட்டார்கள் என்றால் சில மக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற நமது வாதத்துக்குத் தான் மேற்கண்ட பதிலைக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை விட பெரிய அற்புதத்தை மற்றவர்கள் செய்ய முடியாது என்று நாம் கூறினால் அல்லாஹ் செய்த இன்னொரு அற்புதத்தை இவர் உதாரணம் காட்டுகிறார்.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் தான் மிஃராஜுக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிறாரா?
மக்களை நல்வழிப்படுத்தவோ, வழிகேட்டில் தள்ளவோ அல்லாஹ் எதையும் செய்வான். சில அற்புதங்கள் நேர்வழியில் செலுத்தும். இன்னும் சில அற்புதங்கள் வழிகேட்டில் தள்ளும். ஆனால் நபிமார்களின் எதிரிகள் கையில் நபிமார்களை மிஞ்சும் வகையிலான அற்புத ஆற்றலை அல்லாஹ் வழங்க மாட்டான் என்பது தான் நமது வாதம். இந்த வாதத்துக்கு இது பதிலாகுமா?
மேற்கண்ட வாதத்துக்கு அவர் அளிக்கும் இன்னொரு பதிலும் இதே வகையில் தான் அமைந்துள்ளது.
தஜ்ஜால் எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, மழை பொழி என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை(?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூற முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே!
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களைத் தூக்கி அடிக்கும் வகையில் அற்புதம் செய்தது போன்றும் கருதிக் கொண்டால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். இதற்கும் நமது வாதத்துக்கும் என்ன சம்மந்தம்?
அவர் உளறுகிறார் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால் தான் இவ்விரண்டையும் கூறி விட்டு பின்வருமாறு தெரிவிக்கிறார்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினொன்று
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது பீஜேவுக்குச் சாத்தியமானதே! எனினும், மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.
மூஸா (அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.
அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார் என அவர்கள் கூறினர். (20:88)
(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால - அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)
அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, இதை வணங்காதீர்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து - கராமத் முஃஜிஸா பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.
இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?
இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
அதாவது முதலிரண்டு வாதங்களும் சரியில்லை என்றாலும் இது மறுக்க முடியாத ஆதாரம் என்று மார் தட்டுகிறார்.
பீஜேயின் பதில்
இவருக்குச் சிந்திக்கும் திறன் இல்லை என்பது இங்கேயும் தெளிவாகிறது. இவர் எடுத்துக் காட்டும் ஆதாரம் சரியானது தான். ஆனால் அவரது வாதம் தவறானது.
நபிக்கு சூனியம் செய்து சூனியக்காரன் எப்படி வெல்ல முடியும் என்று வாதிடுகிறீர்களே? அப்படியானால் சாமிரி என்பவன் எப்படி நபிக்கு எதிராக அற்புதம் செய்தான்? என்பது தான் இவரது வாதம்.
நபிமார்கள் காலத்தில் எதிரிகள் சில வித்தைகளைச் செய்து காட்டுவார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த வித்தை பொய்யானது என்று அதே நபிமார்களால் நிரூபிக்கப்பட்டு விடும்.
மூஸா நபியின் முன்னே சூனியக்காரர்கள் வித்தைகளைச் செய்து காட்டிய போது மூஸா நபி கூட பயப்படும் அளவுக்கு அவர்களின் வித்தை அமைந்திருந்தது. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது.
இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
திருக்குர்ஆன் 20:65,66
ஆனால் முடிவில் மூஸா நபி வெற்றி பெற்றார்கள். சூனியக்காரர்களின் செயல் வெறும் தந்திர வித்தை என்பது நிரூபிக்கப்பட்டது.
அது போல் தான் ஸாமுரி ஒரு வித்தையைச் செய்து காட்டிய போது ஹாரூன் நபி எவ்வளவு தான் விளக்கினாலும் அதை சில மக்கள் ஏற்கவில்லை.
ஆனால் முடிவு என்னவானது?
இதோ திருக்குர்ஆன் கூறுகிறது:
அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
திருக்குர்ஆன் 20:89
ஸாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார்.
திருக்குர்ஆன் 20:95,96,97
மேற்கண்ட வசனங்கள் மூலம் ஸாமுரி செய்தது வித்தை என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.
மேலும் அவன் செய்து காட்டிய வித்தை மூஸா நபியின் மீதோ, ஹாரூன் நபியின் மீதோ அல்ல. காளைக் கன்றின் சிற்பத்தில் தான் தன் வித்தையைக் காட்டினான். அது வித்தை தான் என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் இந்த வகையில் அமைந்துள்ளதா?
சூனியம் வென்றதாக இந்த ஹதீஸ்கள் கூறுகிறதா? சூனியம் தோற்றதாகக் கூறுகிறதா?
ஆறு மாத காலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியம் மன நோயாளியாக்கியது என்றால் இங்கே சூனியம் வென்றதா? நபிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றார்களா?
அந்த ஹதீஸ் கூறுவது என்ன? ஆறுமாத காலம் மன நோயாளியாக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி சூனியம் ஜெயித்ததாகக் கூறுகிறது.
பிறகு இறைவன் மூலம் இது அறிவித்துக் கொடுக்கப்பட்ட பிறகாவது சூனியம் தோற்றதாகக் கூறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.
சூனியக்காரனை இழுத்து வரச் செய்து இனி மேல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்திருந்தால் கடைசியில் சூனியம் தோற்றது என்றாவது ஆகி இருக்கும். அப்படியும் நடக்கவில்லை.
سنن النسائي
4080 - أخبرنا هناد بن السري عن أبي معاوية عن الأعمش عن بن حيان يعني يزيد عن زيد بن أرقم قال : سحر النبي صلى الله عليه و سلم رجل من اليهود فاشتكى لذلك أياما فأتاه جبريل عليه السلام فقال إن رجلا من اليهود سحرك عقد لك عقدا في بئر كذا وكذا فأرسل رسول الله صلى الله عليه و سلم فاستخرجوها فجيء بها فقام رسول الله صلى الله عليه و سلم كأنما نشط من عقال فما ذكر ذلك لذلك اليهودي ولا رآه في وجهه قط قال الشيخ الألباني : صحيح الإسناد
நபிகள் நாயகத்துக்கு நிவாரணம் கிடைத்தவுடன் அது குறித்து அந்த யூதனிடம் அவர்கள் கூறவும் இல்லை. அவன் முகத்திலும் விழிக்கவில்லை (நஸாயீ) என்று இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.
அப்படியானால் சூனியக்காரன் தான் கடைசி வரை வெற்றி பெற்றுள்ளான். மீண்டும் ஒரு தடவை இன்னும் பல தடவை கூட அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து இன்னும் பல கேடுகளைச் செய்ய முடியும் என்று தான் இது குறித்த ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது.
இஸ்மாயீல் சலஃபி வகையறாக்களின் வாதப்படி கியாம நாள் வரை சூனியத்தின் இந்த வெற்றி தொடர்கிறது. ஏனெனில் இனியும் இது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியும் என்பது இவர்களின் கருத்து.
எனவே இவர்களின் மறுப்பில் உப்பு சப்பு இல்லாததால் நாம் எடுத்து வைத்த வாதம் முன்பை விட இன்னும் வலுவாக நிற்கிறது.
போகிற போக்கில் நமது தமிழாக்கம் பற்றியும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அது போல் மேற்கண்ட வாதத்தின் இடையிலும் பின் வருமாறு கூறுகிறார்.
(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ - அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால - அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)
எனது தமிழாக்கம் குறித்து விவாதிக்க வந்த முஜீப் தேவையான குறிப்புகளைப் பெறுவதற்காக இலங்கை சென்றார். தொண்டி விவாதத்தின் போது மேற்கண்ட கேள்வியையும் முஜீப் கேட்டார். (இப்போது தான் இந்த பாயிண்ட் எங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.)
நாம் செய்த தமிழாக்கம் சரி தான் என்பதைத் தகுந்த காரணத்தோடும் இவர்கள் ஏற்றுக் கொள்ளும் அரபு தஃப்ஸீர்கள் துணையுடனும் அந்த விவாதத்தில் நாம் நிரூபித்தோம்.
(விவாத வீடியோவைப் பார்த்து அதை அறிந்து கொள்க.)
ஆயினும் எட்டாவது பதிப்பில் இது போன்ற விமர்சனம் கூட வரக் கூடாது என்பதற்காக இதை விடச் சிறந்த முறையில் மாற்றியிருக்கிறோம். (தவறு என்பதற்காக மாற்றவில்லை.)
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பன்னிரண்டு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் பின் வருமாறு கூறியிருந்தோம்.
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.
வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மன நிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.
பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 26:153
நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 26:185
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
திருக்குர்ஆன் 17:101
மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
திருக்குர்ஆன் 17:47
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இலிருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:8
நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.
இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.
இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.
ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.
இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.
பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.
மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.
திருக்குர்ஆன் 25:9
உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
திருக்குர்ஆன் 17:48
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத் தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.
நாம் இவ்வாறு கூறியதற்குப் பல விதமான மறுப்புக்களை இஸ்மாயீல் சலஃபி கூறுகிறார். அவை அனைத்துமே தவறாக அமைந்துள்ளன.
இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.
சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர வித்தை, மாயாஜாலம், மெஜிக் என்று விளக்கம் கூறி விட்டு இந்த இடத்தில் மஸ்ஹூர் என்பதற்கு விளக்கமளிக்கும் போது அவருக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் கூறும் விளக்கத்தையே ஏற்றுக்கொண்டு வாதிப்பதன் மூலம் தனக்குத் தானே முரண்படுகின்றார்.
மஸ்ஹூர் - சூனியம் செய்யப்பட்டவர் என்ற மொழிபெயர்ப்புக்கு அவரது விளக்கப்படி சூழ்ச்சிக்குள்ளானவர், மாயாஜால வித்தைக்குள்ளானவர், மெஜிக்குக்குள்ளானவர் என்றல்லவா அர்த்தமும் விளக்கமும் எடுத்திருக்க வேண்டும்? இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் பீஜே சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
எனவே, இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் பீஜே தனக்குத் தானே முரண்படுவதுடன் சூனியத்திற்கு வெறும் தந்திர வித்தை, மெஜிக், மாயாஜாலம் என்று இது வரை அவர் அளித்த அர்த்தமற்ற வாதத்தை அவரே தவறு என ஒப்புக் கொண்டவராகின்றார்.
என்று இஸ்மாயீல் சலஃபி வாதிடுகிறார்.
பீஜேயின் பதில்
சூனியம் என்ற சொல்லை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து அதற்குப் பொருள் உண்டு. இதை அறியாத காரணத்தால் தான் மேற்கண்டவாறு இஸ்மாயீல் சலஃபி வாதிடுகிறார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்று நபிமார்களின் போதனையை நம்பாத மக்கள் சொன்னார்கள்.
இதை திருக்குர்ஆன் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறது.
இறைவனை மறுப்போர் சூனியத்திற்கு சக்தியிருப்பதாக நம்பினார்கள். தமது நினைப்பிற்குத் தகுந்தவாறு அவர்கள் பேசினார்கள் என்றுதான் இது போன்ற எல்லா வசனங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தமது நம்பிக்கைப் பிரகாரம் பேசியதை அல்லாஹ் எடுத்துக் காட்டினால், இது இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நம்பிக்கை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
சூனியத்தால் ஒருவனை மன நோயாளியாக ஆக்க முடியும் என்று அந்த மக்கள் நம்பியதால் நபிமார்கள் சூனியம் வைக்கப்பட்டு மன நோயாளிகளாகி விட்டார்கள் என்று தமது நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் பேசியுள்ளார்கள்.
அல்லாஹ் தனது கூற்றாக சூனியம் என்ற சொல்லை தந்திரம், பொய்த்தோற்றம் என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளான்.
மறுமையில் விசாரணை முடிந்தவுடன் சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்றவுடன் அல்லாஹ் நரகவாசிகளைப் பார்த்து, எதைப் பொய் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்களோ அந்த நரகம் இதுதான்.. இது என்ன சூனியமா என்று கேட்பான் என 52:12,13,14 வசனங்கள் கூறுகின்றன.
எனவே காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று குறிப்பிட்டது சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற அர்த்தத்தில் தான். அப்படிச் சொல்வதைத் தான் அல்லாஹ் அநியாயம் என்கிறான்.
உதாரணமாக கல்லைக் கடவுளாகக் கருதும் மக்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு. முஸ்லிம்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு.
கடவுள் சிலை ஒன்று திருடு போய்விடும் போது உங்கள் கடவுள் என்னவானார்? என்று நாம் கேட்கிறோம். இதைப் பார்க்கும் ஒருவர் கல்லைக் கடவுள் என்று நாம் ஒப்புக் கொண்டதாகக் கூறினால் அதன் நிலை என்னவோ அந்த நிலையில் தான் இஸ்மாயீல் சலஃபியின் இந்த வாதம் அமைந்துள்ளது.
சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை என்பது மார்க்கத்தின் நிலை. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது காஃபிர்களீல் ஒரு சாராரின் நம்பிக்கை.
நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கருதிய காஃபிர்களிடமும், இஸ்மாயீல் சலஃபியிடமும் இதன் அர்த்தம் வேறு. ஒவ்வொருவரும் தமது நம்பிக்கைப்படியே இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
சூனியம் செய்து ஒரு மனிதனை மன நோயாளியாக ஆக்க முடியும் என்று காஃபிர்கள் நம்பினார்கள். இஸ்மாயீல் சலஃபியும் அப்படித்தான் நம்புகிறார். எனவே இந்த நம்பிக்கை உள்ளவர்கள் சூனியம் என்ற சொல்லை சூனியத்தால் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற பொருளில் தான் பயன்படுத்துவார்கள்.
சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லை அல்லாஹ் தனது சொல்லாக கூறவில்லை. காஃபிர்களின் கூற்றாகவே எடுத்துக் காட்டுகிறான்
நீங்கள் நினைக்கிற படி முஹம்மது நபி பைத்தியக்காரர் அல்லர். யாரோ சூனியம் வைக்கவும் இல்லை. இவ்வாறு கூறுவது அநீதி என்ற கருத்துப்பட அல்லாஹ் பதிலளிக்கிறான்.
தராவீஹ் 20 ரக்அத் இல்லை என்று நாம் கூறும் போது குராஃபிகள் இவரைப் போலவே எதிர்க் கேள்வி கேட்டனர். தராவீஹ் தொழுகை இல்லை என்று கூறிய நீங்கள் இப்போது தராவீஹ் தொழுகை உள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்று கேட்டனர். நாம் தராவீஹ் என்று ஒரு தொழுகை இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. உங்கள் வாதப்படி தராவீஹ் தொழுகை என்று எதை நினைக்கிறீர்களோ அது இருபது ரக்அத் இல்லை என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டோம் என்று விளக்கம் அளித்தோம்.
அது போன்ற நிலையில் தான் இஸ்மாயீல் சலஃபியும் இருக்கிறார்.
சூனியம் என்பது குறித்து நாம் கொண்ட நிலைபாட்டுக்கும் காஃபிர்கள் சூனியம் குறித்து கொண்ட நிலைபாட்டை எடுத்துக் காட்டியதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இவரது வாதம் முழுவது அறிவு சார்ந்ததாக இல்லாமல் மேம்போக்காகவே உள்ளது. எனவே எப்படி சிந்திப்பது என்ற அடிப்படை அறிவை இவர் வளர்த்துக் கொள்வது நல்லது.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதின்மூன்று
இந்த வசனம் நேரடியாக நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதைத்தான் கூறுகின்றது என்பதை பீஜே தெளிவாகத் தெரிந்திருந்தால், இதையே முதல் வாதமாக வைத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பிரச்சினையை முடித்திருப்பார். பல்வேறு வாதங்களை முன்வைத்து மக்கள் மனதில் குறித்த ஹதீஸ் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி, அதன் பின்னர் இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் இந்த வாதம் வலுவற்றது என்பதைப் புரிந்து கொண்டே இந்த வாதத்தை முன்வைத்துள்ளார் என யூகிக்கலாம். (இந்த யூகத்திற்கு வலுவூட்டுவதாக அவரது எழுத்து அமைந்துள்ளதைப் பின்னர் குறிப்பிடுவோம்.)
என்று அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறார்.
பீஜேயின் பதில்
எதற்கெடுத்தாலும் யூகம் என்று ஓலமிட்டவர் இப்போது தானே யூகம் செய்வதை ஒப்புக் கொள்கிறார்.
எது வலிமையானதோ அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்று சட்டமோ, தர்மமோ இல்லை. அப்படி எந்த மரபும் இல்லை. முதலில் சாதாரணமானதை வைத்து விட்டு கடைசியில் வலிமையானதை வைப்பதும் உண்டு. எவ்வித வரிசைக் கிரமத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நினைவுக்கு வரும் வரிசைப்படி வாதங்கள் வைக்கப்படுவதும் உண்டு.
பக்கத்தை நிரப்புவதற்காக எதையாவது எழுதுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினான்கு
அடுத்து அவர் எடுத்து வைக்கும் ஆதாரம் இதை விடக் கேலிக் கூத்தாக அமைந்துள்ளது.
அல்குர்ஆனில் மஸ்ஹூரா - சூனியம் செய்யப்பட்டவர் என்ற வார்த்தை நபி(ஸல்) அவர்களைக் குறித்து காஃபிர்களால் இரு இடங்களிலும், மூஸா நபியைக் குறித்து பிர்அவ்னால் ஒரு இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிர்அவ்னும் மூஸா நபியும்:
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்தபோது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான்.
(திருக்குர்ஆன் 17:101)
பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் எனக் கூறியதைக் குர்ஆனோ, மூஸா நபியோ ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்குப் பதில் கூறும் போது மூஸா(அலை) அவர்கள்,
வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனே இவைகளைத் தெளிவான சான்றுகளாக இறக்கி இருக்கிறான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். பிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிவுக்குள்ளாக்கப் படுபவனாகவே எண்ணுகிறேன் என (மூஸா) கூறினார்.
(திருக்குர்ஆன் 17:102)
மேற்படி வசனத்தின் மூலம் அவன் கூறியதை மறுத்ததுடன் அவன் அழிவுக்குள்ளாகக்கூடியவன் என்றும் மூஸா நபி கூறினார் என்பது தெளிவாகின்றது. எனினும் மூஸா நபி பின்னர் சூனியத்திற்குள்ளானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவை பாம்புகள் போன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்தின. மக்களுக்கு மட்டுமன்றி மூஸா நபிக்குக் கூட அவை பாம்பாகத் தென்பட்டன. அவர் அச்சமுற்றார். இதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது.
(திருக்குர்ஆன் 20:65-68)
பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்கின்றான்! அவன் சொன்னபடியே அவர் சூனியம் செய்யப்பட்டார். அதன் பாதிப்புக்குள்ளானார். இப்போது பிர்அவ்ன் சொன்னது சொன்னபடி நடந்தது என்று யாரும் கூறுவார்களா? மூஸா நபிக்கு சூனியத்தால் கயிறும், தடியும் பாம்பாகத் தென்பட்டது என்று கூறுவது பிர்அவ்னை உண்மைப்படுத்துவதாகுமா? குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகுமா? குர்ஆன் குர்ஆனுக்கே முரண்படுகின்றதா?
இப்படி இருக்க அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்றுக்கொண்டால் அது குறைஷிகளின் கூற்றை உண்மைப்படுத்துவதாகி விடும் என விவாதிப்பது எப்படி நியாயமாகும்?
பீஜேயின் பதில்
எவ்வளவு கூர்மையான ஆராய்ச்சி என்று பாருங்கள்!
ஒரு மனிதருக்கு சூனியம் செய்து அவர் பைத்தியமானார் என்பது வேறு. அவர் முன்னிலையில் சில பொருட்களின் மூலம் வித்தை செய்து காட்டுவது என்பது வேறு. இந்த வித்தியசத்தை விளங்காமல் மேற்கண்ட வாதத்தை எடுத்து வைக்கிறார்.
மூஸா நபியவர்களுக்கு யாரும் சூனியம் செய்யவுமில்லை. அப்படி குர்ஆன் சொல்லவும் இல்லை. அவர்கள் முன்னிலையில் கயிறுகள் மூலமும் கைத்தடிகள் மூலமும் வித்தைகள் செய்யப்பட்டன என்று தான் குர்ஆன் கூறுகிறது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் அவர்கள் முன்னிலையில் யாரோ வித்தை செய்து காட்டினார்கள் என்று கூறப்படவில்லை. அவர்களே மன நோயாளியாக ஆனார்கள் என்று தான் கூறப்படுகிறது. இதற்கும் இவர் எடுத்து வைக்கும் ஆதாரத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
மேலும் மூஸா நபி முன்னிலையில் கயிறுகளை பாம்புகளாகக் காட்டினாலும் அது உடனடியாக முறியடிக்கப்பட்டு வித்தை தோற்கடிக்கப்பட்டது. மூஸா நபி தான் சூனியத்தை வென்றார்களே தவிர அவர்களை சூனியம் வெல்லவில்லை.
ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்ட கட்டுக் கதையில் அப்படிக் கூறப்படவில்லை.
கயிறுகளும், கைத்தடிகளும் சூனியம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருளாக இருந்தது போல் இங்கே நபிகள் நாயகத்தின் உடல் சூனியம் செய்யும் களமாக ஆக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பாட்டார்கள் என்பதும் சூனியத்தால் மூஸா நபி அறவே பாதிக்கவில்லை என்பது ஒன்றாகுமா?
எனவே நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக யார் கூறினாலும் அவர் குர்ஆன் தீர்ப்புப்படி அநியாயக்காரர் தான்.
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இலிருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:8
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்பி இஸ்மாயீல் சலஃபியுடன் சேர்ந்து அநியாயக்கார்கள் பட்டியலில் சேர வேண்டாம் என்று பொது மக்களை எச்சரிக்கிறோம்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினைந்து
இந்த வாதத்தை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தையும் பீஜே எடுத்துக் காட்டுகிறார்.
அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:08)
அவர்கள் உம்மிடம் செவியேற்கும் போது எதை செவியேற்கின்றார்கள் என்பதையும், சூனியம் செய்யப்பட்ட மனிதரை அன்றி வேறு எவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயம் செய்தோர் இரகசியம் பேசிக்கொள்வதையும் நாம் நன்கறிவோம். (17:47)
இந்த இரு வசனங்களிலும் நபி(ஸல்) அவர்களையும் (17:101), மூஸா நபியையும் (26:153), ஷுஐப் நபியையும் (26:185) இதன் பன்மைப் பதம் ஸாலிஹ் நபியையும், குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
17:47 ஆம் வசனத்தில் அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக வருகின்றது. அதற்கு அடுத்து வரும் வசனங்களில்
எலும்புகளாகவும், உக்கிப்போனவர்களாகவும் நாம் ஆகிய பின்னர் நிச்சயமாக நாம் புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா? என அவர்கள் கேட்கின்றனர். (17:49)
எனவே, நபி(ஸல்) அவர்களது போதனை சூனியத்திற்குள்ளானவனின் உளறல் என்ற அர்த்தத்திலேயே காஃபிர்கள் இப்படிக் கூறியுள்ளனர் என்பதை அறியலாம்.
25:8 ஆம் வசனத்திலும் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் - சூனியத்திற்குள்ளானவர் எனக் கூறியதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதற்கு முந்தைய வசனங்களைப் பார்த்தால் தூதுத்துவத்தை முழுமையாக மறுப்பதற்காகத் தான் இப்படிக் கூறினர் என்பதைப் புரியலாம்.
இது பொய்யே அன்றி வேறில்லை. இதனை இவரே இட்டுக்கட்டிக்கொண்டார். வேறு ஒரு கூட்டத்தினரும் இதற்காக அவருக்கு உதவி புரிந்துள்ளனர் என நிராகரித்தோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயமாக அநியாயத்தையும் பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர். (இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளாகும். இவற்றை இவரே எழுதச்செய்துகொண்டார். அது இவருக்குக் காலையிலும் மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.
வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நன்கறிந்தவனே இதனை இறக்கி வைத்தான் என (நபியே) நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:4,5,6,8)
இவ்வாறே ஸாலிஹ் (அலை) அவர்களையும் இப்படி விமர்சித்தனர். அவர்களது சமூகத்திற்குத் தன்னை ஒரு இறைத் தூதர் என அவர் அறிமுகம் செய்து, போதனை செய்த போது அவரது தூதுத்துவத்தை முழுமையாக மறுக்கும் விதமாக,
அ(தற்க)வர்கள், நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்தாம் என்று கூறினர். (26:153)
இவ்வாறே ஷுஐப்(அலை) அவர்கள் தன்னை இறைத் தூதராக அறிமுகப்படுத்திப் போதனை செய்த போது,
அ(தற்க)வர்கள், நிச்சயமாக நீர், சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம் என்று கூறினர். நீர் எம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக உம்மை நாம் பொய்யர்களில் உள்ளவராகவே எண்ணுகின்றோம். (26:185-186)
இந்த அடிப்படையில் நோக்கும் போது நபிமார்களது முழுத் தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே சூனியம் செய்யப்பட்டவர்கள் என அவர்கள் கூறினர் என்பதை அறியலாம். இவர்கள் சூனியம் செய்யப்பட்டதனால் உளருகின்றனர் என அவர்கள் கூறினர்.
அவர்களின் இந்தக் கூற்றை மறுப்பது நபிக்குச் சூனியமே செய்ய முடியாது என்பதை மறுப்பதாகாது! நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை நம்புவது காஃபிர்களை உண்மைப்படுத்துவதாகவோ குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகவோ ஒருபோதும் அமையாது. எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸிற்கும் இந்த வசனங்களின் போக்கிற்கும் எந்த முரண்பாடும் இல்லை.
இதைச் சகோதரர் பீஜே தெளிவாக விளங்கியிருந்ததனால் தான் இதை முதல் வாதமாகவோ, இறுதி வாதமாகவோ வைக்கவில்லை. அத்துடன் சூனியம் செய்யப்பட்டவர் என்று என்ன எண்ணத்தில் காஃபிர்கள் கூறினர் என்பதை அவரே எழுதும் போது,
வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். (பிஜே தர்ஜமா பக்:1302)
காஃபிர்கள் கூறிய அர்த்தம் வேறு. அதைத்தான் குர்ஆனின் போக்கு கண்டிக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே தவறான வாதத்தை முன்வைத்துக் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்குமிடையில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரிக்கும் இவரது தவறான போக்கையும் ஹதீஸ் மீதும், ஹதீஸ் நூற்கள் மீதும், கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவர் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் இவரது ஆபத்தான போக்கு குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இது வரை நாம் கூறிய விளக்கங்களும் சகோதரர் பிஜே தனது தர்ஜமாவில் குறிப்பிட்டுள்ள மேற்படி கூற்றும் இந்த வசனங்களின் அர்த்தம் வேறு, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸின் அர்த்தம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமான சான்றுகளாகும்.
இருப்பினும் மஸ்ஹூர் என்ற சொல்லுக்கு இன்னும் இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவையும் குர்ஆனினது போக்கையும், அறபு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களால் வழங்கப்பட்ட விளக்கங்களே! அந்த விளக்கங்கள் குறித்த பல்வேறுபட்ட குர்ஆன் விளக்கவுரை நூற்கள் பேசியுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வது மேலதிக விளக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என எண்ணுகின்றோம்.
பீஜேயின் பதில்
இஸ்மாயீல் சலஃபி பீஜேயாகிய எனது வாதத்தை மறுக்கிறாரா? அல்லது சூனியம் செய்யப்பட்டு என் சார்பில் வாதிக்கிறாரா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் மேற்கண்டவாறு வாதிடுகிறார்.
இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம் என்று இஸ்மாயீல் சலஃபி கூறுவதைக் கவனியுங்கள்!
இதன் அர்த்தம் என்ன? சூனியம் செய்யப்பட்ட காரணத்தினால் முஹம்மத் உளறுகிறார் என்ற அர்த்தத்தில் தான் இவ்வாறு காஃபிர்கள் கூறினார்கள் என்று இவர் நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்.
நாமும் இதைத் தான் சொல்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டு மன நோயாளியாகி உளறுகிறார் என்று தான் காஃபிர்கள் கூறினார்கள் என்பதைத் தானே நாம் கூறுகிறோம். அதைத் தானே சூனியம் வைக்கப்பட்ட ஹதிஸும் கூறுகிறது.
மனநோய்க்கு ஆளாகி ஒன்று கிடக்க ஒன்று பேசினார்கள் என்று கூறும் ஹதீஸுக்கும், சூனியம் செய்யப்பட்டவர் என்ற காஃபிர்களின் மேற்கண்ட விமர்சனத்துக்கும் வேறுபாடு இல்லை.
சூனியம் செய்யப்பட்டதால் இவர் உளறுகிறார் என்று காஃபிர்கள் கூறினார்கள்.
இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுப்புக் கூறினான்.
இல்லை; நபிகள் நாயகம் அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டு உளறினார்கள் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது.
இது காஃபிர்களின் கூற்றுக்கு வலு சேர்த்து குர்ஆனுடன் மோதுவது இவரது இந்த வாதத்தில் இருந்தே தெரிகிறது.
இந்த வசனம் அவரது கருத்துப்படி மிக வலுவானதாக இருப்பதால் இப்படி உளறும் நிலைக்கு ஆளாகி விட்டார். இந்த வசனத்துக்கு மாற்றமாக அந்த ஹதீஸ் அமைந்திருப்பதை அவரால் மறுத்து தனது கருத்தை நிலைநாட்ட முடியவில்லை.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினாறு
இப்போது என்ன செய்வது? சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்தவர் என்று அர்த்தத்தை மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைத்து அப்படியும் வாதிடுகிறார்.
அதற்கு அரபு இலக்கணத்தையும் துணைக்கு அழைக்கிறார்.
மேற்கண்ட வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டாலும் சூனியம் செய்யும் நபர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வசனத்துடன் விளையாடி இருக்கிறார்.
இது குறித்து அவர் எடுத்து வைக்கும் வாதம் இது தான்.
அறபு மொழி வழக்கிலும் அல்குர்ஆனிய நடையிலும் செய்தவன் என்பதைச் செய்யப்பட்டவன் என்ற பதம் கொண்டு பயன்படுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளைக் காட்டுகின்றார்கள். இது குறித்துக் குர்ஆன் கூறும் போது,
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்த போது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)
என்று கூறுகின்றது. ஒன்பது அத்தாட்சிகளை - அற்புதங்களைக் காட்டிய பின் மூஸா நபியைப் பார்த்துச் சூனியக்காரன் எனக் கூறுவானா? சூனியம் செய்யப்பட்டவன் என்று கூறுவானா? என்று கேட்டால் சூனியக்காரன் என்று தான் கூறுவான் என்று யாரும் பதிலளிப்பர். சகோதரர் பீஜே கூட அப்படித் தான் பதிலளிப்பார். அவர் அவரது தர்ஜமாவில் இதை எழுத்து மூலம் அளித்துமுள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது, இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். (பக்:1302)
எனவே, அற்புதம் செய்தவரைப் பார்த்து مسحور சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்பட்டாலும் அதன் அர்த்தம் ساحر சூனியம் செய்பவர் என்பது தான். இதை நான் எனது சொந்தக் கருத்தாகக் கூறவில்லை.
மூஸா நபி குறித்து மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறபு மொழியை அறிந்த அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக,
تفسير ابن كثير / دار طيبة - (5 / 125)
( إِنِّي لأظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا ) قيل: بمعنى ساحر. والله تعالى أعلم.
பொருள்:
(மூஸாவே உன்னை நான் சூனியம் செய்யப்பட்டவராகக் கருதுகிறேன்.) இந்தப் பதம், சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன். (தப்ஸீர் இப்னு கதீர்)
அல் பராஉ அவர்களும், அபூ உபைதா அவர்களும் இதன் அர்த்தம் சூனியம்செய்யப்பட்டவர் என்பதல்ல, சூனியம் செய்பவர் என்பது தான் என்று கூறுகின்றனர்.
تفسير البغوي - (5 / 134)
وقال الفراء وأبو عبيدة: ساحرا فوضع المفعول موضع الفاعل. وقال محمد بن جرير: معطى علم السحر فهذه العجائب التي تفعلها من سحرك (2) .
பொருள்:
இன்னும் முஹம்மத் இப்னு ஜரீர் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் அர்த்தம் சூனியக் கலை பற்றிய அறிவைப் பெற்றவர். நீ செய்யக்கூடிய இந்த அதிசய செயல்கள் எல்லாம் உனது சூனியத்தால் செய்கிறாய் என்பது இதன் அர்த்தம் என்கின்றார்கள். (சுருக்கம் தப்ஸீர் பகவி)
அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அறபு மொழி வழக்கையாவது ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.
அத்துடன் மூஸா நபி ஒன்பது அற்புதங்களைக் காட்டிய போது சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக ஒரு இடத்தில் வருகின்றது. மற்றொரு இடத்தில் தெளிவாகவே அத்தாட்சிகளைப் பார்த்த போது சூனியக்காரன் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(அனைவரும்) காணும் வகையில் அவர்களிடம் நமது அத்தாட்சிகள் வந்த போது, இது தெளிவான சூனியமே என்று அவர்கள் கூறினர்.
இன்னும், அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும், அநியாயமாகவும் ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (27:13-14)
அவர்கள் (இவர்) சூனியக்காரரும், பெரும் பொய்யருமாவார் எனக் கூறினர். (40:24)
இது போன்ற வாதங்களை முன்வைத்து சூனியம் செய்யப்பட்டவர் என்பது அதன் அர்த்தம் அல்ல சூனியக்காரர் என்பது தான் அதன் அர்த்தம் என்கின்றார்கள்.
இதற்கு மற்றுமொரு உதாரணத்தை இதே சூறாவில் காணலாம்.
குர்ஆனை நீர் ஓதினால் உமக்கும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில், மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம். (17:45)
இந்த வசனத்தில் حجابا مستورا (மறைக்கப்பட்ட திரை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் حجابا ساترا (மறைக்கும் திரை) என்பதுதான் இதன் அர்த்தம் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இதைப் பின்வரும் கூற்று உறுதி செய்கின்றது.
وقوله مستورا ساترا فهو من اطلاق اسم المفعول وارادة اسم الفاعل كميمون بمعنى يامن ومشئوم بمعنى شائم الوسيط لسيد طنطاوي -1 2636
.செய்யப்பட்டவன் என்ற பதம், செய்பவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அறபு இலக்கண மரபுக்கு இவை ஆதாரமாக அமைகின்றன.
பீஜேயின் பதில்
இவரது இந்த வாதமும் வழக்கம் போல் இவரது அரைகுறை அறிவுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இது அரபு மொழி இலக்கணம் பற்றிய வாதமாக இருப்பதால் இது குறித்து சற்று விரிவாகவே நாம் விளக்க வேண்டும்.
அரபு பொழியானாலும் வேறு எந்த மொழியானாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் நேரடிப் பொருள் இருக்கும். எது நேரடிப் பொருளாக உள்ளதோ அந்தப் பொருளில் தான அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மிகமிகச் சில நேரங்களில் ஒரு சொல்லுக்கு நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் இருக்கும். நேரடிப் பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகி விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நேரடிப் பொருளைத் தவிர்த்து விட்டு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றுப் பொருள் கொடுக்கும் போது அதற்கான ஆதாரம் அந்த வாக்கியத்தில் ஒளிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக சிங்கம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு குறிப்பிட்ட வன விலங்காகும். எந்த இடத்தில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு சிங்கம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நான் மண்ணடியில் ஒரு சிங்கம் முழங்கியதைப் பார்த்தேன் என்று ஒருவன் கூறினால் அப்போது சிங்கம் என்று பொருள் கொடுக்க முடியாது. ஏனெனில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக மண்ணடி இருப்பதால் அங்கே சிங்கத்தைப் பார்த்திருக்க முடியாது. மேலும் சிங்கம் முழங்கவும் செய்யாது. இந்த இரண்டு காரணங்களும் வன விலங்கு என்ற அர்த்தத்தில் அவன் இதைக் கூறவில்லை என்பதையும் வீரமான ஒரு மனிதனைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறான் என்பதையும் நமக்குக் காட்டி விடுகிறது.
வன விலங்கைக் குறிக்கவில்லை என்பதற்கு இது போன்ற ஆதாரம் இல்லாவிட்டால் சிங்கம் என்ற சொல்லின் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு தான்.
மேற்கண்ட வாக்கியத்தில் சிங்கம் என்பதற்கு வீரமான மனிதன் என்று பொருள் கொண்டதால் சிங்கம் என்று பயன்படுத்தப்பட்ட எல்லா இடங்களிலும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனிதன் என்று தான் பொருள் கொள்வேன் என்று ஒருவன் கூறினால் அவன் அறிவற்றவன் என்று நாம் கருதுவோம்.
ஆனால் நேரடிப்பொருள் கொள்வதற்கு ஆதாரம் தேவை இல்லை. நேரடிப்பொருளை விட்டு விட்டு வேறு பொருள் நாடினால் தான் அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.
அது போல் ஒரு சொல்லுக்கு பல வடிவமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு வடிவமைப்புக்கும் ஒரு பொருள் இருக்கும். இது போன்ற இடங்களில் அந்த வடிவமைப்புக்கு என்ன பொருளோ அதைத் தான் அச்சொல்லின் பொருளாகக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக அடித்தல் என்ற சொல் அடித்தான் என்ற வடிவம் போது அது கடந்த காலத்தைக் குறிக்கும். அடிப்பான் என்று வேறு வடிவத்துக்கு மாறும் போது அது வருங்காலத்தைக் குறிக்கும். அடித்தவன் என்ற வடிவத்தில் இருந்தால் அடி கொடுத்தவனை அது குறிக்கும். அடிக்கப்பட்டவன் என்று கூறினால் அடி வாங்கியவனைக் குறிக்கும். ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு குறிப்பிட்ட பொருள் தருவதற்காகத் தான் அம்மொழி பேசுவோர் உருவாக்கியுள்ளனர்.
அடித்தான் என்ற சொல்லுக்கு நாளைக்கு அடிப்பான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் மொழியின் மூலம் தெளிவு கிடைப்பதற்குப் பதிலாக குழப்பம் தான் மிஞ்சும்.
ஆனாலும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் அந்த வாசக அமைப்பு தடையாக அமையும். அல்லது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட விதம் சூழ்நிலை ஆகியவை நேரடிப் பொருள் கொள்வதற்கு தடையாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மாற்றுப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
உலக அழிவு நாள் இனி மேல் தான் வரப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகம் அழிந்து விட்டது என்று குர்ஆன் கூறுகிறது. இதற்கு அழிந்து விட்டது என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் உலகம் அழிந்திருந்தால் இந்த வசனமே வந்திருக்காது. நம் கண் முன்னே உலகம் அழியவில்லை என்பது தெரிவதால் இனி அழியும் என்பது தான் இவ்வாறு கூறப்படுகிறது. நிச்சயம் நடந்து விடும் என்ற உறுதி இருந்தால் அது நடப்பதற்கு முன்பே நடந்து விட்டது என்று சொல்வது எல்லா மொழிகளிலும் உள்ளது தான்.
இரண்டு அணிகளுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஒரு அணியின் விளையாடும் திறன் படு மோசமாக இருக்கிறது. இன்னொரு அணி விளாசித்தள்ளுகிறது. ஆனால் விளையாட்டு முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த அணி வெற்றி பெற்று விட்டது என்று கூறுவோம். வெற்றி பெறும் என்பதைத் தான் வெற்றி பெற்று விட்டது என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.
இது போல் ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தமே ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கும். ஆனாலும் அதனுடன் இணைக்கப்படும் சொல்லுக்கேற்ப அந்தச் சொல்லுக்கு பொருள் கொள்வோம். ஒரு டாக்டர் ஊசியை எடுத்து வா என்று தனது உதவியாளரிடம் கூறினால் உடலில் செலுத்துவதற்கான ஊசியைக் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்கிறோம். ஒரு தையல் கடை முதலாளி ஊசியை எடுத்து வா என்று கூறினால் தைக்கும் ஊசி என்று பொருள் கொள்வோம்.
மடத் தலைவர் என்று கூறினால் முட்டாள் தலைவன் என்றும் பொருள் உண்டு. மடம் எனும் ஆசிரமத்தின் தலைவர் என்றும் பொருள் உண்டு. ஆயினும் பயன்படுத்தும் இடத்தைப் பொருத்து பொருத்தமான அர்த்தத்தைக் கண்டு கொள்கிறோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இஸ்மாயீல் சலஃபி வாதத்தைக் கவனிப்போம்.
சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் பொருள் அவருக்கு மற்றவர்கள் சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அந்த அந்தப் பொருளைத் தான் பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அந்த வாக்கிய அமைப்பு அவ்வாறு பொருள் கொள்வதற்குத் தடையாக அமைந்து விட்டால் அப்போது வேறு வடிவத்துக்குரிய பொருளைக் கொடுக்கலாம் என்பது தான் அரபு மொழி மட்டுமின்றி அனைத்து உலக மொழிகளிலும் உள்ள பொதுவான விதி. இலக்கணம் மொழிக்கு மொழி மாறுபடுமே தவிர இலக்கியம் பொதுவானது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினார்கள் என்பது நேரடியான வாசகம். இதன் நேரடிப் பொருள் அவருக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அவர் சூனியம் செய்து விட்டார் என்பது நேரடிப் பொருள் அல்ல.
சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்தவர் மாற்றிப் பொருள் கொள்வதாக இருந்தால் நேரடிப் பொருள் கொள்வதற்கு தடங்கல் இருக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுப்பதற்குத் தடை இல்லாவிட்டால் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். இந்த அறிவு தான் அவருக்கு இல்லை.
சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் சலஃபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை இதற்கு ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது?
நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.(25:08)
இவ்வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது அந்த அர்த்தத்தை விட்டு விட்டு வேறு அர்த்தம் செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது?
குர்ஆனை ஆராயும் போது காஃபிர்கள் நபிகள் நாயகத்தை எப்படியெல்லாம் விமர்சித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். அதற்கு ஏற்பவே மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது.
அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 15:6
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர். பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா? என்று கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.
திருக்குர்ஆன் 37:35,36,37
அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர் என்றும் கூறினர்.
திருக்குர்ஆன் 44:13,14
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.
திருக்குர்ஆன் 51:52,53
எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.
திருக்குர்ஆன் 52:29
(முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு.. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.
திருக்குர்ஆன் 68:2-6
(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்என்றும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 68:51
உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.
திருக்குர்ஆன் 81:22
மக்களை எச்சரிப்பீராகஎன்றும்,நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர்என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 10:2
அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர்; சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
திருக்குர்ஆன் 38:4
காஃபிர்களின் மேற்கண்ட விமர்சனங்களைக் கவனித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து முரண்பட்ட இரண்டு நிலை காஃபிர்களிடம் இருந்ததை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் கவரும் பிரச்சாரத்தைக் கண்ட சில காஃபிர்கள் இவர் சூனியத்தின் மூலம் தான் கூறுவதை நம்புமாறு செய்து விடுகிறார் என்று நினைத்தார்கள். சூனியக்காரர் என்று கூறினார்கள்.
இன்னொரு புறம் மறுமை சொர்க்கம் போன்ற நம்பச் சிரமமானவைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் காணும் போது இவர் நம்ப முடியாதவைகளை உளறுகிறார். எனவே இவர் மனம் பேதலித்துப் போன பைத்தியக்காரர் என்று கூறினார்கள்.
மற்றவர்களை மயக்கும் அளவுக்கு திறன் படைத்தவர் என்பதும், தான் செய்வது என்னவென்று புரியாமல் உளறுபவர் என்பதும் முரண்பட்ட விமர்சனம் என்றாலும் இவ்விரு விமர்சனங்களையும் அவர்கள் செய்தனர் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக உள்ளன.
பைத்தியக்காரராக இருப்பவர் சூனியக்காரராக இருக்க முடியாது. அடுத்தவரை மயக்கும் அளவுக்கு சூனியம் செய்பவர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. ஆனாலும் சிலர் பைத்தியம் என்றனர். மற்றும் சிலர் சூனியக்காரர் என்று கூறினர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
சூனியக்காரர் என்று மட்டும் அவர்கள் விமர்சிக்கவில்லை. அவருக்கே சூனியம் செய்யப்பட்டு விட்டது அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவர்கள் விமர்சித்திருக்கும் போது சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லின் நேரடிப் பொருளைக் கைகழுவும் அவசியம் என்ன?
சூனியம் செய்தவர் என்ற சொல்லுக்கு அதன் நேரடிப் பொருளையும், சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு அதன் நேரடிப் பொருளையும் கொடுப்பது தான் குர்ஆனை அணுகும் முறையாகும். அவ்வாறு இன்றி தனது தவறான கருத்துக்கு மரண அடியாக உள்ளது என்பதற்காக ஒரு சொல்லின் நேரடி அர்த்தத்தை மாற்றுவது அறிவு நாணயம் மிக்க செயலா? இவரைப் போன்றவர்களை நாம் எப்படி நம்புவது?
அடுத்ததாக சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் எப்படி புரட்டுகிறார் என்று பாருங்கள்?
மூஸா நபி அவர்களைப் பற்றி சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்பது பொருந்தாது என்று வாதிடுகிறார்.
இப்ராஹீம் திருடியது உறுதியானதால் இஸ்மாயீலின் கையை வெட்டித் தான் ஆக வேண்டும் எண்று ஒருவர் வாதிட்டால் அவரது நிலை என்ன? அந்த நிலையில் தான் இவரது மேற்கண்ட வாதம் அமைந்துள்ளது.
மூஸா நபி அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று ஃபிர்அவ்ன் கூறினான். அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தம் தான் பொருந்தும் என்பது அவரது வாதம். நாம் கேட்கிறோம். மூஸா நபி தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பு நேரடி அர்த்தம் செய்யத் தடையாக இருக்கிறது என்ற காரணத்துக்காக சூனியம் செய்பவர் என்று பொருள் செய்தால் தடையாக இல்லாத அனைத்து வசனங்களிலும் அப்படித் தான் செய்வேன் என்பது தான் ஆய்வு செய்யும் இலட்சணமா?
ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய படி சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் சலஃபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது? என்பதை மீண்டும் கேட்க விரும்புகிறோம்.
மூஸா நபி அவர்கள் அற்புதம் செய்யும் போது அதை விமர்சித்த ஃபிர்அவ்ன் சூனியம் செய்பவர் என்று தான் கூற முடியும். சூனியம் செய்யப்பட்டவர் என்று கூற முடியாது. எனவே சூனியம் செய்பவர் என்பதற்கு சூனியம் செய்யப்பட்டவர் என்பது பொருள் என்று முடிவு செய்கிறார். இதன் படி இவர் வாதிப்பது என்றால் மூஸா நபி குறித்த மேற்கண்ட வசனத்துக்கு மட்டும் தான் அவ்வாறு பொருள் என்று முடிவு செய்யலாமே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குரித்து பேசும் வேறு வசனத்துக்கும் அதே பொருளைக் கொடுப்பது என்ன நியாயம்?
மூஸா நபி குறித்த விஷயத்திலும் கள்ளத்தனம் செய்திருக்கிறார்.
{ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لأظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا } أي: مطبوبا سحروك قاله الكلبي. وقال ابن عباس: مخدوعا. وقيل مصروفا عن الحق. وقال الفراء وأبو عبيدة: ساحرا فوضع المفعول موضع الفاعل. وقال محمد بن جرير: معطى علم السحر فهذه العجائب التي تفعلها من سحرك (2) .
என்று அவர் மேற்கோள் காட்டும் நூலில் இருக்க அடிகோடிட்ட வார்த்தைகளை இருட்டடிப்பு செய்து விட்டு இது தான் மரபு என்று சொல்கிறார்.
இதன் முழுமையான அர்த்தம் இது தான். மூஸாவே யாரோ உனக்கு சூனியம் செய்து விட்டனர் என்று ஃபிர்அவ்ன் கூறினான் என்பதே இதன் கருத்து என கலபி கூறுகிறார். யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டார் என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார். சத்தியத்திலிருந்து திசை திருப்பட்டவர் என்ற பொருளில் அப்படிக் கூறினான் என்றும் பொருள் கொள்ளப்பட்டது.
இப்படி கூறிய பிறகு தான் இஸ்மாயீல் சலஃபி சொல்வது போலவும் பொருள் கொள்ளலாம் என்று அந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதாவது மூஸா நபி தொடர்பான அந்த வசனத்தில் கூட சூனியம் செய்யப்பட்டவர் என்று நேரடிப் பொருள் கொள்வது தடை இல்லை என்பது அவர் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இருந்து புரியும் விஷயம்.
நாம் எவ்வளவு தான் ஆதாரத்தைக் காட்டினாலும் ஒரு ஆதாரமும் காட்டவில்லை என்று விவாதங்களில் எதிர் அணியினர் பொய்யாகக் கூறுவார்கள். அது போல் மூஸா நபி எவ்வளவு அற்புதம் செய்து காட்டிய போதும் ஒன்றுமே செய்து காட்டாமல் அற்புதம் என்று உளறுகிறாய் எனவே உனக்குக் கிறுக்குத் தான் பிடித்துள்ளது என்று ஃபிர்அவ்ன் அதன் நேரடி அர்த்தத்தில் கூறுவது ஆச்சரியமானதல்ல.
மூஸா நபி குறித்த அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற பொருள் பொருந்தாது என்று வைத்துக் கொண்டாலும். அதற்கும் நபிகள் தொடர்பான வசனத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அதே நேரத்தில் மூஸா நபி விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று தனக்கு சாதகமான அர்த்தத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தவர் எந்த வசனம் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்த வசனத்துக்கு அரபு மொழி அறிந்த வல்லுனர்கள் விரிவுரையாளர்கள் என்ன பொருள் கூறியுள்ளனர் என்பது தெரிந்தும் இருட்டடிப்புச் செய்வது ஏன்?
تفسير ابن كثير / دار طيبة - (6 / 95)
قال الله تعالى: { انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الأمْثَالَ } أي: جاءوا بما يقذفونك به ويكذبون به عليك، من قولهم ساحر، مسحور، مجنون، كذاب، شاعر وكلها أقوال باطلة، كل أحد ممن له أدنى فهم وعقل يعرف كذبهم وافتراءهم في ذلك؛ ولهذا قال: { فضلوا } أي: عن طريق الهدى ، { فَلا يَسْتَطِيعُونَ سَبِيلا }
உம்மை சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் பைத்தியக்காரர் என்றும் பொய்யர் என்றும் புலவர் என்றும் கூறுவதைக் கவனிப்பீராக! இவை அனைத்துமே பொய் என்று இப்னு கஸீர் கூறுகிறார். அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று அதன் நேரடி பொருளிலேயே காஃபிர்கள் பயன்படுத்தினார்கள் என்று இப்னு கஸீர் கூறுவது ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை?
تفسير ابن كثير / دار طيبة - (6 / 157)
والأظهر في هذا قول مجاهد وقتادة: أنهم يقولون: إنما أنت في قولك هذا مسحور لا عقل لك
உனக்குச் சூனியம் செய்யப்பட்டதால் உனக்கு அறிவு இல்லாமல் போய் விட்டது என்று முஜாஹித், கதாதா ஆகியோர் கூறுவதே நேரடியான கருத்தை ஒட்டி அமைந்துள்ளது எனவும் இப்னு கஸீர் கூறியுள்ளாரே அவர் அரபு பொழி பண்டிதர் இல்லையா?
தப்ரீ அவர்கள் பின் வருமாரு கூறுகிறார்களே அது இவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்து இருட்டடிப்பு செய்துள்ளாரா?
تفسير القرآن العظيم المنسوب للإمام الطبراني - (0 / 0)
{ وَإِذْ هُمْ نَجْوَى } ؛ في أمرِكَ يتَناجَوْنَ ، فيقولُ بعضهم : هذا كاهنٌ ، ويقول بعضُهم : هذا ساحرٌ ، ويقول بعضهم : هذا مجنونٌ ، ويقول بعضُهم : هذا شاعرٌ. وَقِيْلَ : إنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم أمَرَ عَلِيّاً رضي الله عنه أنْ يتَّخِذ طَعاماً ، فيدعُو إليه أشرافَ قُريش من المشركين ، ففعلَ ذلكَ ، ودخلَ رسولُ اللهِ صلى الله عليه وسلم وقرأ عليهم القرآنَ ، ودعاهُم إلى التوحيدِ ، فكانوا يستَمِعون ويقولون فيما بينهم مُتَنَاجِينَ : هو ساحرٌ ، وهو مجنون مسحورٌ. فأخبرَ اللهُ تعالى نَبيَّهُ بذلكَ ، وأنزلَ عليه { نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى } أي يتناجَون بينهم بالتكذيب والاستهزاءِ ، { إِذْ يَقُولُ الظَّالِمُونَ } ؛ أي أُولئك المشرِكون : { إِن تَتَّبِعُونَ إِلاَّ رَجُلاً مَّسْحُوراً } أي مغلوبَ العقلِ قد سُحِرَ ، وأُزيلَ عن حدِّ الاستواءِ.
சூனியக்காரர் என்றும் அவர்கள் கூறினார்கள். சூனியம் செய்யப்பட்ட பைத்தியக்காரர் என்றும் கூறினார்கள். ஸூனியம் செய்யப்பட்டதால் அறிவு கெட்டு விட்டவர்; நிதானத்தை இழந்தவர் என்றும் கூறினார்கள் என்று தபரி அவர்கள் கூறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா? சம்மந்தமில்லாமல் உளறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா?
இவர்கள் மதிக்கும் சவூதியின் பெரிய ஆலிம் இஸ்மாயீல் சலஃபி கூறுவது பொய் என்கிறாரே அதற்கு என்ன சொல்லப் போகிறார்?
مجموع فتاوى ورسائل ابن عثيمين - (2 / 180)
ولكن هذا لا شك أنه لا يستلزم موافقة هؤلاء الظالمين بما وصفوا به النبي ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ لأن أولئك يدعون أن الرسول ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مسحور فيما يتكلم به من الوحي ، وأن ما جاء به هذيان كهذيان المسحور
இவர் வஹீ என்று கூறும் விஷயங்களில் சூனியம் செய்யப்பட்டு விட்டார். இவர் சொல்வது சூனியம் செய்யப்பட்டவனின் உளறல் போல் உள்ளது என்று காஃபிர்கள் விமர்சனம் செய்ததாத இப்னு உஸைமீன் அவர்கள் கூறுகிறாரே?
ஆக இவரது இந்த வாதத்திலும் அறிவு சார்ந்த விஷயம் இல்லை. அறியாமையின் திரட்டாகவே இது அமைந்துள்ளது.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக யார் கூறினாலும் எந்த நூலில் அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது பொய் தான் என்பது நிரூபணமாகிறது.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினேழு
அடுத்ததாக பீஜே எடுத்து வைக்கும் வாதம் இதைத் தூக்கி அடிக்கும் வகையிலும் குர்ஆனை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளதை நாம் காண்போம்.
சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியக்காரர் என்று அர்த்தம் செய்ய வேண்டும் என்பதைப் பின் வருமாறு எழுதி நியாயப்படுத்துகிறார்.
அல்குர்ஆனின் இலக்கிய நடை
இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.
அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35 ஆம் வசனம் தஃவீலா என்றும், 36 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37 ஆம் வசனம் தூலா என்றும், 38 ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39 ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40 ஆம் வசனம் அழீமா என்றும், 41 ஆம் வசனம் நுபூரா என்றும், 42 ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ஆம் வசனம் கபீரா என்றும், 44 ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46 ஆம் வசனம் நுபூரா என்றும், 47 ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் மஸ்ஹூரா என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் மஸ்ஹூரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ஸாஹிரா என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சூனியக்கார மனிதனைத் தான் இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.
பீஜேயின் பதில்
இவரைப் போல் திருக்குர்ஆனை வேறு எவரும் இழிவுபடுத்தி இருக்க முடியாது என்று கருதும் வகையில் இவரது இந்த வாதம் அமைந்துள்ளது.
இஸ்மாயீல் சலஃபி அழகிய முறையில் தோளில் துண்டு போடும் வழக்கமுடையவர் என்று வைத்துக் கொள்வோம். தோளில் போட துண்டு கிடைக்காத போது வேட்டியை அவிழ்த்து அதைத் தோளில் போட்டுக் கொண்டார் என்று கூறினால் அது எந்த அளவுக்கு இஸ்மாயீல் சலஃபியைக் கேவலப்படுத்துமோ அந்த அளவுக்கு இவர் குர்ஆனைக் கேவலப்படுத்துகிறார்.
மொழி நடைக்கு திருக்குர்ஆன் முக்கியத்துவம் கொடுப்பது உண்மை தான். அதை விட கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கருத்தைப் புறம் தள்ளிவிட்டு வார்த்தைகளை அழகுபடுத்துவது குர்ஆனின் தன்மை இல்லை.
தமிழ் அரசியல்வாதிகளும் மேடைப் பேச்சாளர்களும் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். அதில் உருப்படியாக கருத்து எதுவும் இருக்காது. அது போல் தான் குர்ஆன் அமைந்துள்ளது என்று இவர் வாதிடுகிறார். சூனியம் செய்பவர் என்பது தான் இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை; நடையழகுக்காக சூனியம் செய்யப்பட்டவர் என்று அல்லாஹ் கூறி விட்டான் என்று கூறியதன் மூலம் பொருத்தமற்ற சொற்களைப் போட்டு மொழி நடையை குர்ஆன் அழகுபடுத்தியுள்ளது என்ற இந்த வாதம் எவ்வளவு கடுமையானது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கியே தீருவது என்பதற்காக அல்லாஹ்வின் வசனத்திலும் கை வரிசையக் காட்டி விட்டார்.
சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்று சரியான அர்த்தம் செய்யும் போது மொழி நடையும் கருத்துச் செறிவும் திருக்குர்ஆனில் இருப்பது உறுதியாகும். சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொண்டால் வார்த்தை அலங்காரம் தான் இருக்கும். மொழியில் தவறு ஏற்பட்டுவிடும். அதாவது பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி குர்ஆன் மொழிநடையைப் பேணியுள்ளது என்ற நிலை ஏற்படும். அதாவது வேட்டியைக் களைந்து விட்டு தோளில் துண்டு போடும் செயலுக்கு ஒப்ப இது அமையும் என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
அனைத்து இறைத் தூதர்களும் சூனியக்காரர்கள் என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், (இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை. (51:52)
எனக் குர்ஆனும் கூறுகின்றது.
நம் இஷ்டத்துக்கு இல்லாத அர்த்தம் செய்தால் எதையும் முரண்பாடு இல்லை என்று ஆக்கிவிடலாம்.
இஸ்மாயீல் சலஃபி ஒருவரை அடிக்கும் போது இஸ்மாயீல் சலஃபி அடிக்கப்பட்டார் என்று நாம் கூறலாம். அவர் அடிக்கத்தான் செய்தார் அடிக்கப்படவில்லையே என்று யாராவது கேட்டால் அடித்தார் என்ற அர்த்தத்தில் தான் அடிக்கப்பட்டார் என்று கூறினேன் எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.
இஸ்மாயீல் சலஃபிக்கு மூளை இல்லை என்று ஒருவர் கூறுகிறார். ஏன் இப்படிக் கூறினாய் என்று இஸ்மாயீல் சலஃபி கேட்கும் போது மூளை இருக்கிறது என்பதைத் தான் மூளை இல்லை என்ற வார்த்தையால் குறிப்பிட்டேன் என்று கூறினால் இஸ்மாயீல் சலஃபி திருப்திப்பட்டுக் கொள்வார்.
திருடலாம்; விபச்சாரம் செய்யலாம் என்று கூட ஒருவர் பேசி விட்டு திருடக் கூடாது விபச்சாரம் செய்யக் கூடாது என்பது தான் இதன் அர்த்தம் என்று கூறலாம்.
நாம் சொல்லும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பிரச்சனை இல்லை. நான் நினைப்பது தான் அதற்கு அர்த்தம் என்று கொள்கை வகுத்துக் கொண்டால் எதையும் பேசலாம். வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம் என்று ஆகிவிடும். சொந்த வாழ்க்கையில் இதை ஜீரணிக்காத இவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மட்டும் இப்படி கேலிப்பொருளாக ஆக்குகிறார்.
அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று காஃபிர்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று இல்லாத அர்த்தம் செய்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸுக்கு முரண்படாமல் பொருந்திப் போய்விடுமாம். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று பொருள் கொண்டால் பொருந்திப் போகாதோ? இதெல்லாம் ஒரு ஆய்வா?
மஸ்ஹூர் என்பதற்கு என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தைச் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
முந்தைய நபிமார்களைப் பற்றி சூனியக்காரர்கள் என்று சொன்னதால் நபிகள் நாயகத்தைப் பற்றியும் அப்படித்தான் சொல்லி இருப்பார்கள் என்று ஆதாரமற்ற ஊகத்தை திணிக்கிறார். முந்தைய நபிமார்களை சூனியம் செய்பவர்கள் என்று எதிரிகள் கூறியதாக திருக்குர்ஆன் கூறும் போது ஸாஹிர் (சூனியம் செய்பவர்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. எனவே அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை அங்கே கொடுக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஸாஹிர் (சூனியக்காரர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. மஸ்ஹூர் (சூனியம் செய்யப்பட்டவர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. இரண்டு விதமாகவும் விமர்சனம் செய்தனர் என்று தான் அறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். சூனியம் செய்யப்பட்டவர் என்று சொல்லி இருந்தாலும் அதை நான் கருத்தில் கொள்ளமாட்டேன். சூனியம் செய்பவர் என்று என் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்வேன் என்று கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பதினெட்டு
சந்தேக நிவர்த்தி:
மஸ்ஹூர் என்ற பதம் ஸாஹிர் (சூனியக்காரர்) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அறபு மொழி வழக்கின் படியும் அல்குர்ஆன் ஒளியிலும் நாம் விளக்கியுள்ளோம். எனினும், அதற்கான காரணம் கூறும் போது ஓசை நயம், இலக்கிய நயம் குறித்துப் பேசியுள்ளோம். இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் குர்ஆனின் அடிப்படையிலும், குர்ஆன் விளக்கவுரைகளின் அடிப்படையிலும் நாம் கூறியதை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கருதுகின்றோம். இருப்பினும் அல்குர்ஆன் ஓசை நயம் குறித்துக் கவனம் செலுத்துகின்றது என்பதை நிரூபிக்கச் சிறியதொரு உதாரணத்தைத் தர விரும்புகின்றோம்.
அல்குர்ஆனில் மூஸா-ஹாரூன் ஆகிய நபிமார்கள் பற்றிக் கூறும் போது முதலில் மூஸா நபியையும், அடுத்ததாக ஹாரூன் நபியையும் குறிப்பிடப்படும். (2:248, 7:122) 10:75, 21:48, 23:45, 26:48, 37:114, 37:120) இவ்வாறு அனைத்து இடங்களிலும் மூஸா-ஹாரூன் என இடம்பெற்றிருக்க,
சூனியக்காரர்கள் சுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ஹாரூன் மற்றும் மூஸாவின் இரட்சகனை நாம் நம்பிக்கை கொண்டு விட்டோம் எனக் கூறினர்.(20:70)
என மேற்படி வசனத்தில் மட்டும் ஹாரூன் வ மூஸா என மாறி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 7:122, 26:48 ஆகிய வசனங்களும் இதே செய்தியைத் தான் பேசுகின்றது. எனினும், 20:70 இல் மட்டும் ஹாரூன் நபியின் பெயர் முற்படுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த வசனங்களுக்கு முந்திய வசனங்கள் அல்கா, தஸ்ஆ, மூஸா, அஃலா, அதா என இடம்பெறுவதால் இந்த ஓசை நயத்திற்கு ஹாரூன என்பதை இறுதியாக முடிப்பதை விட மூஸா என்பதைக் கொண்டு வருவதே பொருத்தமாகும். இதே போல இதற்குப் பிந்திய வசனங்கள் அப்கா, துன்யா, அப்கா, யஹ்யா, உலா எனத் தொடர்கின்றன. இந்த இடத்தில் வழமை போன்று ஹாரூன் நபியின் பெயரை இறுதியில் போட்டால் ஓசை நயம் அடிபடுகின்றது. எனவே, ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு மூஸா என்ற பதம் இறுதியில் போடப்பட்டுள்ளது.
எனவே, நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தமுடைய ஸாஹிர் என்ற பதம் பயன்படுத்தப்படாமல் மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது!
ஸாஹிர் என்பதற்குப் பகரமாக மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை குர்ஆனின் மூலமே நாம் நிரூபித்திருப்பதால் இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட இந்த வாதத்தின் வலிமை குன்றாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
என்று பயங்கரமான ஆதாரத்தை எடுத்துக் காட்டுகிறார்.
பீஜேயின் பதில்
இரண்டு நபர்களைப் பற்றி பேசும் போது யாரை முதலில் சொன்னாலும் அதில் எந்தக் கருத்துச் சிதைவும் ஏற்படாது. எனவே சில இடங்களில் மூஸா என்பதை முதலில் சொல்லியிருப்பதும், சில இடங்களில் ஹாரூன் என்பதை முதலில் சொல்லி இருப்பதும் இலக்கணத்தில் உள்ளது தான். எனவே குர்ஆன் பொருத்தமற்ற நடையைப் பயன்படுத்தி விட்டது என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால் சூனியம் செய்பவர் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இது போன்றதல்ல. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இவரது இந்த வாதமும் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் திருக்குர்ஆனுடன் அப்பட்டமாக மோதுகிறது என்பதால் எப்படியாவது குர்ஆனுடைய அர்த்தத்தை மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மற்றொரு வாதத்தை வைக்கிறார்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பத்தொன்பது
அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்பவர் என்பது தான் அர்த்தம் என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இன்னொரு அர்த்தமும் செய்யலாம் என்று பின்வருமாறு கூறுகிறார்.
மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற வசனத்திற்கு அறபு மொழி அகராதியின்படி அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் மஸ்ஹூர் என்றால், உணவு உண்பவர் என்ற விளக்கத்தினை அளித்துள்ளனர். தமிழ் மொழிக்கு இது புது விளக்கமாகத் தெரிந்தாலும், பல குர்ஆன் விளக்கவுரைகள் இது குறித்துப் பேசியுள்ளன.
நபி(ஸல்) அவர்களை அவர் மஸ்ஹூரான மனிதர் என்று கூறினர். பிரபலமான கருத்தின்படி சூனியத்தைக் குறிக்கும் மற்றொரு கருத்தின்படி ஸஹ்ர என்றால் நுரையீரலைக் குறிக்கும். அதாவது, நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் உண்டு-குடிக்கக்கூடிய (சாதாரண) மனிதனைத்தான் பின்பற்றுகின்றீர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். (லபீத் இப்னு ரபீஆ எனும்) கவிஞனின் கூற்றும் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞனின் கவிதையும் இந்த மொழி நடைக்குச் சான்றாகும். (சுருக்கம்)
நுரையீரல் உள்ள ஒரு மனிதனைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். அவர் உண்கிறார்; பருகுகிறார்; உணவின் பாலும், பாணத்தின் பாலும் தேவையற்ற ஒரு மலக்கை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே இந்த வசனத்தின் அர்த்தமாகும். (குர்தூபி)
இவ்வாறே மஸ்ஹூர் என்பதற்கு உணவு உண்பவர், சாதாரண மனிதர் என்ற கருத்து இருப்பதாகப் பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். சில அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அங்கீகரிக்கும் அறிஞர்கள் இவரும் எம்மைப் போலவே உணவு உண்ணக்கூடிய சாதாரண மனிதர் இவர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற கருத்தில் நபித்துவத்தை மறுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
26:153, 185 ஆகிய இரண்டு வசனங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்ட பின்னர், நீரும் எம்மைப் போன்ற மனிதர் தான் என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து முஸஹ்ஹரீன் என்ற பதத்தை சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை. எம்மைப் போல உணவு உண்ணக்கூடிய சராசரி மனிதர் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது.
இவ்வாறு நோக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் குறித்து மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் இவரும் எம்மைப் போன்ற மனிதர் தானே என்ற இதே தோரனையில் தான் பேசப்படுகின்றது.
இத்தூதருக்கு என்ன நடந்தது? உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடந்து திரிகின்றார். இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட்டு, அவர் இவருடன் எச்சரிக்கக் கூடியவராக இருக்க வேண்டாமா? என்றும் கூறுகின்றனர். (25:7)
என நபி(ஸல்) அவர்கள் உணவு உண்பவராக இருக்கிறார். அதுவும் கஷ்டப்பட்டு உண்பவராக எம்மைப் போலவே இருக்கின்றார். இப்படிப்பட்ட சராசரி மனிதர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற அர்த்தத்தில் தான் உணவு உண்ணக்கூடிய ஒருவரைத் தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என அநியாயக்காரர்கள் கூறியதாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த அடிப்படையில் நீங்கள் மஸ்ஹூரான ஒருவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டவர் அல்லது சூனியக்காரரை அல்லது உணவு உண்பவரை என்ற எந்த அர்த்தத்தை எடுத்தாலும் அந்த அர்த்தத்திற்கும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரபூர்வமான அறிவிப்புக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.
பீஜேயின் பதில்
மஸ்ஹூர் என்ற சொல்லுக்கு நுரையீரல் உள்ளவர் என்ற பொருள் அரிதாக உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த வசனத்தில் அவ்வாறு பொருள் கொள்வது மடமையாகும். அறிஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அடி சறுக்கும். இது போல் அடி சறுக்கியவர்கள் கூறியதைத் தேடிப் பார்த்து மேற்கண்ட வாதத்தை எடுத்து வைக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுகிறார்கள்; பருகுகிறார்கள் என்று கூறி காஃபிர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறுத்தார்கள். அந்த விமர்சனம் மறுக்கப்படக் கூடியது அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடாமல் இருக்கவில்லை. பருகாமல் இருக்கவில்லை. எனவே இது போல் காஃபிர்கள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. இவர் மட்டும் அல்ல அனைத்து நபிமார்களும் இப்படித் தான் இருந்தனர் என்று அல்லாஹ் அவர்கள் விமர்சனத்துக்கு மேலும் ஆதாரத்தை எடுத்துக் கொடுக்கிறான்.
ஆனால் 17:47,48 வசனங்களில் அல்லாஹ் அவர்களின் விமர்சனத்தை ஏற்கவில்லை. அந்த வசனங்களைப் பாருங்கள்!
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
திருக்குர்ஆன் 17:47,48
முஹம்மது சாப்பிடுகிறார் என்பது இதன் கருத்தாக இருந்தால் உமக்கு எவ்வாறு உதாரணம் கூறுகின்றனர் என்று பார்ப்பீராக என்று அல்லாஹ் ஏன் கூற வேண்டும். சாப்பிடக் குடியவர் என்பது சரியான உதாரணம் தானே? சாப்பிடக் கூடியவர் என்று தெளிவான வார்த்தைகளால் எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. அது தவறான உதாரணம் என்று கூறவில்லை. ஆனால் மஸ்ஹூர் என்று கூறிய பொது அநியாயக்காரர்கள் தான் இப்படிக் கூறுவார்கள் என்கிறான். இது தவறான உதாரணம் என்கிறான். இவ்வாறு கூறுவது வழிகேடு என்கிறான். இந்த இடத்தில் சாப்பிடக் கூடியவர் என்ற அர்த்தம் அறவே பொருந்தாது என்பதை இவ்வசனமே தெளிவுபடுத்தி விடுகிறது.
நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கவும், குர்ஆனை மறுக்கவும் எத்தகைய தந்திரங்களை எல்லாம் கையாள்கிறார் என்பது புரிகிறதா?
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு பத்தொன்பது
இதன் பிறகு தான் தன்னை முழுமையாக இனம் காட்டுகிறார். குர்ஆன் ஹதீஸில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தாலும் அதை உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தாலும் இதற்கு முன் இதை யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று பின்வருமாறு கேட்கிறார்.
இந்த வசனமும், ஹதீஸும் முரண்படுவதாகக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய எந்த அறிஞரும் கருதவில்லை. முற்கால அறிஞர்களில் (முஃதஸிலா போன்ற வழிகேடர்களைத் தவிர) எவரும் இந்த வசனம் அந்த ஹதீஸிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் இந்த வசனங்களுக்கும், ஹதீஸிற்குமிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அனைவரும் குர்ஆனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று கூறுவதா? அல்லது இவர் தான் புரிந்து கொள்வதில் ஏதோ தவறு விடுகின்றார் எனக் கருதுவதா? எது நடுநிலையான முடிவாக இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தவறு வருவதற்கான வாய்ப்பை விட இவர் ஒருவருக்குத் தவறு வருவதற்கான வாய்ப்புத்தானே அதிகமாக உள்ளது?
இவர் இவரது விளக்கவுரையில் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியது நபிமார்களின் தூதுத்துவத்தையே முற்று-முழுதாக உளறல் என்று கூறுவதற்காகத் தான் என்று கூறியிருக்கும் போது, அப்படிக் கூறி விட்டு அந்த அர்த்தத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனத்திற்கும், இந்த நபிமொழிக்கும் முரண்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? எனவே, இந்த ஹதீஸை ஏற்பது குறைஷிக் காஃபிர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது என்ற தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பது தவறானதாகும் என்பது தெள்ளத்-தெளிவாகத் தெரிகின்றது.
பீஜேயின் பதில்
இவருக்கு தக்லீத் நோய், மத்ஹப் நோய் பீடித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதுவரை ஒருவரும் சொல்லா விட்டாலும் சொல்வது சரியா தவறா என்பது தான் மார்க்கத்தில் கவனிக்க வேண்டும்.
மத்ஹப்வாதிகள் எடுத்து வைக்கும் அதே வாதத்தை எடுத்து வைக்கிறார்.
ஆனால் இந்த வாதத்தில் மத்ஹப்வாதிகள் உண்மையாளர்களாக உள்ளனர். இவர் இதில் உண்மையாளர் இல்லை.
இதுவரை உலகத்தில் ஒரு அறிஞரும், ஒரு பிரிவினரும் கூறாத ஒரு கருத்தை விடுபட்ட நபிவழி என்று அறிஞர் இப்னு பாஸ் அவர்கள் ஒரு பத்வா கொடுத்தார். அதைத் தமிழிலும் நூலாக அச்சிட்டு இலட்சக்கணக்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனுப்பினார்கள். இஸ்மாயீல் சலஃபி வகையறாக்கள் மூலமும், மதனிகள் மூலமும் அதை வினியோகமும் செய்தனர். யாரும் சொல்லாத கருத்து என்று இதை இஸ்மாயீல் சலஃபியும், அவரது ஆட்களும் விமர்சனம் செய்தார்களா?
இஸ்மாயீல் சலஃபி வகையறாக்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டுள்ளனர். அறிவியல் கருத்துக்களைக் கூறும் வசனங்கள் பலவற்றுக்கு இது வரை யாரும் சொல்லாத அர்த்தத்தைக் கொடுத்துள்ளனர்.
எனவே இந்த வாதம் அப்படியே வழிகேடர்களின் வாதமாகும்.
யாரும் சொல்லவில்லை என்றால் கூட சொல்லும் கருத்து சரியா என்று தான் பார்க்க வேண்டும். அறிவுப்பூர்வமாக வாதிக்க முடியாத போது மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு நியாயப்படுத்தும் இந்தக் கேவலமான போக்கை இவர் கைவிட வேண்டும்.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு இருபது
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.
தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)
இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.
பீஜே அவர்களது தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம் தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?
இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.
உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?
கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.
நபியவர்கள் தனது மரண வேளையில்,
يا عائشة ما أزال أجد ألم الطعام الذي أكلت بخيبر (صحيح البخاري(
நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?
உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.
கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் பீஜே அவர்களின் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.
யாராலும் கொல்ல முடியாத தலைவர்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. உம்மை இறைவன் காப்பான என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.
திருக்குர்ஆன் 5:67
இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.
இது ஆய்வாளர் பீஜே அவர்களின் தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145 ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?
ஆய்வாளர் பீஜே அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.
5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?
இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?
சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
இவ்வாறு வாதம் செய்யும் இவர் அதில் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை.
குறிப்பாக கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தி விமர்சனம் செய்கிறார்.
ஆய்வாளர் பீஜே அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்று தான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.
5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?
பீஜேயின் பதில்
பீஜே தெரிந்து கொண்டே இந்த வாதத்தை எடுத்து வைப்பதாகக் கூறி நோக்கம் கற்பிக்கிறார். ஆனால் இந்த வாதத்துக்கு முழுத் தகுதி பெற்றவர் இஸ்மாயீல் சலஃபி தான். தெரிந்து கொண்டே உண்மைக்கு மாறான கருத்தை அவர் தான் விதைக்கிறார். எப்படி என்று பார்ப்போம்.
இப்போது திருக்குர்ஆனின் எட்டாவது பதிப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது. முதல் பதிப்பில் இதையும் ஒரு வாதமாக நாம் எடுத்து வைத்திருந்தோம். அடுத்தடுத்த பதிப்புகளுக்காக நாம் மீண்டும் ஆய்வு செய்து வந்த போது இந்த வாதத்தில் சில கேள்விகள் எழுவதையும் அந்தக் கேள்விகளில் நியாயம் இருப்பதையும் அறிந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் பாதுகாப்பைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்பது தான் அதன் கருத்து என்பதால் நாமே கவனித்து அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை நீக்கி விட்டோம். இவர் விமர்சனம் செய்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் நீக்கியதைத் தான் இப்போது பயங்கரமான வாதமாக எடுத்து வைக்கிறார்.
நாம் அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை வைக்கவில்லை என்பதை இவரும் அறிந்திருக்கிறார். அதனால் தான் முதல் பதிப்பில் பீஜே இவ்வாறு குறிப்பிட்டார் என்று அவரே குறிப்பிடுகிறார்.
எந்த மனிதரின் கருத்தை மறுப்பதாக இருந்தாலும் அந்த மனிதர் அந்தக் கருத்தில் இப்போது இருந்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டும். அல்லது அந்தக் கருத்தில் இப்போதும் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் விமர்சிக்கலாம். அந்தக் கருத்தில் அவர் இப்போது இல்லை எனும் போது தெரிந்து கொண்டே அதை விமர்சனம் செய்வது கயமைத் தனமாகும். முதல் பதிப்பில் நான் எழுதியதை அடுத்தடுத்த பதிப்பில் நானே நீக்கிய பிறகு அதை இப்போதும் நான் சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் நேர்மையா? இவர் கேட்ட நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? இத்தனை கேள்விகளும் இவரை நோக்கியே திரும்புகிறது.
இவர் சுட்டிக் காட்டுவதை விட அதிகக் கேள்விகள் அதில் எழுவது நமக்குத் தெரிந்து தான் அந்த வாதத்தை அறவே நீக்கி விட்டோம். அந்த வாதத்தை நாமே மாற்றிக் கொண்டிருக்கும் போது அதற்குப் பதில் சொல்லி நான் அந்தக் கருத்தில் தான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விதைப்பது தான் நேர்மையா? இது தான் பேணுதலா?
குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற அறிவு கிடைக்கும் முன்பு கடந்த காலங்களில் சில பித்அத்களையும் நான் செய்துள்ளேன். அதையெல்லாம் எடுத்துக் காட்டி அதற்கும் இவர் மறுப்பு எழுதினாலும் எழுதுவார் போலும்.
எனவே நாம் இதற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு இருபத்தி ஒன்று
அடுத்ததாக பின் வரும் வாதத்தை எடுத்து வைக்கிறார்.
தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் -இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்- என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும என்று எழுதியுள்ளார்.
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற பொதுத் தலைப்பில் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் என்ற சிறு தலைப்பில் அவர் எழுதியதை அப்படியே கீழே தருகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
திருக்குர்ஆன் 75:16, 20:14
திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம். அதை உமது உள்ளத்தில் ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு என்று திருக்குர்ஆன் கூறியது.
இன்னொரு வசனத்தில் உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர் (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஓத-ஓத ஒலிநாடாவில் பதிவது போல் நபியவர்களது உள்ளத்தில் அது பதியும், அதை அவர் மறக்க மாட்டார். அவரது உள்ளத்தில் பதியும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்றெல்லாம் எழுதி விட்டுத் தன் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர், வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றதல்லவா?
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ள படி கூறினார்கள், மற்ற விஷயங்களில் தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும என்று தனது தர்ஜமாவில் (பக் 1298) குறிப்பிடுகின்றார்.
வஹீயைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். திருக்குர்ஆனில் எந்தத் தவறும் வராது (பார்க்க பிஜே குறிப்பு 351)
(நபியே! குர்ஆன் இறக்கப்படும் போது) அதற்காக நீர் அவசரப்பட்டு உமது நாவை அசைக்க வேண்டாம். நிச்சயமாக அதனை ஒன்றுசேர்ப்பதும் அதனை ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும். (75:16-17)
(நபியே!) நாம் உமக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுவோம். அல்லாஹ் நாடியதைத் தவிர நீர் மறக்கமாட்டீர். (87:6)
நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம். (15:09)
(குறிப்பு: இந்த வசனத்திற்கு பிஜெ விளக்கக் குறிப்பு எழுதும்போது 143ம் குறிப்பில் குர்ஆன் எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட வரலாற்றில் எழுத்துப் பிழை ஏற்பட்டதாக எழுதுகிறார்)
என்றெல்லாம் குர்ஆன் கூறுவதால் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறுவது எப்படி பிஜேயை நகைக்க வைத்தது என்பது புரியாத புதிராக இருக்கின்றது!
நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் வஹீயிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹி வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற நகைப்புக்கிடமான வாதத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட ஹதீஸை நம்புபவர்களுக்குக் குர்ஆனில் சந்தேகம் கொள்ள இடம் இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அது வரை அருளப்பட்ட குர்ஆனை ஓதவைத்து சரி பார்ப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இரு முறை மீட்டிப் பார்த்தார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.
(குறிப்பு: இந்த ஹதீஸில் கூட பிஜே தவறு விட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 36) என்று ஹதீஸுக்கு மாற்றமாக அந்த வருடத்தில என்பதை இடைச் செருகல் செய்துள்ளார்.)
அவரது வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருந்தால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து மீட்டிப் பார்க்கும் போது, இன்னின்ன வசனங்கள் நான் கொண்டு வராமல் நீங்களாகவே சேர்த்துள்ளீர்கள என்று கூறி வஹீயைப் பாதுகாத்திருக்க மாட்டார்களா? அல்லது வஹியில் நபிக்கு தவறு எற்பட்டிருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டியிருக்கமாட்டானா?
குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்துகொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகின்றார்கள். (பக் 1298)
மார்க்கத்தைக் காஃபிர்கள் இப்படிக் கேட்பார்கள் என்ற மனநிலையிலிருந்து ஆய்வு செய்வதுதான் அவரது அண்மைக்கால புதிய நிலைப்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். எதைக் கூறினாலும் அது காஃபிர்களைத் திருப்திப்படுத்துமா? என்றுதான் சிந்திக்கின்றார்.
குர்ஆனில் தவறு இல்லை. அது நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் பதியப்பட்டது என்ற பீ.ஜேயின் கருத்தைக் கூட காஃபிர்கள் ஏற்கும் வண்ணம் நிரூபிக்க முடியாது தானே? இந்த இடத்தில் காஃபிர்கள் திருப்தியடையாத சில விடயங்கள் பற்றிய கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்.
நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. 4 றக்அத்துடைய தொழுகையை இரண்டு றக்அத்திலேயே முடித்து விடுகின்றார்கள். துல்யதைன் என்பவர் நினைவூட்டிய பின்னர் கூட அது அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. துல்யதைன் கூறியதை ஏனைய நபித் தோழர்கள் உறுதிப்படுத்திய பின்னர்தான் அது அவர்களுக்கு நினைவில் வந்தது என ஹதீஸ் கூறுகின்றது.
(முஅத்தா, புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படும் என்பதையும், (18:24) ஏனைய நபிமார்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது (20:115, 18:73) என்பதையும் அல்குர்ஆன் உறுதி செய்கின்றது.
இதை வைத்து சாதாரண ஒரு மனிதர் உங்கள் நபிக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவர் அல்லாஹ் அருளிய பல வசனங்களை மறதியாக விட்டிருக்கலாம். தொழுகையில் ஏற்பட்ட மறதியை துல்யதைன் நினைவூட்டினார். ஆனால் வஹீயில் ஏற்பட்ட மறதியை மனிதர்கள் நினைவூட்ட முடியாதல்லவா? எனவே இறக்கப்பட்ட பல வசனங்களை மறதியாக அவர் விட்டிருக்க வாய்ப்புள்ளதல்லவா? என்று கேட்டால் என்ன கூறுவது? இவ்வாறே தமது மனைவிமார்களின் திருப்திக்காக தேனை ஹராம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் பின்வரும் வசனம் கண்டிக்கின்றது.
நபியே! உமது மனைவியர்களின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் தடைசெய்து கொள்கிறீர்? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ள, நிகரற்ற அன்புடையவன். (66:01)
இதை வைத்து ஒரு காஃபிர் உங்கள் நபி மனைவிமாரைத் திருப்திப்படுத்துவதற்காக ஹலாலை ஹராம் என்று கூறியுள்ளார். மனைவியைக் கணவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பல வழிகள் உள்ளன. மனைவியிடமே இப்படி நடந்துகொண்டவர் மக்களைத் திருப்பதிப்படுத்த எத்தனை ஹராம்களை ஹலாலாக்கினாரோ? எனவேஇ அவர் கூறிய குர்ஆன்-ஹதீஸ் இரண்டுமே சந்தேகத்திற்குரியவை என்று கூறினால் என்ன கூறுவது? அந்த வசனத்தைப் பொய்யானது என்பதா? அல்லது இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதா?
எனவே, காஃபிர்கள் திருப்திப்படுவார்களா? என்பதை வைத்து நாம் குர்ஆன்-ஹதீஸை ஆராய முடியாது! சகோதரர் பிஜே அவர்களும் காஃபிர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இஸ்லாத்தின் கருத்துக்களை திசைதிருப்பவோ அதன் கருத்துக்களுக்கு வலிந்து பொருளுரை செய்யவோ முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.
நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். (பக் 1298) என்று தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.
நபித் தோழர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத்தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார்.
நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.
குர்ஆனைப் பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ் எடுத்துக்கொண்டதாலும், நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம், நீர் அதனை மறக்கமாட்டீர என அல்லாஹ் கூறுவதாலும், நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வஹீயை இறக்கும் போது அது பதிவு செய்யப்பட்டு விடும் என்பதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயைத் தாக்காது என்பதை ஏற்றுக்கொள்வது கடுகளவு ஈமான் உள்ளவர்களுக்கும் கஷ்டமான விஷயம் அல்ல. எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக சூனியத்தின் மூலம் ஏற்பட்ட போலி உணர்வு(பிரக்ஞை)க்கும் வஹீக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் பிஜேயின் இந்தப் பிழையான வாதம் வலுவற்றுப் போய் விடுகின்றது.
பீஜேயின் பதில்
இங்கே இஸ்மாயீல் சலஃபி எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்திலும் அவரது அறியாமையும் புரிந்து கொள்ளும் திறன் குறைவும் பளிச்சிடுகிறது.
முதலில் அவரது கீழ்க்கண்ட வாதத்தை எடுத்துக் கொள்வோம். இந்த வாதத்தில் இவருக்கு இருக்கும் அறியாமையே இவரது ஆய்வுக் குறைவுக்கு அடிப்படையாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். (பக் 1298) என்று தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.
நபித் தோழர்களைப் பொறுத்த வரையில் நபி (ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.
எந்த விஷயத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக இவர் கூறுகிறாரோ அந்த விஷயத்தில் இவர் தான் வரலாற்றைப் புரட்டுகிறார்.
இந்த அடிப்படை விஷயத்தில் இவருக்கு ஏற்பட்ட அறியாமை தான் இங்கே அவர் குறிப்பிடும் மற்ற வாதங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படும் போது முஸ்லிம்கள் என்று ஒரு சாரார் இருந்தது போலவும் காஃபிர்கள் என்று இன்னொரு சாரார் இருந்தது போலவும் இவர் வாதிடுகிறார். அவர்களில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை அப்படியே நம்பியதாகவும், காஃபிர்கள் அப்படியே மறுத்ததாகவும் இவர் வாதிடுகிறார். இவ்வளவு கூறு கெட்ட வாதத்தை உலகத்தில் இவரைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது.
இப்படி உளறி விட்டு நாம் வரலாற்றைப் புரட்டுவதாக அறிவுக் கூர்மையுடன் எழுதியுள்ளார்.
உண்மை என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படும் போது அவர்கள் மட்டுமே முஸ்லிமாக இருந்தார்கள். மற்ற அனைவரும் காஃபிர்களாகத் தான் இருந்தனர். காஃபிர்களாக இருந்த அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்ற அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை.
நம்மைப் போலவே எல்லா வகையிலும் மனிதராக இருப்பவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்பது தான் அனைவரிடமும் இருந்த சந்தேகம். குர்ஆனை இறை வேதம் என்று நம்புவதற்கு முன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்ப வேண்டும். அல்லாஹ்வின் தூதர் என்று நம்பினால் தான் அவர்கள் கொண்டு வந்த வேதம் அல்லாஹ்வுடையது என்றும் நம்ப முடியும். அதன் பின்னர் தான் அவர்கள் கூறும் கட்டளைகளை ஏற்க முடியும்.
ஆனால் இஸ்மாயீல் சலஃபி என்ன கூறுகிறார்? காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர்.
இவரது வாதப்படி எந்தக் காபிரும் முஸ்லிமாகி இருக்க முடியாது. நபித் தோழர்கள் காஃபிர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவர்கள் வானத்தில் இருந்து நபித் தோழர்களாக இறக்கப்பட்டார்கள் என்பது போல் வாதிடுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத் தூதர் என்று சிலர் நம்பி விட்டாலும் அவர்களோடு மட்டும் வழிகாட்டும் பணி முடிந்து விடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் காஃபிர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பணியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டும் இருந்தனர். ஆனால் காஃபிர்கள் இஸ்லாத்துக்கு வர மாட்டார்கள் என்று இஸ்மாயில் சலஃபி ஏறுக்கு மாறாக விளங்குகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்டது முதல் அவர்கள் மரணிக்கும் வரை காஃபிர்கள் குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பி இஸ்லாத்துக்கு வர வேண்டும் என்றால் நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள் நம்புவது அவசியம்.
நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள் நம்பா விட்டால் குர்ஆனை இறை வேதம் என்று அவர்கள் நம்ப மாட்டார்கள். இதை நாம் ஊகத்தின் அடிப்படையில் கூறவில்லை. அல்லாஹ்வே அப்படித்தான் கூறுகிறான். நபிகள் நாயகத்தின் கேரக்டரை எடுத்துக் காட்டி அதையே பிரதானமான ஆதாரமாக எடுத்துக் காட்டி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புமாறு அல்லாஹ் வழிகாட்டுகிறான்.
அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:16
பல வருடங்கள் அந்த மக்களுடன் வாழ்ந்ததை எடுத்துக் காட்டி இறைத் தூதர் என்பதை அல்லாஹ் நிரூபிக்கிறான்.
காஃபிர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாதம் செய்வது பாவம் என்பது போல் இவர் கூறுகிறார். ஆனால் காஃபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் திருப்தியடையும் ஆதாரத்தை இங்கே அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
அதாவது காஃபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வே முக்கியத்துவம் அளிப்பதால் தான் காஃபிர்கள் அறிந்து வைத்திருந்த நபிகள் நாயகத்தின் கடந்த கால வாழ்க்கையை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறான்.
நபிகள் நாயகத்தின் கேரக்டர் சரியாக இருப்பது அவசியம் என்றால் அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையும் வாழ வேண்டும். மன நோயாளியாக இல்லாமல் தெளிவாகவும் இருக்க வேண்டும். இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாக கூறினார்கள் என்று காஃபிர்கள் கருதினால் எப்படி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புவார்கள்? நீர் தான் மன நோயாளி என்று தெரிகிறதே அப்புறம் இறைத் தூதர் என்று என்று எப்படி நாங்கள் நம்புவோம் என்று கேட்பார்களே? இறைத் தூதர் என்று நம்பாவிட்டால் எப்படி இறை வேதம் என்று குர்ஆனை ஏற்றுக் கொள்வார்கள்? அப்படி கேட்க முடியாத பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தது என்பதை இவ்வசனம் சொல்கிறது.
இந்த அடிப்படையில் நாம் எடுத்து வைத்த ஆதாரத்தைப் புரிந்து கொள்ளக் கூட இவருக்கு இயலவில்லை. இதைக் கிண்டல் பண்ணுகிறார். மக்கத்து காஃபிர்களைத் திருப்திப்படுத்துவதில் நான் குறியாக இருப்பதாக இவர் கூறுகிறார்.
குர்ஆன் முதலில் காஃபிர்களைத் தான் அடைந்தது. அது தான் அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது என்ற அடிப்படையை இவர் புரிந்து கொள்ளட்டும். காஃபிர்கள் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டியிருப்பதால் அவர்கள் நம்பும் வகையில் தான் அல்லாஹ்வே தர்க்க வாதங்களை முன் வைக்கிறான். அதனால் தான் காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
எந்த விஷயத்தில் காஃபிர்களும் நம்புவதற்கேற்ப அல்லாஹ் வாதங்களை வைக்கிறானோ அந்த விஷயங்களில் நாமும் அதற்கேற்ப வாதம் செய்ய வேண்டும் என்று நாம் கூறுவது இவருக்கு கேலிக் கூத்தாகத் தெரிகிறது.
குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் சூனியம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குர்ஆனை மறக்காமல் இருக்கலாம் அல்லவா? என்று இவர் வாதிடுகிறார். இது இவருக்கு எதிரான வாதம் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை. குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் அந்தப் பாதுகாப்புக்குப் பங்கத்தை ஏற்படுத்தும் மனநோய் ஏற்பட்டது என்பதை மறுக்கிறோம்.
ஒருவரை மன நோயாளி என்று கூறினால் அவர் எந்தச் செய்தியையும் பாதுகாக்க மாட்டார் என்பது தான் அதன் பொருள்.
மன நோயாளி தான் ஆனால் அனைத்தையும் சரியாக நினைவில் வைத்திருப்பார் என்றால் அது முரண்பாடாகும்.
மறக்க மாட்டார்; ஆனால் மறப்பார் என்று கூறுவது போல் இந்த வாதம் அமையும்.
குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன நோயாளியாக ஆகவில்லை என்று நாம் கூறுகிறோம். மன நோயாளியாக ஆனார்கள் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இந்த அடிப்படையைத் தலைகீழாக விளங்கிக் கொண்டு தனக்கு எதிரான வாதங்களைத் தானே எடுத்து வைக்கிறார்.
குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகத்தின் சிந்தனையைப் பாதுகாக்க வேண்டும். மன நோயாளியாக ஆக்கி விட்டு குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறினால் அதுவே குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?
குர்ஆனைப் பாதுகாத்தல் என்பதில் அவர்களின் நினைவாற்றல் பாதுகாக்கப்படுவதும் அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பதும் அடங்காதா?
மறதி என்பது மனிதனின் இயல்பில் உள்ளது. மறதி இல்லாத ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. யாராலும் தவிர்க்க முடியாத மறதி எனும் இந்தப் பலவீனம் நபிகள் நாயகத்துக்கும் இருந்தது. அனைவருக்கும் இருந்தே தீர வேண்டிய இந்தப் பலவீனம் குர்ஆன் விஷயத்தில் மட்டுமாவது நபிகள் நாயகத்துக்கு இருக்கக் கூடாது என்று அல்லாஹ் சிறப்பு ஏற்பாடு செய்கிறான். குர்ஆனை மறக்கவே முடியாத தனித் தகுதியை அவர்களுக்கு வழங்குகிறான்.
மனதில் பதித்துக் கொள்வதில் மறதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மனநோயை எப்படி கொடுப்பான்? செய்யாததைச் செய்ததாகக் கூறினால் அவர்களது உள்ளத்தின் பாதுகாப்புத் திறன் குறைந்து விட்டது என்பது தான் பொருள். இப்படி இருக்கும் இருக்கும் போது மன நோயாளியாக எப்படி அவர்களை ஆக்குவான் என்று விளங்காமல் தலைகீழாக விளங்குகிறார்.
உனக்கு மறதி ஏற்படாது ஆனால் மன நோய் ஏற்படும் என்று புரிந்து கொள்வது சரியா? மறதியே ஏற்படாது என்றால் மன நோயும் ஏற்படாது என்று புரிந்து கொள்வது சரியா?
பெற்றோரை சீ என்று சொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே சீ என்று சொல்லாமல் அவர்களை அடிக்கலாம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா? சீ என்று சொல்லக் கூடாது என்றால் அடிப்பது அதை விடப் பெரிய விஷயம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு இருபத்தி இரண்டு
இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் என்ன என்பதை பீஜே விவரிக்கும் போது அப்புறப்படுத்தல் என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.
எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது அப்புறப்படுத்தவில்லை, அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்குச் சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.
நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து உமக்கு யு+தன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(பிஜே தர்ஜமா - பக்:1310)
மேற்படி விளக்கத்தில் ஹதீஸில் இடம் பெற்றுள்ளதாக சகோதரர் பிஜே கூறும் முரண்பாடுகளை ஒரு முறை தொகுத்துப் புரிந்து கொண்டதன் பின்னர் அவற்றிற்கான விளக்கத்திற்குச் செல்வது நல்லது எனக் கருதுகின்றேன்.
(1) சூனியம் வைக்கப்பட்ட பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரு முரண்பாடு. (என்பது அவர் வாதம்.)
(2) சூனியம் செய்யப்பட்ட செய்தியை இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசியதன் மூலமாக நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஒரு யூதன் உமக்குச் சூனியம் செய்துள்ளான என்று கூறியதாகவும் வருகின்றது.
(3) நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் கிணற்றிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்ததாகவும், நபியவர்கள் ஆள் அனுப்பி, அவர்கள் அப்பொருளை நபியவர்களிடம் எடுத்து வந்ததாகவும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இந்த முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பது எப்படி?
கூறப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் ஆதாரபூர்வமானவை தாமா? என்பதை ஆராய்வதற்கு முன்னர் இப்படி ஆய்வு செய்து ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஆய்வு அனுகுமுறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.
பிழையான ஆய்வு:
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சில போது தாம் கேட்டவற்றில் முக்கிய பகுதியை மட்டும் கூறினார்கள். சிலர் தாம் கேட்ட அதே வாசகத்தை அறிவிக்காமல் அந்தக் கருத்தைத் தனது வாசகத்தின் மூலம் அறிவிப்பர். இவ்வாறு அறிவிக்கும் போது சின்னச் சின்ன வார்த்தை வேறுபாடுகள் பெரும்பாலான, அதிலும் குறிப்பாக பெரிய ஹதீஸ்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள் ஹதீஸை மறுப்பதற்கான காரணமாக அமையக் கூடாது. அப்படியாயின் ஏராளமான ஹதீஸ்களை மறுக்க நேரிடும். இந்த சூனியம் குறித்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா அவரிடமிருந்து ஹிஸாம் அவரிடமிருந்து 12 மாணவர்கள் செவிமடுத்து அறிவிக்கின்றனர். இந்தப் பன்னிரெண்டு பேரின் வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்படும் வித்தியாசங்கள் நியாயமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஏற்கனவே நாம் குறிப்பிட்ட முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே (ஆதாரமாக எடுக்க முடியாமல்) விழுந்து விடும் எனக் கூறி இரண்டையும் ஏற்கக் கூடாது என சகோதரர் வாதிக்கின்றார். இந்த வாதமும் தவறாகும்.
ஏனெனில் அனைத்து ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்றே கூறுகின்றன. அதில் முரண்பாடு இல்லை. இவரின் வாதப்படி சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா? எப்படி எடுக்கப்பட்டது? என்பதில் தானே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து முரண்பாடே ஏற்படாத சூனியம் செய்யப்பட்டது என்ற தகவலை எப்படி நிராகரிக்க முடியும்? சூனியம் செய்யப்பட்டது என்பது உறுதி. ஆனால், அது எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதைத் தான் உறுதியாகக் கூற முடியாது என்றல்லவா முடிவு செய்ய வேண்டும்?
இவரின் இந்த அனுகுமுறை மூலம் தவறான வழியில் ஆய்வு செய்து பிழையான முடிவை நோக்கிச் சென்றிருப்பது தெளிவாகின்றது.
குர்ஆனில் முரண்பாடா?
இது போன்ற முரண்பாடுகள் தோன்றும் போது உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும். எதிலும் குறை காணும் குணத்துடன் செயல்பட்டால் எல்லாமே பிழையாகத் தான் தென்படும். குர்ஆனில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும். இதற்கு இவர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கும் சில வசனங்களையே உதாரணமாகத் தர விரும்புகின்றேன்.
அ(தற்க)வன், நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்ப(தாகக் கூறுவ)தில் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதைக் கொண்டு வாரும் என்றான்.
அப்போது மூஸா தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
மேலும், தனது கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு (பளிச்சிடும்) வெண்மையாக இருந்தது.
பிர்அவ்னின் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர் என்று கூறினர்.
உங்களை, உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகிறார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என பிர்அவ்ன் கேட்டான்.) (7:106-110)
மேற்படி வசனங்கள் மூஸா நபி அற்புதங்களைச் செய்த போது இவர் கைதேர்ந்த சூனியக்காரர். இந்தச் சூனியத்தின் மூலம் உங்களது பூமியை விட்டும் உங்களை வெளியேற்ற இவர் விரும்புகிறார் என பிர்அவ்னின் சமுகத்தின் பிரமுகர்கள் கூறியதாகக் கூறுகின்றது.
அ(தற்க)வன், நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டுவாரும் எனக் கூறினான்.
அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதோர் பாம்பாகி விட்டது.
மேலும், தனது கையை (சட்டையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையாக இருந்தது.
அ(தற்க)வன், தன்னைச் சூழ இருந்த பிரமுகர்களிடம், நிச்சயமாக இவர் கற்றறிந்த ஒரு சூனியக்காரர் என்று கூறினான்.
தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகின்றார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என்றும் கேட்டான்.) (26:31-35)
மேற்படி வசனங்களில் இவர் சூனியக்காரர்; உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார் என்ன கட்டடையிடுகின்றீர்கள் என பிர்அவ்ன் கூறியதாகக் கூறுகின்றன.
இந்த வாசகங்களை பிர்அவ்ன் கூறினானா? பிர்அவ்னினது சமூகப் பிரமுகர்கள் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பி இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்று கூறுவதா? அல்லது உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபடுவதா? எது இஸ்லாமிய ஆய்வாக இருக்கும்? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாத குர்ஆனை நிராகரிக்கும் குணம் கொண்டவர்கள் இதை முரண்பாடாகப் பார்க்கலாம். முஃமின்கள் முரண்பாடாகப் பார்க்க மாட்டார்கள். அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் குணம் கொண்டவர்கள் தான் வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுக்கும் மனோநிலைக்கு வருகின்றனர்.
அ(தற்க)வர், இல்லை, நீங்கள் போடுங்கள் என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.
அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக நீர்தான் மேலோங்கி நிற்பீர் என நாம் கூறினோம். (20:66-68)
மேற்படி வசனங்கள் சூனியக்காரர்கள் கயிற்றையும், தடியையும் போட்டபோது அவை பாம்புகள் போன்று தென்பட்டன. அதைப் பார்த்து மூஸா அவர்கள் போட்ட போது, நீங்கள் கொண்டு வந்தது சூனியமே! நிச்சயமாக அல்லாஹ் அதை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரின் செயலைச் சீர்செய்ய மாட்டான என்று மூஸா கூறினார்.
நபி பயந்தார் என்று கூறுகின்றன.
குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (10:81-82)
அவர்கள் மேற்படி வசனங்கள் கயிறுகளையும், தடிகளையும் சூனியக்காரர்கள் போட்ட போது மூஸா நபி துணிச்சலுடன், இது சூனியம்; அல்லாஹ் இதை அழிப்பான என்று கூறியதாகக் கூறுகின்றன.
சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது மூஸா நபி பயந்தாரா? துணிச்சலுடன் பேசினாரா? என்ற கேள்விகளை எழுப்பி இந்த வசனங்களுக்கிடையில் முரண்பாடு கண்டால் குர்ஆனின் நிலை என்னவாகும்? என்று சிந்திக்க வேண்டும். எனவே, இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தவறு என்பதை நாம் அறிய முடிகின்றது. உடன்பாடு காணும் எண்ணமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளைத் தேடி நிராகரிப்பதற்கான வழிகளைத் தேட முடியாது! நிராகரிப்பு நிலையிலிருந்து பார்த்தால் இது சரியாகத் தென்பட்டாலும், ஈமானிய மனநிலையிலிருந்து பார்க்கும் போது இது தவறாகத் தெரியும்.
தொடர்ந்து அவர் கூறும் முரண்பாடுகளின் உண்மை நிலை குறித்து ஆராய்வோம்!
சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா?
கடந்த கால அறிஞர்கள் பலரும் இந்த முரண்பாட்டிற்கு(?) உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்கள்! அவர் அளித்த விளக்கத்தை நிச்சயமாக பிஜே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். எனினும் ஹதீஸில் இல்லாத, ஆயிஷா(ரலி) அவர்கள் பயன்படுத்தாத வாசகங்களை இணைத்து, பிஜே எழுதி உடன்பாடு காண முடியாத வகையில் ஹதீஸின் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார். இது தான் பிரச்சினையைப் பூதாகரமாக்கியுள்ளது.
எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ, அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.
ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், உடன்பாடு காண முடியாத சிக்கலையுண்டாக்குவதற்காகவே கிணற்றிலிருந்து என்ற இல்லாத வாசகத்தை வேண்டுமென்றே இணைத்துள்ளார்.
இந்த வாசகம் ஹதீஸில் இல்லாத வாசகம் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. அவரே இந்த ஹதீஸை இதே பகுதியின் முற்பகுதியில் மொழிபெயர்க்கும் போது
அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3268, (தர்ஜமா பக்கம் 1295)
அவரே செய்த இந்த மொழிபெயர்ப்பில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஹதீஸில் இல்லாத அவர் மேலதிகமாகச் சேர்த்த கிணற்றிலிருந்து என்ற வாசகத்தை நீக்கி விட்டு நாம் இந்த முரண்பாட்டுக்கு உடன்பாடு காணும் முயற்சியில் இறங்குவோம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் சென்று சூனியம் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துப் பார்க்கின்றார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, தாம் கண்ட காட்சியை விபரிக்கின்றார்கள். நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்ட போது, இல்லை. அல்லாஹ் எனக்கு சுகமளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் அஞ்சுகின்றேன என்கின்றார்கள்.
நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டது, கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லையா? என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லையா? என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகும்.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலேயே கிணற்றுக்குச் சென்று அதை வெளியில் எடுத்தார்கள் என்று கூறி விட்டு, நீங்கள் வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்கின்றார்கள் என்றால், கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்க முடியாது. காரணம், எடுத்ததாக அவர்களே கூறுகின்றார்கள்.
அஹ்மதில் இடம்பெற்ற அறிவிப்பில்,
நீங்கள் அதை மனிதர்களுக்காக வெளிப்படுத்த வேண்டாமா? என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது. எனவே, வெளிப்படுத்தினார்கள என்று வருவது கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது; வெளிப்படுத்தவில்லை என்பது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கூறுகின்றது. இரண்டும் வேறு வேறு அம்சங்களாகும். இந்த வேறுபாடு குறித்து அறிஞர்கள் பேசியுள்ளனர். இதை அறிந்ததனால் இந்த வேறுபாட்டை மக்கள் புரிந்து உண்மையை உணர்ந்து கொள்ள இடமளிக்காத வகையில் ஆயிஷா (ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து என்ற இல்லாத வாசகத்தை நுழைத்துள்ளார். இதன் மூலம் எடுக்கப்பட்டது; எடுக்கப்படவில்லை என்ற இரு செய்தியும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது; கிணற்றிலிருந்து எடுக்கப்படவில்லை என ஹதீஸ் கூறுவதாகச் சித்தரித்துள்ளார். முரண்பாட்டைத் தானாக உண்டுபண்ணியுள்ளார்.
எந்தப் பொருட்களில் சூனியம் செய்யப்பட்டதோ, அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) கேட்காத வாசகத்தை அவர்களது ஹதீஸில் நுழைத்தது பகிரங்க மோசடியாகும். இந்த இவரது மோசடியை நீக்கி விட்டால் ஹதீஸில் முரண்பாடு இல்லை என்பது புரிந்து விடும்.
அல்குர்ஆனின் 22:47, 32:5 ஆகிய வசனங்கள் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் எமது கணிப்பின் படி ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்று கூறுகின்றது. 70:4 ஆம் வசனம் 50 ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்கின்றது. இது குறித்து பிஜே விரிவாக விளக்கமளிக்கும் போது விளக்கக் குறிப்பு 293 இல்;
ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை (பக்கம் 1249) என்று குறிப்பிடுகின்றார்.
இதே போன்று வெளிப்படுத்தப்பட்டது என்பதும், வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் முரண்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிப்படுத்தப் பட்டது என்பது கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் கூறுகின்றது; வெளிப்படுத்தப்படவில்லை என்பது அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுகின்றது என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவாகி விடும்.
பீஜேயின் பதில்
அறிவிப்பாளர்களின் வார்த்தைகளில் வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து ஒன்றுக்கொன்று நேர் முரணாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புகிறார்.
இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்கண்ட ஹதீஸ்களை மறுப்பதாகவும் இவர் வாதிடுகிறார். குர்ஆனுக்கு முரண்படுவதால் தான் மறுக்கிறோம். முரண்பாடுகள் இது சரியான செய்தி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது என்று தான் நாம் கூறுகிறோம்.
சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறித்து அந்த ஹதீஸ்கள் கூறுவது என்ன என்பதை அந்த ஹதீஸ்களின் வாசகத்தை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு சொல்லுக்கு நம் இஷ்டத்துக்கு ஏற்ப அர்த்தம் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்று கூறக் கூடாது. ஆனால் இவர் ஒரு சொல்லுக்கு ஒரு இடத்தில் ஒரு அர்த்தமும் இன்னொரு அறிவிப்பில் உள்ள அதே சொல்லுக்கு வேறு அர்த்தமும் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார்.
இது குறித்து புகாரியில் இடம் பெற்ற நாம் சுட்டிக்காட்டிய அந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.
இது புஹாரியில் 5765வது ஹதீஸ். இதற்கு நாம் பொருள் செய்தால் அதற்கு இஸ்மாய்யீல் சலஃபி நோக்கம் கற்பித்து விடுவார். எனவே ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கத்தையே எடுத்துக் காட்டுகிறோம்.
5765- حدثني عبد الله بن محمد قال : سمعت ابن عيينة يقول أول من ، حدثنا به ابن جريج يقول ، حدثني آل عروة ، عن عروة فسألت هشاما عنه فحدثنا ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ، قالت كان رسول الله صلى الله عليه وسلم سحر حتى كان يرى أنه يأتي النساء ، ولا يأتيهن قال سفيان وهذا أشد ما يكون من السحر إذا كان كذا فقال يا عائشة أعلمت أن الله قد أفتاني فيما استفتيته فيه أتاني رجلان فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال الذي عند رأسي للآخر ما بال الرجل قال مطبوب قال ، ومن طبه قال لبيد بن أعصم رجل من بني زريق حليف ليهود كان منافقا قال وفيم قال في مشط ومشاقة قال وأين قال في جف طلعة ذكر تحت رعوفة في بئر ذروان قالت فأتى النبي صلى الله عليه وسلم البئر حتى استخرجه فقال هذه البئر التي أريتها وكأن ماءها نقاعة الحناء وكأن نخلها رؤوس الشياطين قال فاستخرج قالت فقلت أفلا أي تنشرت فقال أما والله فقد شفاني وأكره أن أثير على أحد من الناس شرا.
5765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கி விட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான் குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லி விட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள். நான், தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்து விட்டான். (சூனியப் பொருளைத் திறந்து காட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
நூல் : புகாரி 5765
மேற்கண்ட ஹதீஸின் அரபு மூலத்தில் இஸ்தக்ரஜ என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் வெளியேற்றுதல் என்பதாகும். இந்த இரண்டு இடங்களிலும் சூனியம் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்தார்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதாவது சூனியம் வைக்கப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது. திறந்து காட்டவில்லை என்பதற்கு தனஷ்ஷர்த்த என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.
3268- حدثنا إبراهيم بن موسى ، أخبرنا عيسى عن هشام ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ،- قالت سحر النبي صلى الله عليه وسلم وقال الليث كتب إلي هشام أنه سمعه ووعاه ، عن أبيه ، عن عائشة ، قالت : سحر النبي صلى الله عليه وسلم حتى كان يخيل إليه أنه يفعل الشيء وما يفعله حتى كان ذات يوم دعا ودعا ثم قال أشعرت أن الله أفتاني فيما فيه شفائي أتاني رجلان فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما للآخر ما وجع الرجل قال مطبوب قال ، ومن طبه قال لبيد بن الأعصم قال في ماذا قال في مشط ومشاقة وجف طلعة ذكر قال فأين هو قال في بئر ذروان فخرج إليها النبي صلى الله عليه وسلم ثم رجع فقال لعائشة حين رجع نخلها كأنها رؤوس الشياطين فقلت استخرجته فقال : لا أما أنا فقد شفاني الله وخشيت أن يثير ذلك على الناس شرا ثم دفنت البئر.
3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று பதிலளித்தார். (அவன் சூனியம் வைத்தது) எதில்? என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.
நூல்: புகாரி 3268
இந்த ஹதீஸிலும் அதே இஸ்தக்ரஜ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அதை வெளியே எடுத்தீர்களா என்று கேட்ட போது இல்லை என்று நபிகள் நாயகள் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. மேலும் வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது முதல் ஹதீஸ் அப்பொருளை வெளியே எடுத்தார்கள் என்று சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது. அதைத் திறந்து மக்களுக்குக் காட்டவில்லையே தவிர பொருளை வெளியே எடுத்தது உறுதி என்பது முதல் ஹதீஸில் இருந்து தெரிகிறது.
ஆனால் இரண்டாம் ஹதீஸில் அப்பொருளை வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.
இது இரண்டும் முரணா இல்லையா என்பதை மேற்கண்ட ஹதீஸின் வாசகத்தை வைத்துக் கூற வேண்டும். ஆனால் வெளியேற்றுதல் என்ற அர்த்தம் உடைய இஸ்தக்ரஜ என்ற சொல்லுக்கு ஒரு இடத்தில் செய்தியை மக்களிடம் பரப்புதல் என்றும் இன்னொரு இடத்தில் வெளியேற்றுதல் என்றும் தன்னிஷ்டத்துக்கு அர்த்தம் செய்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார் இஸ்மாயீல் சலஃபி.
மேலும் இந்த இரண்டாவது ஹதீஸில் கிணறைத் தூர்த்தார்கள் என்று கூறப்பட்டு இஸ்மாயீல் சலஃபி பொய் சொல்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
பொருளை வெளியே எடுத்து விட்டால் கிணறைத் தூர்க்க வேண்டியதில்லை.
அப்பொருளை கிணற்றில் வைத்து கிணறு மூடப்பட்டது என்ற கருத்தும்
அப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது ஆனால் உடைத்துக் காட்டவில்லை என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதா இல்லையா?
இது வார்த்தையில் ஏற்பட்ட வித்தியாசமா? கருத்தில் உள்ள முரண்பாடா?
கிணற்றில் என்று நாம் இடைச் செருகல் செய்ததால் தான் குழப்பமாகத் தெரிகிறதாம். இல்லாவிட்டால் குழப்பமே இல்லையாம். இப்படி உளறுகிறார்.
வெளியேற்றுவது என்று கூறப்பட்டால் எதை வெளியேற்ற முடியுமோ எதில் இருந்து வெளியேற்ற முடியுமோ அதைத் தான் கூறுகிறது என்பது சாதாரணமாக எவருக்கும் தெரியும் உண்மை தான். கிணற்றில் இருந்து அப்பொருளை வெளியேற்றுவதைப் பற்றி தான் அது கூறுகிறது என்பது கூட விளங்காமல் இப்படி வார்த்தை ஜாலம் காட்டுகிறார். கிணற்றில் இருந்து என்ற வார்த்தை இல்லாமலே அவர் விளக்கிக்காட்டட்டுமே?
வெளியேற்றினார்கள் என்பதற்கு பரப்பினார்கள் என்று இல்லாத அர்த்தம் செய்யாமல் வெளியேற்றினார்கள் என்று சரியான அர்த்தம் செய்யட்டும். அதன் பின் எதில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை இஸ்மாயில் சலஃபி விளக்கட்டுமே?
ரஹ்மத் ட்ரஸ்ட் செய்தது போல் சரியாக அர்த்தம் செய்தால் அதில் கிணற்றில் இருந்து என்ற கருத்தைத் தவிர வேறு கருத்து வராது.
அவர் விருப்பப்படி கிணற்றில் என்று குறிப்பிடாமல் பார்த்தாலும் முரண்பாடு இருப்பது உறுதியாகிறது..
பின்வரும் ஹதீஸும் இதே கருத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.
5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப் பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனி டம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் (எனவே தான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும் என்று காணப் படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே முஷாதத் (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே முஷாகத் (சணல் நார்) எனப்படும்.
நூல் : புகாரி 5763
இதோடு முரண்பாடு முடியவில்லை.
இஸ்தக்ரஜ என்ற சொல் இல்லாமல் அக்ரஜ என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியும் சில அறிவிப்புக்கள் உள்ளன.
6391- حدثنا إبراهيم بن منذر ، حدثنا أنس بن عياض عن هشام ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم طب حتى إنه ليخيل إليه قد صنع الشيء وما صنعه وإنه دعا ربه ثم قال أشعرت أن الله قد أفتاني فيما استفتيته فيه فقالت عائشة فما ذاك يا رسول الله قال جاءني رجلان فجلس أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما لصاحبه ما وجع الرجل قال مطبوب قال من طب قال لبيد بن الأعصم قال فيما ذا قال في مشط ومشاطة وجف طلعة قال فأين هو قال في ذروان وذروان بئر في بني زريق قالت فأتاها رسول الله صلى الله عليه وسلم ثم رجع إلى عائشة فقال والله لكأن ماءها نقاعة الحناء ولكأن نخلها رؤوس الشياطين قالت فأتى رسول الله صلى الله عليه وسلم فأخبرها ، عن البئر ، فقلت : يا رسول الله فهلا أخرجته قال أما أنا فقد شفاني الله وكرهت أن أثير على الناس شرا.
6391 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.
-தர்வான் என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-
பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணை யாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவே தான் அதை வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
நூல் : புகாரி 6391
அந்தப் பொருளை வெளியே எடுக்கவில்லை என்று தெளிவாக இந்த அறிவிப்பு கூறுகிறது. வெளியே எடுத்தார்கள் என்ற அறிவிப்பு அதாவது பொருளை வெளியே எடுத்தார்கள்; ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்ற அறிவிப்புடன் இது நேரடியாக மோதி சந்தேகத்தை அதிகமாக்குகிறதா இல்லையா?
வெளியே எடுத்தார்கள் என்பதைத் தெளிவாகக் கூறும் முஸ்லிம் அறிவிப்பில் அதை நீங்கள் தீயில் போட்டு எரிக்கவில்லையா என்று கேட்டதாக உள்ளது.
5833 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَسَاقَ أَبُو كُرَيْبٍ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ وَقَالَ فِيهِ فَذَهَبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ. وَقَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَخْرِجْهُ. وَلَمْ يَقُلْ أَفَلاَ أَحْرَقْتَهُ وَلَمْ يَذْكُرْ فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ
அறிவிப்புகளுக்கிடையில் முரண்பாடு இருப்பது பற்றி நாம் மேலோட்டமாகவே குறிப்பிட்டோம். முரண்பாடு இல்லாமல் ஒரே விதமாக அறிவிக்கப்பட்டாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரே காரணத்துக்காகவே அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்.
ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் செய்து காட்டி அந்த அர்த்தங்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்காமல் இல்லாத அர்த்தத்தைக் கொடுத்து முரண்பாடு இல்லை என்று கூறுகிறார் என்பது தெளிவாகிறது.
போகிற போக்கில் குர்ஆனில் முரண்பாடு என்று இவர் உளறி இருப்பதற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை. யரெல்லாம் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்பட்டாலும் ஏற்க வேண்டும் என்று மன முரண்டாக வாதிடுகிறார்களோ அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் குர்ஆனைப் பற்றிய மதிப்பை அல்லாஹ் நீக்கி விடுவதை நாம் காண்கிறோம். அதன் வெளிப்பாடு தான். இது.
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு இருபத்தி மூன்று
அடுத்து சூனியம் செய்யப்பட்ட பொருள் எடுக்கப்பட்டது குறித்து நஸயீ, அஹ்மத் ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அது பலவீனமானது என்றும் அஃமஷ் அவர்கள் ஹதீஸில் மோசடி செய்பவர் என்றெல்லாம் அவர் எழுதி தன் அறியாமையைப் பின் வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.
இவை முரண்பாடுகள் தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.
பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.
அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.
(1) அல் அஃமஷ் என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், இன்னாரிடம் நான் கேட்டேன என்று தெளிவாக அறிவிக்காமல் அன் அனா என்று கூறப்படக் கூடிய விதத்தில் அவர் மூலம என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அஃமஸ மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.
(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.
அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.
அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என சகோதரர் பிஜே வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் பிஜே இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் எனப் பிஜே மீது நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த அடிப்படையில் நல்லெண்ணம் வைப்பதற்குக் கூடப் பிஜே செய்துள்ள திருவிளையாடல இடந்தராமல் போகின்றது.
113, 114 வது அத்தியாயங்கள என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது
ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.
ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் பிஜே எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.
அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் - இந்தத் தொடரில் தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)
இதில் ஒன்றை ஏற்று பார்த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர் அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார்;. தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
பீஜேயின் பதில்
நம்மைப் பொருத்தவரை இவர் சுட்டிக்காட்டும் இந்த ஹதீஸ்கள் மட்டுமின்றி நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களுமே இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் நமது நிலை.
இந்த நிலையில் அவர் பலவீனமானது என்று ஒப்புக் கொள்ளும் ஒரு ஹதீஸை நாம் பலமானது என்று கூறும் அவசியம் நமக்கு இல்லை. அவரது ஆதாரத்தில் ஒன்று குறைந்து விட்டதால் நமக்கு நல்லது தான். எனவே அவர் பலவீனமானது என்று தள்ளி விட்ட ஹதீஸை நாமும் விட்டு விடுகிறோம். அவர் பலமானது என்று கருதும் மேற்கண்ட அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாட்டுக்கு உரிய முறையில் விளக்கம் தரட்டும். அல்லது குர்ஆனுக்கு முரண்படுவதால் அவற்றை நாமும் நிராகரிக்கிறோம் என்று கூறட்டும்.
113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டது என்ற கருத்தில் உள்ள ஹதீஸும் நம்மைப் பொருத்தவரை இட்டுக் கட்டப்பட்டவை தான். குர்ஆனுடன் மோதும் காரணத்துக்காக அது பலவீனமானது எனும் போது அறிவிப்பாளர் குறித்து அலசும் அவசியம் நமக்கு இல்லை.
அறிவிப்பாளர் பலமாக இருந்தாலும் குர்ஆனுடன் மோதினால் ஏற்க மாட்டோம் என்ற நமது நிலைபாடு அவருக்கு இன்னும் புரியவில்லை. அவரைப் போலவே நாமும் கருத்து கொண்டிருப்பதாக எண்ணி நிழலுடன் சண்டை போடுகிறார். தள்ளுபடி செய்ய வேண்டிய செய்திகளில் அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் பயனற்ற வாதங்களை எடுத்து வைத்து நேரத்தைப் போக்கி இருக்கிறாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை மறுத்து நாம் எடுத்து வைத்த எந்த ஆதாரத்துக்கும் உருப்படியான பதில் தரவில்லை,
இஸ்மாயீல் சலஃபியின் மறுப்பு இருபத்தி நான்கு
தன்னுடைய ஏழாவது தொடரை முடிக்கும் போது
இன்ஷா அல்லாஹ்! முடிவுரையுடன் இந்தத் தொடர் முற்றுப் பெறுகின்றது. தர்ஜமாவில் அவர் குறிப்பிட்டுள்ள ஏனைய சில ஹதீஸ்களுக்கான விளக்கங்களையும் சுருக்கமாக முன்வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
பீஜேயின் பதில்
என்று குறிப்பிட்ட அவர் எட்டாவது அதாவது இறுதித் தொடரில் அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
கட்டுரையின் தலைப்பே மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பது தான். சூனியம் பற்றி சில சமாளிப்புகளோடு முடித்துக் கொண்டு தலைப்பையே வாபஸ் பெற்று விட்டார்.
எந்தெந்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கும் முரண்படுகின்றன என்று நாம் பட்டியல் போட்டு விளக்கினோமோ அவற்றுக்கு எல்லாம் பதில் தரப்படும் என்று கூறி விட்டு அதை அம்போ என்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். இதன் பின் மீண்டும் அந்த ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி மறுப்பு எழுதிய பின்பும் பால் குடி உள்ளிட்ட பல ஹதீஸ்களுக்கு இன்னும் பதிலைக் காணோம்.
மாதங்கள் முடிந்து வருடத்தை நெருங்கிய பின்பும் அந்த ஹதீஸ்கள் பற்றி வாய் திறக்க முடியவில்லை என்பதில் இருந்தே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் மார்க்க ஆதாரமாகாது என்பது உறுதியாகிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் செய்ய முடியாது என்பது குறித்து அவர் செய்த அனைத்து விமர்சனங்களுக்கும் ஒன்று விடாமல் பதில் அளித்துள்ளோம். இப்பகுதியை இத்துடன் நிறைவு செய்கிறோம்.
முடிவுரை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை என்பதற்கு நாம் எடுத்து வைத்த வாதங்களை சுருக்கமாக முன்வைக்கிறோம்.
முதல் வாதம்
மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான்.
மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர்.
மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும்.
இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது.
இரண்டாவது வாதம்
தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார். இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும்.
இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏது நடக்கவில்லை என்பதில் இருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி.
மூன்றாவது வாதம்
இறை வேதத்தை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம்.
நான்காவது வாதம்
நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்
திருக்குர்ஆன் 25:32
ஒட்டு மொத்தமாக குர்ஆன் அரூளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது.
ஐந்தாவது வாதம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்ட்வர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான். சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட் முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி.
ஆறாவது வாதம்
திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான்.
இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும்.
இப்படி ஆதாரங்களை எடுத்துக் காட்டியே சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் மறுத்துள்ளோம்.
இந்த வாதங்கள் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலஃபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம்.
சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது அது பற்றிய ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன. எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்றும் சுட்டிக்க்காட்டி அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.
அந்த அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. மேலே நாம் சுட்டிக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம்.
18.11.2009. 11:49 AM
சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode