Sidebar

24
Fri, May
315 New Articles

ஐந்து கலிமாக்கள் உண்டா?

இதர நம்பிக்கைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஐந்து கலிமாக்கள் உண்டா?

அப்துல் அலீம்

பதில் :

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள்.

ஐந்து கலிமாக்கள் என்று சில சொற்களை உண்டாக்கி

கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர்

என்று பெயர் வைத்துள்ளனர்.

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளன என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஐந்து கலிமாக்கள் இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும், பாவமும் ஆகும்.

இவர்கள் கற்பனை செய்த ஐந்து கலிமாக்களில் ஐந்தாம் கலிமாவை எடுத்துக் கொள்வோம்.

ரத்துல் குஃப்ர் என்ற பெயரில் இவர்கள் கற்பனை செய்த அந்தக் கலிமா இது தான்:

  1. கலிமா ரத்துல் குஃப்ர்

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅன் வஅன அஃலமு பிஹி வஅஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி. துப்த்து அன்ஹு வதபர்ரஃத்து மினல்குஃப்ரி, வஷிர்க்கி, வல்மஆசி குல்லிஹா. வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.

இப்படி ஒரு சொற்றொடரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில்லை. கலிமா என்ற பெயரிலும் கூறவில்லை. திக்ரு என்ற அடிப்படையிலும் கூறவில்லை. இதை நபித்தோழர்களில் யாரும் கூறவில்லை.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் இதை யாரோ உருவாக்கி பரப்பியுள்ளனர். அதை அப்படியே நம்பும் அளவுக்கு முஸ்லிம்கள் மார்க்க அறிவற்றவர்களாக இருந்துள்ளனர்.

கலிமா தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் ஆதாரமில்லாமல் கற்பனை செய்த நன்காம் கலிமா இது தான்:

  1. கலிமா தவ்ஹீது

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.

மேற்கண்ட கலிமாவின் வாசகங்கள் சில ஹதீஸ்களில் வந்துள்ளது என்றாலும் அந்த ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரின் வழியாக வரவில்லை. மேலும் பலவீனமான அந்த ஹதீஸ்களும் ஈமானின் கடமை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை.

மூன்றாம் கலிமா என்ற பெயரில் இவர்கள் கடமையாக்கியுள்ள சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்துள்ளனர். ஆனால் ஈமானுக்கு ஐந்து கடமைகள் உள்ளதாகவும், அதில் இது மூன்றாவது கலிமா என்றும் அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் இதுவும் ஒரு துஆ என்ற அடிப்படையில் இதைக் கற்றுத் தந்துள்ளனர்.

  1. கலிமா தம்ஜீது

சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைக் கற்றுத் தந்தனர். இந்த துஆ தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தால் ஓத வேண்டிய துஆ என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

3868حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَارَّ مِنْ اللَّيْلِ فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي غُفِرَ لَهُ قَالَ الْوَلِيدُ أَوْ قَالَ دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلَاتُه رواه إبن ماجه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு "லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறைவனில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ, நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்.)' என்று கூறிவிட்டு, "அல்லாஹும்ம ஃக்பிர்லீ' (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.

நூல்கள் : இப்னு மாஜா 3868, புகாரி 1154

முதல் கலிமா என்றும் இரண்டாம் கலிமா என்றும் இவர்கள் கூறுவது ஒரே கலிமா தான்.

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பது முதல் கலிமாவாம்.

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்பது இரண்டாம் கலிமாவாம்.

இரண்டும் ஒரே கலிமா தான். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராகவும் ஒப்புக் கொள்வதை இது குறிக்கிறது.

ஒன்றில் சில வார்த்தைகள் கூடுதலாக இடம் பெற்ற போதும் இரண்டில் எதைச் சொன்னாலும் ஒருவர் முஸ்லிமாக ஆகிவிடுவார்.

எனவே ஐந்து கலிமாக்கள் என்பது மார்க்கத்தில் உள்ள விஷயங்களும், மார்க்கத்தில் இல்லாத விஷயங்களும் கலந்த கலவையாக உள்ளது. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.

இது மார்க்க அறிஞர்களால் உருவாக்கப்படாமல் படிக்காத மூடர்களால் தான் உருவாக்கப்பட்டது என்பதற்கு எனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன்.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமல்லாத பல விஷயங்கள் நுழைந்து விட்டன என்ற சிந்தனை அப்போது தான் எனக்குத் தோன்றியது.

நான் மவ்லவி பட்டம் பெறும் போது எனக்கு பதினேழு வயது தான். பட்டம் பெற்று ஊரில் இருந்த போது ரமலான் மாதத்தில் 27 ஆம் இரவு விமரிசையாகக் கொண்டாடப்படும். இரவு முழுவதும் ராத்திபுகளும், திக்ருகளும் களைகட்டும். ஸஹர் நேரத்தில் பல்சுவை உணவுகள் பரிமாரப்படும். இளைஞர்களும், சிறுவர்களும் அதிக அளவில் சாப்பிட வரக் கூடாது என்பதற்காக அப்போது பள்ளிவாசலின் தலைவராக இருந்த ஹாஜியார் ஒருவர் ஐந்து கலிமா தெரிந்தவர்கள் மட்டும் தான் அன்றிரவு பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அவரே வாசலில் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் ஐந்து கலிமா சொல்லச் செய்து சரியாகவோ, ஓரளவு சரியாகவோ சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் ஏழு வருடம் மதரசாவில் நான் படித்திருந்தும் ஒரு நூலிலும் ஐந்து கலிமா என்பதைப் படிக்கவில்லை. அதனால் எனக்கு ஐந்து கலிமா தெரியவில்லை.

சாதாரண பொதுமக்கள் அறிந்துள்ள முக்கியமான கடமை நமக்குத் தெரியவில்லையே என்று வெட்கமாகவும், கோபமாகவும், விரக்தியாகவும் இருந்தது. கலிமா தெரியவில்லை என்று நம்மைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதால் நைஸாக வீட்டுக்கு வந்து விட்டேன். என் தாயாரிடம் இதைக் கூறிய போது ஐந்து கலிமா தெரியாமல் என்ன ஓதினாய்? என்று கேட்டு என் கல்வியையே கேள்விக் குறியாக்கினார்கள்.

மறுநாள் கோபத்துடன் எனது ஆசிரியர்களில் மிகவும் திறமைமிக்கவராக நான் மதித்த ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன்,. முக்கியமான கடமையை நீங்கள் எனக்குச் சொல்லித் தரவில்லையா? அல்லது இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா? என்ற கருத்தில் நான் எழுதிய கடிதத்துக்கு அந்த ஆசிரியர் அவர்கள் எனக்குப் பதில் போட்டார்கள்.

அந்த ஆசிரியர் எழுதிய பதில் இதுதான் (அதாவது கருத்து தான் நினைவில் உள்ளது.)

மதரஸாக்கள் இல்லாத காலத்தில் சில குறைமதியினர் இது போல் பல விஷயங்களை உண்டாக்கி விட்டனர். அதை எதிர்த்து நிற்க வேண்டாம். இல்லாவிட்டால் நம்மை வாழ விட மாட்டார்கள். இதைப் பிரச்சனையாக்காதே. நீயும் அந்தக் கலிமாக்களை அவர்களிடம் கேட்டு மனப்பாடம் செய்து கொள் என்பது அவரது பதிலின் கருத்தாகும்.

அப்போது தான் கத்தம், பாத்திஹா, கூடு, கொடியேற்றம் போன்றவை மத்ஹபு நூல்களில் கூட இல்லாமல் இருந்தும் சமுதாயத்தில் எப்படி நுழைந்தன என்பது அப்போது புரிந்தது. ஆலிம்களுக்குத் தீமைகளை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லை என்பதும் புரிந்தது.

இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account