Sidebar

21
Sat, Dec
38 New Articles

அரபி மொழி தான் தேவமொழியா?

மொழி இன வேற்றுமை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அரபி மொழி தான் தேவமொழியா?

மொழிகள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு சாதனமே தவிர மொழிகளில் தேவ மொழி,தெய்வீக மொழி என்றெல்லாம் கிடையாது. இஸ்லாத்தன் பார்வையில் அனைத்து மொழிகளும் சமமானவையே.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்;  ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் : 14:4

நபிகள் நாயகத்துக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். தமது சமுதாயத்தின் மொழியிலேயே அவர்களுக்கு இறைவன் வேதங்களைக் கொடுத்து அனுப்பியதாக இவ்வசனம் கூறுகின்றது. எல்லா மொழிகளையும் இஸ்லாம் சமமாகவே பார்க்கின்றது என்பதற்கு இது சான்று.

இறுதித் தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழி அரபு என்பதால் அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் அகில உலகுக்கும் தூதர் என்பதால் அரபு மொழியில் அருளப்பட்ட அந்த வேதமே அகில உலகுக்கும் வேதமாக அமைந்து விட்டது.

அகில உலகத்தின் வேதத்தை அரபு மொழியில் ஏன் அருள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். தமிழ் மொழியிலோ, வேறு எந்த மொழியிலோ அருளப்பட்டிருந்தாலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். ஏதாவது ஒரு மொழியில் தான் அருள முடியும். நபிகள் நாயகத்தின் மொழி அரபு மொழியாக இருந்ததால் அரபு மொழியில் அருளப்பட்டது.

திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தையாக நாம் நம்புகிறோம். அல்லாஹ்வின் வார்த்தை என்று அதை நம்புவதால் அதை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட இடங்களில் அப்படியே ஓத வேண்டும். இவ்வாறு ஓதுவது அரபு மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்று கருதக் கூடாது. அல்லாஹ்வின் வார்த்தைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்றே கருத வேண்டும்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழியில் அதற்கு நிகரான வேறு வார்த்தைகளை ஓதுவதும் கூடாது என்பதிலிருந்து அரபு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அறியலாம்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகை போன்ற வணக்கங்களில் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் தமிழாக்கத்தைப் படிக்கலாம். படிக்க வேண்டும். ஏனெனில் குர்ஆன் விளங்குவதற்காகவும் சிந்திப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் : 47:24

புரியாத மொழியில் ஓதுவதை விட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா?  என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானது தான்.

ஆயினும் இதை விட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டில் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மொழி தெரியாதவர்களும், தெரிந்தவர்களும் அதைத் தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது.

நாட்டின் ஒற்றுமைக்காக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு, இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது.

ஒரு பள்ளிவாசலில் ஒரு இறைவனை ஒரே மாதிரியாக வணங்கும் போது ஏற்படும் உலக ஒற்றுமைக்காக - மொழி புரியவில்லை என்ற குறையை சிறிது நேரம் மறந்து விடுவதில் எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடாது.

எந்த இலட்சியமும் இல்லாமல் புரியாத மொழியில் உள்ள பாடல்களை மனிதன் ரசிக்கிறான். மிகப் பெரிய இலட்சியத்துக்காக அல்லாஹ்வின் வேதத்தை அருளப்பட்டவாறு  படிப்பதில் எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது.

அல்லாஹ்வின் வேதத்தை, அருளப்பட்டவாறு தான் தொழுகையில் ஓத வேண்டும் என்றாலும்

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்

என்று அல்குர்ஆன் (2:286) கூறுகின்றது.

அரபு மொழி தெரியவில்லையென்றால் அதைக் கற்றுக் கொள்ள வழியில்லையானால் அதற்காக முயன்றும் முடியவில்லையானால் அவர்கள் அரபு மொழியில் தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account