Sidebar

15
Wed, Jan
34 New Articles

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

விழா கேளிக்கை கொண்டாட்டம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

பெரோஸ் கான்

பதில் :

மார்க்கம் அனுமதித்துள்ள விழாக்கள் இரண்டு பெருநாட்கள் மட்டுமே. இது தவிர வீடு குடியேறுதல், திருமணம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அகீகா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு விருந்தளித்து மகிழ அனுமதி உண்டு.

இவை அல்லாமல் பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள், சுன்னத் செய்தல் என பல விழாக்களை முஸ்லிம்கள் தாமாக உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாக்கள் சமுதாயத்துக்குத் தெரியாமல் நான்கு சுவற்றுக்குள் நடத்தப்படுகின்றவை அல்ல. வீட்டு விழாக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவை சமுதாய மக்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

நம்மிடம் வசதி உள்ளது என்பதற்காக மார்க்கத்தில் சொல்லப்படாத விழாக்களை நாம் நடத்தும் போது அதனால் ஏற்படும் தீய விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படி உருவாக்கப்படும் விழாக்கள் நாளடைவில் அனைவரும் செய்தாக வேண்டிய விழாவாக ஆக்கப்படும். அந்த விழாவை நடத்தாவிட்டால் சமுதாயம் இழிவாகப் பார்க்கும் நிலை ஏற்படும் எனக் கருதி வசதி இல்லாதவர்களும் இவ்விழாக்களை நடத்தும் சமூக நிர்பந்தம் ஏற்படும்.

வசதி படைத்தவர்கள் எப்போதும் வசதி படைத்தவர்களாகவே இருக்க மாட்டார்கள். ஒரு பிறந்த நாளின் போது வசதியுடன் இருந்தவர்கள் அடுத்த பிறந்த நாளின் போது வறுமையில் விழக் கூடிய நிலை ஏற்படலாம். அவர்கள் ஆதரித்த அந்த விழாக்களை நடத்த அவர்களுக்கு வசதி இல்லாமல் போகும். கடன் வாங்கி மேலும் சிரமத்தைச் சுமந்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என்று தூர நோக்குடன் சிந்திப்பவர்கள் மார்க்கம் சொல்லாத விழாக்களைக் கொண்டாடவோ ஆதரிக்கவோ மாட்டார்கள்.

முஸ்லிம் சமுதாயமே ஒரு விழாவை நடத்தும் போது அது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட விழா என்ற கருத்து முஸ்லிம்களிடமும், முஸ்லிமல்லாதவர்களிடமும் ஆழமாகப் பதியும்.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாமியக் கடமை போல் ஆக்கும் குற்றமும் இதனால் ஏற்படும்.

மார்க்கம் அனுமதித்த விழாக்கள் கூட ஆடம்பரம் இல்லாமல் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை உணர வேண்டும்.

மார்க்கம் அனுமதித்த விழாக்களையே வீண்விரயம் இல்லாமல் நட்த்தும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 6:141

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:27

صحيح البخاري

1477 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ "

இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவது, அதிகமாக யாசிப்பது ஆகிய மூன்று செயல்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல் : புகாரி 1477

سنن النسائي

2559 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا فِي غَيْرِ إِسْرَافٍ، وَلَا مَخِيلَةٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வீண்விரயமும், பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். அணிந்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : நஸாயீ

சாப்பிடுவதிலும் ஆடை அணிவதிலும் கூட வீண் விரையம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறியிருக்கும் போது இஸ்லாம் அனுமதிக்காத விழாக்களுக்காக செய்யும் செலவுகள் அனைத்தும் வீண் விரையமாகவே ஆகும். இதைக் கவனத்தில் கொண்டு இது போன்ற விழாக்களைத் தவிர்ப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

13.04.2011. 5:27 AM

Share this:

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account