முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?
கேள்வி:
இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர் தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழிவகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால், முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை. மாறாக, உலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு - தானும் அழிந்து கொண்டு, மற்ற நாட்டினரையும் அழித்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் செய்து கொண்டு இந்த உலகத்தை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்?
இன்று உலகில் கிறிஸ்தவர்கள், கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் ஆரம்பித்து தொண்டாற்றி வருகிறார்கள். அப்படி இந்த உலகத்திற்கு சேவை செய்த, கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என பிறமத நண்பர் கேட்கிறார். இதற்கு விரிவான பதில் அளிக்கவும்.
- அபூ மஸ்ஹாத், நெல்லிக்குப்பம்.
பதில்:
நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம்.
வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...
(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)
பெயர் காலக்கட்டம்(கி.பி.) துறை
அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்) 780-850 கணிதம்-வானவியல்
அல் ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
அல் ஹைதம் (அல்ஹேஜன்) 965-1039 கணிதம்-ஒளியியல்
அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு
இப்னு சீனா (அவிசென்னா) 980-1037 மருத்துவம்
அல் இத்ரீஸி (டிரேஸஸ்) 1100 புவியியல்
இப்னு ருஸ்து (அவிர்ரோஸ்) 1126-1198 மருத்துவம்-தத்துவம்
ஜாபிர் இப்னு (ஜிபர்) 803 பௌதீகம் ஹையான்
அல் தபரி 838 மருத்துவம்
அல் பத்தானி (அல்பதக்னியஸ்) 858 தாவரவியல்
அல் மசூதி 957 புவியியல்
அல் ஜஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவை சிகிச்சை
இப்னு ஹல்தூண் 1332 வரலாறு
இப்னு ஜுஹ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான்.
இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.
மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.
மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர்.
இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.
ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.
அந்த நண்பரின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும்.
நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.
ஆனாலும், இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போராட்டங்களில் கல்வியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.
எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன. ஆனால், முஸ்லிம்களோ முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.
ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல்களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.
இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.
முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
(காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)
கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம்' என்று கூறினார்கள்.
இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதலைப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.
வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.
· வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,
· நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள்,
· மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி
போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.
ஆனால், நாடு விடுதலையடைந்த பிறகு தான் அடிப்படைக் கல்வியிலிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்குப் பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.
ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.
சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.
இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்!
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.
1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி 2) புதுக்கல்லூரி, சென்னை.
3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை.
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்.
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி.
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்.
8) காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை.
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்.
11) முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு.
12) மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை.
14) கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்.
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை. உட்பட 18 கலைக்கல்லூரிகள்,
5 பெண்கள் கலைக் கல்லூரிகள்,
12 பொறியியல் கல்லூரிகள்,
8 பாலிடெக்னிக்குகள்
மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.
இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அந்த நண்பர் கூறுவது மீடியாக்களின் மூளைச் சலவையால் ஏற்பட்ட பாதிப்பு. உண்மை நிலை என்னவென்றால் மற்ற சமுதாயத்தில் தீவிரவாதிகள் சிலர் இருப்பது போல் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் வெறும் தீவிரவாதிகள் என்றோ, போராளிகள் என்றோ மீடியாக்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றனர்.
ஆனால், ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால் மட்டும் அவர்களது நடவடிக்கையுடன் இஸ்லாம் சேர்க்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று தவறாமல் மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகள் கூட யூதத் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதில்லை. இந்தப் பாதிப்பின் காரணமாகவே அவர் இவ்வாறு கருதுகிறார். தக்க சான்றுகளை முன் வைத்து அவரது தவறை உணரச் செய்யுங்கள்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)
முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode