இயேசு போல் ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் வேறு யாரும் உருவானதுண்டா?
கேள்வி
நீங்கள் உங்கள் இயேசு இறை மகனா என்ற புத்தகத்தில் இயேசுவை போலவே யோவானும் தாயின் வயற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருந்தார். எனவே யோவானை கடவுள் என்று சொல்வீர்களா? என்று கிறிஸ்துவர்களைப் பார்த்து கேட்டு இருந்தீர்கள். இதற்கு ஒரு கிறிஸ்துவ சகோதரர் ஒரு விளக்கம் கொடுக்கிறார். அதாவது
“இயேசு பரிசுத்த ஆவியை உடையவராக இருப்பதால் மட்டும் தேவகுமாரன் அல்ல, இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்ததால், தான் அவர் தேவகுமாரன் என்று சொல்கிறோம். பரிசுத்த ஆவியைப் பெற்ற பல நபர்களையும் வசனங்களையும் நீங்கள் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளீர்கள். உங்களால் முடிந்தால், இயேசு (“ஆண் பெண் இயற்கை உடலுறவு முறையில் இல்லாமல், பரிசுத்த ஆவியினால்”) பிறந்தது போல இவ்வுலகத்தில் எத்தனை பேர் பிறந்துள்ளார்கள் என்று சொல்ல முடியுமா?
ஆதாம் தாயுமில்லாமல், தந்தையுமில்லாமல் பிறந்தான் என்று சொல்ல வேண்டாம், ஏனென்றால், ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான், தேவனின் ஆவியிலிருந்து பிறக்கவில்லை. நான் கேட்பது, தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் பிறப்பதைப் பற்றி இல்லை, தேவனுடைய ஆவியினால் உலக முறையின்படி அல்லாமல், பிறந்தவர் யார் ?”
இது அவரது முதல் வாதம்.இன்னொரு வாதத்தையும் வைக்கிறார். அதாவது நீங்கள் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட போது அவரை விட்டு பரிசுத்த ஆவி நீங்கி இருந்தது என்று நீங்கள் எழுதியதற்கு அவர் இப்படி பதில் கூறுகிறார்.
“அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற வசனத்தை பார்த்த பிஜே அவர்களுக்கு ஏன் இதற்கு முன் உள்ள வசனம் தெரியாமல் போனது என்று சந்தேகமாக உள்ளது.மத்தேயு: 4:1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.
மாற்கு: 1:12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் .
லூக்கா 4:1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,
இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றி மூன்று சுவிசேஷங்கள் சொல்கின்றன, இந்த மூன்று நற்செய்தி நூல்களிலும், இயேசு ஆவியானவரினால் தான் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டார் அல்லது ஆவியானவரின் ஏவுதலினால் இயேசு சென்றார் என்று மிகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.” இப்படி செல்கிறது அவரது விளக்கம்.மேலும் அவர் கூறுகிறார்
” சோதிக்கப்படுவது பலவீனமில்ல. ஒருவர் அந்தச் சோதனையில் வெற்றி பெறுகிறாரா என்று தான் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் கூட சைத்தான் அல்லாவை எதிர்த்து பேசினான் .என்று நம்புகிறார்கள். ஆனால் அல்லா அந்தப் பேச்சுக்கு கட்டுப்படாமல் செய்தார் அல்லவா.அது போலதான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும் ”
என்பது அவரது விளக்கம்.
இதற்கான பதில் எவ்வாறு கொடுப்பது?
பதில்
ஆண் பெண் இயற்கை உறவு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.
இயேசு ஆண் பெண் உறவு இல்லாமல் பிறந்திருக்கலாம். ஆனால் அவர் பிறப்பதற்கு ஒரு பெண் தேவைப்பட்டிருக்கிறார்.
பெண்ணின் கருவறையில் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளார்.
பரிசுத்த ஆவியால் மட்டும் உருவானவர் என்றால் பெண்ணின் கர்ப்ப்பை இல்லாமல் ஆகு என்ற உடன் அவர் ஆகி இருக்க வேண்டும்.
மனிதர்களும் மற்ற உயிரினங்களும் எப்படி உருவாகுமோ அது போல் அவர் உருவாகி இருக்கக் கூடாது.
இன்னும் சொல்லப் போனால் இது போல் தந்தை இல்லாமல் ஒரு குழந்தை உருவாகுதல் என்பது இன்று அறிவியலில் சாத்தியமாகி விட்டது.
ஒரு பெண்ணிடமிருந்து மரபணுவை எடுத்து அவளது கர்ப்ப்பையில் வைத்து குழந்தையாக உருவாக்கலாம். இந்த்த் தொழில் நுட்பம் குளோனிங் எனப்படுகிறது. மனிதர்கள் விஷயத்தில் இது செயல்படுத்தாமல் இருப்பதற்கு உலக நாடுகள் தடை விதித்து இருப்பதே காரணம்.
ஆனால் ஆடுகள் பன்றிகள் இன்னும் பலஜீவன்கள் இவ்வாறு ஆண் சேர்க்கை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் பன்றிகளும் ஆடுகளும் கடவுளின் குமாரர்கள் என்று இவர்கள் ஒப்புக் கொள்ளத் தயாரா?
ஆதாம் மண்ணால் படைக்கப்பட்டு ஆகு என்ற உடன் அந்த விநாடியே ஆகி விட்டார். இது தான் எக்காலத்திலும் யாராலும் செய்ய முடியாதது.
மண்ணில் இருந்து மனிதனாக உருவாக்குதலில் கடவுளின் ஆவிக்கு மட்டுமே சம்மந்தம் உள்ளது.
ஆனால் ஆண் இல்லாமல் பெண்ணிலிருந்து ஒரு குழந்தை உருவாவதில் அப்படி இல்லை. ஆதாமைப் போல் உலகம் உள்ளளவும் யாராலும் செய்து காட்ட முடியாது. அவரே இறை மகன் அல்ல என்றால் பெண்ணின் வயிற்றில் படிப்படியாக வளர்ந்தவர் எப்படி இறைமகனாக முடியும்?
உலக நாடுகள் அனுமதி கொடுத்தால் ஏராளமான கன்னிகையின் குமாரன்கள் தோன்றுவார்கள். அப்போது இவர்களின் கடவுள் குமாரன் கோட்பாடு முடிவுக்கு வந்து விடும்.
இயேசு யாரால் சோதிக்கப்பட்டார் என்பது முக்கியம் அல்ல. அவர் சோதிக்கப்பட்டார் என்பதே அவருக்கு மேல் ஒருவன் இருப்பதையும் அவனது கட்டளைப்படி தான் இயேசு செயல்படமுடியும் என்பதையும் கூறவில்லையா?
இயேசு போல் ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் வேறு யாரும் உருவானதுண்டா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode