கேள்வி
அல்லாஹ் சொல்வது எப்போதும் தவறு ஆகாது என்றால் எதற்காக தவ்ராத், இஞ்சில், குரான் என்று வரிசையாக உருவாக்க வேண்டும்? ஒரே இறைவேதமாக அருளியிருக்கலாமே?
பதில்
ஒரே மாதிரியான சட்டத்தை எல்லாக் காலத்துக்கும் போட முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. சந்தர்ப்பம், சூழ்நிலைகளுக்கு ஏற்பவே சட்டங்கள் போடப்பட வேண்டும். அது தான் இறைவனின் அளப்பரிய் அறிவுக்கு ஏற்றதகும்.
இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் எழுதியதை உங்களுக்கு கூடுதல் விளக்கத்துக்காக கீழே தருகிறோம்.
30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?
2:106, 13:39, 16:101 ஆகிய வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது.
இறைவன் அருளிய வசனத்தைஅவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறிடலாமே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.
இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது.
சட்டங்களைப் போடும் போது இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் அதுதான் அறியாமையாகும்.
நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றன. நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்கின்றன. ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும் போது ஊரடங்கு உத்தரவு போடாமல் இருப்பதும் விவேகமாகாது.
ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள்.
இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலை தான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தைத் துவக்கிய போது மக்காவில் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு இருக்கும் போது “திருடினால் கையை வெட்டுங்கள்” எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்கள் கையில் வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தைப் போட முடியும். எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்கள் வழங்குவது தான் அறிவுடமை.
ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு 1967ல் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது.
இறைவசனங்கள் மாற்றப்படாது என்ற கருத்தைச் சில வசனங்கள் (6:34,6:115, 10:64, 18:27, 48:15) தருவதாகவும் இதற்கு மாற்றமாக மேலே கண்ட வசனங்கள் இருப்பதாகவும் சில கிறித்தவ சபையினர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் எடுத்துக் காட்டும் மேலே உள்ள வசனங்கள் வேத வசனங்களை மாற்றுவது பற்றிப் பேசவில்லை. அல்லாஹ் எடுக்கும் முடிவுகள் பற்றியும் அவனது கட்டளைகள் பற்றியும் கூறப்படுகிறது.
ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடி அதற்கான கட்டளையைப் பிறப்பித்து விட்டால் மறுகட்டளை போட்டு அதை யாரும் மாற்றிவிட முடியாது என்ற தனது அதிகாரத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் கட்டளையை மாற்றுபவன் இல்லை என்றால் யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தும் அதில் உள்ளது. அப்படி மாற்றுவதாக இருந்தாலும் நான் தான் மாற்றுவேன் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
திருக்குர்ஆன் வசனங்கள் மாற்றப்படுவது பற்றி இவ்வசனங்கள் பேசவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.
அனைத்தையும் அறிந்துள்ள இறைவன் மாறுபட்ட பல வேதங்களை அருளியது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode