நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?
ஹஸ்ஸான்
பதில்:
நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது.
1037حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ رواه البخاري
இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் (சிலர்), எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!) என்று (மூன்று முறை) கேட்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அங்கு தான் நிலநடுக்கங்களும், குழப்பங்களும் தோன்றும்; அங்கு தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1037
கப்ரு வணங்கிகள் ஏகத்துவத்திற்கு எதிராக இந்த ஹதீஸைக் கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதிக்கு துஆச் செய்யாமல் விட்டுள்ளார்கள்.
இந்த நஜ்த் பகுதி என்பது தற்போதுள்ள ரியாத் எனவும், ரியாத் அரசு கப்ரு தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களை எதிர்க்கக் கூடியது என்பதால் இதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்களின் இக்கூற்றுக்குஇந்த ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை. தங்களுடைய இஷ்டத்துக்கு தவறான விளக்கமளித்து தாங்கள் செய்யும் இணைவைப்புக் காரியங்களை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.
இந்தச் செய்தியில் கூறப்படும் நஜ்த் என்பது எந்தப் பகுதி என்பதைச் சரியாக அறிந்து கொண்டால் இது அவர்களுக்கு எதிரான ஆதாரமாக இருப்பதை அறியலாம்.
நஜ்த் என்ற வார்த்தைக்கு மேடான மேற்குப் பகுதி என்பது பொருளாகும். மதீனாவாசிகளுக்கு மேடான மேற்குப் பகுதி எதுவென்று பார்த்தால் அது தற்போதைய ஈராக் நாடாக அமைந்துள்ளது.
ஹதீஸில் கூறப்பட்டுள்ள நஜ்த் என்பது ஈராக் நாடாகும் என ஹாஃபிள் இன்பு ஹஜர், கத்தாபீ, முஹல்லப் மற்றும் பல அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேற்கண்ட ஹதீஸில் நஜ்த் பகுதியில் தான் நிலநடுக்கங்களும், குழப்பங்களும் தோன்றும் என நபியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அரேபிய தீபகற்பத்தில் அதிகமான நிலநடுக்கங்களுக்கு ஆளான பகுதி ஈராக் ஆகும். மேலும் குழப்பங்களும், பிரச்சனைகளும், வழிகெட்ட கொள்கைகளும், பித்அத்களும் ஈராக்கிலிருந்து தான் முதலில் தோன்றின.
ஒட்டகப் போர், ஸிஃப்பீன் யுத்தம் போன்ற போர்கள் நடந்ததும், இஸ்லாத்தை அழிக்க புறப்பட்ட கவாரிஜ்கள் தோன்றியதும் இந்த ஈராக் பகுதியில் தான். இந்த விளக்கங்களை ஹாஃபிள் இப்னு ஹஜர் அவர்கள் ஃபதஹுல் பாரீ என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளாகிய ஈராக் அமெரிக்காவால் வெற்றி கொள்ளப்பட்டு தற்போது அமெரிக்காவின் அடிமையாக இருந்து வருகின்றது.
ஒவ்வொரு நாளும் குண்டு வெடிப்புகள் நடந்து நாடே நிம்மதியின்றி அல்லோலப்படுகின்றது. கப்ர், வணக்கம் தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்கள் நிறைந்திருப்பதும் இந்த ஈராக் நாட்டில் தான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கப்பட்டு ஆண்டவராக ஆக்கப்பட்டவ்ர முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆவார். முகைதீன் ஆண்டவர் என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது அடக்கத்தலமும் இராக்கின் தலைநகர் பாக்தாதில் தான் உள்ளது.
இணைவைப்புக் காரியங்களிலும், பித்அத்தான் அநாச்சாரங்களிலும், ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது என்பதை இந்தச் செய்தியின் மூலம் நபியவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
02.08.2011. 15:51 PM
நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode