Sidebar

23
Mon, Dec
26 New Articles

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா?

ஹதீஸ் கலை விதிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார். அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டபட்டவை என இலகுவாக ஒதுக்கிவிட முடியும். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று இருந்தால் எமது இரண்டு மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்கள் இவ்வளவு சிக்கலினூடாகவா எங்களுக்குக் கிடைக்கப்பெற்று இருக்கிறது ?

நியாஸ் திஹாரி

பதில் :

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம்.  பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம். விரிவான விளக்கங்களுக்கு ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுமா? என்ற பெயரில் நமது இணையதளத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பார்க்க : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே சேர்க்கப்படுகின்றது. ஏனென்றால் மோசமான நினைவாற்றல், அறிவிப்பாளர் தொடர்பு முறிவு போன்ற காரணங்களால் பலவீனமடையும் ஹதீஸ்கள் அவற்றில் தவறு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன.

ஆனால் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வலுவான ஆதாரமாக இருக்கின்ற குர்ஆனுடன் முரண்படுவதால் அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான செய்திகள் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.

இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எவ்வளவு மோசமான தரத்தைப் பெற்றதோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் செய்தியும் மிக மோசமான தரத்தைப் பெற்ற பலவீனமான செய்திகளாக உள்ளன என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்த்தோம்.

குர்ஆனுக்கு முரண்பட்டு அறிவிப்பவர் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மெய்யைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அறிவித்தாலும் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டு விட்டு அறிவித்தாலும் கூட கருத்து மாறிவிடும். அதனால் குர்ஆனுக்கு முரண்படும் நிலை ஏற்படும். அறிவிப்பாளர் பொய் சொல்லியிருந்தால் தான் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது.

ஒரு நம்பகமான அறிவிப்பாளர் ஹதீஸின் ஒரு வாசகத்தை நேர் எதிரான கருத்தில் தவறுதலாகப் புரிந்ததின் விளைவாலும் இத்தகைய நிலை ஏற்படலாம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஒரு செய்தியில் நம்பகமானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பாளர் வந்தால் இவர்களில் யாரோ பொய் கூறியிருக்கின்றார் என்று முடிவு செய்வதை விட இவர்களில் யாரோ தவறிழைத்துள்ளார் என்று முடிவு செய்வதே நியாயமானது. ஏனென்றால் நம்பகமானவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் வைக்க வேண்டும்.

ஒரு மிக நம்பகமானவரின் அறிவிப்புக்கு இன்னொரு நம்பகமானவரின் அறிவிப்பு முரண்பட்டால் அந்த அறிவிப்பில் அவர் பொய் சொல்லி விட்டார் என்று ஹதீஸ் கலையில் கருதப்படாது. மாறாக இவர் இதில் அறியாமல் தவறு செய்துள்ளார் என்றே கருதப்படும்.

இதே அடிப்படையில் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களில் வரும் நம்பகமானவர்களின் விஷயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும்.

மேலும் இந்த ஹதீஸ்களில் பல அறிவிப்பாளர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இவர்களில் இன்னார் தான் தவறு செய்தார் என்று குறிப்பிட முடியாது.

ஒரு பேச்சுக்கு அவ்வாறு கண்டுபிடித்து விட்டால் கூட குர்ஆனுக்கு முரண்பாடாக அவர் அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நிராகரிக்கப்படும். அவர் அறிவித்த மற்ற அறிவிப்புகள் நிராகரிக்கப்படாது.

ஏனென்றால் இவருடைய அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதே இதில் இவர் தவறு செய்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றது. இவர் நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் எந்த முரண்பாடும் வராத இவரது மற்ற அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு நிராகரிக்க முடியும்?

இவற்றிலும் இவர் தவறு செய்திருப்பார் என்று யூகிப்பது அடிப்படையற்ற யூகமாகும். ஏனென்றால் ஒரு நம்பகமானவர் சரியாக அறிவிப்பார் என்றே கருத வேண்டும்.

எனவே ஒரு நம்பகமானவர் குர்ஆனுக்கு முரணாக செய்தியை அறிவிப்பதால் இதை வைத்துக் கொண்டு அவரைப் பொய்யர் என்று கூறக் கூடாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.

இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் நாம் சேர்த்ததற்குக் காரணம் இவற்றில் உள்ள நம்பகமானவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்ல. இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் புறக்கணிக்கப்படுவதைப் போன்று இந்தச் செய்திகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே காரணம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் ஹதீஸ்கள் சிக்கலுடன் இருக்கின்றது என்ற தோற்றம் ஏற்படுகிறது என்ற வாதம் பல காரணங்களால் தவறானது. ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது.

ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும், பலவீனமானது என்றும் ஆய்வு செய்து தரம் பிரிக்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்வதால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் இருக்கின்றது எனக் கூறுவதில்லை.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணாக ஒரு நம்பகமானவர் அறிவிப்பதுண்டு. மிக வலுவான ஒருவரின் அறிவிப்புக்கு மாற்றமாக அவரை விட மனன சக்தியில் சற்று தரம் குறைந்த நம்பகமானவர் அறிவிப்பதும் உண்டு. ஒருவரை விட மற்றவர் மனன சக்தியில் உயர்ந்து விடாத வகையில் அனைவரும் சம நிலையில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு அறிவிப்பதும் உண்டு.

இது போன்ற நிலைகளில் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் உள்ளது என்று கூறி ஒட்டுமொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதில்லை. அனைத்து செய்திகளிலும் சந்தேகம் கொள்வதில்லை.

நம்பகமானவர்களுக்கிடையே முரண்பாடு தோன்றினாலும் யார் மிக வலிமையானவர்? அதிகமானோர் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? என்று பார்த்து அந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்பே சரியானது என்றும், அதற்கு முரணாக உள்ள அறிவிப்புகள் அவற்றை அறிவித்தவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் தவறானது என்றும் முடிவு செய்கின்றனர்.

ஒருவரை விட ஒருவரை முற்படுத்துவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரின் அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குர்ஆன் என்பது ஹதீஸ்களை விட பன்மடங்கு வலுவான ஆதாரம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க வலுவான ஆதாரமாகத் திகழும் குர்ஆனுடன் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனை எடுத்துக் கொண்டு முரண்படும் அந்த ஹதீஸை விட்டு விடுவது தானே சரி. இந்த முடிவில் ஒரு சிக்கலும் இல்லை.

எனவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் குர்ஆன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பற்றி பேசும் போது எடுத்து வைக்கப்படும் இந்தக் கேள்விகள் அறிவிப்பாளர் பலவீனமாக இருக்கும் போதும் எழத்தான் செய்யும். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதாக இல்லையே என்ற கேள்வியை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

ஒருவரது அறிவிப்புக்கு மாற்றமாக பலர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்வி வரும். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.

அது போல் மிக நம்பிக்கைக்குரியவரின் அறிவிப்புக்கு எதிராக நடுத்தரமானவர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்விகள் எழ வேண்டும், ஆனாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

ஆனால் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பதற்காக ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது மட்டும் இது போன்ற கேள்விகள் எழுவது ஏன்?

இதுவரை நாம் நம்பியதற்கு மாற்றமாக உள்ளதால் இதை ஜீரணிக்க உள்ளம் தயக்கம் காட்டுகிறது. இது தான் காரணம். பழகிப்போன விஷயத்தில் உள்ளம் சரியாகப் புரிந்து கொள்கிறது. எனவே மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் குர்ஆனுக்கு முரண்படுவது பெரிய விஷயமா? சாதாரண விஷயமா? என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் இந்தக் கேள்விகள் எழாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account