Sidebar

22
Sun, Dec
38 New Articles

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

ஹதீஸ் ஆய்வு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

கேள்வி:

நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம்  விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், "தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இறைவா!) "அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும், அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், "சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், "இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையி-ருந்தும் விழுந்ததில்லை. "துல் கலஸா' என்பது யமன் நாட்டி-ருந்த "கஸ்அம்' மற்றும் "பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது "அல் கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்கLiடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன்.

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன்'' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு "அஹ்மஸ்' குலத்தவரில் "அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று தான் (ஆக்கி) விட்டு வந்துள்ளேன்'' என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) "அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

அந்த நாத்திக நண்பர் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்ய அவருக்கு வழி இல்லாததால் அவருக்கும் இது போல் நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் நாம் விளக்கம் அளித்தால் தெளிவு பெற்று தம்முடைய தவறான கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்கள் குறித்து விளக்குவதற்கு முன்னர் பொதுவாக கட்டாய மதமாற்றம் குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை முதலில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:256

இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும், தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்துக்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்றும் இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.

மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

திருக்குர்ஆன் 10:99

ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவதோ, நிர்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்கிறது.

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 9:6

ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 109 வது அத்தியாயம்)

உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலமும் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது.

வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மதத்தைத் தினிப்பதற்கு சரியான தருனமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்து கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது.

மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.

இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

திருக்குர்ஆன் 5:27

صحيح البخاري

2068 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»

"முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும், யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விட பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும். வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலை நகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்?

صحيح البخاري

1311 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا»

எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். "அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்'' என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 1311

வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேதத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்த பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்?

இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் அந்த நாத்திக நண்பர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியில் இருந்து இதற்கு மாற்றமான கருத்து தெரிகிறதே என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.

துல்கலஸா என்ற ஊரில் உள்ள ஆலயத்தைத் தகர்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை அனுப்பியது வாள் முனையில் பிற மதத்தினரை அடக்குவதற்கா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த மதத்தினரும் மற்ற மதத்தினரின் ஆலயங்களை தகர்க்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

அப்படியானால் அரபு தீபகற்பத்தில் எத்தனையோ வழிபாட்டுத் தலங்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றையும் தகர்ப்பதற்காக ஆட்களை அனுப்பாமல் இந்த ஒரு ஆலயத்தை மட்டும் தகர்க்க ஆள் அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு சிறப்பான காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் அந்தச் சம்பவத்திற்கு உள்ளேயே ஒளிந்து இருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் புனிதச் சின்னங்கள் உள்ளன. அவரவர் புனிதச் சின்னங்களை அவரவர் பேணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு மதத்தின் புனிதச் சின்னத்தைக் கேவலப்படுத்தும் வகையில் மற்றொரு மதத்தினர் நடப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

முஸ்லிம்கள் கஅபா எனும் ஆலயத்தைப் புனிதச் சின்னமாக மதிப்பது அன்றும், இன்றும் உலகுக்கே தெரிந்த ஒன்று தான். முஸ்லிம் அல்லாதவர்கள் அது போல் ஒன்றை எழுப்பி அது தான் கஅபா என அறிவித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இஸ்லாம் தடைசெய்துள்ள வழிபாட்டு முறைகளைச் செயல்படுத்தினால் அதில் விஷமத்தனமும் குழப்பம் விளைவித்தலும் தான் அடங்கி இருக்கும்.

சமீபத்தில் கூட மேற்கத்திய நாடு ஒன்றில் (நாட்டின் பெயர் நினைவில் இல்லை) காபா ஆலயம் போல் அமைக்க முயற்சித்து உலக முஸ்லிம்களின் எதிர்ப்பால அது கைவிடப்பட்டது.

இது போன்ற வேலையைத் தான் துல்கலசா பகுதியினர் செய்தனர். அவர்கள் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டு அதை கஅபா என்று பெயரிட்டுக் கொண்டு காபாவில் செய்யக் கூடாத காரியங்களை அதில் அரங்கேற்றம் செய்தனர். இதனால் தான் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியது. அதை அவர்கள் கஅபா என்று அழைத்தனர் என்ற விபரம் அந்தச் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது கூட பள்ளிவாசல் வடிவத்தில் கட்டடம் கட்டி அதற்கு பள்ளிவாசல் எனவும் பெயர் சூட்டிக் கொண்டு அதற்குள் சிலை வணக்கம் செய்தால் இந்து ஆட்சியாளர்களே அதை அப்புறப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தனர்.

பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தி இணைப்பது இஸ்லாத்தில் இல்லை என்பதை முன்னர் கண்டோம்.

ஆனாலும் பல போர்க்களங்களில் மட்டும் இப்படி சொன்னதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த சகோதரர் சுட்டிக்காட்டியது அல்லாமல் இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

இஸ்லாத்தை ஒழிப்பதற்காக போருக்கு வரும் போதும், போரைத் தினிக்கும் போதும் எதிரிகள் தோற்று விட்டால் அவர்கள் தோற்று விட்டதை உறுதி செய்வதற்காக இஸ்லாத்தில் சேர்வதாகக் கூறினால் அவர்களை எதிரிகளாகப் பாவிக்காமல் விட்டு விடலாம் என்பதற்காகத் தான் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கம்யூனிசத்தை எதிர்த்து யுத்தம் நடந்தால் எதிரிகள் தோல்வியுறும் போது கயூனிசத்தை ஏற்கிறோம் என்று சொல்வது தான் தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஆகும். தோற்ற எதிரிகளைக் கொன்று போடாமல் உயிருடன் விட்டு வைப்பதற்காக எதை எதிர்த்து படைதிரட்டி வந்து பல உயிர்கள் பலியாகவும் பொருளாதாரம் அழியவும் காரணமாக இருந்தாயோ அதையே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொள் என்று சொல்ல கட்டளையிடுவதை யாரும் குறை கூற முடியாது.

மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போல் கொன்று போடுவதை விட இது எத்தனையோ மடங்கு சிறந்தது. இது அல்லாத சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தியது இல்லை.

அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தின் புனிதச் சின்னம் போல் உருவாக்கி இஸ்லாத்துக்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்த அந்த ஊரார் மீது நபிகள் நாயகம் போர் செய்ய படை அனுப்பினார்கள். எதிரிகள் தோற்ற போது கொன்று குவிக்காலம்; போர் தர்மப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி விட்டு பிழைத்துப் போ என்று சொல்லப்பட்டது.

போர் அல்லாத எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போல் நபிகள் நாயகம் நடந்து கொண்டதில்லை.

இந்தியாவுடன் போர் செய்து ஒரு நாட்டுப்படை தோற்று விட்டால் அந்தப் படையினர் தமது ஊரை இந்திய நாடு தான் என்று ஒப்புக் கொள்ள வலியுறுத்தினால் அதை எப்படி குறை கூற முடியாதோ அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பின்னரும் அந்த நாத்திக நண்பர் புரிந்து கொள்ள மறுத்தால் நாத்திகர்களும், நாத்திகர்களால் மதிக்கப்படும் மன்னர்களும் போர்க்களங்களில் எப்படி நடந்து கொண்டனர் என்ற கொடூர வரலாற்றுப் பக்கங்களை எடுத்துக் காட்டுங்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account