Sidebar

04
Wed, Dec
21 New Articles

நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான்.

இப்படி ஒரு கதையை பல்வேறு நூல்களிலும் மீலாது மேடைகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். புகாரியிலே இந்தக் கதை இடம் பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர்.

இதை நாம் விரிவாக ஆராய்வோம்.

இவர்கள் கூறுவது போல் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது உண்மை தான். ஆனால் அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக இடம் பெறவில்லை. மாறாக உர்வா என்பவரின் கூற்றாகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இது தான்.

5101 حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَاشُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا، أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ. فَقَالَ : " أَوَتُحِبِّينَ ذَلِكِ ؟ ". فَقُلْتُ : نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ ذَلِكِ لَا يَحِلُّ لِي ". قُلْتُ : فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ. قَالَ : " بِنْتَ أُمِّ سَلَمَةَ ؟ ". قُلْتُ : نَعَمْ. فَقَالَ : " لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ ". قَالَ عُرْوَةُ : وَثُوَيْبَةُ مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ، كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا، فَأَرْضَعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ ، قَالَ لَهُ : مَاذَا لَقِيتَ ؟ قَالَ أَبُو لَهَبٍ : لَمْ أَلْقَ بَعْدَكُمْ، غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ.

சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். "நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான்.

நூல் : புகாரி 5101

இந்தச் செய்தி. பல காரணங்களால் ஏற்க முடியாகதாகும்.

கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.

அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதை விட முடியாது.

புகாரியில் இடம் பெற்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாததால் இது மார்க்க ஆதாரமாகாது. மேலும் குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்டதாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனைச் சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை அருளி இருக்கிறான்.

4770 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الْأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنِيعَمْرُو بْنُ مُرَّةَ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : لَمَّا نَزَلَتْ : { وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ } صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّفَا، فَجَعَلَ يُنَادِي : " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ، حَتَّى اجْتَمَعُوا، فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولًا لِيَنْظُرَ مَا هُوَ، فَجَاءَ أَبُو لَهَبٍ، وَقُرَيْشٌ، فَقَالَ : " أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ، أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ؟ " قَالُوا : نَعَمْ ؛ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا. قَالَ : " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ : تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ، أَلِهَذَا جَمَعْتَنَا ؟ فَنَزَلَتْ : { تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ } { مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ }.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி, "இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொன்னான்.

நூல் : புகாரி 4770, 4801, 4971, 4972, 4801, 4971, 4972

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைக் கண்டித்து 111 வது அத்தியாயம் அருளப்பட்டது.

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

 "அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லைப் பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

"காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது'' என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:161,162

அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:86

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 3:88, 89

சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாகத் திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனையை இலேசாக்க முடியும்? திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றது'' என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1, 54, 2529, 3898, 5070, 6689, 6953,

அபூலஹப் தன் விரல் அசைத்து அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன?

அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து செய்த செயலல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா? எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன! எத்தனை உதடுகள் அவர்களை முத்தமிட்டுள்ளன! அவர்களைக் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை! அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை!

அவர்கள் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேன் சுரக்க வேண்டாமா?

மொத்தத்தில் மக்கத்துக் காபிர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?

எனவே இந்தக் கட்டுக் கதையை நாம் அடியாடு நிராகரிக்க வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account