மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா?
dhabiபதில்:
தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர் தன்னைப் போன்ற தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடிப்பதே முறையாகும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:221
கொள்கையுள்ள பெண்ணை மணமுடித்தாலே வெற்றி கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
5090حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
- அவளது செல்வத்திற்காக.
- அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
- அவளது அழகிற்காக.
- அவளது மார்க்கத்திற்காக.
ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5090
கொள்கையில் மாறுபட்டோரைத் திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது
நாங்கள் திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணைத் திருத்தி விடுவோம் என்று காரணம் கூறி சிலர் இதை நியாயப்படுத்துகின்றனர். இவர்கள் அவர்களைத் திருத்துவதற்கு வாய்ப்பு உள்ளது போல் அவர்கள் இவர்களை வழிகெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் கை ஓங்குவதற்குத் தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஷிர்க் பித்அத் போன்ற காரியங்களாக இருந்தாலும், வரதட்சணை போன்ற கொடுமைகளாக இருந்தாலும் இது குறித்து ஆண்களிடம் நாம் கேட்டால் எங்களுக்கு இதில் விருப்பமில்லை; ஆனால் பெண்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்ற பதிலைத் தான் சொல்கின்றனர்.
ஆண்களிடம் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி ஆண்களைத் தங்கள் விருப்பம் போல் பெண்கள் மாற்றி விடுவார்கள். இது தான் யதார்த்தமான நிலையாக உள்ளது.
இத்தகையோரைத் திருமணம் செய்தால் திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் எழும். தாங்கள் பெற்ற பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பது கூட பிரச்சனையாக ஆகிவிடும். ஆண்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதை விட வெளியிலும், வெளியூரிலும், வெளிநாட்டிலும் இருப்பது தான் அதிகமாகும். எனவே தவறான கொள்கை உள்ள பெண்கள் தமது தவறான கொள்கையில் பிள்ளைகளை மாற்றி விடும் ஆபத்து இருக்கிறது.
தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் மத்ஹபுக் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடித்தால் இவர்களின் வாழ்விலும் பிரச்சனைகள் உருவாகும்.
மனைவி செய்யும் தவறுகளையும், அநாச்சாரங்களையும் கண்டிக்க முடியாத சூழல் ஏற்படும். கண்டித்தால் கணவனுடைய கண்ணுக்கு முன்னால் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களைச் செய்யாமல் இருந்து கொள்வார்கள். கணவன் இல்லாத நேரங்களில் இக்காரியங்களில் ஈடுபடுவார்கள்.
மேலும் தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்கள் திருமணம் ஆகாமல் தவ்ஹீத் மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கின்றனர். இத்தகையவர்களை விட்டுவிட்டு கொள்கையில் மாறுபட்டவர்களைத் திருமணம் செய்வது தவ்ஹீத் பெண்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எனவே கொள்கையில் மாறுபட்ட பெண்களை மணமுடிப்பது கூடாது.
மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode